சூரா 36: ய.ஸீ.(யா ஸீன்)

[36:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[36:1] ய.ஸீ.*

அடிகுறிப்பு:
*36:1 இந்த தலைப்பு எழுத்துக்களின் விரிவான விளக்கத்திற்கு பின் இணைப்பு 1ஐப் பார்க்கவும்.
[36:2] மேலும் ஞானம் நிறைந்த இந்தக் குர்ஆன்.
[36:3] மிகவும் நிச்சயமாக, நீர் (ரஷாத்)* தூதர்களில் ஒருவராக இருக்கின்றீர்.

அடிகுறிப்பு:
*36:3 மறுக்க இயலாத கண்கூடான ஆதாரங்களுக்கு பின் இணைப்பு 2 & 26ஐப் பார்க்கவும்.
[36:4] நேரானதொரு பாதையின் மீது.
[36:5] இந்த வெளிப்பாடு சர்வ வல்லமையுடையவரான, மிக்க கருணையாளரிடமிருந்து வந்துள்ளது.
[36:6] எவர்களுடைய பெற்றோர்கள் ஒருபோதும் எச்சரிக்கப்படாதிருந்தனரோ அந்த மக்களை எச்சரிப்பதற்காக, ஆகையால், அவர்கள் அறியா தவர்களாக இருக்கின்றனர்.
[36:7] அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்று முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்டது.
[36:8] ஏனெனில் அவர்களுடைய கழுத்துக்களைச் சுற்றி, அவர்களுடைய முகவாய்க்கட்டைகள் வரை விலங்குகளை நாம் அமைக்கின்றோம். அதன் விளைவாக, அவர்களுடைய நம்பிக்கை யின்மையில் அவர்கள் அடைப்பட்டு விடுகின்றனர்.
[36:9] மேலும், அவர்களுக்கு முன்னால் ஒரு தடையையும், அவர்களுக்கு பின்னால் ஒரு தடையையும் நாம் அமைக்கின்றோம், மேலும் இவ்விதமாக, அவர்களுக்கு நாம் திரையிட்டு விடுகின்றோம்; அவர்களால் பார்க்க இயலாது.
[36:10] அவர்களை நீர் எச்சரித்தாலும் அல்லது எச்சரிக்காவிட்டாலும் அவர்களுக்கு அது ஒன்றேயாகும், அவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது.*

அடிகுறிப்பு:
*36:10 ஒவ்வொருவரும் ஏற்கனவே நம்பிக்கையாளர் என்றோ அல்லது நம்ப மறுப்பவர் என்றோ முத்திரை குத்தப்பட்டுள்ளனர். பின் இணைப்பு 14 ஐப் பார்க்கவும்.
[36:11] இந்தத் தூதுச் செய்தியை ஆதரிப்பவர்கள், மேலும் தங்களுடைய தனிமையில் தனித்திருக்கும் பொழுதும் மிக்க அருளாளரிடம் பயபக்தியோடிருப்பவர்களால் மட்டுமே நீர் கவனத்தில் கொள்ளப்படுவீர். மன்னிப்பு மற்றும் தாராளமானதொரு பிரதிபலனின் நற்செய்தியை அவர்களிடம் கூறுவீராக.
[36:12] இறந்தவர்களை நிச்சயமாக நாம் மீண்டும் உயிர்ப்பிப்போம், மேலும் இந்த வாழ்வில் அவர்கள் செய்த ஒவ்வொன்றையும், அவ்வண்ணமே அவர்களுடைய மரணத்திற்குப் பின்னர் தொடரும் விளைவுகளையும் நாம் பதிவு செய்திருக் கின்றோம். ஆழ்ந்ததோர் பதிவேட்டில் ஒவ்வொன் றையும் நாம் எண்ணி வைத்துள்ளோம்.
தூதர்களை ஏற்க மறுத்தல்:சோகமானதொரு மனிதப்பண்பு*
[36:13] தூதர்களைப் பெற்றுக் கொண்ட ஒரு சமூகத்தி லிருந்த மக்களின் உதாரணத்தை அவர்களுக்கு எடுத்துரைப்பீராக.

அடிகுறிப்பு:
36:13-27 கடவுளின் தூதர்கள் சான்று வைத்திருப்பார்கள், கடவுளை மட்டும் ஆதரிப்பார்கள், மேலும் பணம் கேட்க மாட்டார்கள்.
[36:14] (தூதர்கள்) இருவரை நாம் அவர்களிடம் அனுப்பியபொழுது, அவர்கள், அவர்களை நம்பமறுத்தனர். பின்னர் நாம் மூன்றாமவரைக் கொண்டு அவர்களுக்கு ஆதரவளித்தோம். அவர்கள், “நாங்கள் உங்களுக்கான (கடவுளின்) தூதர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்கள்.
[36:15] அவர்கள், “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. மிக்க அருளாளர் எதனையும் இறக்கி அனுப்பவில்லை. நீங்கள் பொய்யர்களாக இருக்கின்றீர்கள்” என்று கூறினார்கள்.
[36:16] அவர்கள் கூறினார்கள், “நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்டுள்ளோம் என்பதை எங்கள் இரட்சகர் அறிந்துள்ளார்.
[36:17] “எங்களுடைய ஒரே பணி தூதுச் செய்தியை ஒப்படைப்பதே”.
[36:18] அவர்கள், “நாங்கள் உங்களைக் கெட்ட சகுனங்களாகக் கருதுகின்றோம். நீங்கள் விலகிக் கொள்ளவில்லையெனில், நிச்சயமாக நாங்கள் உங்களைக் கல்லாலடித்துக் கொன்று விடுவோம், அல்லது வலிநிறைந்த தண்டனையைக் கொண்டு வேதனை செய்வோம்” என்று கூறினார்கள்.
[36:19] அவர்கள், “இப்போது நீங்கள் நினைவூட்டப்பட்டவர் களாகி விட்டதனால், உங்களுடைய சகுனம் உங்களுடைய மறுமொழியைச் சார்ந்ததாகவே உள்ளது. உண்மையில், நீங்கள் வரம்பு மீறுகின்ற மக்களாகவே இருக்கின்றீர்கள்” என்று கூறினார்கள்.
[36:20] அந்நகரத்தின் மறுகோடியிலிருந்து “என் சமூகத்தாரே, இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்” எனக் கூறியவராக ஒரு மனிதர் வந்தார்.
[36:21] “உங்களிடம் கூலி எதுவும் கேட்காதவர்களை, மேலும் வழிகாட்டப்பட்டவர்களாக இருப்பவர் களைப் பின்பற்றுங்கள்.
[36:22] “என்னைத் துவக்கிய ஒருவரை நான் ஏன் வழிபடாதிருக்க வேண்டும், மேலும் அவரிடமே உங்கள் இறுதித் திரும்புதலும் இருக்கும் போது?
[36:23] “அவருடன் தெய்வங்களை நான் அமைத்துக் கொள்ள வேண்டுமா? மிக்க அருளாளர் எனக்கு ஏதேனும் தீங்கை நாடினால், அவர்களுடைய பரிந்துரை எனக்கு ஒரு சிறிதும் உதவ முடியாது, அன்றி அவர்கள் என்னைக் காப்பாற்றவும் முடியாது.
[36:24] “அவ்வாறாயின், நான் முற்றிலும் வழிதவறிய வனாகவே இருப்பேன்.
[36:25] “நான் உங்களுடைய இரட்சகர் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன்; தயவு செய்து நான் சொல் வதைக் கேளுங்கள்.”
நன்னெறியாளர்கள் நேரடியாகச் சுவனம்* செல்கின்றனர்
[36:26] (அவருடைய மரணத் தருவாயில்) அவரிடம், “சுவனத்தில் நுழைவீராக” என்று கூறப்பட்டது. அவர் கூறினார், “என் சமூகத்தார் அறிந் திருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன்.

அடிகுறிப்பு:
*36:26 நன்னெறியாளர்கள் உண்மையில் மரணிப்பதில்லை; அவர்கள் ஆதாம் மற்றும் ஏவாள் வசித்த அதே சுவனத்திற்கு இடம் பெயர்கின்றனர், அவ்வளவுதான். அவர்கள் வேதம் வழங்கப்பட்டவர்கள், மகான்கள், மற்றும் உயிர்த் தியாகம் செய்தவர்கள் ஆகியோருடன் ஒரு சுறுசுறுப்பான குறைவேயில்லாத மிகச் சிறப்பான வாழ்வில் சேர்ந்து கொள்கின்றனர் (பின்இணைப்பு 17ஐப் பார்க்கவும்).
[36:27] “என் இரட்சகர் என்னை மன்னித்து விட்டார், மேலும் கண்ணியத்திற்குரியவராக என்னை ஆக்கிவிட்டார் என்பதை.”
[36:28] அவருக்குப் பின்னர், அவருடைய சமூகத்தார் மீது விண்ணிலிருந்து படைவீரர்களை நாம் இறக்கி அனுப்பவில்லை; அவர்களை நாம் இறக்கி அனுப்பத் தேவையுமில்லை.
[36:29] அதற்காக எடுத்துக் கொண்டதெல்லாம் ஓர் அடிதான், உடனே அவர்கள் அசைவற்றுப் போயினர்.
தூதர்களைக் கேலி செய்தல்:சோகமானதொரு மனிதப்பண்பு*
[36:30] மக்களின் நிலைமை எவ்வளவு வருத்தத் திற்குரியதாக இருக்கின்றது! ஒரு தூதர் அவர்களிடம் சென்ற ஒவ்வொரு முறையும், அவர்கள் எப்பொழுதும் அவரைக் கேலி செய்தனர்.

அடிகுறிப்பு:
*36:30 தூதர் தூதுத்துவத்திற்கான திடமான சான்றினைக் காட்டி, கடவுளை மட்டுமே வழிபடுவதை ஆதரித்து, மேலும் நம்மிடம் பணம் கேட்காதிருந்தால், நாம் ஏன் நம்பிக்கை கொள்ளாதிருக்க வேண்டும்? (பின் இணைப்பு 2 ஐப் பார்க்கவும்).
[36:31] அவர்களுக்கு முன்னர் எத்தனை தலைமுறை யினர்களை நாம் அழித்திருக்கின்றோம் என்பதையும் மேலும் அவர்கள் அவர்களிடம் ஒரு போதும் திரும்பாதிருப்பது எப்படி என்பதையும் அவர்கள் பார்க்கவில்லையா?
[36:32] அவர்களில் ஒவ்வொருவரும் நம் முன்னர் வரவழைக்கப்படுவார்கள்.
கடவுளின் அத்தாட்சிகள்
[36:33] இறந்த நிலம் அவர்களுக்கு ஓர் அத்தாட்சி யாகும்: நாம் அதனை மீண்டும் உயிர்ப்பிக் கின்றோம், மேலும் அதிலிருந்து அவர்களுடைய உணவிற்காக தானியங்களை உற்பத்தி செய்கின்றோம்.
[36:34] பேரீத்த மரத் தோட்டங்களையும், மற்றும் திராட்சைகளையும் அதில் நாம் வளர்க் கின்றோம், மேலும் அதிலிருந்து ஊற்றுக்களைப் பொங்கி வரச் செய்கின்றோம்.
[36:35] இது அவர்களுக்குப் பழங்களை வழங்குவ தற்காகவும், மேலும் அவர்களுக்குத் தேவை யான எதனையும் அவர்களுடைய சொந்தக் கரங்களாலேயே அவர்கள் உற்பத்தி செய்து கொள்வதற்காகவுமேயாகும். அவர்கள் நன்றியுடையோராய் இருப்பார்களா?
[36:36] பூமியிலிருந்து அனைத்து வகைத் தாவரங் களையும், அவ்வண்ணமே அவர்களையும், மேலும் அவர்கள் அறிந்தே இராத மற்றப் படைப்புகளையும் படைத்த அந்த ஒருவர் துதிப்பிற்குரியவர்.
[36:37] இரவு அவர்களுக்கு மற்றொரு அத்தாட்சி யாகும்: அதிலிருந்து பகலின் ஒளியை நாம் நீக்கி விடுகின்றோம், அப்போது அவர்கள் இருளில் மூழ்கி விடுகின்றனர்.
[36:38] சர்வ வல்லமையுடையவரான, எல்லாம் அறிந்த வரின் திட்ட அமைப்பிற்கு இணங்க, குறிப்பிட்ட தொரு பகுதியினுள் சூரியன் அஸ்தமிக்கின்றது.
[36:39] சந்திரனை, வளைவான பழமைவாய்ந்த கத்தியின் உறை போன்று அது ஆகும் வரை, பல நிலைகளில் தோன்றுமாறு நாம் வடிவமைத் தோம்.
[36:40] சூரியன் ஒருபோதும் நிலவைப் பிடித்து விட முடியாது-இரவும் பகலும் ஒருபோதும் விலகாது-அவை ஒவ்வொன்றும் அதனதன் சுற்றுப்பாதையில் மிதந்து கொண்டு இருக்கின்றது.
முதல் கப்பலின் கண்டுபிடிப்பு
[36:41] அவர்களுடைய மூதாதையர்களை சுமை நிரம்பிய மரக்கலத்தில் நாம் சுமந்தது அவர் களுக்கு மற்றுமொரு அத்தாட்சியாகும்.
[36:42] பின்னர் அதனையே அவர்கள் சவாரி செய்வதற்காக படைத்தோம்.
[36:43] நாம் நாடியிருந்தால், அவர்களுடைய அலறல் கள் செவியேற்கப்படாதவாறும், அன்றியும் அவர்கள் காப்பாற்றப்பட முடியாதவாறும், அவர்களை நாம் மூழ்கடித்திருக்க இயலும்.
[36:44] மாறாக, நாம் அவர்கள் மீது கருணையைப் பொழிகின்றோம், மேலும் சிறிதுகாலம் சுகமனுப விக்க அவர்களை விடுகின்றோம்.
[36:45] இருப்பினும், “நீங்கள் கருணையை அடையும் பொருட்டு, உங்களுடைய எதிர்காலத்திற்காக நன்னெறியான காரியங்கள் புரிய, உங்களு டைய கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள் ளுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டபோது,
[36:46] அவர்களுடைய இரட்சகரிடமிருந்து அவர் களுக்கு எந்த விதமான சான்று கொடுக்கப் பட்டாலும் பொருட்டல்ல, அவர்கள் தொடர்ச் சியாக அதனை புறக்கணிப்பு செய்கின்றனர்.
[36:47] “உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடவுள்-ன் வாழ்வாதாரங்களில் இருந்து வழங்குங்கள்,” என்று அவர்களிடம் கூறப்பட்டபோது, நம்ப மறுப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம், “அவ்வாறு அவர் நாடியிருந்தால், எவர் களுக்குக் கடவுள் உணவளித்திருக்க முடியுமோ அவர்களுக்கு நாங்கள் ஏன் அளிக்க வேண்டும்? மெய்யாகவே நீங்கள் வெகு தூரம் வழிகேட்டில் இருக்கின்றீர்கள்” என்று கூறுகின்றார்கள்.
[36:48] அத்துடன் அவர்கள் , “நீர் உண்மையாளராக இருந்தால், எப்பொழுது அந்த வாக்குறுதி நிகழ்ந்தேறும்?” என்றும் சவால் விடுகின்றார் கள்.
[36:49] அவர்கள் பார்ப்பதெல்லாம், அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவர் களை நசுக்கிவிடுகின்ற ஓர் அடியாகத்தான் இருக்கும்.
[36:50] ஒரு மரணசாசனம் தயாரிப்பதற்குக் கூட அவர்களுக்கு நேரம் இருக்காது, அன்றி அவர்கள் தங்கள் சமூகத்தாரிடம் திரும்பி வரவும் இயலாது.
[36:51] கொம்பு ஊதப்பட்டு விடும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து எழுந்து தங்கள் இரட்சகரை நோக்கிச் செல்வார்கள்.
[36:52] அவர்கள், “எங்களுக்குக் கேடுதான். நம்முடைய மரணத்திலிருந்து நம்மை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பியது யார்? இதுதான் மிக்க அருளாளர் வாக்களித்திருந்தது. தூதர்கள் சரியானவர்களாகவே இருந்திருக்கின்றனர்” என்று கூறுவார்கள்.
[36:53] இவை அனைத்திற்கும் எடுத்துக் கொள்ளப் படுவது ஓர் அடிதான், உடனே அவர்கள் நம் முன்னர் வரவழைக்கப்படுகின்றார்கள்.
[36:54] அந்த நாளில், எந்த ஆன்மாவிற்கும் சிறிதளவும் அநீதியிழைக்கப்படமாட்டாது. நீங்கள் செய்தது எதுவானாலும் அதற்கான கூலியை மிகச் சரியாக நீங்கள் கொடுக்கப்படுவீர்கள்.
[36:55] சுவன வாசிகள், அந்நாளில், மகிழ்ச்சியுடன் அலுவல்களில் மூழ்கி இருப்பார்கள்.
[36:56] வசதியான ஆசனங்களை அனுபவித்தவாறு, எழில்மிக்க நிழல்களில் அவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைகளுடன் வசிப்பார்கள்.
[36:57] அங்கே அவர்களுக்குப் பழங்கள் இருக்கும்; அவர்கள் விரும்புகின்ற எந்த ஒன்றும் அவர்களுக்குக் கிடைக்கும்.
[36:58] மிக்க கருணையாளரானதோர் இரட்சகரிட மிருந்து அமைதியின் வாழ்த்துக்கள்.
[36:59] குற்றவாளிகளே, உங்களைப் பொறுத்தவரை, நீங்கள் ஒதுக்கி வைக்கப்படுவீர்கள்.
மற்றொரு மாற்று ஏற்பாடு சாத்தான்தான்
[36:60] உங்களிடம் நான் உடன்படிக்கை செய்து கொள்ளவில்லையா, ஆதாமின் சந்ததியினரே, நீங்கள் சாத்தானை வழிபடக் கூடாதென்று? அவன் உங்களுடைய மிகத் தீவிரமான விரோதியென்று?
[36:61] மேலும் நீங்கள் என்னை மட்டும் வழிபட வேண்டு மென்று? இதுவே சரியான பாதையாகும்.
[36:62] உங்களில் எண்ணற்றவர்களை அவன் வழிதவறச் செய்து விட்டான். நீங்கள் எந்தப் புரிந்து கொள்ளுதலையும் பெற்றிருக்க வில்லையா?
[36:63] இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப் பட்டிருந்த நரகமாகும்.
[36:64] உங்களுடைய நம்பிக்கையின்மையின் பின் விளைவாக, இன்றைய தினம் நீங்கள் இதில் எரிவீர்கள்.
[36:65] அந்நாளில் அவர்களுடைய வாய்களில் நாம் முத்திரையிட்டு விடுவோம்; அவர்களுடைய கரங்களும் மற்றும் பாதங்களும் அவர்கள் செய்த ஒவ்வொன்றிற்கும் சாட்சி சொல்லும்.
[36:66] நாம் நாடினால், அவர்களுடைய கண்களை நாம் திரையிட்டு விட இயலும், அதன் விளைவாக, அவர்கள் பாதையைத் தேடும் பொழுது, அவர்கள் பார்க்க மாட்டார்கள்.
[36:67] நாம் நாடினால், இருப்பிடத்திலேயே அவர்களை உறைந்து விடச் செய்ய இயலும்; இதனால் அவர்கள் முன்னால் செல்லவோ, அன்றிப் பின்னால் செல்லவோ முடியாது.
[36:68] எவரையெல்லாம் நீண்டதொரு ஆயுட்காலம் வாழ நாம் அனுமதிக்கின்றோமோ, அவரை பலஹீனத்திற்கு நாம் மீண்டும் திருப்பி விடுகின் றோம். அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா?
[36:69] (தூதராகிய) அவருக்கு நாம் கற்றுக் கொடுத்தது கவிதை அல்ல, அன்றி அவரும் (ஒரு கவிஞர்) அல்ல. இது ஒரு வலிமையான சான்று*, மேலும் ஆழ்ந்ததொரு குர்ஆனே யன்றி வேறில்லை.

அடிகுறிப்பு:
*36:69 “திக்ர்” எனும் வார்த்தை, நிச்சயமாக இலக்கியமோ, அன்றிக் கவிதையோ அல்லாத, குர்ஆனின் கணிதக் குறியீட்டையே அடிக்கடி குறிக்கின்றது. தயவு செய்து, 38:1, 8; 15:6,9; 16:44; 21:2,24; 26:5 & 36:11 ஆகியவற்றில் சரிபார்த்துக் கொள்ளவும்.
[36:70] உயிருள்ளவர்களை எச்சரிப்பதற்காகவும், மேலும் நம்ப மறுப்பவர்களை வெளிப்படுத்துவ தற்காகவும்.
[36:71] அவர்கள் சொந்தமாகக் கொண்டிருக்கும் கால்நடைகளை, நம் சொந்தக் கரங்களால், நாம் அவர்களுக்காகப் படைத்திருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
[36:72] மேலும் அவற்றை அவர்களுக்கு அடங்குமாறு நாம் செய்தோம்; சிலவற்றில் அவர்கள் சவாரி செய்கின்றனர், மேலும் சிலவற்றை அவர்கள் உண்ணுகின்றனர்.
[36:73] அவற்றிலிருந்து மற்ற பலன்களையும், அவ்வண்ணமே பானங்களையும் அவர்கள் அடைந்து கொள்கின்றனர். அவர்கள் நன்றி யுடையவர்களாக இருக்க வேண்டாமா?
சக்தியற்ற இணைத்தெய்வங்கள்
[36:74] அவர்கள் கடவுள்-உடன் மற்றத் தெய்வங் களை, ஒருவேளை அவர்களுக்கு உதவியாக அவைகள் இருக்க முடியுமென்று அமைத்துக் கொள்கின்றனர்!
[36:75] அதற்கு மாற்றமாக, அவர்களுக்கு உதவ அவைகளால் முடியாது; அர்ப்பணித்துக் கொண்ட படைவீரர்களாக அவர்களுக்கு பணி செய்பவர்களாக அவர்கள் ஆகிவிடுவார்கள்.
[36:76] ஆகையால், அவர்களுடைய கூற்றுக்களால், கவலைக்குள்ளாகாதீர், அவர்கள் மறைக்கின்ற ஒவ்வொன்றையும் மேலும் அவர்கள் அறிவிக்கின்ற ஒவ்வொன்றையும் நாம் முற்றிலும் அறிந்திருக்கின்றோம்.
[36:77] ஒரு சிறு துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம், பின்னர் அவன் தீவிரமானதொரு விரோதியாக மாறி விடுகின்றான் என்பதை மனிதன் காணவில்லையா?
[36:78] தனது முதல் படைப்பை மறந்த நிலையில்-“எலும்புகளை, அவை மக்கிப்போன பின்னர் எவரால் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்ப இயலும்?” என அவன் நம்மிடம் கேள்வி எழுப்புகின்றான்.
[36:79] “முதல்முறை அவர்களைத் துவக்கியவரே அவர்களை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புவார். ஒவ்வொரு படைப்பையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்” என்று கூறுவீராக.
[36:80] அவர்தான் பசுமையான மரங்களிலிருந்து, விளக்கிற்காக நீங்கள் எரிக்கின்ற எரி பொருளைப் படைப்பவர்.
[36:81] வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த அந்த ஒருவர் அதைப் போன்றவற்றை மீண்டும் படைக்கும் திறன் கொண்டவர் அல்லவா? ஆம் உண்மையில்; அவர்தான் படைப்பவராகவும், எல்லாம் அறிந்தவராகவும் இருக்கின்றார்.
[36:82] எந்தக் கட்டளையையும் நிறைவேற்ற அவர் செய்ய வேண்டியதெல்லாம் அதன்பால் “ஆகு” என்று கூறுவதே, உடன் அது ஆகிவிடு கின்றது.
[36:83] ஆகையால், அனைத்துப் பொருட்களின் ஆட்சியதிகாரமும் எவருடைய கரத்தில் உள்ளதோ அந்த ஒருவர் துதிப்பிற்குரியவர், மேலும் அவரிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.*

அடிகுறிப்பு:
*36:83 “ரஷாத்” என்பதன் எழுத்தெண் மதிப்புடன் (505), “கலீஃபா” என்பதன் எழுத்தெண் மதிப்பையும் (725), சூரா எண்ணையும் (36), வசன எண்ணையும் (83) கூட்டினால், அதன் கூட்டுத் தொகை ஒரு 19ன் பெருக்குத் தொகையைத் தருகின்றது (505+725+36+83=1349=19ஒ71). அத்துடன், 29 முத்திரை எழுத்துக்கள் கொண்ட சூராக்களில், சூரா 36, 19வது ஆகும்.