சூரா 33: அணியினர் (அல்-அஹ்ஜாப்)

[33:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[33:1] வேதம் வழங்கப்பட்டவரே, நீர் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவேண்டும், மேலும் நம்பமறுப் பவர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் கீழ்ப் படியாதீர். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.
[33:2] உம்முடைய இரட்சகரிடமிருந்து உமக்கு வெளிப் படுத்தப்பட்டவற்றைப் பின்பற்றுவீராக. நீங்கள் அனைவரும் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.
[33:3] மேலும் உமது பொறுப்பைக் கடவுள் மீது வைப் பீராக. ஒரு பொறுப்பாளராகக் கடவுள் போதுமானவர்.
கடவுளுக்கான அர்ப்பணிப்பு பங்குவைக்க முடியாதது
[33:4] கடவுள் எந்த மனிதருக்கும் அவருடைய நெஞ்சத்தில் இரண்டு இதயங்களைத் தர வில்லை. அன்றியும் (உங்களுடைய சமூக வழக்கத்திற்கேற்ப) நீங்கள் பிணையறுத்துக் கொள்கின்ற உங்கள் மனைவியரை உங்களுடைய தாய்மார்களாக* அவர் மாற்றி விடுவதுமில்லை. அன்றி உங்களுடைய தத்துப்பிள்ளைகளை மரபுவழிச் சந்ததியினராக மாற்றிவிடுவதுமில்லை. இவையெல்லாம் நீங்களே கண்டு பிடித்துக் கொண்ட வெறும் கூற்றுக்களேயாகும். கடவுள் சத்தியத்தையே கூறுகின்றார், மேலும் அவர் (நேரான) பாதையில் வழிநடத்துகின்றார்.

அடிகுறிப்பு:
*33:4 கணவனின் தாயைப் போன்று மனைவி இருக்கின்றாள் என்று அறிவித்துவிட்டு அவளை பிணையறுத்துக் கொள்ளுதல் அரேபியாவில் ஒரு சமூகவழக்கமாக இருந்து வந்தது. இத்தகையதொரு அநியாயமான பழக்கவழக்கம் இதில் ரத்து செய்யப்படுகின்றது.
உங்கள் பெயர்களை மாற்றிக்கொள்ளாதீர்கள்
[33:5] உங்களுடைய தத்துப்பிள்ளைகளுக்கு, அவர் களுடைய மரபுவழிப் பெற்றோர்களுடனான அவர்களுடைய உறவைப் பாதுகாக்கும் வண்ணம் நீங்கள் பெயரிட வேண்டும். கடவுள் -ன் பார்வையில் இதுவே மிகவும் நீதமான தாகும். அவர்களுடைய பெற்றோர்களை நீங்கள் அறியாவிட்டால், பின்னர், உங்களு டைய மார்க்கச் சகோதரர்கள் என்ற முறையில், அவர்களை நீங்கள் உங்களுடைய குடும்ப அங்கத்தினர்களைப் போல் நடத்திட வேண்டும். இவ்விஷயத்தில் நீங்கள் ஒரு தவறு செய்து விட்டால், நீங்கள் பாவம் ஒன்றைச் செய்து விடவில்லை; வேண்டுமென்றே செய்யப்படும் உங்களுடைய செயல் திட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாவீர்கள். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[33:6] இந்த வேதம் வழங்கப்பட்டவர் நம்பிக்கை யாளர்களுக்கு, அவர்கள் ஒருவர் மற்றவருடன் இருப்பதை விடவும் மிகவும் நெருக்கமானவர் ஆவார், மேலும் அவருடைய மனைவியர் அவர் களுக்குத் தாய்மார்களைப் போன்றவர்கள் ஆவர். கடவுள்-ன் வேதத்திற்கு இணங்க உறவினர்கள் ஒருவர் மற்றவரிடம் அக்கறை எடுத்துக் கொண்டாக வேண்டும். இவ்விதமாக, நம்பிக்கையாளர்கள் முதலில் தங்களுடைய சொந்தக் குடும்பத்தினர் மீது கவனம் எடுத்துக் கொண்டுவிட்டு, தங்களிடம் குடி பெயர்ந்து வரும் தங்களுடைய உறவினர்கள் மீது அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை இந்த வேதத்தின் கட்டளைகளாகும்.
கடவுளின் உடன்படிக்கைத் தூதருக்கு ஆதரவளிப்பதாக முஹம்மது உறுதிமொழி அளிக்கின்றார்
[33:7] (முஹம்மதே) நீர் உட்பட,வேதம் வழங்கப் பட்டவர்களிடம் அவர்களுடைய உடன் படிக்கையை நாம் எடுத்ததை நினைவு கூர்வீராக, நோவா, ஆப்ரஹாம், மோஸஸ் மற்றும் மேரியின் மகனான இயேசு. அவர்களிடமிருந்து பயபக்தியுடன் கூடிய ஒரு வாக்குறுதியை* நாம் எடுத்தோம்.

அடிகுறிப்பு:
*33:7 இந்த உடன்படிக்கை 3:81ல் விவரிக்கப் பட்டுள்ளது. கடவுள் வேதம் வழங்கப்பட்டவர்களிடம் அவர்களுடைய தூதுச்செய்திகளைத் தூய்மைப்படுத்தவும் ஒன்றிணைக்கவும் முஹம்மதிற்குப் பின் வர இருக்கின்ற அவருடைய உடன்படிக்கைத் தூதருக்கு அவர்கள் ஆதரவளிக்க வேண்டுமென்று ஓர் உடன்படிக்கை எடுத்தார். உலகத்தைப் படைப்பதற்கு முன்னரே இந்த உடன்படிக்கை எடுக்கப்பட்டு விட்டது, மேலும் துல்ஹஜ்3, 1391 (டிசம்பர் 21, 1971) அன்று மக்காவில் நிறைவேற்றப்பட்டது. இஸ்லாமிய வருடத்துடன் (12), நாள் (3) ஐக் கூட்டி, வருடம் (1391) ஐயும் கூட்டினால் கிடைக்கும் கூட்டுத்தொகை 1406, 19ஒ74. ரஷாத் கலீஃபாவைக் கடவுளின் உடன்படிக்கைத் தூதராக அடையாளம் காட்டுகின்ற திணறடிக்கின்ற சான்றுகள் குர்ஆன் முழுவதிலும் வழங்கப்பட்டுள்ளன (பின் இணைப்பு 2மற்றும் 26).
[33:8] அதன்பின்னர், உண்மையாளர்களிடம் அவர் களுடைய உண்மைத்தன்மை குறித்து அவர் நிச்சயம் விசாரிப்பார், மேலும் (இந்த குர்ஆனிய உண்மையை) நம்பமறுப்பவர்களுக்கு வலி நிறைந்ததொரு தண்டனையைத் தயார் செய்துள்ளார்.
அணியினர்களின் யுத்தம்
[33:9] நம்பிக்கை கொண்டோரே, உங்கள் மீதான கடவுள்-ன் அருட்கொடையை நினைவில் கொள்ளுங்கள்; படைவீரர்கள் உங்களைத் தாக்கிய பொழுது, அவர்கள் மீது உக்கிரமான காற்றையும் மேலும் கண்ணுக்குத் தெரியாத படைவீரர்களையும் நாம் அனுப்பினோம். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் பார்க்கின்றார்.
[33:10] உங்களுக்கு மேலிருந்தும், மேலும் உங்களுக் குக் கீழிருந்தும் அவர்கள் வந்த போது, உங்களுடைய கண்கள் திகிலடைந்து விட்டன, உங்களுடைய இதயங்கள் பொறுமையை இழந்து ஓடிவிட்டன, மேலும் நீங்கள் கடவுள்-ஐப்பற்றிப் பொருத்தமில்லாத எண்ணங்க ளுக்கு இடமளித்தீர்கள்.
[33:11] அப்போதுதான் நம்பிக்கையாளர்கள் உண்மை யாகவே சோதிக்கப்பட்டார்கள்; அவர்கள் கடுமையாக நடுங்கும்படி செய்யப்பட்டார்கள்.
[33:12] நயவஞ்சகர்களும் மேலும் தங்கள் இதயங்களில் சந்தேகத்துடனிருப்பவர்களும், “கடவுள்-ம் அவருடைய தூதரும் நமக்கு வாக்களித்தது ஒரு மாயை என்பதை விட அதிகமில்லை!” என்று கூறினார்கள்.
[33:13] அவர்களில் ஒரு கூட்டத்தார், “ யத்ரிப் வாசிகளே, நீங்கள் வெற்றியை அடைய முடியாது; திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். மற்றவர்கள் வேதம் வழங்கப்பட்டவரிடத்தில்; அவர்களுடைய வீடுகள் பலவீனமானவையாக இல்லாதபோதே “எங்களுடைய வீடுகள் பலவீனமானவையாக உள்ளன” என்று சாக்கு போக்குகள் கூறினார்கள். அவர்கள் திரும்பி ஓடிவிடவே விரும்பினார்கள்.
[33:14] எதிரி படையெடுத்து வந்து, மேலும் சேர்ந்து கொள்ளுமாறு அவர்களைக் கேட்டிருந்தால் அவர்கள் தயக்கமின்றி எதிரியுடன் சேர்ந்து கொண்டிருப்பார்கள் .
[33:15] அவர்கள் புறங்காட்டித் திரும்பி ஓடி விடமாட்டோம் என்று கடந்த காலத்தில் அவர்கள் கடவுள்-இடம் வாக்குறுதி அளித்திருந்தனர்; கடவுள்-இடம் ஒரு வாக்குறுதி செய்வது ஒரு மிகப்பெரும் பொறுப்பை உள்ளடக்கியதாகும்.
[33:16] “நீங்கள் தப்பி ஓடினால், மரணத்தை விட்டோ அல்லது கொல்லப்படுவதை விட்டோ நீங்கள் ஒரு போதும் தப்பி ஓடி விட முடியாது. என்ன நிகழ்ந்தாலும் ஒரு பொருட்டல்ல, குறுகிய தொரு காலம் மட்டுமே அதிகமாக நீங்கள் வாழ்கின்றீர்கள்” என்று கூறுவீராக.
[33:17] “கடவுள் உங்களுக்கு ஏதேனும் துன்பத்தை நாடியிருந்தாலோ, அல்லது ஏதேனும் அருட் கொடையை நாடியிருந்தாலோ அவரிடமிருந்து உங்களைக் காப்பாற்றுபவர் யார்?” கடவுள் - உடன் வேறு எந்த இரட்சகரையும், மற்றும் எஜமானரையும், அவர்கள் ஒரு போதும் காணமுடியாது.
[33:18] உங்களில் இடையூறு செய்பவர்களையும், மேலும் தங்களுடைய சகாக்களிடம் “ நாம் அனைவரும் பின்தங்கியிருந்து விடுவோம்,” என்று கூறுபவர்க ளையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார். அரிதாகவே அவர்கள் தற்காப்பிற்காகப் புறப்படுகின்றனர்.
[33:19] அத்துடன், அவர்கள் உம்முடன், நடந்து கொள்ளும்போது கஞ்சத்தனமாகவும் நடந்து கொள்கின்றனர். சமூகத்தை ஏதேனும் அச்சுறுத்தினால், மரணம் அவர்களிடம் ஏற்கெனவே வந்து விட்டதைப் போல், அவர் களுடைய கண்கள் அச்சத்தால் உருளுவதை நீங்கள் காண்கின்றீர்கள். ஆபத்தான நிலை நீங்கி விட்டால், உடனே அவர்கள் கூரிய நாவுகளால் உங்களைச் சாடுகின்றனர். தங்களுடைய செல்வத்தில் அவர்கள் மிகவும் கஞ்சத்தனத்துடன் இருக்கின்றனர். இவர்கள் நம்பிக்கையாளர்கள் அல்ல, மேலும், அதன் விளைவாகக், கடவுள் அவர்களுடைய காரியங்களை பயனற்றதாக ஆக்கி விட்டார். இதனைச் செய்வது கடவுள்-க்கு எளிதானதேயாகும்.
[33:20] படையினர் திரும்பிவரக் கூடும் என்று அவர்கள் நினைத்தார்கள். அப்படி நடந்திருந்தால், அவர்கள் பாலைவனத்தில் தொலைந்து போனவர்களாகி, உங்களைப் பற்றிய செய்திகளை வெகுதொலை விலிருந்து கேட்டுக் கொண்டிருக்கவேண்டுமென அவர்கள் விரும்புவார்கள். அவர்கள் உங்களுடன் இருக்கும் பொழுது படையினர் உங்களைத் தாக்கியிருந்தால், அவர்கள் அரிதாகவே உங்க ளுக்கு ஆதரவளிப்பார்கள்.
வேதம் வழங்கப்பட்டவரின் துணிவு*
[33:21] உங்களில், கடவுள்-ஐயும் இறுதி நாளையும் தேடுபவர்களுக்கும், மேலும் இடையறாது கடவுள்-ஐப் பற்றி நினைப்பவர்களுக்கும் கடவுள்-ன் தூதர் நல்லதொரு முன்மாதிரியை அமைத்துள்ளார்.

அடிகுறிப்பு:
*33:21 சாத்தான் இவ்வசனத்தை அதன் சூழ்நிலைக்குப் புறம்பாக வெளியே எடுத்து, மேலும் “ வேதம் வழங்கப்பட்டவரின் சுன்னத்து ” என்றழைக்கப்படுகின்ற அங்கீகாரமற்ற மேலும் நியாயமற்ற சட்டதிட்டங்களின் ஒரு முழுமையான தொகுப்பை புதுமைகளோடு உண்டு பண்ணச் செய்து வேதம் வழங்கப்பட்டவரான முஹம்மதின் மீது கொண்டிருந்த இணைத்தெய்வ வழிபாட்டை மக்கள் நம்பும்படியாக செய்து விட்டான். இது முற்றிலும் மாறுபட்ட ஒரு மார்க்கத்தை உருவாக்கியது (42:21 மற்றும் பின் இணைப்பு 18 ஐ பார்க்கவும்).
[33:22] உண்மையான நம்பிக்கையாளர்கள் (தாக்கு வதற்குத் தயாரான) படையினரைக் கண்ட பொழுது, அவர்கள், “ இதுதான் கடவுள்-ம் அவருடைய தூதரும் நமக்கு வாக்களித்தது மேலும் கடவுள்-ம் அவருடைய தூதரும் உண்மையாளர்களாகவே இருக்கின்றனர்” என்று கூறினார்கள். இது (ஆபத்தான சூழ்நிலை ) அவர்களுடைய விசுவாசத்தை பலப்படுத்தவும் மேலும் அவர்களுடைய அடிபணிதலை அதிகரிக் கவும் மட்டுமே செய்தது.
[33:23] நம்பிக்கையாளர்களில், கடவுள்-உடனான தங்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்று பவர்கள் இருக்கின்றனர். அவர்களில் சிலர் மரணமடைந்து விட்டனர், அதே சமயம் மற்றவர்களோ ஒருபோதும் தடுமாறாது, தயாராக நிற்கின்றனர்.
[33:24] அவர்களுடைய உண்மைத்தன்மைக்காக உண்மையாளர்களுக்கு கடவுள் நிச்சயமாகப் பிரதிபலனளிப்பார், மேலும் நயவஞ்சகர்களைத் தண்டிப்பார், அவ்வாறு அவர் நாடினால், அல்லது அவர்களை மீட்டுக் கொள்வார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்
முஹம்மதின் காலத்தில்
[33:25] நம்ப மறுப்பவர்களை அவர்களுடைய கோபத் துடன் கடவுள் திருப்பி விரட்டினார், மேலும் அவர்கள் வெறுங்கையுடன் சென்றனர். கடவுள் இவ்விதமாக எந்தச் சண்டையிலிருந்தும் நம்பிக்கையாளர்களைக் காப்பாற்றிவிட்டார். கடவுள் சக்தி மிக்கவர், சர்வ வல்லமையுடையவர்.
[33:26] அத்துடன் வேதத்தையுடைய மக்களில் உள்ள அவர்களுடைய கூட்டாளிகளை, அவர் களுடைய பாதுகாப்பான நிலைகளிலிருந்து அவர் கீழே கொண்டு வந்தார், மேலும் அவர்களுடைய இதயங்களுக்குள் திகிலை எறிந்தார். அவர்களில் சிலரை நீங்கள் கொன்றீர்கள், மேலும் சிலரைச் சிறைப் பிடித்தீர்கள்.
[33:27] அவர்களுடைய நிலங்களுக்கும், அவர் களுடைய வீடுகளுக்கும், அவர்களுடைய பணத்திற்கும், மேலும் நீங்கள் ஒருபோதும் மிதித்திராத நிலங்களுக்கும் நீங்கள் வாரிசாகும்படி அவர் செய்தார். கடவுள் எல்லா விஷயங்களையும் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்து உள்ளார்.
நெருக்கமாக இருப்பதால் விசேஷமான பொறுப்பு
[33:28] வேதம் வழங்கப்பட்டவரே, உம் மனைவியரிடம் கூறுவீராக “இந்த உலகத்தையும் மேலும் அதன் ஆடம்பரங்களையும் தேடுபவர்களாக நீங்கள் இருந்தால், பின்னர் நான் உங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கி, இணக்கமான முறையில் சென்றுவிட உங்களை அனுமதிக்கின்றேன்.
[33:29] “ஆனால் நீங்கள் கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும், மேலும் மறுவுலகின் வீட்டையும் தேடுபவர்களாக இருந்தால், பின்னர் உங்களில் உள்ள நன்னெறியாளர்களுக்கு மகத்தான தொரு பிரதிபலனைக் கடவுள் தயார் செய்துள்ளார்”.
விசேஷமான பொறுப்பு
[33:30] வேதம் வழங்கப்பட்டவரின் மனைவியரே, உங்களில் எவரேனும் ஒரு பெரும்பாவத்தைச் செய்வீர்களாயின், அவருக்குரிய தண்டனை இரட்டிப்பாக்கப்படும். இதனைச் செய்வது கடவுள்-க்கு எளிதானதேயாகும்.
[33:31] உங்களில் எவரொருவர் கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்து கின்றாரோ, அவருக்குப் பிரதிபலனை நாம் இருமடங்காக வழங்குவோம், மேலும் தாராளமானதொரு வாழ்வாதாரத்தையும் அவருக்காக நாம் தயார் செய்துள்ளோம்.
முன்னுதாரணத்தை அமைத்தல்
[33:32] வேதம் வழங்கப்பட்டவரின் மனைவியரே, நீங்கள் நன்னெறியைக் கடைப்பிடிப்பீர்களாயின் (உங்களுக்கு அதிகமானதொரு பொறுப் புள்ளது). நீங்கள் மற்ற எந்தப் பெண்களையும் போன்றவர்கள் அல்ல. ஆகையால், தங்களுடைய இதயங்களில் நோய் உடையவர்கள் தவறான எண்ணங்கள் கொள்ளாதிருக்கும் பொருட்டு, நீங்கள் மிகவும் மெதுவாகப் பேச வேண்டாம்; நன்னெறிகளை மட்டுமே நீங்கள் பேச வேண்டும்.
[33:33] நீங்கள் உங்களுடைய வீடுகளில் தங்கியிருக்க வேண்டும், மேலும் பழைய அறியாமை நாட்களில் நீங்கள் செய்து கொண்டிருந்ததைப் போல், மக்களுடன் அளவிற்கதிகமாகக் கலக்காதீர்கள். நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கவும், மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுக்கவும், மேலும் கடவுள் மற்றும் அவருடைய தூதருக்குக் கீழ்ப்படியவும் வேண்டும். புனித ஆலயத்தைச் சுற்றி வசிப்பவர்களே, கடவுள் உங்களிடமிருந்து அனைத்துத் தீமைகளையும் நீக்கவும், மேலும் உங்களை முழுமையாகத் தூய்மைப் படுத்தவுமே விரும்புகின்றார்.
[33:34] உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்ற கடவுள்-ன் வெளிப்பாடுகளையும் மேலும் அவற்றுள் இரண்டறக்கலந்துள்ள ஞானத் தையும் நினைவில் கொள்ளுங்கள். கடவுள் கம்பீரமானவர், நன்கறிந்தவர்.
ஆண்கள் மற்றும் பெண்களின் சமத்துவம்
[33:35] அடிபணிந்த ஆண்கள், அடிபணிந்த பெண்கள், நம்பிக்கை கொண்ட ஆண்கள், நம்பிக்கை கொண்ட பெண்கள், கீழ்ப்படிகின்ற ஆண்கள், கீழ்ப்படிகின்ற பெண்கள், உண்மையாளர் களான ஆண்கள், உண்மையாளர்களான பெண்கள், உறுதிப்பாடுடைய ஆண்கள், உறுதிப்பாடுடைய பெண்கள், பயபக்தியுடைய ஆண்கள், பயபக்தியுடைய பெண்கள், தர்ம சிந்தனையுள்ள ஆண்கள், தர்மசிந்தனையுள்ள பெண்கள், நோன்பு நோற்கும் ஆண்கள், நோன்பு நோற்கும் பெண்கள், கற்புடைய ஆண்கள், கற்புடைய பெண்கள், மேலும் கடவுள்-ஐ அடிக்கடி நினைவு கூர்கின்ற ஆண்கள் மற்றும் அடிக்கடி நினைவுகூர்கின்ற பெண்கள்; கடவுள் அவர்களுக்காக மன்னிப் பையும் மகத்தானதொரு பிரதிபலனையும் தயார் செய்துள்ளார்.
முஹம்மது செய்த மிகப்பெரும் பிழை முஹம்மது என்ற மனிதர் முஹம்மது என்ற தூதருக்கு மாறு செய்கின்றார்
[33:36] கடவுள்-ம் அவருடைய தூதரும் ஏதேனும் கட்டளையைப் பிறப்பித்து விட்டால், நம்பிக்கை கொண்ட ஆணிற்கோ அல்லது நம்பிக்கை கொண்ட பெண்ணிற்கோ, அந்தக் கட்டளை குறித்து தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு எதுவும் கிடையாது. கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் கீழ்ப்படியாத எவர் ஒருவரும் வெகு தூரம் வழிகேட்டில் சென்று விட்டார்.
[33:37] கடவுள்-ஆல் அருள்பாலிக்கப்பட்டு மேலும் உம்மால் அரவணைக்கப்பட்ட ஒருவரிடம் நீர் “உம்முடைய மனைவியைத் தக்கவைத்துக் கொள்வீராக மேலும் கடவுள்-ஐ அஞ்சிக்கொள் வீராக” என்று கூறியதை நினைவு கூர்வீராக, மேலும் கடவுள் அறிவிக்க நாடியதை உமக்குள் ளேயே நீர் மறைத்துக் கொண்டீர். இவ்விதமாக, கடவுள்-ஐ மட்டுமே அஞ்ச வேண்டியவராக நீர் இருக்கும் பொழுது, நீர் மக்களுக்கு அஞ்சினீர். ஒரு மனிதன் தன்னுடைய தத்துப்பிள்ளையின் விவாகரத்துச் செய்யப்பட்ட மனைவியை மணந்து கொள்ளலாம் என்ற முன்மாதிரியை நிலைநாட்டுவதற்காக, ஜைது தன்னுடைய மனைவியை விட்டு முழுமையாக நீங்கிக் கொண்டு விட்ட பின்னர், அவளை நாம் உமக்கு மணம் செய்வித்தோம். கடவுள்-ன் கட்டளை கள் செய்துமுடிக்கப்படவேண்டும்.
[33:38] கடவுள்-ஆல் சட்டபூர்வமானதாக்கப்பட்ட எந்த விஷயத்தையும் செய்வதன் மூலம் வேதம் வழங்கப்பட்டவர், ஒரு தவறைச் செய்துவிடு வதில்லை. ஆரம்பகாலத் தலைமுறைகள் முதல் கடவுள்-ன் வழிமுறை இவ்வாறாகவே இருக் கின்றது. கடவுள்-ன் கட்டளை புனிதமான தொரு கடமையாக இருக்கின்றது.
[33:39] கடவுள்-ன் தூதுச்செய்தியை அறிவிப்பவர் களும், மேலும் அவருக்கு மட்டுமே பயபக்தி யோடிருப்பவர்களும், கடவுள்-ஐத்தவிர எவரொருவருக்கும் அஞ்ச வேண்டாம். கடவுள் தான் மிகத்திறன் வாய்ந்த கணக்கிடுபவர்.
இறுதித் தூதர் அல்ல*
[33:40] உங்களில் எந்த ஆணிற்கும் முஹம்மது தந்தையாக இருக்கவில்லை. அவர் கடவுள்- உடைய ஒரு தூதராகவும் மேலும் வேதம் வழங்கப்பட்டவர்களில் இறுதியானவராகவும் இருந்தார். கடவுள் அனைத்துப் பொருட் களையும் முற்றிலும் அறிந்தவராக இருக் கின்றார்.

அடிகுறிப்பு:
*33:40 முஹம்மதைப் பற்றிய தெளிவான விளக்கமாக இது இருந்தபோதிலும், அதிகமான முஸ்லிம்கள் அவர் வேதம் வழங்கப் பட்டவர்களில் இறுதியானவர், மேலும் இறுதித் தூதராகவும் இருந்தார் என்று வலியுறுத்துகின்றனர். 40:34ல் நாம் காண்பதைப் போல இது ஒரு சோகமான மனிதப் பண்பாகும். கடவுள்மீது உடனடியாக நம்பிக்கைகொள்பவர்கள் வேதம் வழங்கப்பட்டவர்களில் இறுதியானவரான முஹம்மதிற்குப் பின்னால் கடவுள் தன்னுடைய தூய்மைப்படுத்துகின்ற மற்றும் ஒன்றிணைக்கின்ற உடன்படிக்கைத் தூதரை அனுப்புகின்றார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்கின்றனர் (3:81, 33:7).
[33:41] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்-ஐ அடிக்கடி நினைவு கூர வேண்டும்.*

அடிகுறிப்பு:
*33:41-42 உங்களுடைய எண்ணங்களை அதிகமான நேரம் ஆக்கிரமித்திருக்கும் எதுவாயினும் அதுவே உங்களுடைய தெய்வமாகும். எனவே கடவுளை நினைவு கூர்வதற்கும், மேலும் இரவும் பகலும் அவரைத் துதிப்பதற்குமான கட்டளை இதுவாகும். பின் இணைப்பு 27 ஐ பார்க்கவும்.
[33:42] இரவும் பகலும் அவரை நீங்கள் துதித்திட வேண்டும்.

அடிகுறிப்பு:
*33:41-42 உங்களுடைய எண்ணங்களை அதிகமான நேரம் ஆக்கிரமித்திருக்கும் எதுவாயினும் அதுவே உங்களுடைய தெய்வமாகும். எனவே கடவுளை நினைவு கூர்வதற்கும், மேலும் இரவும் பகலும் அவரைத் துதிப்பதற்குமான கட்டளை இதுவாகும். பின் இணைப்பு 27 ஐ பார்க்கவும்.
[33:43] அவர் தான் தன்னுடைய வானவர்களுடன் சேர்ந்து, உங்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியினுள் வழிநடத்துவதற்காக, உங்களுக்கு உதவுகின்றார். நம்பிக்கையாளர் களின் பால் அவர் மிக்க கருணையாளராக இருக்கின்றார்.
[33:44] அவர்கள் அவரைச் சந்திக்கும் அந்நாளில் அவர்களுடைய வாழ்த்துரை, “அமைதி” என்பதாகும், மேலும் அவர்களுக்காகத் தாராளமானதொரு பிரதிபலனை அவர் தயாரித்துள்ளார்.
[33:45] வேதம் வழங்கப்பட்டவரே, ஒரு சாட்சியாகவும், நற்செய்தியைத் தாங்கியவராகவும், அவ் வண்ணமே ஓர் எச்சரிக்கை செய்பவராகவும் உம்மை நாம் அனுப்பியுள்ளோம்.
[33:46] அவருடைய நாட்டத்திற்கிணங்க, ஒரு வழிகாட்டுகின்ற வழிகாட்டியாக, கடவுள்-ன் பால் அழைக்கின்றீர்.
[33:47] கடவுள்-இடமிருந்து மகத்தானதொரு அருட் கொடைக்கு அவர்கள் தகுதியாகி விட்டனர் என்ற நற்செய்தியை நம்பிக்கையாளர்களுக்கு வழங்குவீராக.
[33:48] நம்பமறுப்பவர்களுக்கும் மேலும் நயவஞ்சகர் களுக்கும் கீழ்ப்படியாதீர், அவர்களுடைய அவமதிப்புகளை புறக்கணித்து விடுவீராக, மேலும் உம்முடைய பொறுப்பைக் கடவுள் மீது வைப்பீராக; ஒரு பொறுப்பாளராகக் கடவுள் போதுமானவர்.
திருமணச் சட்டங்கள்
[33:49] நம்பிக்கை கொண்டோரே, நம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் செய்துவிட்டு, பின்னர் பாலியலுறவு கொள்வதற்கு முன்னர் அவர்களை விவாகரத்து செய்துவிட்டால், அவர்கள் (மற்றொரு மனிதரை திருமணம் செய்வதற்கு முன்னர்) உங்களுக்கான காத்திருக்கும் தவணை எதையும் கடமைப்பட்டிருக்கவில்லை. நீங்கள் அவர் களுக்கு நியாயமான நஷ்ட ஈடு அளிக்கவும், மேலும் அவர்கள் இணக்கத்துடன் செல்லவும் அனுமதிக்க வேண்டும்.
[33:50] வேதம் வழங்கப்பட்டவரே, நீர் எவர்களுக்கு வரதட்சணை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரை, அல்லது கடவுள்-ஆல் உமக்கு வழங்கியுள்ளவாறு, ஏற்கனவே நீர் கொண்டிருப்பவர்களை உமக்கு நாம் சட்டபூர்வமாக்கியுள்ளோம்.அத்துடன் உம்முடன் குடிபெயர்ந்து, வந்த உம் தந்தையின் சகோதரர்களுடைய மகள்களும், உம் தந்தையின் சகோதரிகளுடைய மகள்களும், உம் தாயின் சகோதரர்களுடைய மகள்களும், உம் தாயின் சகோதரிகளுடைய மகள்களும், உமக்கு சட்டபூர்வமானவர்களே ஆவார்கள். அத்துடன், நம்பிக்கை கொண்ட ஒரு பெண் வேதம் வழங்கப்பட்டவருக்கு - வரதட்சணையை விட்டுக் கொடுப்பதன் மூலம்-தன்னையே கொடுத்தால் அவரும் அதை விரும்பினால், ஒரு வரதட்சணையு மின்றி வேதம் வழங்கப்பட்டவர் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம். ஆயினும் , அவள் வரதட்சணையை விட்டுக் கொடுப்பது என்பது வேதம் வழங்கப் பட்டவருக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாகுமே அன்றி, மற்ற நம்பிக்கையாளர் களுக்கல்ல. அவர்களுடைய வாழ்க்கைத் துணைகள் அல்லது அவர்கள் ஏற்கெனவே கொண்டிருப்பவர்கள் சம்பந்தமாக அவர்களுடைய உரிமைகளை நாம் ஏற்கெனவே விதித்துள்ளோம். இது உம்மை எந்தச் சங்கடத்திலிருந்தும் விடுவிப் பதற்காகவேயாகும். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[33:51] அவர்களில் எவர் ஒருவரையும் நீர் கடுமையின்றி விலக்கி வைக்கலாம், மேலும் நீர் அவர்களில் எவர் ஒருவரையும் உம்மிடம் நெருக்கமாகக் கொண்டு வரலாம். நீர் பிணையறுத்துக் கொண்ட எவர் ஒருவருடனும் நீர் சமாதானம் செய்து கொண்டால், நீர் குற்றமெதுவும் செய்யவில்லை. இந்தச் செயல் முறையில், அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள், கவலையெதுவும் கொள்ளாதிருப்பார்கள், மேலும் அவர்கள் அனைவருக்கும் நீதமாக நீர் வழங்குப வற்றைக் கொண்டு திருப்தியடைவார்கள். உங்கள் இதயங்களில் உள்ளவற்றைக் கடவுள் அறிகின் றார். கடவுள் எல்லாம் அறிந்தவர், இரக்க முடையவர்.
[33:52] உமக்கு விவரிக்கப்பட்ட வகையினருக்கப்பால், வேறு எந்தப் பெண்களையும் திருமணம் செய்து கொள்வதிலிருந்து நீர் தடுக்கப்பட்டுள்ளீர், அன்றியும் (தடை செய்யப்பட்ட வகையினரி லிருந்து) புதியதொரு மனைவியை நீர் மாற்றி அமைத்துக்கொள்ளவும் கூடாது, அவர்களுடைய அழகில் நீர் எவ்வளவு வியந்தபோதிலும் பொருட் டல்ல. ஏற்கெனவே உமக்குச் சட்டபூர்வமாக்கப் பட்டவர்களைக் கொண்டு திருப்தியடைந்தவராக நீர் இருக்க வேண்டும். அனைத்து விஷயங்கள் மீதும் கடவுள் கண்காணிப்பு நிறைந்தவராக உள்ளார்.
நன்னடத்தைக் கோட்பாடு
[33:53] நம்பிக்கை கொண்டோரே, உண்ணுவதற்கு உங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டாலே அன்றி வேதம் வழங்கப்பட்டவரின் வீடுகளுக்குள் நுழையாதீர்கள், அன்றி அத்தகையதொரு அழைப்பை எவ்விதத்திலும் நீங்கள் வலியுறுத்தவும் வேண்டாம். நீங்கள் அழைக்கப்பட்டால், நீங்கள் நுழையலாம். நீங்கள் உண்டு முடித்துவிட்டால், நீங்கள் சென்று விட வேண்டும்; நீண்ட உரையாடல்களில் அவரை ஈடுபடுத்தாதீர்கள். இது வேதம் வழங்கப்பட்டவரைப் புண்படுத்துவதாக இருந்தது, மேலும் உங்களிடம் சொல்வதற்கு அவர் மிகவும் கூச்சப்படுபவராக இருந்தார். ஆனால் கடவுள் உண்மையிலிருந்து கூச்சப்பட்டு விலகி விடுவதில்லை. அவருடைய மனைவியரிடம் நீங்கள் எதையேனும் கேட்டாக வேண்டும் என்றி ருந்தால், ஒரு திரைக்கப்பாலிருந்து அவர்களிடம் கேளுங்கள். உங்களுடைய இதயங்களுக்கும் மேலும் அவர்களுடைய இதயங்களுக்கும் இதுவே தூய்மையானதாகும். நீங்கள் கடவுள்-உடைய தூதரைப் புண்படுத்தக் கூடாது. அவருக்குப் பின்னர் அவருடைய மனைவியரை நீங்கள் மணந்து கொள்ள வேண்டாம், ஏனெனில் கடவுள்-ன் பார்வையில் இது மிகப்பெரியதொரு குற்றச் செயலாகும்*.

அடிகுறிப்பு:
*33:53 ஏற்கெனவே நம் தந்தையருக்கு மணமுடிக்கப்பட்டிருந்த பெண்களைத் திருமணம் புரிந்து கொள்வதிலிருந்து 4:22ல் நாம் தடுக்கப்பட்டுள்ளோம். அன்றி எந்தத் தந்தையும் தன் மகனுடைய விவாகரத்துச் செய்யப்பட்ட மனைவியைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது (4:23). இந்தத் தெய்வீகக் கட்டளை நம் தந்தையர்களுக்குரிய நமது மரியாதையையும் மேலும் அவர்களுடைய மிகவும் அந்தரங்கமான விவகாரங்களையும் பாதுகாக்கின்றது. அதே போல், வேதம் வழங்கப்பட்டவர் அவருடைய காலத்தில் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்தார். அந்த நம்பிக்கையாளர்களின் நலனிற்காக, ஏற்கனவே வேதம் வழங்கப்பட்டவருக்கு மணமுடிக்கப்பட்டிருந்த பெண்களைத் திருமணம் செய்து கொள்வதிலிருந்து கடவுள் அவர்களைத் தடை செய்திருந்தார். திருமணம் என்பது ஒரு புனிதமான மேலும் மிகவும் அந்தரங்கமான உறவாகும், அத்துடன் வேதம் வழங்கப்பட்டவரின் அந்தரங்க வாழ்வை, அந்தரங்கமாக வைத்திருப்பதே மேலானதாகும்.
[33:54] எதையேனும் நீங்கள் அறிவித்தாலும், அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும், கடவுள் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[33:55] பெண்கள் தங்களுடைய தந்தையர், தங்களுடைய மகன்கள், தங்களுடைய சகோதரர்கள், தங்களு டைய சகோதரர்களின் மகன்கள், தங்களுடைய சகோதரிகளுடைய மகன்கள், மற்ற பெண்கள், மற்றும் அவர்களுடைய (பெண்) ஊழியர்கள் முன்னிலையில் (தங்களுடைய ஆடைக் கட்டுப்பாட்டை) தளர்த்திக் கொள்ளலாம். அவர்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்க வேண்டும். அனைத்து விஷயங்களுக்கும் கடவுள் சாட்சியாவார்.
வேதம் வழங்கப்பட்டவருடைய வாழ்க்கைக் காலத்தில்*
[33:56] கடவுள்-ம் அவருடைய வானவர்களும், வேதம் வழங்கப்பட்டவருக்கு உதவியும் மற்றும் ஆதரவும் அளிக்கின்றனர். நம்பிக்கை கொண் டோரே, நீங்கள் அவருக்கு உதவியும் மற்றும் ஆதரவும் அளிக்க வேண்டும், மேலும் எவ்வாறு அவர் மதிக்கப்பட வேண்டுமோ அவ்வாறு அவரை மதிக்கவும் வேண்டும்.*

அடிகுறிப்பு:
*33:56 “ வேதம் வழங்கப்பட்டவர்” (நபி) என்ற வார்த்தை ஒரே சீராக முஹம்மதை, அவர் உயிருடன் இருந்த போதுமட்டுமே குறிக்கின்றது. 33:41-42ல் கட்டளையிட்டுள்ளபடி கடவுளை நினைவு கூர்வதற்குப் பதிலாக, இடையறாது, முஹம்மதை நினைவு கூர்ந்து கொண்டிருக்கும் வண்ணம் முஸ்லிம்களை மயக்குவதற்கு சாத்தான் இந்த வசனத்தைப் பயன்படுத்திக் கொண்டான்.
[33:57] நிச்சயமாக, எவர்கள் கடவுள்-ஐயும் அவரு டைய தூதரையும் எதிர்க்கின்றனரோ, அவர் களை இவ்வுலகிலும், மறுவுலகிலும் ஒரு சாபத்தைக் கொண்டு கடவுள் துன்புறுத்து கின்றார்; அவர்களுக்காக இழிவு நிறைந்த தொரு தண்டனையை அவர் தயார் செய்து ள்ளார்.
[33:58] எந்தத் தவறும் செய்யாத, நம்பிக்கை கொண்ட ஆண்களையும் மற்றும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் துன்புறுத்துகின்றவர்கள், ஒரு பொய்மையை மட்டும் செய்துவிடவில்லை, ஆனால் அத்துடன் மிகப்பெரியதொரு பாவத் தையும் புரிந்து விட்டனர்.
பெண்களுக்கான ஆடைக்கட்டுப்பாடு
[33:59] வேதம் வழங்கப்பட்டவரே, உம்முடைய மனைவி யரிடமும், உம்முடைய மகள்களிடமும் மற்றும் நம்பிக்கையாளர்களின் மனைவியரிடமும் அவர்கள் தங்களுடைய ஆடைகளை நீளப் படுத்திக்கொள்ளும்படி கூறுவீராக. இவ்வித மாக, அவர்கள் (நன்னெறியுடைய பெண்க ளென) அடையாளம் காணப்படுவார்கள். மேலும் அவமதிக்கப்படுவதிலிருந்தும் தப்பித்துக் கொள்வார்கள். கடவுள் மன்னிப்பவர். மிக்க கருணையாளர்.
[33:60] நயவஞ்சகர்களும், தங்கள் இதயங்களில் நோயுடையவர்களும், மேலும் நகரத்தின் ஒழுக்கம் கெட்ட பொய்யர்களும் (உங்களைத் துன்புறுத்துவதிலிருந்து) விலகிக் கொண்டா லே தவிர, நிச்சயமாக நாம் உம் கரத்தை மேலோங்கச் செய்வோம், பின்னர் சிறிதொரு காலத்திற்குள் அவர்கள் வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்படுவர்.
[33:61] அவர்கள் எங்கு சென்றபோதிலும், அவர்கள் நிந்தனைக்குள்ளாகி விட்டனர்; (உங்களைத் தாக்குவதை அவர்கள் நிறுத்தினாலன்றி,) அவர்கள் பிடிக்கப்படலாம் மேலும் கொல்லப்படலாம்.
[33:62] இதுவே கடவுள்-ன் நிரந்தரமான வழிமுறை யாகும், மேலும் கடவுள்-ன் வழிமுறை மாற்றப்பட முடியாதது என்பதை நீங்கள் கண்டு கொள்வீர்கள்.
உலக முடிவு வெளிப்படுத்தப்பட்டுவிட்டது*
[33:63] அந்த நேரம் (உலக முடிவு) பற்றி மக்கள் உம்மிடம் கேட்கின்றனர். “அதனைப் பற்றிய அறிவு கடவுள்-இடம் மட்டுமே உள்ளது. நீங்கள் அறிந்துள்ள அனைத்தின்படியும், அந்த நேரமா னது மிகவும் நெருக்கத்திலேயே இருக்கக் கூடும்” என்று கூறுவீராக.

அடிகுறிப்பு:
*33:63 ஓர் உதாரணத்திற்கு ஒரு நூற்றாண்டைவிடக் குறைந்த காலத்திற்கு முன்னர், தொலைக்காட்சி மற்றும் விண்வெளியின் செயற்கைக் கோள்களைப் பற்றிய அறிவைக் கடவுள் மட்டுமே கொண்டிருந்தார். முன்னரே தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் இந்த அறிவை அவர் வெளிப்படுத்தினார். அதைப் போலவே, இந்த உலகத்தின் முடிவிற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரத்தைக் கடவுள் வெளிப்படுத்தியுள்ளார் (பின் இணைப்பு 25).
பின்பற்றியவர்கள் தங்களுடைய தலைவர்களுக்கு எதிராக திரும்புகின்றனர்
[33:64] நம்பமறுப்பவர்களைக் கடவுள் குற்றவாளிகள் என முடிவு செய்துவிட்டார், மேலும் அவர் களுக்காக நரகத்தைத் தயார் செய்துள்ளார்.
[33:65] நிரந்தரமாக அவர்கள் அங்கே தங்கியிருப் பார்கள். அவர்கள் எந்த இரட்சகரையோ, அன்றி ஒரு ஆதரவாளரையோ காணமாட்டார்கள்.
[33:66] நரகத்திற்குள் அவர்கள் எறியப்படுகின்ற அந்நாளில், அவர்கள், “ஐயோ, நாங்கள் கடவுள்-க்குக் கீழ்ப்படிந்தவர்களாகவும், மேலும் அவருடைய தூதருக்குக் கீழ்ப்படிந்தவர் களாகவும் இருந்திருக்க வேண்டும், என விரும்புகின்றோம்” என்று கூறுவார்கள்.
[33:67] அத்துடன் அவர்கள் கூறுவார்கள், “எங்கள் இரட்சகரே, நாங்கள் எங்களுடைய எஜமானர் களுக்கும் தலைவர்களுக்கும் கீழ்ப்படிந்தோம், ஆனால் அவர்கள் எங்களை வழிகேட்டில் செலுத்தி விட்டார்கள்.
[33:68] “எங்கள் இரட்சகரே, இருமடங்கு தண்டனை யை அவர்களுக்குக் கொடுப்பீராக, மேலும் மிகப்பெரியதொரு சாபத்தைக் கொண்டு அவர்களைச் சபிப்பீராக.”
[33:69] நம்பிக்கை கொண்டோரே, மோஸஸைப் புண்படுத்தியவர்களைப் போன்று நீங்கள் இருக்காதீர்கள், பின்னர் அவர்கள் கூறியவற்றி லிருந்து கடவுள் அவரை விடுவித்தார். கடவுள் -ன் பார்வையில், கண்ணியமானவராக, அவர் இருந்தார்.
[33:70] நம்பிக்கை கொண்டோரே, கடவுள் இடம் பயபக்தியோடிருங்கள், மேலும் சரியான கூற்றுக்களை மட்டுமே கூறுங்கள்.
[33:71] அப்போது அவர் உங்களுடைய காரியங்களை உறுதிப்படுத்துவார், மேலும் உங்களுடைய பாவங்களை மன்னிப்பார். கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் கீழ்ப்படிந்தவர்கள் மகத்தானதொரு மாபெரும் வெற்றியை பெற்றுவிட்டார்கள்.
தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்
[33:72] வானங்களுக்கும், பூமிக்கும், மற்றும் மலை களுக்கும் (தேர்ந்தெடுக்கும் சுதந்திரமெனும்) பொறுப்பை, நாம் முன்வைத்தோம், ஆனால் அவை அதனைச் சுமந்து கொள்ள மறுத்தன, மேலும் அதனைக் குறித்து அஞ்சியவை களாகவும் இருந்தன. ஆனால் மனிதன் அதனை ஏற்றுக் கொண்டான். அவன் வரம்புமீறுகின்றவனாகவும், அறிவில்லாதவனாகவும் இருந்தான்.*

அடிகுறிப்பு:
*33:72 பிராணிகள், மரங்கள், நட்சத்திரங்கள் போன்றவை அருள்மிகுந்த இந்த வாய்ப்பைச் சாதகமாக எடுத்துக் கொண்டன. பின் இணைப்பு 7ஐப் பார்க்கவும்.
[33:73] ஏனெனில் நயவஞ்சக ஆண்களையும் மற்றும் நயவஞ்சகப் பெண்களையும், மேலும் இணைத் தெய்வ வழிபாடு செய்கின்ற ஆண்களையும் மற்றும் இணைத்தெய்வ வழிபாடு செய்கின்ற பெண்களையும், கடவுள் தவிர்த்து விட முடியாதவாறு தண்டிப்பார். நம்பிக்கை கொண்ட ஆண்களையும் மற்றும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் கடவுள் மீட்டுக் கொள் கின்றார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.