சூரா 39: மக்கள் கூட்டங்கள் (அல்-ஜுமர்)

[39:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[39:1] இது சர்வ வல்லமையுடையவரும், ஞானம் நிறைந்தவருமான, கடவுள்-இடமிருந்து வந்த வேதத்தின் ஒரு வெளிப்பாடாகும்.
[39:2] சத்தியத்துடன், இந்த வேதத்தை உமக்கு நாம் இறக்கி அனுப்பியுள்ளோம்; கடவுள்-க்கு மட்டுமே உங்கள் மார்க்கத்தை அர்ப்பணித்துக் கொண்டவர் களாக, நீங்கள் அவரை வழிபட வேண்டும்.
மத்தியஸ்தர்களாக இணைத்தெய்வங்கள்: ஒரு பொதுவான கட்டுக்கதை
[39:3] நிச்சயமாக, மார்க்கம் கடவுள்-க்கு மட்டுமே அர்ப்பணிக்கப்படவேண்டும். அவருடன் இணைத் தெய்வங்களை அமைத்துக் கொள்பவர்கள், “கடவுள்-க்கு நெருக்கமாக எங்களைக் கொண்டு செல்வதற்காகவே நாங்கள் அவர்களை இணைத்தெய்வ வழிபாடு செய்கின்றோம்; ஏனெனில் அவர்கள் மேலானதொரு நிலையில் இருக்கின்றார்கள்!” என்று கூறுகின்றார்கள். அவர்களுடைய தர்க்கங்கள் குறித்து கடவுள் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார். இத்தகைய பொய்யர்களை, நம்ப மறுப்பவர்களைக் கடவுள் வழிநடத்துவதில்லை.
[39:4] ஒரு மகனைக் கொண்டிருக்க வேண்டுமெனக் கடவுள் விரும்பியிருந்தால், தன்னுடைய படைப்புகளில் இருந்து தான் நாடிய எவரையும் அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க இயலும். அவர் துதிப்பிற்குரியவர்; ஒருவரும், மேலான அதிகாரம் கொண்டவருமான, அவரே கடவுள்.
பூமியின் வடிவம் *
[39:5] வானங்கள் மற்றும் பூமியை சத்தியத்துடன் அவர் படைத்தார். அவர் இரவைப் பகலின் மீது உருட்டுகின்றார், மேலும் பகலை இரவின் மீது உருட்டுகின்றார்*. சூரியன் மற்றும் சந்திரன், ஒவ்வொன்றையும் ஒரு அளவிற்குட்பட்ட காலத்திற்கு ஓடும்படி அவர் ஆக்கினார். நிச்சயமாக, அவர்தான் சர்வ வல்லமையுடையவர், மன்னிப்பவர்.

அடிகுறிப்பு:
*39:5 பூமி உருண்டையானது என்பதை நமக்கு இந்த வசனம் தெளிவாகத் தெரியப்படுத்துகின்றது. “அவர் உருட்டுகின்றார்” என்பதற்குரிய அரபி வார்த்தை (யுகவ்வீர்) “பந்து” என்பதற்குரிய அரபி வார்த்தையான (குராஹ்) என்பதிலிருந்து பெறப்படுகின்றது. பூமியானது மிகச் சரியான உருண்டையாக இல்லாத காரணத்தால், அதன் வடிவத்தைப் பற்றிய ஒரு பிரத்தியேகக் குறிப்பு 79:30ல் கொடுக்கப்பட்டுள்ளது. குர்ஆனுடைய வெளிப்பாட்டிற்கு பல நூற்றாண்டுகள் கழித்து நாம் அறிந்து கொண்ட விஞ்ஞானத் தகவல்கள் குர்ஆனில் நிறைந்துள்ளன. பின் இணைப்பு 20 ஐப் பார்க்கவும்.
[39:6] ஒரு மனிதரிலிருந்து அவர் உங்களைப் படைத்தார், பின்னர் அவரிலிருந்து அவருடைய ஜோடியைப் படைத்தார். அவர் எட்டு வகைக் கால்நடைகளை உங்களுக்கு இறக்கி அனுப்பினார். அவர் படைப்பிற்குப் பின் படைப் பாக, இருள் நிறைந்த மூன்று காலக் கட்டங்களில், உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் உங்களைப் படைத்தார். உங்கள் இரட்சகரான கடவுள் இவ்விதமானவர். அனைத்து ஆட்சியதிகாரமும் அவருக்குரியது. அவருடன் வேறு தெய்வம் இல்லை. எவ்வாறு நீங்கள் வழி தவறிச் செல்ல இயலும்?
உங்கள் சொந்த நலனிற்காக நம்பிக்கை கொள்ளுங்கள்
[39:7] நீங்கள் நம்ப மறுத்தால், கடவுள் எவரொரு வருடைய தேவையும் இல்லாதவர். ஆனால் தன் அடியார்கள் தவறான முடிவெடுப்பதைக் காண அவர் விரும்புவதில்லை. நன்றியுடையவராக இருக்க நீங்கள் முடிவெடுத்தால், அவர் உங்கள் பால் திருப்தி கொள்கின்றார். எந்த ஆன்மாவும் மற்றொரு ஆன்மாவின் பாவங்களைச் சுமப் பதில்லை. இறுதியாக, உங்கள் இரட்சகரிடமே உங்களுடைய திரும்புதல் இருக்கின்றது, பின்னர் நீங்கள் செய்த ஒவ்வொன்றையும் பற்றி உங்களுக்கு அவர் அறிவிப்பார். ஆழ்மனதின் எண்ணங்களை அவர் முற்றிலும் அறிந்திருக் கின்றார்.
[39:8] மனிதன் ஏதேனும் துன்பத்திற்குள்ளானால், கபடமின்றி அவருக்கு அர்ப்பணித்துக் கொண் டவனாக, அவன் தன் இரட்சகரை இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றான். ஆனால் அவர் அவனுக்கு அருள்பாலித்தவுடன், அவன் முன்னர் இறைஞ் சிப் பிரார்த்தித்ததை மறந்தவனாக, கடவுள்-க்குச் சமமாக்குவதற்காகவும், மற்றவர்களை அவருடைய பாதையிலிருந்து திருப்புவதற் காகவும் அவன் இணைத் தெய்வங்களை அமைத்துக் கொள்கின்றான். “உங்களுடைய நம்பிக்கையின்மையை தற்காலிகமாக அனுபவியுங்கள்; நீங்கள் நரக நெருப்பிற்கு உள்ளாகி விட்டீர்கள்” என்று கூறுவீராக.
[39:9] தங்களுடைய இரட்சகரின் கருணையைத் தேடியவாறு, மறுவுலகைக் குறித்து விழிப்புடன் இருந்த வண்ணம், சிரம் பணிந்தும் மேலும் நின்ற நிலையிலும், இரவில் தியானம் செய்பவர் களில் ஒருவராக இருப்பது மேலானதல்லவா? “அறிந்திருப்பவர்கள் அறியாதிருப்பவர்க ளுக்குச் சமமாவார்களா?” என்று கூறுவீராக. அறிவுத்திறனைப் பெற்றிருப்பவர்கள் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்.
[39:10] “நம்பிக்கை கொண்ட என் அடியார்களே, உங்கள் இரட்சகரிடம் நீங்கள் பயபக்தி யோடிருக்க வேண்டும்” என்று கூறுவீராக. ஏனெனில் இவ்வுலகில் நன்னெறிகள் புரிந்தவர்களுக்கு, நல்லதொரு வெகுமதி. கடவுள்-ன் பூமி விசாலமானது, மேலும் உறுதிப்பாட்டுடன் விடாமுயற்சி செய்பவர்கள், எல்லைகளின்றி, தாராளமாகத் தங்களுடைய பிரதிபலனைப் பெற்றுக் கொள்வார்கள்.
கடவுள் மட்டும்
[39:11] கூறுவீராக,“மார்க்கத்தை முற்றிலும் கடவுள்-க்கு மட்டும் அர்ப்பணித்துக் கொண்டவாறு, அவரை வழிபட வேண்டுமென கட்டளையிடப்பட்டவராக நான் இருக்கின்றேன்.
[39:12] “மேலும் மிகவும் அதிகமாக அடிபணிந்தவராக இருக்க வேண்டுமென நான் கட்டளையிடப் பட்டுள்ளேன்”.
[39:13] “என் இரட்சகருக்கு நான் கீழ்ப்படிய மறுத்தால், மகத்தானதொரு நாளின் தண்டனைக்கு, நான் அஞ்சுகின்றேன்” என்று கூறுவீராக.
[39:14] கூறுவீராக, “என்னுடைய மார்க்கத்தை முற்றிலும் அவருக்கு மட்டுமே அர்ப்பணித்துக் கொண்டவாறு நான் வழிபடுகின்ற கடவுள், ஒரே ஒருவராக இருக்கின்றார்.
[39:15] “ஆகையால், நீங்கள் விரும்புகின்ற எதனையும் அவருடன் வழிபட்டுக் கொள்ளுங்கள்”. “மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில், தங்களுடைய மற்றும் தங்கள் குடும்பத் தாருடைய ஆன்மாக்களை நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள் தான், மெய்யாகவே நஷ்டப்பட்டவர்கள் ஆவார்கள்” என்று கூறுவீராக. மிக உறுதியாக, இதுதான் உண்மையான நஷ்டமாகும்.
[39:16] அவர்களுக்கு மேலும், அவர்களுக்குக் கீழும் நெருப்பின் பாளங்களை அவர்கள் கொண்டிருப் பார்கள். கடவுள் இவ்விதமாகத் தன் அடியார் களை: என்னுடைய அடியார்களே, நீங்கள் என்னிடம் பயபக்தியோடிருக்க வேண்டும் என்று எச்சரிக்கின்றார்.
[39:17] இணைத்தெய்வங்கள் அனைத்தையும் வழி படுவதைக் கைவிட்டுவிட்டுத், தங்களை முற்றிலும் கடவுள்-க்கு மட்டும் அர்ப்பணித்துக் கொண்டவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் மகிழ்ச்சிக்குத் தகுதி பெற்று விட்டார்கள். என்னுடைய அடியார்களுக்கு நற்செய்தி வழங்குவீராக.
கடவுளின் வார்த்தைகளைப் பின்பற்றுங்கள்
[39:18] அவர்கள்தான் அனைத்து வார்த்தைகளையும் பரிசீலித்து, பின்னர் சிறந்தவற்றைப் பின்பற்று வார்கள். கடவுள்-ஆல் வழிநடத்தப்பட்டவர்கள் இவர்கள் தான்; அறிவுத்திறன் பெற்றிருப் பவர்கள் இவர்கள்தான்.
[39:19] தண்டனைக்குத் தகுதியாகி விட்டவர்கள் சம்பந்தமாக, ஏற்கெனவே நரகத்தில் இருப்பவர்களை நீர் காப்பாற்றி விட முடியுமா?
நன்னெறியாளர்கள்
[39:20] தங்கள் இரட்சகரிடம் பயபக்தியோடிருப் பவர்களைப் பொறுத்தவரை, ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளுடன், அவர் களுக்காகக் கட்டப்பட்ட மாளிகைகளுக்கு மேல் மாளிகைகளை அவர்கள் பெற்றிருப் பார்கள். இது கடவுள்-ன் வாக்குறுதியாகும், மேலும் கடவுள் ஒருபோதும் தன் வாக்குறுதியை முறிப்பதில்லை.
[39:21] விண்ணிலிருந்து கடவுள் தண்ணீரை இறக்கி அனுப்புவதையும், பின்னர் அதனை நிலத்தடிக் கிணறுகளில் தேக்கிவைப்பதையும், பின்னர் அதனைக் கொண்டு பல்வேறு நிறங்களைக் கொண்ட தாவரங்களை உற்பத்தி செய் வதையும், பின்னர் அவை மஞ்சள் நிறமாக மாறும் வரை வளர்வதையும், பின்னர் அவர் அவற்றைக் கூளங்களாக மாற்றி விடுவதையும் நீங்கள் காணவில்லையா? அறிவுத்திறன் கொண்டோருக்கு இது ஒரு நினைவூட்டலாக இருக்கவேண்டும்.
[39:22] ஒருவருடைய இதயத்தைக் கடவுள் அடி பணிதலைக் கொண்டு திருப்தியுற்றதாக ஆக்கிவிட்டால், அவர் தன் இரட்சகரிடமிருந்து ஓர் ஒளியைப் பின்பற்றிக் கொண்டிருப்பார். ஆகையால், கடவுள்-ன் தூதுச்செய்திக்கு எதிராகத் தங்கள் இதயங்கள் கடினமாகிப் போனவர்களுக்கு கேடுதான்; அவர்கள் வழிகேட்டில் வெகு தூரம் சென்று விட்டார்கள்.
மிகச்சிறந்த ஹதீஸ்
[39:23] கடவுள் இதில் மிகச்சிறந்த ஹதீஸை வெளிப்படுத்தியுள்ளார்; முரண்பாடுகளற்ற ஒரு புத்தகம், மேலும் (சுவனத்திற்கும் நரகத் திற்குமான) இரு வழிகளையும் சுட்டிக்காட்டு கின்றது. தங்கள் இரட்சகரிடம் பயபக்தி யோடிருப்பவர்களின் தோல்கள் இதில் கூறப்பட்டவற்றிலிருந்து அஞ்சி ஒடுங்கு கின்றன, பின்னர் அவர்களுடைய தோல்களும் மற்றும் இதயங்களும் கடவுள்-ன் தூதுச் செய்திக்காக மென்மையாகி விடுகின்றன. கடவுள்-ன் வழிகாட்டல் இத்தகையதாகும்; தான் நாடுகின்ற எவர் மீதும் அவர் அதனை அளிக்கின்றார். கடவுள்-ஆல் வழிகேட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டவர்களைப் பொறுத்தவரை, எந்த ஒன்றும் அவர்களை வழிநடத்த முடியாது.
[39:24] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று பயங்கரமான தண்டனையிலிருந்து ஒருவருடைய முகத்தைக் காத்துக் கொள்வதை விட மிகச் சிறந்தது எது? வரம்பு மீறுபவர்களிடம், “நீங்கள் சம்பாதித்தவற்றின் பின் விளைவுகளைச் சுவையுங்கள்” என்று கூறப்படும்.
[39:25] அவர்களுக்கு முன்னிருந்த மற்றவர்களும் நம்ப மறுத்தனர், மேலும் அதன் விளைவாக, அவர்கள் ஒருபோதும் எதிர்பாராதிருந்த போது தண்டனை அவர்களைத் துன்பத்திற்குள்ளாக் கியது.
[39:26] கடவுள் இந்த வாழ்வில் அவர்களுக்கு இழிவு என்று முடிவு செய்து விட்டார், மேலும்அவர்கள் மட்டும் அறிந்திருந்தால், மறுவுலகின் தண்டனையோ மிகவும் மோசமானதாக இருக்கும்.
குர்ஆன்: சந்தேகமில்லாதது
[39:27] அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, இந்தக் குர்ஆனில் அனைத்து வகை உதாரணங்களையும் மக்களுக்காக நாம் எடுத்துரைத்துள்ளோம்.
[39:28] அவர்கள் நன்னெறியாளர்களாக இருக்கும் பொருட்டு, எந்த சந்தேகமும் இல்லாத, அரபி மொழியிலான ஒரு குர்ஆன்.
[39:29] தர்க்கித்துக் கொள்ளும் பங்குதாரர்களை (ஹதீஸ்) கையாளுகின்ற ஒரு மனிதனுடன் ஒப்பிட்டு, ஒரே ஒரு மூலாதாரத்தினை (குர்ஆன்) கையாளுகின்ற ஒரு மனிதனை உதாரண மாகக் கடவுள் எடுத்துரைக்கின்றார். அவர்கள் சமமானவர்களா? புகழ் அனைத்தும் கடவுள்-க்குரியது; அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
ஹதீஸ்: ஒரு மிகப்பெரிய இறைநிந்தனை
[39:30] அவர்கள் மரணிப்பது போல், நிச்சயமாக (முஹம்மதே) நீரும் மரணிப்பீர்.
[39:31] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று, உங்களுடைய இரட்சகரின் முன்னால், மக்களாகிய நீங்கள் ஒருவர் மற்றவருடன் சச்சரவிட்டுக் கொள்வீர்கள்.
[39:32] தன்னிடம் வந்துள்ள சத்தியத்தை நம்ப மறுத்துக் கொண்டிருக்கும் அதே சமயம், கடவுள் மீது பொய்களைக் கற்பித்துக் கூறுகின்ற ஒருவனை விட மிகத் தீயவன் யார்? நம்ப மறுப்பவர்களுக்கு நரகம் ஒரு நியாயமான கூலி தான் அல்லவா?
குர்ஆன்: பரிபூரணமான சத்தியம்
[39:33] சத்தியத்தை ஊக்குவித்து, மேலும் அதில் நம்பிக்கை கொள்பவர்களை பொறுத்தவரை, அவர்கள்தான் நன்னெறியாளர்கள்.
[39:34] அவர்கள் விரும்புகின்ற அனைத்தையும் தங்கள் இரட்சகரிடமிருந்து அவர்கள் பெறுவார் கள். நன்னெறியாளர்களுக்குரிய வெகுமதி இத்தகையதேயாகும்.
[39:35] அவர்களுடைய பாவகரமான காரியங்களைக் கடவுள் மன்னிக்கின்றார், மேலும் அவர் களுடைய நற்காரியங்களுக்காக அவர் களுக்குத் தாராளமாக வெகுமதியளிக் கின்றார்.
ஆழ்ந்த கேள்வி
[39:36] தன்னுடைய அடியார்களுக்குக் கடவுள் போதுமானவர் அல்லவா? அவருடன் அவர்கள் அமைத்துக் கொள்கின்ற இணைத் தெய்வங்களைக் கொண்டு உம்மை அவர்கள் அச்சுறுத்துகின்றனர். கடவுள் எவரை வழிகேட்டில் அனுப்பி விடுகின்றாரோ, அவரை எந்த ஒன்றும் வழிநடத்த முடியாது.
[39:37] மேலும் கடவுள் எவரை வழிநடத்துகின்றாரோ, அவரை எந்த ஒன்றும் வழிகேட்டிற்கு அனுப்பி விட முடியாது. கடவுள் சர்வ வல்லமையுடையவர், பழி தீர்ப்பவர் அல்லவா?
அவர்கள் கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றனர், இருப்பினும் அவர்கள் நரகத்திற்குச் செல்கின்றனர்
[39:38] “வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தவர் யார்?” என்று நீர் அவர்களிடம் கேட்பீராயின், “கடவுள்” என்றே அவர்கள் கூறுவார்கள். “பின்னர் ஏன் நீங்கள் கடவுள்-உடன் இணைத்தெய்வங்களை அமைத்துக் கொள்கின்றீர்கள்? கடவுள் எனக்கு ஏதேனும் துன்பத்தை நாடினால், அத்தகையதொரு துன்பத்தை விடுவிக்க அவர்களால் இயலுமா? மேலும் அவர் எனக்கு ஓர் அருட்கொடையை நாடினால், அத்தகையதோர் அருட்கொடையை அவர்களால் தடுத்து விட இயலுமா? என்று கூறுவீராக, “கடவுள் எனக்குப் போதுமானவர்” என்று கூறுவீராக. பொறுப்பேற்படுத்துபவர்கள் அவர் மீதே பொறுப்பேற்படுத்த வேண்டும்.
[39:39] கூறுவீராக, “என் சமூகத்தாரே, உங்களுக்குச் சிறந்ததை நீங்கள் செய்யுங்கள் மேலும் எனக்கு சிறந்ததை நான் செய்வேன்; நிச்சயமாக நீங்கள் கண்டுகொள்வீர்கள்.
[39:40] “இழிவான தண்டனைக்கு உள்ளாகி விட்டவர், மேலும் நிலையானதொரு தண்டனைக்குத் தகுதி பெற்று விட்டவர் யார் என (நீங்கள் கண்டுகொள்வீர்கள்).”
[39:41] மனிதர்களுக்காக உண்மை நிரம்பிய இவ் வேதத்தை உம் மூலமாக நாம் வெளிப்படுத்தி யுள்ளோம். பின்னர், வழிநடத்தப்படுகின்ற எவரும் தன் சொந்த நலனிற்காகவே வழி நடத்தப்படுகின்றார். மேலும் வழிதவறிச் செல் கின்ற எவரும் தன் சொந்தக் கேட்டிற்காகவே வழிதவறிச் செல்கின்றார். நீர் அவர்களுக்காக வாதிடுபவர் அல்ல.
[39:42] ஆன்மாக்களை, அவற்றின் வாழ்க்கையின் முடிவு வரும்பொழுதும், மேலும் தூக்கத்தின் பொழுதும் கடவுள் மரணத்தில் ஆழ்த்து கின்றார். இவ்விதமாக, அவர் சிலவற்றை அவற்றின் தூக்கத்தின் போதே திரும்ப எடுத்துக் கொள்கின்றார், அதே சமயம் மற்றவைகள் அவற்றின் முன்னரே தீர்மானிக் கப்பட்ட தவணை வரை தொடர்ந்து உயிர்வாழ அனுமதிக்கப்படுகின்றன. சிந்திக்கின்ற மக்களுக்கு இது ஒரு படிப்பினையாகத் திகழ வேண்டும்.
பரிந்துரை எனும் கட்டுக்கதை
[39:43] அவர்களுக்கும் கடவுள்-க்கும் இடையில் மத்தியஸ்தம் செய்வதற்குப் பரிந்துரையாளர் களை அவர்கள் கண்டுபிடித்துக் கொண்ட னரா? “அவர்கள் எந்தச் சக்தியையோ அன்றிப் புரிந்து கொள்ளுதலையோ பெற்றிராமல் இருந்தாலுமா?” என்று கூறுவீராக.
[39:44] “பரிந்துரை அனைத்தும் கடவுள்-க்குரியது” என்று கூறுவீராக. வானங்கள் மற்றும் பூமி ஆகியவற்றின் ஆட்சியதிகாரம் அனைத்தும் அவருக்குரியது, பின்னர் அவரிடமே நீங்கள் திருப்பப்படுவீர்கள்.
மாபெரும் அளவுகோல்*
[39:45] கடவுள் மட்டும் என்று கூறப்படும் பொழுது, மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர் களின் இதயங்கள் வெறுப்பினால் சுருங்கி விடு கின்றன. ஆனால் அவருடன் மற்றவர்களை சேர்த்து கூறப்படும்போது, அவர்கள் திருப்தி அடைகின்றனர்.*

அடிகுறிப்பு:
*39:45 இஸ்லாத்தின் முதல் தூணானது :“அஷ்ஹது அன்லாஇலாஹா இல்லல்லாஹ் (கடவுளுடன் வேறு தெய்வம் இல்லை),” எனப் பிரகடனம் செய்வதுதான் என்று 3:18ல் தெளிவான கட்டளை இருந்த போதிலும் , பெரும்பான்மையான “முஸ்லிம்கள்” முஹம்மதின் பெயரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர். முஹம்மதின் பெயரையோ அல்லது வேறு எந்தப் பெயரையோ சேர்த்துக் கொள்வதில் மகிழ்வடைவது, மறுவுலகின் மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகின்றது என்று மகத்தான இந்த அளவுகோல் நம்மை எச்சரிக்கின்றது. 17:46க்குரிய அடிக்குறிப்பையும் பார்க்கவும்.
[39:46] “எங்கள் இறைவா, வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கியவரே, அனைத்து இரகசியங்களையும் மற்றும் அறிவிப்புகளையும் அறிந்தவரே, உம்முடைய அடியார்களுக்கிடையில் அவர் களுடைய தர்க்கங்களைக் குறித்து தீர்ப்பளிக் கின்ற ஒரே ஒருவர் நீர்தான்,” என்று பிரகடனம் செய்வீராக.
[39:47] பூமியில் உள்ள அனைத்தையும், இன்னும் அதைப்போல் இருமடங்கையும் வரம்பு மீறியவர்கள் சொந்தமாகக் கொண்டிருந்தாலும், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று பயங்கரமான தண்டனையைத் தவிர்த்துக் கொள்ள உடனடியாக அவர்கள் அதனை விட்டுக் கொடுத்து விடுவார்கள். அவர்கள் ஒருபோதும் எதிர்பாராத வற்றைக் கடவுள் அவர்களுக்குக் காட்டுவார்.
[39:48] அவர்கள் சம்பாதித்த பாவகரமான காரியங்கள் அவர்களுக்குக் காட்டப்படும், மேலும் அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த அதே விஷயங்கள் அவர்களை மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யத் திரும்பி விடும்.
மனிதனின் சலனபுத்தி
[39:49] துன்பத்தால் மனிதன் தீண்டப்பட்டால், அவன் நம்மை இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றான், ஆனால் ஓர் அருட்கொடையை நாம் அவனுக்கு அளித்தவுடன் அவன், “இதனை நான் எனது சாமர்த்தியத்தால் அடைந்தேன்!” என்று கூறுகின் றான். உண்மையில், இது ஒரு சோதனையே ஆகும், ஆனால் அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.
[39:50] அவர்களுக்கு முன்பிருந்தவர்களும் இதனை யேதான் கூறினார்கள், மேலும் அவர்களுடைய சம்பாத்தியங்கள் அவர்களுக்குச் சற்றும் உதவிடவில்லை.
[39:51] அவர்களுடைய தீய காரியங்களின் பின் விளைவுகளை அவர்கள் அனுபவித்தனர். அதைப்போலவே, தற்காலத் தலைமுறையினரில் உள்ள வரம்பு மீறுபவர்களும் அவர்களுடைய தீயகாரியங்களின் பின் விளைவுகளை அனுபவிப் பார்கள்; அவர்கள் தப்பிக்க முடியாது.
[39:52] தான் தேர்ந்தெடுக்கின்ற எவருக்கும் வாழ் வாதாரங்களை அதிகரிப்பவரும், மேலும் தடுத்து நிறுத்துபவரும் கடவுள் தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இவை படிப்பினைகளாகும்.
கடவுளின் எல்லையற்ற கருணை
[39:53] “வரம்புகளை மீறிவிட்ட என் அடியார்களே, கடவுள்-ன் கருணையில் ஒருபோதும் நம்பிக்கை யிழந்து விடாதீர்கள். ஏனெனில் கடவுள் எல்லாப் பாவங்களையும் மன்னிக்கின்றார். அவர்தான் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்” என்று பிரகடனம் செய்வீராக.
[39:54] தண்டனை உங்களை முந்துவதற்கு முன்னர், நீங்கள் உங்கள் இரட்சகருக்குக் கீழ்ப்படியவும், மேலும் அவருக்கு முற்றிலும் அடிபணியவும் வேண்டும், அதன் பின்னர் நீங்கள் உதவி செய்யப்படமாட்டீர்கள்.
[39:55] மேலும் நீங்கள் சற்றும் எதிர்பாராதிருக்கும் போது, தண்டனை உங்களை முந்துவதற்கு முன்னர், உங்களுடைய இரட்சகரால் உங்களுக்குச் சுட்டிக் காட்டப்பட்டுள்ள மிகச்சிறந்த பாதையைப் பின்பற்றுங்கள்.
[39:56] “கடவுள்-ன் கட்டளைகளை அலட்சியம் செய்ததற்காக நான் மிகவும் வருந்துகின்றேன்; நிச்சயமாக நான் பரிகாசம் செய்பவர்களில் ஒருவனாகவே இருந்தேன்,” என்று ஓர் ஆன்மா கூறாமலிருப்பதற்காக.
[39:57] அல்லது, “கடவுள் என்னை வழிநடத்தியிருந்தால், நானும் நன்னெறியாளர்களுடன் இருந்திருப்பேன்” என்று கூறாமலிருப்பதற்காக.
[39:58] அல்லது, தண்டனையை அது காணும் பொழுது, “மற்றொரு வாய்ப்பை நான் பெற்றால், நான் நன்னெறியான காரியங்கள் புரிவேன்“ என்று கூறாமலிருப்பதற்காக.
[39:59] ஆம், உண்மையில் (போதுமான வாய்ப்புகள் உனக்குக் கிடைக்கவே செய்தன). என் சான்றுகள் உன்னிடம் வந்தன, ஆனால் நீ அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்தாய், ஆணவம் கொண்டாய், மேலும் ஒரு நம்ப மறுப்பவனாக ஆனாய்.
[39:60] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று கடவுள்-ஐப் பற்றிப் பொய்யுரைத்தவர்களின் முகங்கள் துக்கத்தால் சூழப்பட்டிருக்க நீர் காண்பீர். ஆணவம் கொண்ட ஒவ்வொருவருக்கும் நரகம் சரியான தண்டனைதான் அல்லவா?
[39:61] மேலும் நன்னெறியைப் பேணிக்கொண்டவர் களைக் கடவுள் காப்பாற்றுவார்; அவர், அவர் களுக்கு வெகுமதியளிப்பார். எந்தத் தீங்கும் அவர்களைத் தீண்டாது, அன்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் இருக்காது.
[39:62] கடவுள் தான் அனைத்துப் பொருட்களின் படைப்பாளர், மேலும் அவர் அனைத்து விஷயங் களையும் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
[39:63] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்து முடிவுகளும் அவருக்கே உரியது, மேலும் கடவுள்-ன் வெளிப்பாடுகளை நம்ப மறுப்பவர்கள்தான் மெய்யான நஷ்டவாளிகள்.
[39:64] “அறிவில்லாதவர்களே, கடவுள்-ஐ விடுத்து மற்றவற்றை வழிபடும்படி என்iனிடம் நீங்கள் உபதேசிக்கின்றீர்களா?” என்று கூறுவீராக.
இணைத்தெய்வ வழிபாடு எல்லாக் காரியங்களையும் பயனற்றதாக ஆக்கிவிடுகின்றது
[39:65] எப்பொழுது நீர் இணைத்தெய்வவழிபாடு செய் தாலும், உம்முடைய அனைத்துக் காரியங்களும் பயனற்றதாகி விடும், மேலும் நீர் நஷ்டவாளி களுடன் இருப்பீர் என உமக்கும், உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.
[39:66] ஆகையால், நீர் கடவுள்-ஐ மட்டும் வழிபடவும், மேலும் நன்றியுடையவராக இருக்கவும் வேண்டும்.
கடவுளின் மகத்துவம்*
[39:67] கடவுள்-ன் மகத்துவத்தை அவர்கள் ஒரு போதும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று முழு உலகும் அவருடைய கைப்பிடிக்குள் இருக்கும். உண்மையில், பிரபஞ்சங்கள் அவருடைய வலக்கரத்திற்குள்* மடிக்கப்பட்டுள்ளது. அவர் துதிப்பிற்குரியவர்; பங்குதாரர்கள் தேவைப்படுவதை விட்டும் அவர் மிகவும் உயர்ந்தவர்.

அடிகுறிப்பு:
*39:67 நூறு கோடியிலான பால் வெளி மண்டலங்களுடனும், நூறுகோடி பல நூறு கோடி நட்சத்திரங்களுடனும், எண்ண முடியாத பல்லாயிரக்கணக்கான கோடி விண்ணகப் பொருட்களுடனும், பலநூறு கோடி ஒளி வருடங்கள் பயணிக்க வேண்டிய அளவு பரந்து விரிந்திருக்கும் நமது பிரபஞ்சமானது, ஏழு பிரபஞ்சங்களில் மிகவும் உள்ளமைந்ததாகவும் மேலும் மிகவும் சிறியதாகவும் உள்ள ஒன்றாகும். ஏழு பிரபஞ்சங்களின் அறிந்து கொள்ள முடியாத இந்த மிகப்பெரிய பரப்பு கடவுளின் கரத்தினுள் உள்ளது. கடவுளின் மகத்துவம் இத்தகையதாகும். பின் இணைப்பு 6ஐப் பார்க்கவும்.
தீர்ப்பு நாள்
[39:68] கொம்பு ஊதப்படும், உடனே கடவுள்-ஆல் காப்பாற்றப்பட இருப்பவர்களைத் தவிர, வானங் கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொருவரும் சுய நினைவை இழந்துவிடுவார்கள். பின்னர் அது இன்னொரு முறை ஊதப்படும். உடனே அவர்கள் அனைவரும் உற்று நோக்கியவாறு* எழுந்து நிற்பார்கள்.

அடிகுறிப்பு:
*39:68 மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளின் நிகழ்வுகளின் வரிசைக்கிரமம், அடையாளமாகக் கொம்பு ஊதப்படுவதைக் கொண்டு துவங்குகின்றது. இரண்டாவது கொம்பு ஊதப்படுவது-மயக்கமடைவதிலிருந்து கடவுளால் விடுவிக்கப்பட்ட ஒரு படைப்பின் மூலம் - எல்லா மக்களும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவதைக் குறிக்கின்றது; அவர்கள் இன்றைய பூமியின் மீது மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவார்கள். அப்போது கடவுளின் நேரடி வருகையின் மூலம் இந்தப் பூமி அழிக்கப்பட்டு விடும், பின்னர் புதியதொரு பூமியும், புதிய வானங்களும் படைக்கப்படும் (14:48). பின்னர் நாம் நம்முடைய வளர்ச்சிக்கேற்ப அடுக்கடுக்காக வகைப்படுத்தப்படுவோம் (பின் இணைப்பு 11).
[39:69] பின்னர் பூமி தன் இரட்சகரின் ஒளியால் பிரகாசி க்கும். பதிவேடு வெளிப்படையாக தெரிவிக்கப் படும், மேலும் வேதம் வழங்கப்பட்டவர்களும் மற்றும் சாட்சிகளும் முன் கொண்டு வரப்படு வார்கள். சிறிதளவும் அநீதமின்றி, ஒவ்வொரு வரும் நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படுவார்கள்.
[39:70] ஒவ்வொரு ஆன்மாவும் அது செய்தவற்றிற் கான கூலி கொடுக்கப்படும், ஏனெனில் அவர் கள் செய்த ஒவ்வொன்றையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
நம்ப மறுப்பவர்கள்
[39:71] நம்ப மறுப்பவர்கள் நரகத்திற்கு கூட்டம் கூட்டமாக வழிநடத்தப்படுவார்கள். அவர்கள் அதனை அடைந்து, மேலும் அதன் வாயில்கள் திறக்கப்படும் பொழுது, அதன் காவலர்கள், “உங்கள் இரட்சகருடைய வெளிப்பாடுகளை உங்களுக்கு ஓதிக்காட்டிய, மேலும் இந்த நாளின் சந்திப்பைக் குறித்து உங்களை எச்சரித்த தூதர்களை, உங்களிலிருந்தே நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லையா?” என்று கூறுவார்கள். அவர்கள், “ஆம் உண்மையில். ஆனால் நம்ப மறுப்பவர்கள் மீது ‘தண்டனை’ எனும் வார்த்தை ஏற்கனவே முத்திரையிடப்பட்டு விட்டது” என்று பதிலளிப்பார்கள்.
[39:72] “நரகத்தின் வாயில்களுக்குள் நுழையுங்கள், அதிலே நீங்கள் என்றென்றும் தங்கியிருப் பீர்கள்” என்று கூறப்படும். ஆணவம் கொண்டவர்களுக்கு என்ன ஒரு துன்பகரமான விதி.
நம்பிக்கையாளர்கள்
[39:73] தங்கள் இரட்சகரிடம் பயபக்தியோடிருந் தவர்கள் சுவனத்திற்கு கூட்டம் கூட்டமாக வழி நடத்தப்படுவார்கள். அவர்கள் அதனை அடைந்து, மேலும் அதன் வாயில்கள் திறக்கப் படும் பொழுது, அதன் காவலர்கள், “உங்கள் மீது அமைதி நிலவுவதாக; நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். ஆகையால், இங்கேயே நீங்கள் என்றென்றும் தங்கியிருப்பீர்கள்” என்று கூறுவார்கள்.
[39:74] அவர்கள், “தன்னுடைய வாக்குறுதியை எங்களுக்கு நிறைவேற்றித் தந்த, மேலும் பூமிக்கு எங்களை வாரிசாக ஆக்கி, நாங்கள் விரும்பியவாறு சுவனத்தில் மகிழ்ந்திருக்கச் செய்த கடவுள்-க்கே புகழ் அனைத்தும்” என்று கூறுவார்கள். பணிபுரிவோருக்கு என்ன ஒரு அழகிய வெகுமதி!
[39:75] தங்கள் இரட்சகரைத் துதித்தவாறும் புகழ்ந்த வாறும், அரியாசனத்தைச் சுற்றி வானவர்கள் மிதந்து கொண்டிருப்பதை நீர் காண்பீர். அனை வருக்கும் நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டு விட்ட பின்னர், “பிரபஞ்சத்தின் இரட்சகரான, கடவுள்-க்கே புகழ் அனைத்தும்” என்று பிரகடனம் செய்யப்படும்.