சூரா 28: சரித்திரம் (அல்-கஸஸ்)

[28:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[28:1] த.ஸீ.ம*

அடிகுறிப்பு:
*28:1 குர்ஆனுடைய அற்புதமான கணிதக் குறியீட்டின் விபரங்களுக்கும், மேலும் இந்த குர்ஆனியத் தலைப்பு எழுத்துக்களின் அர்த்தம் அல்லது முக்கியத்துவத்திற்கும் பின்இணைப்பு 1ஐப் பார்க்கவும்.
[28:2] (எழுத்துக்களாகிய) இவை இந்த ஆழ்ந்த புத்தகத்தின் சான்றுகளாக அமைகின்றன.
[28:3] நம்பிக்கை கொண்ட மக்களின் நலனிற்காக, மோஸஸ் மற்றும் ஃபேரோவின் சரித்திரத்தில் சிலவற்றை, சத்தியத்துடன் நாம் உமக்கு இதில் ஓதிக் காட்டுகின்றோம்.
[28:4] ஃபேரோ பூமியில் ஒரு கொடுங்கோலனாக ஆனான், மேலும் மக்களில் சிலருக்கெதிராக பாரபட்சம் செய்தான். அவர்களில் உள்ள உதவியற்ற ஒரு கூட்டத்தாரை, அவர்களுடைய மகன்களைக் கொன்று விட்டு, அதே சமயம் அவர்களுடைய மகள்களை உயிருடன் விட்டு வைத்து, கொடுமை செய்தான். அவன் உண்மையில் தீயவனாக இருந்தான்.
அடக்குமுறை செய்யப்பட்டோருக்குக் கடவுள் நஷ்ட ஈடு செய்கின்றார்
[28:5] பூமியில் அடக்குமுறை செய்யப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு செய்யவும், அவர்களைத் தலைவர்களாக ஆக்கவும், மேலும் அவர்களை வாரிசுகளாக்கவும் நாம் நாடினோம்.
[28:6] அத்துடன் பூமியில் அவர்களை ஸ்திரப்படுத்தவும், மேலும் ஃபேரோ, ஹாமான் மற்றும் அவனுடைய படையினர்களுடைய, சொந்த மருந்தை அவர் களையே சுவைக்கச் செய்வதற்காகவும்.
கடவுள் மீது உறுதியான நம்பிக்கை
[28:7] மோஸஸின் தாயாருக்கு நாம்: “அவருக்குப் பாலூட்டுவீராக, மேலும் அவருடைய உயிரைக் குறித்து நீர் அச்சம் கொள்ளும் போது, அச்சமோ அல்லது துக்கமோ இன்றி ஆற்றுக்குள் அவரை வீசி விடுவீராக. அவரை நாம் உம்மிடம் திரும்பச் சேர்ப்போம், மேலும் தூதர்களில் ஒருவராகவும் அவரை நாம் ஆக்குவோம்” என்று உள்ளுணர் வளித்தோம்.
[28:8] எதிரணிக்குத் தலைமை தாங்குவதற்காகவும் மேலும் தங்களுடைய துக்கத்திற்கு ஒரு மூல காரணமாக இருப்பதற்காக மட்டுமே ஃபேரோ வின் குடும்பத்தார் அவரை எடுத்துக் கொண் டனர். அது ஏனெனில் ஃபேரோ, ஹாமான் மற்றும் அவனுடைய படையினர் வரம்பு மீறியவர்களாக இருந்தனர்.
சிங்கத்தின் குகைக்குள்
[28:9] ஃபேரோவின் மனைவி, “எனக்கும் உமக்கும் மகிழ்ச்சியூட்டக்கூடிய ஒரு கண்டுபிடிப்பாக இது அமையலாம். அவரைக் கொன்று விடாதீர், ஏனெனில் அவர் நமக்கு ஏதேனும் பலனளிக்கக் கூடும், அல்லது நம்முடைய மகனாக அவரை நாம் தத்தெடுத்துக் கொள்ளலாம்” என்று கூறினார். அவர்கள் எதையும் அறிந்திருக்க வில்லை.
[28:10] மோஸஸின் தாயாருடைய மனம், கிட்டத்தட்ட அவரை அடையாளம் காட்டிவிடும் அளவிற்குக் கவலையை வளர்த்துக் கொண்டது. ஆனால் அவரை ஒரு நம்பிக்கையாளராக்குவதற்காக, அவருடைய இதயத்தை நாம் பலப்படுத்தினோம்.
[28:11] அவர் அவருடைய சகோதரியிடம், “அவருடைய பாதையைப் பின் தொடர்வாயாக” என்று கூறினார். அவர்கள் உணர்ந்து கொள்ளாத அதே சமயம், அவள் அவரைத் தொலைவிலிருந்து கண்காணி த்தாள்.
குழந்தை தன்னுடைய தாயாரிடம் திரும்ப வந்துவிட்டது
[28:12] செவிலித்தாய்கள் யாவரையும் ஏற்றுக் கொள் வதை விட்டும் நாம் அவரைத் தடுத்தோம். (அவருடைய சகோதரி) பின்னர், “உங்களுக்காக அவரை வளர்த்தெடுக்கவும், மேலும் அவர் மீது நல்ல கவனம் எடுத்துக் கொள்ளவும் கூடிய ஒரு குடும்பத்தை என்னால் உங்களுக்குக் காட்ட இயலும்” என்று கூறினாள்.
[28:13] இவ்விதமாக, அவருடைய தாயாரிடம், அவரை மகிழ்வடையச் செய்யவும், அவருடைய கவலை களைப் போக்கவும், மேலும் கடவுள்-ன் வாக்குறுதி சத்தியம்தான் என்பதை அவர் அறிந்து கொள்ளும்படி செய்யவும் அவரை மீண்டும் தந்தோம். ஆயினும், அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
[28:14] அவர் பக்குவமும் பலமும் அடைந்த போது, ஞானத்தையும் மற்றும் அறிவையும் கொண்டு அவருக்கு நாம் கொடையளித்தோம். இவ்வித மாகவே நன்னெறியாளர்களுக்கு நாம் வெகுமதியளிக்கின்றோம்.
மோஸஸ் ஒரு மனிதனைக் கொலை செய்கின்றார்
[28:15] மக்களால் அடையாளம் கண்டுகொள்ளப்படாத நிலையில், ஒருமுறை எதிர்பாராதவிதமாக அவர் நகருக்குள் நுழைந்துவிட்டார். இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை அவர் கண்டார்; ஒருவன் அவருடைய சமூகத் தாரிலிருந்து (ஓர் எபிரேயனாக) இருந்தான், மேலும் மற்றொருவன் அவருடைய விரோதி களிலிருந்து (ஓர் எகிப்தியனாக) இருந்தான். அவருடைய சமூகத்தாரிலிருந்தவன் தன்னுடைய விரோதிக்கு எதிராக அவரை உதவிக்கு அழைத்தான். மோஸஸ் அவனைக் குத்தினார், அவனைக் கொன்று விட்டார். அவர், “இது சாத்தானின் வேலையாகும்; அவன் மெய்யான ஒரு விரோதி, மேலும் ஒரு தீவிரமான வழிதவறச் செய்பவன் ஆவான்” என்று கூறினார்.
[28:16] அவர், “என் இரட்சகரே, நான் என் ஆன்மாவிற்குத் தீங்கிழைத்துக் கொண்டேன். தயவுசெய்து என்னை மன்னிப்பீராக,” என்று கூறினார். மேலும் அவர் அவரை மன்னித்தார். அவர்தான் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[28:17] அவர், “என் இரட்சகரே, என் மீதான உமது அருட்கொடைகளுக்குப் பகரமாக, குற்றவாளி களுக்கு ஓர் ஆதரவாளனாக நான் ஒருபோதும் இருக்க மாட்டேன்” என்று கூறினார்.
[28:18] காலையில், அச்சத்துடனும் மேலும் விழிப்புடனும், அவர் நகரத்தில் இருந்தார். முந்திய தினம் அவருடைய உதவியைத் தேடியவன், மீண்டும் அவரிடம் உதவி கேட்டான். மோஸஸ் அவனிடம், “மெய்யாகவே நீ தொந்தரவை உருவாக்கும் ஒருவனாக இருக்கின்றாய்” என்று கூறினார்.
மோஸஸின் குற்றம் வெளிப்பட்டது
[28:19] அவர்களுடைய பொதுவான விரோதியை அவர் தாக்க முற்படும் முன்னர், அவன், “மோஸஸே, நேற்று மற்றொரு மனிதனை நீர் கொலை செய்ததைப் போல, என்னையும் நீர் கொன்று விட விரும்புகின்றீரா? கண்கூடாக, பூமியின் மீது ஒரு கொடுங்கோலனாக இருக்கவே நீர் விரும்புகின்றீர்; நன்னெறியாளராக இருக்க நீர் விரும்பவில்லை” என்று கூறினான்.
[28:20] நகரின் மற்றொரு புறத்திலிருந்து ஒரு மனிதர், “மோஸஸே, மக்கள் உம்மைக் கொன்று விடத் திட்டமிடுகின்றனர். நீர் உடனடியாகப் புறப்பட்டு விடுவதே மேலானதாகும். நான் உமக்கு நல்ல அறிவுரையே கூறுகின்றேன்” என்று கூறியவராக ஓடி வந்தார்.
[28:21] அச்சத்துடனும், மேலும் விழிப்புடனும் அவர் நகரை விட்டுத் தப்பி ஓடினார். அவர், “என் இரட்சகரே, அடக்குமுறை செய்கின்ற இம் மக்களிடமிருந்து என்னைக் காப்பீராக” என்று கூறினார்.
மித்யனில்
[28:22] மித்யனை நோக்கி அவர் பிரயாணித்தவாறு, அவர், “என் இரட்சகர் என்னைச் சரியான பாதையில் வழிநடத்துவாராக” என்று கூறினார்.
[28:23] மித்யனின் நீர்நிலையை அவர் அடைந்த போது, மக்களில் ஒரு கூட்டத்தினர் நீர் எடுத்துக் கொண்டிருப்பதை அவர் கண்டார், மேலும் ஓரத்தில் இரு பெண்கள் காத்துக் கொண்டிருப்பதையும் அவர் கவனித்தார். அவர் “உங்களுக்கு வேண்டியதென்ன?” என்று கூறினார். அவர்கள், “கூட்டம் கலைந்து செல்லும் வரை, எங்களால் நீர் எடுத்துக் கொள்ள முடியவில்லை, மேலும் எங்கள் தந்தையோ வயது முதிர்ந்த ஒருவராக இருக்கின்றார்” என்று கூறினார்கள்.
[28:24] அவர்களுக்காக அவர் தண்ணீர் எடுத்துக் கொடுத்தார், பின்னர், “என் இரட்சகரே, எந்த ஒரு வாழ்வாதாரத்தை நீர் எனக்கு அனுப்பினாலும், அதற்காக நான் கடும் தேவையுடையவராக இருக்கின்றேன்” எனக் கூறியவாறு நிழலின் பால் திரும்பிச் சென்றார்.
[28:25] விரைவில், அவ்விரு பெண்களில் ஒருவர் அவரை வெட்கத்துடன் அணுகினார், மேலும், “எங்களுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்த தற்கான கூலியைத் தருவதற்காக என் தந்தையார் உம்மை அழைக்கின்றார்” என்று கூறினார். அவர் அவரைச் சந்தித்து, மேலும் தனது கதையை அவரிடம் கூறியபோது, அவர், “அச்சம் கொள்ளாதீர். அடக்குமுறை செய்கின்ற மக்களிடமிருந்து நீர் காப்பாற்றப் பட்டு விட்டீர்” என்று கூறினார்.
மோஸஸ் திருமணம் புரிகின்றார்
[28:26] அவ்விரு பெண்களில் ஒருவர், “என் தந்தையே, அவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்வீராக. அவர் கூலிக்கு அமர்த்திக்கொள்ள மிகச் சிறந்த ஒருவராக உள்ளார், ஏனெனில் அவர் வலிமையுடையவராகவும் மேலும் நேர்மை யுடையவராகவும் இருக்கின்றார்” என்று கூறினார்.
[28:27] அவர், “எட்டு புனிதயாத்திரைகள் எனக்கு நீர் வேலை செய்வதற்குப் பிரதியுபகாரமாக, என்னு டைய இரு மகள்களில் ஒருவரை உமக்கு திருமணம் முடித்துத் தர நான் விரும்புகின்றேன்; அவற்றை நீர் பத்தாக ஆக்கினால், அது உமது சொந்த விருப்பத்தின்பாற்பட்டதாகும். இந்த விஷயத்தை உமக்கு மிகவும் கடினமானதாக்கி விட நான் விரும்பவில்லை. கடவுள் நாடினால், என்னை நீர், நன்னெறியாளராகக் காண்பீர்” என்று கூறினார்.
[28:28] அவர், “எனக்கும் உமக்கும் இடையில் இது ஓர் உடன்படிக்கையாகும். எந்த ஒரு கால கட்டத்தை நான் பூர்த்தி செய்தபோதிலும், அவற்றில் எந்த ஒன்றிற்கும் நீர் வெறுப்புக்கொள்ள மாட்டீர். நாம் கூறியவற்றிற்குக் கடவுள் உத்தரவாதம் அளிப்பவராக இருக்கின்றார்” என்று கூறினார்.
மீண்டும் எகிப்தில்
[28:29] அவர் தன் கடமையைப் பூர்த்தி செய்து விட்ட போது, அவர் தன் குடும்பத்தாருடன் (எகிப்தை நோக்கி) பயணம் செய்தார். சினாய் மலையின் சரிவில் இருந்து ஒரு நெருப்பை அவர் கண்டார். அவர் தன்னுடைய குடும்பத்தாரிடம்,“இங்கேயே இருங்கள். நான் ஒரு நெருப்பைக் கண்டேன். ஒருவேளை உங்களுக்கு நான் செய்தியைக் கொண்டு வரவோ, அல்லது உங்களை கதகதப்பாக்க நெருப்பிலிருந்து ஒரு பகுதியைக் கொண்டு வரவோ கூடும்” என்று கூறினார்.
மோஸஸ் நியமிக்கப்பட்டார்
[28:30] அவர் அதனை அடைந்தபோது, எரிகின்ற புதர் இருந்த அருள்பாலிக்கப்பட்ட இடத்தில், பள்ளத் தாக்கின் வலப்புற ஓரத்திலிருந்து அவர் அழைக்கப்பட்டார் : “மோஸஸே, நான் தான். கடவுள்; பிரபஞ்சத்தின் இரட்சகர்.
[28:31] “உமது கைத்தடியைக் கீழே வீசுவீராக”. அது ஒரு பிசாசைப் போல் நகர்வதை அவர் கண்ட போது, அவர் திரும்பியடித்து ஓடினார். “மோஸஸே, திரும்பி வாரும்; பயப்படாதீர். நீர் பூரணமான பாதுகாப்புடன் இருக்கின்றீர்.
[28:32] “உமது பைக்குள் உமது கரத்தை வைப்பீராக; ஒரு மாசுமின்றி வெண்மையாக அது வெளி வரும். உமது கரங்களைக் கட்டிக் கொண்டு உம்முடைய அச்சத்திலிருந்து அமைதி அடைவீராக. இவை ஃபேரோவிற்கும் அவனுடைய பிரதானிகளுக்கும் காட்டப்படுவதற்காக, உம் இரட்சகரிடமிருந்துள்ள இரு சான்றுகளாகும்; அவர்கள் தீய மக்களாக ஆகி விட்டார்கள்.”
[28:33] அவர் கூறினார், “என் இரட்சகரே, அவர்களில் ஒருவனை நான் கொலை செய்து விட்டேன், மேலும் அவர்கள் என்னைக் கொன்று விடுவார் களோ என்று நான் அஞ்சுகின்றேன்.
[28:34] “இன்னும், என்னை விட என் சகோதரர் ஆரோன் பேச்சுத்திறன் அதிகம் உடையவராக இருக்கின்றார். என்னை உறுதிப்படுத்தவும், மேலும் பலப்படுத்தவும் ஓர் உதவியாளராக அவரை என்னுடன் அனுப்புவீராக. அவர்கள் என்னை நம்ப மறுத்துவிடுவார்களோ என்று நான் அஞ்சுகின்றேன்.”
[28:35] அவர், “உம்முடைய சகோதரருடன் உம்மை நாம் பலப்படுத்துவோம், மேலும் உங்கள் இருவருக்கும் தெளிவான அதிகாரத்தை நாம் வழங்குவோம். இவ்விதமாக, உங்கள் இருவரில் எவர் ஒருவரையும் அவர்களால் தொடக்கூட முடியாது. நமது அற்புதங்களுடன், நீங்கள் இருவரும், உங்களைப் பின்பற்றியவர்களுடன் சேர்ந்து, வெற்றியாளர்களாக இருப்பீர்கள்” என்று கூறினார்.
ஃபேரோவின் ஆணவம்
[28:36] தெளிவான, மற்றும் ஆழ்ந்த நமது சான்றுகளுடன் மோஸஸ் அவர்களிடம் சென்ற பொழுது, அவர்கள், “இது இட்டுக்கட்டப்பட்ட மாயாஜாலமாகும். நம்முடைய பண்டைய மூதாதையர்களிடமிருந்து இதனை நாம் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை” என்று கூறினார்கள்.
[28:37] மோஸஸ், “என் இரட்சகர், அவரிடமிருந்து வழிகாட்டலைக் கொண்டு வந்திருப்பது யாரென்பதையும், மேலும் இறுதி வெற்றியாளர் களாக இருக்கப்போவது யாரென்பதையும் நன்கறிவார். நிச்சயமாக, வரம்பு மீறுபவர்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டார்கள்” என்று கூறினார்.
[28:38] ஃபேரோ, “என் பிரதானிகளே, என்னை அன்றி உங்களுக்கு வேறு எந்தத் தெய்வத்தையும் நான் அறிந்திருக்கவில்லை. ஆகையால், ஹாமானே, மோஸஸின் தெய்வத்தை நான் ஒரு நோட்டமிடுவதற்காக, ஒரு கோபுரத்தை கட்டுவதற்கு, சூளையைப் பற்றவைப்பாயாக. அவர் ஒரு பொய்யர் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்” என்று கூறினான்.
[28:39] இவ்விதமாக, அவனும், அவனுடைய படை யினரும் பூமியின் மீது, எவ்வித நியாயமுமின்றி தொடர்ந்து ஆணவம் கொண்டனர், மேலும் நம்மிடம் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டார்கள் என்று நினைத்தனர்.
[28:40] அதன் விளைவாக, அவர்களைக் கடலுக்குள் எறிந்ததன் மூலம், அவனையும் அவனுடைய படைகளையும் நாம் தண்டித்தோம். வரம்புமீறு பவர்களுக்கான பின்விளைவுகளைக் கவனித்துப் பார்ப்பீராக.
[28:41] தங்களுடைய சமூகத்தாரை நரகத்திற்கு வழிநடத்திய இமாம்களாக அவர்களை நாம் ஆக்கினோம். இன்னும், மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாள் அன்று, அவர்களுக்கு எந்த உதவியும் இருக்காது.
[28:42] இந்த வாழ்வில் அவர்கள் தண்டித்தலுக்கு உள்ளானார்கள், மேலும் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாள் அன்று அவர்கள் இகழப் பட்டவர்களாக இருப்பார்கள்.
மோஸஸின் புத்தகம்*
[28:43] முந்திய தலைமுறையினரை அழித்து விட்ட பின்னர், மேலும் அவர்கள் மூலமாக உதாரணங்களை அமைத்து விட்ட பின்னர்-மக்களுக்கு அறிவூட்ட லையும் மேலும் வழி காட்டலையும் மற்றும் கருணையையும் வழங்குவதற்காக-அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, மோஸஸிற்கு நாம் வேதத்தைக் கொடுத்தோம்

அடிகுறிப்பு:
*28:43 மோஸஸின் புத்தகம் உட்பட, இஸ்ரவேலரின் வேதம் வழங்கப்பட்டவர்கள் அனைவருக்கும் வெளிப்படுத்தப்பட்ட அனைத்து வேதங்களின் தொகுப்பே தோரா ஆகும். குர்ஆன் ஒரே சீராக, மோஸஸிற்கு ஒரு புத்தகம் அல்லது “சட்டப்புத்தகம்” கொடுக்கப்பட்டதாகத்தான் கூறுகின்றது, “தோரா” மோஸஸிற்கு வழங்கப்பட்டதாக குர்ஆனில் எங்கேயும் நாம் காணமுடியாது. ஆகையால், இன்றைய பழைய ஏற்பாடுதான் தோரா ஆகும் (3:50, 5:46 ஐ பார்க்கவும்).
கடவுளின் உடன்படிக்கைத் தூதரை கூறுகின்றது
[28:44] மோஸஸிற்கு நாம் கட்டளையைக் கொடுத்த பொழுது மேற்கத்திய மலையின் சரிவில் நீர் இருக்கவில்லை; நீர் ஒரு சாட்சியாக* இருக்க வில்லை.

அடிகுறிப்பு:
*28:44 இந்த தூதரின் பெயரானது கணித ரீதியில் உறுதிப்படுத்தப்படுகின்றது: “ரஷாத் கலீஃபா”வின் எழுத்தெண்மதிப்பை (1230) அடுத்து இந்த வசன எண்ணை (44) நாம் அமைப்பதன் மூலம் நமக்குக் கிடைப்பது 123044 = 19 ஒ 6476.
[28:45] ஆனால் நாம் பல தலைமுறையினர்களை நிலைநிறுத்தினோம், மேலும் காலம் நீண்ட காரணத்தால், (அவர்கள் விலகிச் சென்றனர்). அன்றியும் நம் வெளிப்பாடுகளை அவர்களிடம் ஓதிக்காட்டிக்கொண்டு, மித்யனின் சமூகத் தாருக்கிடையிலும் நீர் இருக்கவில்லை. ஆனால் நாம் தூதர்களை அனுப்பவே செய்தோம்.
[28:46] அன்றி (மோஸஸை) நாம் அழைத்தபோது சினாய் மலையின் சரிவில் நீர் இருக்கவில்லை. ஆனால் உமக்கு முன்னர் எச்சரிப்பவர் எவரையும் பெற்றுக் கொள்ளாத மக்களை எச்சரிப்பதற்காக, அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, (மனிதர்கள் பால் ) இது உம்முடைய இரட்சகரின் கருணையாகவே உள்ளது.
மன்னிப்பு இல்லை
[28:47] இவ்விதமாக, அவர்களுடைய சொந்தச் செயல்களின் விளைவாக ஒரு பேரழிவு அவர் களைத் தாக்கும்போது, “ எங்கள் இரட்சகரே, ஒரு தூதரை நீர் எங்களுக்கு அனுப்பியிருந்தால், நாங்கள் உம்முடைய வெளிப்பாடுகளைப் பின் பற்றியிருப்போம், மேலும் நம்பிக்கையாளர்களாக இருந்திருப்போம்” என்று அவர்கள் கூற முடியாது.
தோராவும், குர்ஆனும்
[28:48] இப்போது நம்மிடமிருந்து சத்தியம் அவர்களிடம் வந்திருப்பதால், அவர்கள், “ மோஸஸிற்குக் கொடுக்கப்பட்டது மட்டும் நமக்கும் கொடுக்கப்பட்டால்!” என்று கூறினார்கள். கடந்த காலத்தில் மோஸஸிற்குக் கொடுக்கப் பட்டவற்றை அவர்கள் நம்ப மறுக்கவில்லையா? அவர்கள், “ இரண்டு (வேதங்களும்) ஒன்றிலிருந்து மற்றொன்று பிரதியெடுக்கப்பட்ட மாயாஜால வேலைகளே” என்று கூறினார்கள். அத்துடன் அவர்கள், “அவை இரண்டிலும் நாங்கள் நம்பிக்கையற்றவர்களாக இருக்கின்றோம்” என்றும் கூறினார்கள்.
[28:49] “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், பின்னர் இவ்விரண்டையும் விட மேலான வழிகாட்டலைக் கொண்ட வேதத்தை கடவுள்-இடமிருந்து கொண்டு வாருங்கள், அப்போது நான் அதனைப் பின்பற்ற இயலும்” என்று கூறுவீராக.
கடவுள் தனது போதனைகளை தன் தூதர்கள் மூலமாக நமக்கு அனுப்புகின்றார்
[28:50] அவர்கள் உமக்குப் பதிலளிக்கத் தவறினால், பின்னர் அவர்கள் தங்களுடைய சுய அபிப்பிராயங்களையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக. கடவுள்- இடமிருந்து வழிகாட்டல் இன்றி, தங்களுடைய சுய அபிப்பிராயங்களைப் பின்பற்றுபவர்களை விட நெடிய வழிகேட்டில் இருப்பவர் யார்? இத்தகைய தீய மக்களைக் கடவுள் வழிநடத்துவதில்லை.
உண்மையான நம்பிக்கையாளர்கள் அனைவரும் குர்ஆனை ஏற்றுக் கொள்கின்றனர்
[28:51] அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, இந்தத் தூதுச் செய்தியை நாம் அவர்களிடம் ஒப்படைத்தோம்.
[28:52] முந்திய வேதங்களைக் கொண்டு எவர்களுக்கு நாம் அருள்பாலித்தோமோ அவர்கள் இதில் நம்பிக்கை கொள்வார்கள்.
[28:53] அவர்களிடம் இது ஓதிக்காட்டப்பட்டால், அவர்கள், “ நாங்கள் இதில் நம்பிக்கை கொள்கின்றோம். இது நம்முடைய இரட்சகரிடமிருந்துள்ள சத்தியம் ஆகும். இதனைப்பற்றி நாங்கள் கேள்விப்படுவதற்கு முன்னரே, நாங்கள் அடிபணிந்தவர்களாக இருந்தோம்” என்று கூறுவார்கள்.
சத்தியத்தை அடையாளம் காண்கின்ற யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இரு மடங்கு வெகுமதி
[28:54] அவர்கள் உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து இருந்த காரணத்தால், அவர்களுக்கு நாம் இருமடங்கு வெகுமதியை வழங்குகின்றோம். அவர்கள் நல்ல செயல்களைக் கொண்டு தீய செயல்களை எதிர்கொள்கின்றார்கள், மேலும் அவர்களுக்குரிய நமது வாழ்வாதாரங்களில் இருந்து அவர்கள் கொடுக்கின்றார்கள்.
[28:55] வீணான பேச்சை அவர்கள் செவியேற்கும் பொழுது, அவர்கள் அதனைப் புறக்கணித்து விட்டு மேலும், “எங்கள் செயல்களுக்கு நாங்கள் பொறுப்பாளிகள், மேலும் உங்கள் செயல்களுக்கு நீங்கள் பொறுப் பாளிகள். உங்கள் மீது அமைதி நிலவுவதாக. அறிவில்லாதவர்களைப் போல நடந்து கொள்ள நாங்கள் விரும்பவில்லை” என்று கூறுகின்றார்கள்.
கடவுள் மட்டுமே வழிநடத்துகின்றார்
[28:56] நீங்கள் நேசிப்பவர்களை எல்லாம் வழிநடத்த உங்களால் இயலாது. கடவுள் - ஒருவர் மட்டுமே அவருடைய நாட்டத்திற்கிணங்க, மேலும் அவருடைய அறிவிற்கிணங்க வழிகாட்டலுக்குத் தகுதியுடையவர்களை வழி நடத்துகின்றார்.
[28:57] அவர்கள், “உமது வழிகாட்டலை நாங்கள் பின் பற்றினால், நாங்கள் அடிக்கடி துன்புறுத்துதலால் அவதியுறுவோம்.” என்று கூறினார்கள். நம்மிடமிருந்தொரு வாழ்வாதாரமாக, அனைத்துக் கனிவர்க்கங்களும் அளிக்கப்படுகின்ற, ஒரு புனித ஆலயத்தை அவர்களுக்காக நாம் நிர்மாணிக்கவில்லையா? உண்மையில், அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.
[28:58] தங்களுடைய வாழ்க்கையில் நன்றி கெட்டவர்களாக மாறிய பல சமூகத்தாரை நாம் அழித்தோம். அதன் விளைவாக, ஒரு சிலரைத் தவிர, அவர்களுக்குப் பின்னர் எவரும் வசிக்காத பாழடைந்த சின்னங்களாக, இதோ அவர்களுடைய வீடுகள். நாமே அவற்றின் வாரிசுகளாக இருந்தோம்.
[28:59] ஏனெனில் உம்முடைய இரட்சகர் எந்தச் சமூகத்தையும், அவர்களுக்கு மத்தியில் நம் வெளிப்பாடுகளை அவர்களுக்கு ஓதிக்காட்ட ஒரு தூதரை அனுப்பாது ஒருபோதும் அழித்து விடுவதில்லை. எந்த ஒரு சமூகத்தையும், அதன் மக்கள் தீயவர்களாக இருந்தாலேயன்றி நாம் ஒருபோதும் அழிப்பதில்லை.
[28:60] உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பவை ஒவ்வொன்றும் இந்த வாழ்வின் பொருட்களும், மேலும் அவற்றின் ஆடம்பரங்களுமேயாகும். கடவுள்-இடம் இருப்பவையோ மிகவும் மேலானதாகவும், நிலைத்திருப்பவையாகவும் உள்ளன. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?
[28:61] நிச்சயமாக நிகழ்ந்தேறக் கூடிய நல்லதொரு வாக்குறுதியை நாம் வாக்களித்த ஒருவரும், இந்த வாழ்வின் தற்காலிகப் பொருட்கள் நம்மால் வழங்கப்பட்டுப், பின்னர் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாள் அன்று நிரந்தரமான அழிவை அனுபவிக்கும் ஒருவனும் சமமா?
இணைத் தெய்வங்கள் தம்மை இணைத்தெய்வ வழிபாடு செய்தவர்களைக் கைவிட்டு விடுகின்றன
[28:62] “ என்னுடன் நீங்கள் அமைத்துக் கொண்ட அந்த இணைத் தெய்வங்கள் எங்கே?” என்று கூறியவாறு, அவர்களை, அவர் அழைக்கின்ற அந்நாள் வரும்.
[28:63] தீர்ப்பிற்கு உள்ளானவர்கள், “ எங்கள் இரட்சகரே, இவர்களைத்தான் நாங்கள் வழிதவறச் செய்தோம்; நாங்களே வழிதவறிச் சென்று விட்டவர்களாக இருந்தக் காரணத்தினால் தான் நாங்கள் அவர்களை வழி தவறச் செய்தோம். இப்போது நாங்கள் எங்களை உமக்கு முற்றிலும் அர்ப்பணித்துக் கொள்கின்றோம். அவர்கள் உண்மையில் எங்களை வழிபட்டுக் கொண்டிருக்கவில்லை” என்று கூறுவார்கள்.
[28:64] “(உங்களுக்கு உதவ) உங்களுடைய இணைத்தெய்வங்களை அழையுங்கள்,” என்று கூறப்படும். அவர்கள் அவர்களை அழைப்பார்கள், ஆனால் அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள். அவர்கள் தண்டனையால் துன்புறுவார்கள், மேலும் வழிநடத்தப்பட்டவர்களாக இருந்திருக்க வேண்டுமே என விரும்புவார்கள்!
தூதர்களுக்கு நம்முடைய மறுமொழி
[28:65] அந்நாளில், அவர் ஒவ்வொருவரையும்,“தூதர்களுக்கு எவ்வாறு நீங்கள் மறுமொழி அளித்தீர்கள்?” என்று கேட்பார்.
[28:66] அந்நாளின் நிகழ்வுகளால் அவர்கள் மிகவும் திகைத்துப் போயிருப்பார்கள், அவர்கள் பேச்சற்றிருப்பார்கள்.
[28:67] வருந்தித்திருந்தி, நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் வெற்றியடைந்தோருடன் இருப்பார்கள்.
[28:68] உம்முடைய இரட்சகர்தான் அவர் நாடுகின்ற எதனையும் படைப்பவர், மேலும் தேர்ந்தெடுப் பவர்; மற்ற எவர் ஒருவரும் எந்த ஒன்றையும் தேர்ந்தெடுப்பதில்லை. துதிப்பு கடவுள்-க்குரியது, மிகவும் உயர்ந்தவர். பங்குதாரர்கள் தேவைப்படுவதற்கும் அப்பாற்பட்டு அவர் மிகவும் மேலானவர்.
[28:69] அவர்களுடைய நெஞ்சங்களில் மறைக்கப் பட்டிருக்கின்ற ஆழ்மனதின் எண்ணங்களையும், அவ்வண்ணமே அவர்கள் அறிவிக்கும் ஒவ்வொன்றையும் உம் இரட்சகர் அறிந்திருக் கின்றார்.
[28:70] அவர்தான் ஒரே கடவுள்; அவருடன் வேறு தெய்வம் இல்லை. இந்த முதல்வாழ்விலும், மற்றும் மறுவுலகிலும் அனைத்துப் புகழும் அவருக்குரியது. அனைத்துத் தீர்ப்பும் அவரிடமே உள்ளது, மேலும் அவரிடமே நீங்கள் திரும்பிக் கொண்டு வரப்படுவீர்கள்.
கடவுளின் அருட்கொடைகள்
[28:71] “மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரை கடவுள் இரவை நிலைத்திருக்கச் செய்து விட்டால்? கடவுள்-ஐ விடுத்து, எந்தத் தெய்வம், உங்களுக்கு ஒளியை வழங்க இயலும்? நீங்கள் செவியேற்கவில்லையா?” என்று கூறுவீராக.
[28:72] “மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரை கடவுள் பகலின் ஒளியை நிலைத்திருக்கச் செய்து விட்டால்? கடவுள்-ஐ விடுத்து, எந்தத் தெய்வம், உங்களுடைய ஓய்விற்கென ஓர் இரவை உங்களுக்கு வழங்க இயலும்? நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கூறுவீராக.
[28:73] நீங்கள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு, (இரவுப்பொழுதில்) ஓய்வெடுப்பதற்காகவும், பின்னர் (பகற்பொழுதில்) அவருடைய வாழ்வாதாரங்களைத் தேடுவதற்காகவும், இரவையும் பகலையும் அவர் உங்களுக்காக படைத்திருப்பது அவரிடமிருந்துள்ள கருணையே ஆகும்.
இணைத் தெய்வங்கள் சக்தி எதையும் பெற்றிருக்கவில்லை
[28:74] “எனக்குச் சமமாக நீங்கள் இட்டுக்கட்டிக் கொண்ட அந்த இணைத் தெய்வங்கள் எங்கே?,” என்று அவர்களை அவர் கேட்கின்ற அந்நாள் வரும்.
[28:75] ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் ஒரு சாட்சியை நாம் தேர்ந்தெடுப்போம், பின்னர், “உங்களுடைய சான்றினைக் காட்டுங்கள்” என்று கூறுவோம். சத்தியம் அனைத்தும் கடவுள்-க்குரியது என்பதை அப்போது அவர்கள் புரிந்து கொள்வார்கள், அதே சமயம் அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்ட இணைத் தெய்வங்கள் அவர்களைக் கைவிட்டு விடும்.
காரூன்
[28:76] (அடிமை மேய்ப்பனான) காரூன் மோஸஸின் சமூகத்தாரில் உள்ளவனாக இருந்து, அவர் களுக்குத் துரோகமிழைத்து அவர்களை அடக்குமுறை செய்தவன் ஆவான். வலிமையான ஒரு கூட்டத்திற்கே கிட்டத்தட்ட மிகவும் கனமாக இருக்கும் அளவிற்கு அதன் சாவிகளைக் கொண்ட ஏராளமான பொக்கிஷங்களை நாம் அவனுக்குத் தந்தோம். அவனுடைய சமூகத்தார் அவனிடம் கூறினர், “ஆணவம் மிகக் கொள்ளாதே; ஆணவம் கொண்டோரைக் கடவுள் நேசிப்பதில்லை.
[28:77] “இவ்வுலகில் உனது பங்கைத் தவறவிடாதவாறு, கடவுள் உன் மீது அருளிய வாழ்வாதாரங்களை மறுவுலகின் வீட்டைத் தேடப் பயன்படுத்திக் கொள். கடவுள் உன்பால் பெருந்தன்மையாக இருந்ததைப் போலவே, பெருந்தன்மையாக நடந்துகொள். தொடர்ந்து பூமியைச் சீர்குலைத்துக் கொண்டிருக்காதே. சீர்குலைப்போரைக் கடவுள் நேசிப்பதில்லை”.
[28:78] அவன், “இவை அனைத்தையும் என்னுடைய சொந்தச் சாமர்த்தியத்தால் நான் அடைந்தேன்” என்று கூறினான். அவனை விடவும் வலிமை மிகுந்த, மேலும் எண்ணிக்கையில் அதிகமாக இருந்த தலைமுறைகளை கடவுள் அழித்திருக் கின்றார் என்பதை அவன் புரிந்து கொள்ள வில்லையா? (அழிக்கப்பட்ட) அந்த வரம்பு மீறியவர்களிடம் அவர்களுடைய குற்றங்களைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்கப்படவில்லை.
[28:79] ஒருநாள், முழு அலங்காரத்துடன் தன் சமூகத் தாரிடம் அவன் வந்தான். இவ்வுலக வாழ்வை விரும்பியவர்கள் , “ ஆ, காரூன் அடைந் தவற்றை நாங்கள் பெற்றிருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். உண்மையில், அவன் மிகவும் அதிர்ஷ்டக்காரனாக இருக்கின்றான்” என்று கூறினார்கள்.
மெய்யான செல்வம்
[28:80] அறிவைக் கொண்டு அருள்பாலிக்கப்பட்டவர் களைப் பொறுத்த வரை, அவர்கள், “உங்களுக்குக் கேடுதான், நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோருக்குக் கடவுள்-ன் வெகுமதி மிகவும் மேலான தாகும்” என்று கூறினார்கள். உறுதியுடையவரைத் தவிர எவரும் இதனை அடைவதில்லை.
கொடுங்கோலர்களின் தவிர்க்க முடியாத விதி
[28:81] நாம் பின்னர் அவனையும், அவனுடைய மாளிகையையும் பூமி விழுங்கும்படிச் செய்தோம். கடவுள்-க்கெதிராக எந்தப் படையும் அவனுக்கு உதவி செய்திருக்க முடியாது; வெற்றி பெற்ற ஒருவனாக இருக்க அவன் விதிக்கப்படவில்லை.
[28:82] முந்திய தினம் அவனைக் குறித்துப் பொறாமைப் பட்டவர்கள், “ தன்னுடைய அடியார்களில் தான் தேர்ந்தெடுத்தோருக்கு வழங்குபவரும், மேலும் நிறுத்தி வைத்துக் கொள்பவரும் கடவுள் தான் என்பதை இப்போது நாங்கள் புரிந்து கொண்டோம். கடவுள்- ன் அருள் நம் பால் இல்லாதிருந்தால், நம்மையும் கூட பூமி விழுங்கும் படிச் செய்திருக்க அவரால் இயலும். நம்ப மறுப்பவர்கள் ஒரு போதும் வெற்றியடைய மாட்டார்கள் என்பதை இப்போது நாங்கள் நன்கு புரிந்து கொண்டோம்” என்று கூறினார்கள்.
இறுதி வெற்றியாளர்கள்
[28:83] பூமியில் பெருமையையோ, அன்றி சீர்குலை வையோ தேடாதவர்களுக்கென மறுவுலக வீட்டை நாம் ஒதுக்கி வைத்துள்ளோம். இறுதி வெற்றி நன்னெறியாளர்களுக்கே உரியது.
[28:84] நன்னெறியான செயல்கள் புரிகின்ற எவராயினும் மிக மேலான வெகுமதியைப் பெறுகின்றார். பாவங்கள் செய்கின்றவர்களைப் பொறுத்தவரை, அவர்களுடைய பாவங்களுக்கான தண்டனை அவர்களுடைய செயல்களுக்கு மிகச்சரியாக சமமானதாக இருக்கும்.
[28:85] நிச்சயமாக, இந்தக் குர்ஆனை உங்களுக்கு விதியாக்கிய அந்த ஒருவர், முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு சந்திப்பிற்காக உங்களை வரவழைப்பார். “எவர்கள் வழிகாட்டலை ஆதரிப்பவர்கள் என்பதையும், மேலும் எவர்கள் வழிதவறிச் சென்று விட்டவர்கள் என்பதையும் என் இரட்சகர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்” என்று கூறுவீராக.
[28:86] இந்த வேதம் உமது வழியில் வரும் என நீர் ஒரு போதும் எதிர்பார்த்திருக்கவில்லை; ஆனால் இது உம் இரட்சகரிடமிருந்துள்ள கருணையே ஆகும். ஆகையால், நம்பமறுப்பவர்களுடன் நீர் அணி சேரவேண்டாம்.
[28:87] அன்றியும், அவை உம்மிடம் வந்து விட்ட பின்னர், கடவுள்-ன் வெளிப்பாடுகளில் இருந்து நீர் திசை திருப்பப்பட்டு விடவும் வேண்டாம், மேலும் மற்றவர் களை உம் இரட்சகரின் பால் அழைப்பீராக. மேலும் இணைத்தெய்வ வழிபாட்டில் எப்பொழுதும் விழுந்து விடக் கூடாது.
[28:88] கடவுள்-உடன் வேறு எந்தத் தெய்வத்தையும் நீர் வழிபடவேண்டாம். அவருடன் வேறு தெய்வம் இல்லை. அவருடைய இருப்பைத் தவிர ஒவ்வொன்றும் அழிந்து விடும். ஆட்சியதிகாரம் அனைத்தும் அவருக்குரியது, மேலும் அவரிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.