சூரா 69: மறுக்க இயலாதது (அல்-ஹாக்காஹ்)

[69:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[69:1] மறுக்க இயலாத (நிகழ்வு).
[69:2] எத்தகையதொரு மறுக்க இயலாத (நிகழ்வு)!
[69:3] மெய்யாகவே அது மறுக்க இயலாதது.
[69:4] தமூது மற்றும் ஆது, அதிர்ச்சியூட்டுவதை நம்ப மறுத்தனர்.
[69:5] தமூதைப் பொறுத்தவரை, பேரழிவால் (அதிர்வால்) அவர்கள் அழிக்கப்பட்டனர்.
[69:6] ஆதைப் பொறுத்த வரை, விடாப்பிடியானதொரு, உக்கிரமான புயலால் அழிக்கப்பட்டனர்.
[69:7] ஏழு இரவுகளும், மேலும் எட்டுப் பகல்களும், உக்கிரமாக அவர்கள் மீது அவர் அதனைக் கட்டவிழ்த்து விட்டார். அழுகிப் போன பனைமரத் தண்டுகளைப் போல சுற்றிலும் வீசியெறியப்படுகின்றவர்களாக மக்களை நீர் கண்டிருப்பீர்.
[69:8] அவர்களுடைய சுவடுகளில் எதையேனும் நீர் காண முடிகின்றதா?
[69:9] ஃபேரோ, அவனுக்கு முந்தியிருந்த மற்றவர்கள், மேலும் (ஸோடமின்) பாவிகள் தீயவர்களாக இருந்தனர்.
[69:10] அவர்கள் தங்களுடைய இரட்சகரின் தூதரு க்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அதன் விளைவாக, பேரழிவானதொரு கைம்மாறாக அவர்களை அவர் பழி தீர்த்தார்.
[69:11] வெள்ளம் நாசம் விளைவித்துக் கொண்டு இருந்தது, எனவே நாம் உங்களை மிதக்கின்ற (மரக்கலத்தில்) சுமந்து கொண்டோம்.
[69:12] செவியேற்கக் கூடிய எந்தச் செவியும் புரிந்து கொள்ளக் கூடும் என்பதற்காக, அதனை உங்களுக்கு ஒரு படிப்பினையாக நாம் ஆக்கினோம்.
[69:13] கொம்பு ஒரு முறை ஊதப்படும் பொழுது.
[69:14] பூமியும் மலைகளும் தூக்கியெறியப்பட்டு மேலும் தூள்தூளாக ஆக்கப்படும்; முற்றிலும் தூள்தூளாக ஆக்கப்படும்.
[69:15] அந்த நாளின் போது தான் தவிர்த்துவிட இயலாத அந்நிகழ்வு நிகழ்ந்தேறும்.
[69:16] வானம் பிளந்து விடும், மேலும் துண்டு துண்டாக விழுந்து விடும்.
[69:17] வானவர்கள் முற்றிலும் சூழ்ந்திருப்பார்கள், மேலும் அப்போது உம்முடைய இரட்சகரின் சாம்ராஜ்யமானது (பிரபஞ்சங்கள்) * எட்டை உள்ளடக்கியதாக இருக்கும்.

அடிகுறிப்பு:
*69:17 கடவுளிடமிருந்து பௌதிக ரீதியாக மிகவும் தொலைவில் இருப்பதால் தான் இந்தப்பூமி துன்பம் நிறைந்ததாக இருக்கின்றது, ஏனெனில் இது ஏழாவது பிரபஞ்சத்தில் உள்ளது (7:143). மறுவுலகில், நம்முடைய ஏழாவது பிரபஞ்சத்தை விடவும், இன்னும் மிகத் தொலைவில் இருக்கின்ற ஓர் எட்டாவது பிரபஞ்சம் படைக்கப்படும்; அதுவே ‘நரகம்” என்றழைக்கப்படும் (89:23).
[69:18] அந்நாளில், நீங்கள் வெளிப்படுத்தப்படுவீர்கள், உங்களுடையதில் எந்த ஒன்றும் மறைக்கப் பட்டதாக இருக்காது.
நம்பிக்கையாளர்கள்
[69:19] தன்னுடைய வலக்கரத்தால் தன்னுடைய பதிவேட்டைப் பெறுகின்றவரைப் பொறுத்த வரை, அவர் கூறுவார், “வாருங்கள், என் பதிவேட்டைப் படியுங்கள்.
[69:20] “ நான் பதிலளிக்க வேண்டியவனாக இருக்கின் றேன் என்பதை நம்பியவனாகவே நான் இருந் தேன்.”
[69:21] மகிழ்ச்சியானதொரு வாழ்விற்கு அவர் தகுதியானவராகி விட்டார்.
[69:22] உயர்வானதொரு சுவனத்தில்.
[69:23] அதன் பழங்கள் அடையக்கூடிய தூரத்திலேயே உள்ளன.
[69:24] கடந்துபோன நாட்களில் உங்களுடைய காரியங்களுக்கான பலனாக மகிழ்வுடன் உண்ணுங்கள் மேலும் பருகுங்கள்.
நம்பமறுப்பவர்கள்
[69:25] தன்னுடைய பதிவேட்டை அவனுடைய இடக் கரத்தில் கொடுக்கப்படுபவனைப் பொறுத்த வரை, அவன் கூறுவான், “ ஐயோ, என்னுடைய பதிவேட்டை நான் ஒருபோதும் பெறாதிருந் திருக்க வேண்டுமே என நான் விரும்புகின் றேன்.
[69:26] “என்னுடைய கணக்கை நான் ஒருபோதும் அறியாதிருந்திருக்க வேண்டுமே என நான் விரும்புகிறேன்.
[69:27] “என்னுடைய மரணம் நிரந்தரமானதாக இருந் திருக்க வேண்டுமே என நான் விரும்புகிறேன்.
[69:28] “என்னுடைய பணம் எனக்கு உதவ இயல வில்லை.
[69:29] “என்னுடைய சக்தி அனைத்தும் போய் விட்டது.”
[69:30] அவனைப் பிடியுங்கள், மேலும் அவனுக்கு விலங்கிடுங்கள்.
[69:31] நரகத்தில் அவனை எரியச் செய்யுங்கள்.
[69:32] எழுபது முழம் நீளமான ஒரு சங்கிலியால், அவனைக் கட்டிப்போடுங்கள்.
[69:33] ஏனெனில் மிகவும் மகத்தானவரான, கடவுள் மீது அவன் நம்பிக்கை கொள்ளவில்லை.
[69:34] அன்றி ஏழைகளுக்கு உணவளிப்பதையும் அவன் ஆதரிக்கவில்லை.
[69:35] அதன் விளைவாக, இங்கே அவனுக்கு நண்பர்கள் எவருமில்லை.
[69:36] அன்றி கசப்பான வகைகளைத் தவிர, எந்த உணவுமில்லை.
[69:37] பாவிகளுக்குரிய உணவு.
[69:38] நீங்கள் காண்பவற்றின் மீது நான் சத்தியமிடுகின்றேன்.
[69:39] மேலும் நீங்கள் காணாதவற்றின் மீதும்.
[69:40] இது கண்ணியமானதொரு தூதரின் கூற் றாகும்.
[69:41] ஒரு கவிஞனின் கூற்றல்ல; அரிதாகவே நீங்கள் நம்பிக்கை கொள்கின்றீர்கள்.
[69:42] அன்றி ஒரு குறி சொல்பவனின் கூற்றுமல்ல; அரிதாகவே நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றீர்கள்.
[69:43] பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து ஒரு வெளிப்பாடு.
மார்க்க போதனைகள் எதனையும் வெளியிடுவதை விட்டு முஹம்மது தடுக்கப்பட்டிருந்தார்
[69:44] வேறு எந்தப் போதனைகளையும் அவர் கூறியிருப்பாராயின்.
[69:45] நாம் அவரைத் தண்டித்திருப்போம்.
[69:46] வெளிப்பாடுகளை நாம் அவருக்கு நிறுத்தி யிருப்போம்.
[69:47] உங்களில் எவரும் அவருக்கு உதவி செய்திருக்க இயலாது.
[69:48] இது நன்னெறியாளர்களுக்கானதொரு நினைவூட்டலாகும்.
[69:49] நாம் அறிவோம்; உங்களில் சிலர் ஏற்க மறுப் பவர்கள்.
[69:50] நம்பமறுப்பவர்களுக்கு இது துக்கத்தைத் தவிர வேறில்லை.
[69:51] இதுவே பரிபூரணமான சத்தியமாகும்.
[69:52] ஆகையால், மிகவும் மகத்தானவரான, உம்முடைய இரட்சகரின் பெயரை நீர் துதிக்க வேண்டும்.