சூரா 82: துண்டு துண்டாக நொறுங்குதல் (அல்-இன்ஃபிதார்)

[82:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[82:1] வானம் துண்டு துண்டாக நொறுங்கும் பொழுது.
[82:2] கோள்கள் சிதறடிக்கப்படுகின்றன.
[82:3] பெருங்கடல்கள் வெடிக்க வைக்கப்படுகின் றன.
[82:4] சமாதிகள் திறக்கப்படுகின்றன.
[82:5] ஒவ்வொரு ஆன்மாவும் தன்னுடைய முன்னேற்றத்திற்குக் காரணமானது எது, மேலும் அது பின்தங்கக் காரணமானது எது என்பதை கண்டு கொள்ளும்.
கடவுளின் படைப்புகளைப் பற்றிச் சிந்தியுங்கள்
[82:6] மனிதனே, மிகுந்த கண்ணியத்திற்குரியவரான உன்னுடைய இரட்சகரிடமிருந்து உன்னைத் திசை திருப்பியது எது?
[82:7] உன்னைப் படைத்த, உன்னை வடிவமைத்த, மேலும் உன்னைப் பூரணப்படுத்திய அந்த ஒருவர்.
[82:8] அவர் தேர்ந்தெடுத்த எந்த வடிவத்திலும், அதனை அவர் நிர்மாணிக்கின்றார்.
[82:9] உண்மையில், மார்க்கத்தின் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ள மறுக்கின்றீர்கள்.
[82:10] உங்களைச் சுற்றிலும் (கண்ணுக்குத் தெரியாத) காவலர்கள் இருக்கின்றனர் என்ற உண்மை யின்பால் கவனமற்றவர்களாக.
[82:11] அவர்கள் நேர்மையான பதிவாளர்களாக இருக்கின்றனர்.
[82:12] நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் அவர்கள் பதிவு செய்கின்றனர்.
[82:13] நிச்சயமாக, பக்திமான்கள் பேரானந்தத்திற்குத் தகுதியடைந்து விட்டனர்.
[82:14] அதே சமயம் தீயவர்கள் நரகத்திற்குத் தகுதி அடைந்து விட்டனர்.
[82:15] தீர்ப்பு நாளில் அவர்கள் அதற்கு உள்ளாவார்கள்.
[82:16] அவர்கள் ஒருபோதும் அதனை விட்டு வெளியேறி விட மாட்டார்கள்.
[82:17] தீர்ப்பு நாளானது அச்சுறுத்துகின்றதாகும்.
[82:18] எப்படிப்பட்ட ஒரு நாள்; அத்தீர்ப்பு நாள்!
[82:19] அதுதான் எந்த ஓர் ஆன்மாவும் மற்றோர் ஆன்மாவிற்கு உதவ இயலாத நாளாகும், மேலும் அனைத்துத் தீர்மானங்களும், அந்நாளில், கடவுள்-க்கு உரியதாக இருக்கும்.