சூரா 88: திணற அடித்தல் (அல்-காஷியா)

[88:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[88:1] திணற அடித்தலைப் பற்றி நீர் அறிந்திருக் கின்றீரா?
[88:2] முகங்கள் அந்நாளில் இழிவுற்றிருக்கும்.
[88:3] கடுமையான வேலை செய்து கொண்டும் மேலும் முற்றிலும் சோர்வடைந்தும்.
[88:4] கொழுந்து விட்டெரிகின்றதொரு நரக நெருப்பில் துன்புற்றுக்கொண்டும்.
[88:5] கொதிக்கின்றதோர் ஊற்றிலிருந்து அருந்திக் கொண்டும்.
[88:6] பயனற்ற வகைகளைத் தவிர, அவர்களுக்கு உணவு எதுவும் இருக்காது.
[88:7] அது ஒருபோதும் ஊட்டமளிக்காது, அன்றி பசியையும் தணிக்காது.
[88:8] மற்ற முகங்கள் அந்நாளில் சந்தோஷம் நிறைந்ததாக இருக்கும்.
[88:9] தங்களுடைய காரியங்களால் திருப்தியடைந் தவையாக.
[88:10] மேன்மையானதொரு சுவனத்தில்.
[88:11] அர்த்தமற்ற சொற்கள் எதுவும் அதில் செவியுறப்படாது.
[88:12] அதனுள், ஓர் ஊற்று ஓடுகின்றது.
[88:13] அதனுள், ஆடம்பரமான இருக்கைகள் இருக் கின்றன.
[88:14] மேலும் பானங்கள் கிடைக்கும்படிச் செய்யப் படும்.
[88:15] மேலும் கூஜாக்கள் வரிசைகளில்.
[88:16] மேலும் எங்கெங்கிலும் கம்பளங்கள்.
[88:17] அவர்கள் ஒட்டகங்களையும் மேலும் அவைகள் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்பதைப் பற்றியும் ஏன் சிந்தித்துப் பார்க்கக் கூடாது?
[88:18] மேலும் ஆகாயத்தையும் எவ்வாறு அது உயர்த்தப்பட்டுள்ளது என்பதையும்.
[88:19] மேலும் மலைகளையும் எவ்வாறு அவைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்பதையும்.
[88:20] மேலும் பூமியையும் எவ்வாறு அது கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது என்பதையும்.
[88:21] நீர் நினைவூட்ட வேண்டும், ஏனெனில் உமது இறைப்பணி இந்த நினைவூட்டலை ஒப்படைப்பதே ஆகும்.
[88:22] அவர்கள் மீது உமக்குஅதிகாரம் எதுவும் கிடையாது.
[88:23] திரும்பிச் சென்று மேலும் நம்ப மறுத்து விடுபவர்களைப் பொறுத்தவரை.
[88:24] கடவுள் அவர்களை மாபெரும் தண்டனைக்கு உட்படுத்துவார்.
[88:25] அவர்களுடைய இறுதி விதி நம்மிடமே உள்ளது.
[88:26] பின்னர் நாம் அவர்களைக் கணக்குக் கொடுப்பதற்காக அழைப்போம்.