சூரா 26: கவிஞர்கள் (அல்-ஷுஃரா)

[26:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[26:1] த.ஸீ.ம*.

அடிகுறிப்பு:
*26:1 இதற்கு முன்னர் மர்மமாக இருந்த இந்த எழுத்துக்களின் அர்த்தத்திற்குப் பின் இணைப்பு 1ஐப் பார்க்கவும்.
[26:2] (எழுத்துக்களாகிய) இவை தெளிவுபடுத்து கின்ற இவ்வேதத்தின் சான்றுகளாக அமை கின்றன.
[26:3] அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இல்லாததால் உம்மையே நீர் பழித்துக் கொள்ளக்கூடும்.
[26:4] நாம் நாடினால், அவர்களுடைய கழுத்துக் களை பலவந்தமாக குனியும்படி செய்யும் ஓர்அத்தாட்சியை, விண்ணிலிருந்து நாம் அனுப்பியிருக்க இயலும்.
குர்ஆனின் கணிதக் குறியீடு
[26:5] மிக்க அருளாளரிடமிருந்து, புதிதானதொரு நினைவூட்டல் அவர்களுக்கு வரும்போதெல்லாம், அவர்கள் வெறுப்பினால் திரும்பிச் சென்று விடுகின்றனர்.
[26:6] அவர்கள் நம்பமறுத்த காரணத்தால், அவர் களுடைய கவனமின்மையின் பின்விளைவு களுக்கு அவர்கள் உள்ளானார்கள்.
[26:7] பூமியையும், எத்தனையோ வகையான அழகிய தாவரங்களை நாம் அதன் மீது வளர்த்திருப் பதையும் அவர்கள் பார்க்கவில்லையா?
[26:8] இது அவர்களுக்குப் போதுமானதொரு சான்றாக இருக்கவேண்டும், ஆனால் அவர் களில் அதிகமானோர் நம்பிக்கை கொண்டவர் கள் அல்ல.
[26:9] மிகவும் நிச்சயமாக, உம்முடைய இரட்சகர் தான் சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்.
மோஸஸ்
[26:10] மோஸஸை உம்முடைய இரட்சகர் அழைத்ததை நினைவு கூர்வீராக: “வரம்பு மீறுகின்ற மக்களிடம் செல்வீராக.
[26:11] “ஃபேரோவின் மக்களிடம்; ஒருவேளை அவர்கள் சீர்திருந்தக் கூடும்.”
[26:12] அவர் கூறினார், “என் இரட்சகரே, அவர்கள் என்னை நம்பமறுத்து விடுவார்கள் என்று நான் அஞ்சுகின்றேன்.
[26:13] “ நான் என் சுபாவத்தை இழந்துவிடக்கூடும். எனது நாவு பின்னிக்கொள்கின்றது; என்னு டைய சகோதரர் ஆரோனை அனுப்புவீராக.
[26:14] “அத்துடன், அவர்கள் என்னைத் தப்பியோடிய ஒருவன் என்றும் கருதுகின்றனர்; அவர்கள் என்னைக் கொன்று விடக்கூடும் என்று நான் அஞ்சுகின்றேன்.”
[26:15] அவர் கூறினார், “ அல்ல, (அவர்கள் செய்ய மாட்டார்கள்). என்னுடைய சான்றுகளுடன் செல்வீராக. கவனத்துடன் செவியேற்றுக் கொண்டு நாம் உம்முடன் இருப்போம்.
[26:16] “ஃபேரோவிடம் சென்று கூறுவீராக, ‘நாங்கள் பிரபஞ்சத்தின் இரட்சகருடைய தூதர்களாவோம்.
[26:17] “‘இஸ்ரவேலின் சந்ததியினரைப் போக விடு.’”
[26:18] அவன் கூறினான், “உம்மை நாங்கள் குழந்தைப்பருவம் முதல் வளர்க்கவும், நீர் எங்களுடன் ஆண்டுகள் பல கழிக்கவும் இல்லையா?
[26:19] “பின்னர் நீர் புரிந்த அந்தக் குற்றத்தை நீர் புரிந்தீர், மேலும் நன்றி மறந்தவராக நீர் இருந்தீர்”
[26:20] அவர் கூறினார், “உண்மையில், நான் வழிதவறிய வனாக இருந்தபோது அதனை நான் செய்தேன்.
[26:21] “பின்னர் உன்னை நான் அஞ்சியபோது, நான் தப்பியோடினேன், மேலும் என் இரட்சகர் ஞானத்தைக் கொண்டு எனக்குக் கொடை யளித்தார் மேலும் தூதர்களில் ஒருவராகவும் என்னை ஆக்கினார்.
[26:22] “இஸ்ரவேலின் சந்ததியினரை நீ அடிமைப்படுத்தி வைத்திருக்கும் நிலையில், எனக்கோர் உபகாரம் செய்து விட்டதாக நீ பெருமை பேசிக் கொள்கின்றாய்!”
[26:23] ஃபேரோ, “பிரபஞ்சத்தின் இரட்சகர் என்றால் என்ன?” என்று கூறினான்.
[26:24] அவர், “வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற்கிடையிலுள்ள ஒவ்வொன்றிற்கும் இரட்சகர். இது குறித்து நீ உறுதியோடிருக்க வேண்டும்” என்று கூறினார்.
[26:25] தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் அவன் “இதனை நீங்கள் செவியேற்றீர்களா?”என்று கூறினான்.
[26:26] அவர், “உங்களுடைய இரட்சகர் மற்றும் உங்கள் மூதாதையர்களுடைய இரட்சகர்” என்று கூறினார்.
[26:27] அவன், “உங்களிடம் அனுப்பப்பட்டுள்ள உங்களுடைய தூதர் புத்தி சுவாதீன மில்லாதவராக உள்ளார்” என்று கூறினான்.
[26:28] அவர், “கிழக்கு மற்றும் மேற்கு, மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றிற்கும் இரட்சகர், நீ புரிந்து கொண்டால்” என்று கூறினார்.
[26:29] அவன், “என்னை விடுத்து வேறு எந்தத் தெய்வத்தையும் நீர் ஏற்றுக்கொண்டால், நான் உம்மை சிறையில் தள்ளி விடுவேன்” என்று கூறினான்.
[26:30] அவர், “ஆழ்ந்த ஏதேனும் ஒன்றை நான் உனக்குக் காட்டினாலுமா?” என்று கூறினார்.
[26:31] அவன், “நீர் உண்மையானவராக இருந்தால், அப்போது அதனைக் கொண்டு வாரும்” என்று கூறினான்.
[26:32] பின்னர் அவர் தனது கைத்தடியை வீசினார், உடனே அது ஆழ்ந்ததொரு பாம்பாக ஆனது.
[26:33] மேலும் அவர் தனது கரத்தை வெளியில் எடுத்தார், மேலும் அது பார்ப்பவர்களுக்கு வெண்மையாக இருந்தது.
[26:34] தன்னைச் சுற்றி இருந்த பிரதானிகளிடம் அவன் கூறினான், “இவர் அனுபவமிக்கதோர் மந்திரவாதி.
[26:35] “தனது மந்திரத்தால், உங்களுடைய நாட்டை விட்டு உங்களை வெளியேற்ற அவர் விரும்புகின்றார். உங்களுடைய ஆலோசனை என்ன?”
[26:36] அவர்கள் கூறினர், “அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் அவகாசம் அளித்து விட்டு, அழைப்பவர்களை ஒவ்வொரு நகரத்திற்கும் அனுப்புவீராக.
[26:37] “அனுபவமிக்க மந்திரவாதி ஒவ்வொருவரையும் அவர்கள் வரவழைக்கட்டும்.”
[26:38] நிர்ணயிக்கப்பட்ட நாள் அன்று, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மந்திரவாதிகள் ஒன்று சேர்க்கப்பட்டனர்.
[26:39] அந்த மக்களிடம் கூறப்பட்டது: “நீங்கள் அனைவரும் ஒன்றாக வாருங்கள்; நாம் ஒருங்கிணைந்து இங்கே ஒன்று சேர்வோம்.
[26:40] “ மந்திரவாதிகள் வெற்றி பெற்றுவிட்டால், நாம் அவர்களைப் பின்பற்றுபவர்களாக இருந்து கொள்ளலாம்.”
[26:41] மந்திரவாதிகள் வந்தபோது, அவர்கள் ஃபேரோவிடம், “ நாங்கள் வெற்றிபெற்று விட்டால், எங்களுக்குச் சன்மானம் வழங்கப்படும் அல்லவா?” என்று கூறினார்கள்.
[26:42] அவன், “ஆம் உண்மையில்; நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகவும் கூட ஆகி விடு வீர்கள்” என்று கூறினான்.
[26:43] மோஸஸ் அவர்களிடம் “ நீங்கள் வீசப்போவதை வீசுங்கள்” என்று கூறினார்.
[26:44] அவர்கள் தங்களுடைய கயிறுகளையும் கோல் களையும் வீசினர், மேலும், “ஃபேரோ வின் மாட்சிமை மீது ஆணையாக, நாங்கள் தான் வெற்றிபெற்றவர்களாக இருப்போம்” என்று கூறினார்கள்.
[26:45] மோஸஸ் தனது கைத்தடியை வீசினார், உடனே அது அவர்கள் உருவாக்கியவற்றை விழுங்கி விட்டது.
நிபுணர்கள் சத்தியத்தைக் காண்கின்றனர்
[26:46] மந்திரவாதிகள் சிரம் பணிந்து விழுந்தனர்.
[26:47] அவர்கள் கூறினர், “ பிரபஞ்சத்தின் இரட்சகர் மீது நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம்.
[26:48] “மோஸஸ் மற்றும் ஆரோனின் இரட்சகர்.”
[26:49] அவன், “ நான் உங்களுக்கு அனுமதி கொடுப் பதற்கு முன்னர் அவருடன் நீங்கள் நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? உங்களுக்கு மந்திரத்தைக் கற்றுக்கொடுத்த, உங்களுடைய குருவாகத்தான் அவர் இருக்க வேண்டும். நிச்சயமாக நீங்கள் கண்டு கொள்வீர்கள். நான் உங்களுடைய மாறுகைகள் மற்றும் மாறுகால் களை துண்டித்து விடுவேன். உங்கள் அனை வரையும் நான் சிலுவையில் அறைந்து கொன்று விடுவேன்”என்று கூறினான்.
[26:50] அவர்கள் கூறினர், “ இது எங்களுடைய தீர்மானத்தை மாற்றிவிடாது; எங்கள் இரட்சகரிடமே நாங்கள் திரும்பிச் செல்வோம்.
[26:51] “முக்கியமாக, நாங்கள் முதல் நம்பிக்கை யாளர்களாக உள்ளோம் என்பதால் , எங்கள் இரட்சகர் எங்களுக்கு, எங்களுடைய பாவங் களை மன்னிப்பார் என நாங்கள் நம்பி எதிர்பார்க்கின்றோம்.”
[26:52] நாம் மோஸஸிற்கு; “என் அடியார்களுடன் பயணிப்பீராக; நீங்கள் தொடரப்படுவீர்கள்” என்று உள்ளுணர்வளித்தோம்.
[26:53] ஃபேரோ அழைப்பாளர்களை நகரங்களுக்கு அனுப்பினான்.
[26:54] “ இது ஒரு சிறு கூட்டமே,” (எனப் பிரகடனம் செய்தவாறு).
[26:55] “ இப்போது அவர்கள் நம்மை எதிர்க்கின்றனர்.”
[26:56] “ நாம் அனைவரும் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருந்து கொள்வோம்.”
தவிர்த்து விட முடியாத அந்த தண்டனை
[26:57] அதன் விளைவாக, நாம் அவர்களிடமிருந்து தோட்டங்களையும் மற்றும் ஊற்றுக்களையும் பறித்துக் கொண்டோம்.
[26:58] அத்துடன் பொக்கிஷங்களையும் மேலும் கண்ணியமானதொரு அந்தஸ்தையும்.
[26:59] பின்னர் இஸ்ரவேலின் சந்ததியினருக்கு ஒரு வாரிசுரிமையாக அதனை நாம் ஆக்கினோம்.
[26:60] கிழக்கு நோக்கி அவர்கள், அவர்களைப் பின் தொடர்ந்தனர்.
[26:61] இரு கூட்டத்தாரும் ஒருவர் மற்றவரைப் பார்த்த போது, மோஸஸின் சமூகத்தினர், “ நாம் பிடிபட்டுவிடுவோம்” என்று கூறினார்கள்.
[26:62] அவர், “வாய்ப்பே இல்லை. என் இரட்சகர் என்னுடன் இருக்கின்றார்; அவர் என்னை வழிநடத்துவார்” என்று கூறினார்.
[26:63] பின்னர் மோஸஸிற்கு நாம்: “உமது கைத்தடியைக் கொண்டு கடலை அடிப்பீராக,” என்று உள்ளுணர்வளித்தோம், உடனே அது பிரிந்தது. ஒவ்வொரு பகுதியும் மிகப்பெரிய தொரு மலையைப் போன்று இருந்தது.
[26:64] பின்னர் அவர்கள் அனைவரையும் நாம் கரைசேர்த்தோம்.
[26:65] இவ்விதமாக, மோஸஸையும் அவருடன் இருந்த அனைவரையும் நாம் காப்பாற்றினோம்.
[26:66] மேலும், மற்றவர்களை நாம் மூழ்கடித்தோம்.
[26:67] இது போதுமானதொரு சான்றாக இருக்க வேண்டும், ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பிக்கையாளர்கள் அல்ல.
[26:68] மிகவும் நிச்சயமாக, உம் இரட்சகர்தான் சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்.
ஆப்ரஹாம்
[26:69] ஆப்ரஹாமின் சரித்திரத்தை அவர்களுக்கு எடுத்துக்கூறுவீராக.
[26:70] அவர் தன் தந்தையிடமும் தன் சமூகத் தாரிடமும், “நீங்கள் வழிபடுகின்ற இவை என்ன?” என்று கேட்டார்.
[26:71] அவர்கள், “ நாங்கள் சிலைகளை வழிபடுகின் றோம்; அவற்றிற்கு நாங்கள் முழுமையாக அர்ப்பணித்தவர்களாக உள்ளோம்” என்று கூறினார்கள்.
[26:72] அவர் கூறினார், “நீங்கள் இறைஞ்சும் போது உங்களைச் செவியேற்க அவற்றால் இயலுமா?
[26:73] “உங்களுக்குப் பயன்தரவோ, அல்லது உங்களுக்குத் தீங்கிழைக்கவோ அவற்றால் இயலுமா?”
[26:74] அவர்கள், “இல்லை; ஆனால் எங்கள் பெற்றோர்கள் இதனைச் செய்ய நாங்கள் கண்டோம்” என்று கூறினார்கள்.
[26:75] அவர் கூறினார், “நீங்கள் வழிபடுகின்ற இந்தச் சிலைகளை நீங்கள் பார்த்தீர்களா?
[26:76] “நீங்களும் உங்கள் முன்னோர்களும்.
[26:77] “நான் அவற்றிற்கு எதிரானவன், ஏனெனில் நான் பிரபஞ்சத்தின் இரட்சகருக்கு மட்டுமே அர்ப்பணித்துக் கொண்டவன் ஆவேன்.
[26:78] “என்னைப் படைத்து, மேலும் எனக்கு வழிகாட்டிய அந்த ஒருவர்.
[26:79] “ எனக்கு உணவூட்டவும் எனக்கு தண்ணீர் புகட்டவும் செய்கின்ற அந்த ஒருவர்.
[26:80] “மேலும் நான் நோயுறும் போது, அவர் என்னைக் குணப்படுத்துகின்றார்.
[26:81] “என்னை மரணத்தில் ஆழ்த்தி, பின்னர் மீண்டும் எனக்கு உயிர் கொடுக்கின்ற அந்த ஒருவர்.
[26:82] “தீர்ப்பு நாள் அன்று என் பாவங்களை மன்னிப்பார் என்று நம்பி எதிர்பார்க்கப்படும் அந்த ஒருவர்.
[26:83] “என் இரட்சகரே, எனக்கு ஞானத்தை வழங்கு வீராக, மேலும் என்னை நன்னெறியாளர் களுடன் சேர்த்துக் கொள்வீராக.
[26:84] “வருங்காலத் தலைமுறையினருக்கு நான் அமைக்கும் முன்மாதிரியை நல்லதான ஒன்றாக இருக்கச் செய்வீராக.
[26:85] “பேரானந்தமயமான சுவனத்தின் வாரிசுகளில் ஒருவராக என்னை ஆக்குவீராக.
[26:86] “மேலும் என் தந்தையை மன்னிப்பீராக, ஏனெனில் அவர் வழிதவறிச் சென்று விட்டார்.
[26:87] “மேலும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று என்னைக் கைவிட்டு விடாதிருப்பீராக.”
[26:88] பணமோ, அன்றிப் பிள்ளைகளோ, உதவ இயலாத நாள் அதுவாகும்.
[26:89] தங்களுடைய முழு இதயத்துடன் கடவுள்-இடம் வருபவர்கள் மட்டுமே (காப்பாற்றப் படுவார்கள்).
[26:90] நன்னெறியாளர்களின் முன்னர் சுவனம் கொண்டுவரப்படும்.
[26:91] வழிதவறிச் சென்றவர்களுக்காக நரகம் அமைக்கப்படும்.
அவர்கள் தங்களுடைய இணைத் தெய்வங்களைக் கைவிட்டு விடுவார்கள்
[26:92] அவர்களிடம் கேட்கப்படும், “நீங்கள் வழிபட்டுக் கொண்டிருந்த இணைத் தெய்வங்கள் எங்கே
[26:93] “கடவுள்-உடன்? அவர்களால் இப்போது உங்களுக்கு உதவ முடியுமா? அவர்கள் தங்களுக்கேனும் உதவிக்கொள்ள முடியுமா?”
[26:94] வழிதவறிச் சென்றவர்களுடன் சேர்த்து, அவர்கள் அதிலே வீசப்பட்டு விடுவார்கள்.
[26:95] மேலும் சாத்தானின் படைவீரர்கள் அனைவரும்.
[26:96] தங்களுக்குள் சச்சரவு செய்தவர்களாக அங்கே அவர்கள் கூறுவார்கள்,
[26:97] “கடவுள் மீது ஆணையாக, நாம் வெகுதூரம் வழிகேட்டில் இருந்தோம்.
[26:98] “பிரபஞ்சத்தின் இரட்சகருடன் சமமாக எப்படி நாங்கள் உங்களை அமைத்திருக்கக் கூடும்?
[26:99] “எங்களைத் தவறாக வழிநடத்தியவர்கள் மிகவும் தீயவர்களாகவே இருந்தனர்.
[26:100] “இப்போது எங்களுக்குப் பரிந்துரையாளர்கள் இல்லை.
[26:101] “அன்றி ஒரு நெருங்கிய நண்பரும் இல்லை.
[26:102] “மற்றொரு வாய்ப்பை மட்டும் நாங்கள் பெற முடிந்தால், அப்போது நாங்கள் நம்பிக்கை கொள்வோம்.”
[26:103] இது நல்லதொரு படிப்பினையாக இருக்க வேண்டும். ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல.
[26:104] உம்முடைய இரட்சகர்தான் சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்.
நோவா
[26:105] நோவாவின் சமூகத்தார் தூதர்களை நம்ப மறுத்தனர்.
[26:106] அவர்களுடைய சகோதரர் நோவா அவர் களிடம் கூறினார், “ நீங்கள் நன்னெறியாளர் களாக ஆகமாட்டீர்களா?
[26:107] “நான் உங்களுக்கு நேர்மையானதொரு தூதர் ஆவேன்.
[26:108] “நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவும் மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.
[26:109] “ உங்களிடம் நான் எந்தக் கூலியும் கேட்க வில்லை. எனது கூலி பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து வருகின்றது.
[26:110] “ நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவும் மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.”
[26:111] அவர்கள், “ எங்களுக்கிடையில் மிகவும் மோச மானவர்கள் உம்மைப் பின்பற்றிக் கொண்டு இருக்கும்போது, நாங்கள் எப்படி உங்களுடன் நம்பிக்கை கொள்ள இயலும்?” என்று கூறினார் கள்.
[26:112] அவர் கூறினார், “ அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நான் எப்படி அறிவேன்?
[26:113] “உங்களால் உணர முடியுமேயானால் அவர் களுடைய தீர்ப்பு என் இரட்சகரிடம் மட்டுமே உள்ளது.
[26:114] “நம்பிக்கையாளர்களை நான் ஒருபோதும் வெளியேற்றிவிட மாட்டேன்.
[26:115] “நான் தெளிவுபடுத்துகின்ற ஓர் எச்சரிப்பவர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை.”
[26:116] அவர்கள், “நீர் விலகிக் கொள்ளவில்லை யென்றால், நோவாவே, நீர் கல்லாலடித்துக் கொல்லப்படுவீர்” என்று கூறினார்கள்.
[26:117] அவர் கூறினார், “என் இரட்சகரே, என் சமூகத்தார் என்னை நம்பமறுத்து விட்டனர்.
[26:118] “அவர்களுக்கெதிராக எனக்கு வெற்றியை வழங்குவீராக, மேலும் என்னையும், என்னுடனி ருக்கும் நம்பிக்கையாளர்கள் கூட்டத்தையும் காப்பீராக.”
[26:119] அவரையும் மேலும் அவருடன் கூட இருந்தவர் களையும் சுமை நிரம்பிய படகில் நாம் கரை சேர்த்தோம்.
[26:120] பின்னர் மற்றவர்களை நாம் மூழ்கடித்தோம்.
[26:121] இது ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும், ஆனால் மக்களில் அதிகமானோர் நமபிக்கை யாளர்கள் அல்ல.
[26:122] மிகவும் நிச்சயமாக, உம்முடைய இரட்சகர் தான் சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்
ஹூத்
[26:123] ஆதுகள் தூதர்களை நம்ப மறுத்தனர்.
[26:124] அவர்களுடைய சகோதரர் ஹூத் அவர்களிடம் கூறினார், “ நீங்கள் நன்னெறியாளர்களாக ஆகமாட்டீர்களா?
[26:125] “நான் உங்களுக்கு நேர்மையானதொரு தூதர் ஆவேன்.
[26:126] “நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக் கவும்,மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.
[26:127] “ நான் உங்களிடம் கூலி எதுவும் கேட்க வில்லை; எனது கூலி பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து வருகின்றது.
[26:128] “நீங்கள் வீண் பகட்டிற்காக ஒவ்வொரு குன்றின் மீதும் ஒரு மாளிகையை கட்டிக் கொள்கின்றீர்கள்.
[26:129] “நீங்கள் நிரந்தரமாக நிலைத்திருக்கப் போவதைப்போல் கட்டடங்களை நீங்கள் அமைத்துக்கொள்கின்றீர்கள்.
[26:130] “மேலும் நீங்கள் தாக்கும்போது, நீங்கள் ஈவிரக்கமின்றித் தாக்குகின்றீர்கள்.
[26:131] “நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவும் மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.
[26:132] “நீங்கள் அறிந்திருக்கும் அனைத்துப் பொருட் களையும் உங்களுக்கு வழங்கிய அந்த ஒருவரிடம் பயபக்தியோடு இருங்கள்.
[26:133] “அவர் உங்களுக்குக் கால்நடைகளையும் மற்றும் பிள்ளைகளையும் வழங்கினார்.
[26:134] “மேலும் தோட்டங்களையும், ஊற்றுக்களையும்.
[26:135] “அச்சுறுத்தும் ஒரு நாளின் தண்டனையை உங்களுக்கு நான் அஞ்சுகின்றேன்.”
[26:136] அவர்கள் கூறினர், “நீர் உபதேசித்தாலும் அல்லது உபதேசிக்கவில்லையென்றாலும், அது சமமேயாகும்.
[26:137] “அந்தத் துன்பம் எங்களுடைய முன்னோர்கள் வரை மட்டிலுமே இருந்தது.
[26:138] “எந்தத் தண்டனையும் எப்பொழுதும் எங்களுக்கு ஏற்படாது.”
[26:139] இவ்விதமாக அவர்கள் நம்பமறுத்தனர், மேலும், அதன் விளைவாக, அவர்களை நாம் அழித்தோம். இது ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும், ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பிக்கை யாளர்கள் அல்ல.
[26:140] மிகவும் நிச்சயமாக, உம்முடைய இரட்சகர்தான் சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்.
ஸாலிஹ்
[26:141] தமூதுகள் தூதர்களை நம்பமறுத்தனர்.
[26:142] அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ் அவர்களிடம் கூறினார், “ நீங்கள் நன்னெறியாளர்களாக ஆக மாட்டீர்களா?
[26:143] “ நான் உங்களுக்கு நேர்மையானதொரு தூதர் ஆவேன்.
[26:144] “ நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவும், மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.
[26:145] “நான் உங்களிடம் கூலி எதுவும் கேட்க வில்லை; எனது கூலி பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து மட்டுமே வருகின்றது.
[26:146] “பாதுகாப்பாக இந்தநிலையிலேயே, நிரந்தர மாக நீங்கள் விட்டு விடப்படுவீர்கள் என்று கருதிக் கொண்டீர்களா?
[26:147] “ நீங்கள் தோட்டங்களையும், ஊற்றுக்களையும் அனுபவிக்கின்றீர்கள்.
[26:148] “மேலும் பயிர்களையும், சுவையான பழங் களுடன் பேரீத்த மரங்களையும்.
[26:149] “மலைகளில் ஆடம்பரமான மாளிகைகளை நீங்கள் குடைந்து கொள்கின்றீர்கள்.
[26:150] “நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக் கவும், மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.
[26:151] “வரம்பு மீறுபவர்களுக்குக் கீழ்ப்படியாதீர்கள்.
[26:152] “நல்ல செயல்கள் அல்லாத தீமைகள் செய்கின்றவர்கள்”.
[26:153] அவர்கள் கூறினர், “ நீர் சூன்யம் செய்யப் பட்டவராக இருக்கின்றீர்.
[26:154] “நீர் எங்களைப் போன்ற மனிதர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. நீர் உண்மையானவராக இருந்தால், ஓர் அற்புதத்தைக் கொண்டு வாரும்.”
[26:155] அவர் கூறினார், “இதோ, அதற்கென நிர்ணயிக்கப்பட்ட ஒரு நாளில் மட்டும் தண்ணீர் அருந்துகின்ற ஒரு பெண் ஒட்டகம்; நீங்கள் அருந்துவதற்கென்று குறிப்பிடப்பட்ட நாட்களிலிருந்து வேறுபட்ட ஒரு நாள்.
[26:156] “ அச்சுறுத்தும் ஒரு நாளின் தண்டனைக்கு நீங்கள் உள்ளாகிவிடாதிருக்கும் பொருட்டு, எந்தத் தீங்கையும் கொண்டு அதனைத் தீண்டாதீர்கள்.”
[26:157] அவர்கள் அதனை அறுத்துவிட்டனர், மேலும் இவ்விதமாக துக்கத்திற்கு உள்ளாகினர்.
[26:158] தண்டனை அவர்களைச் சூழ்ந்து கொண்டது. இது ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும், ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பிக் கையாளர்கள் அல்ல.
[26:159] மிகவும் நிச்சயமாக, உம்முடைய இரட்சகர் தான் சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்.
லோத்
[26:160] லோத்தின் சமூகத்தார் தூதர்களை நம்ப மறுத்தனர்.
[26:161] அவர்களுடைய சகோதரர் லோத் அவர்களிடம் கூறினார், “நீங்கள் நன்னெறியாளர்களாக ஆக மாட்டீர்களா?”
[26:162] “ நான் உங்களுக்கு நேர்மையானதொரு தூதர் ஆவேன்.
[26:163] “நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக் கவும், மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.
[26:164] “நான் உங்களிடம் கூலி எதுவும் கேட்கவில்லை; எனது கூலி பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து மட்டுமே வருகின்றது.
[26:165] “மக்கள் அனைவரிடத்திலும், ஆண்களுடனா நீங்கள் காமம் கொள்கின்றீர்கள்?
[26:166] “உங்களுக்காக உங்களுடைய இரட்சகர் படைத்துள்ள மனைவியரை நீங்கள் கைவிட்டு விடுகின்றீர்கள்! உண்மையில், நீங்கள் வரம்பு மீறுகின்ற மக்களாகவே இருக்கின்றீர்கள்.”
[26:167] அவர்கள், “ நீர் விலகிக் கொள்ளவில்லை யென்றால், லோத்தே, நீர் நாடுகடத்தப்பட்டு விடுவீர்” என்று கூறினார்கள்.
[26:168] அவர் கூறினார், “உங்களுடைய செய்கை களுக்காக நான் வருந்துகின்றேன்.”
[26:169] “என் இரட்சகரே, என்னையும் என் குடும்பத் தாரையும் அவர்களுடைய செயல்களிலிருந்து காப்பாற்றுவீராக.”
[26:170] அவரையும், அவருடைய குடும்பம் முழுவதை யும் நாம் காப்பாற்றினோம்.
[26:171] ஆனால் அந்தக் கிழவியை அல்ல; அவள் அழிக்கப்பட்டவளாக இருந்தாள்.
[26:172] பின்னர் நாம் மற்றவர்களை நிலைகுலைத்து விட்டோம்.
[26:173] துன்பகரமானதொரு பொழிவைக் கொண்டு அவர்களை நாம் பொழிந்தோம்; எச்சரிக்கப் பட்டவர்களாக இருந்தவர்களுக்கு என்ன ஒரு பயங்கரமான பொழிவு!
[26:174] இது ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும், ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பிக்கை யாளர்கள் அல்ல.
[26:175] மிகவும் நிச்சயமாக, உம்முடைய இரட்சகர் தான் சர்வ வல்லமையுடையவர், மிக்ககருணையாளர்.
ஷுஐப்
[26:176] வனங்களில் வசித்தவர்களும் தூதர்களை நம்ப மறுத்தனர்.
[26:177] ஷுஐப் அவர்களிடம் கூறினார், “ நீங்கள் நன்னெறியாளர்களாக ஆக மாட்டீர்களா?
[26:178] “நான் உங்களுக்கு நேர்மையானதொரு தூதர் ஆவேன்.
[26:179] “நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக் கவும், மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.
[26:180] “நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை; எனது கூலி பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து மட்டுமே வருகின்றது.
[26:181] “நீங்கள் வியாபாரம் செய்யும்போது அளவை முழுமையாகக் கொடுக்க வேண்டும்; ஏமாற்றக் கூடாது.
[26:182] “நியாயமானதொரு தராசு கொண்டு நீங்கள் எடைபோட வேண்டும்.
[26:183] “மக்களுடைய உரிமைகளிலிருந்து அவர் களை நீங்கள் ஏமாற்றி விடாதீர்கள், மேலும் சீர்குலைப்பவர்களாக பூமியில் சுற்றித்திரியா தீர்கள்.
[26:184] “உங்களையும் மேலும் முந்திய தலைமுறை யினர்களையும் படைத்த அந்த ஒருவரிடம் பய பக்தியோடிருங்கள்”.
[26:185] அவர்கள் கூறினர், “ நீர் சூன்யம் செய்யப்பட்ட வராக இருக்கின்றீர்.
[26:186] “ நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. உண்மையில், நீர் ஒரு பொய்யர் என்றே நாங்கள் நினைக்கின் றோம்.
[26:187] “ நீர் உண்மையாளராக இருந்தால், விண்ணி லிருந்து பாளங்கள் எங்கள் மீது விழட்டும்.”
[26:188] அவர், “ என் இரட்சகர்தான் நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் அறிந்தவர்” என்று கூறினார்.
[26:189] அவர்கள் அவரை நம்ப மறுத்தனர், மேலும் அதன் விளைவாக, விதானத்தினுடைய நாளின் தண்டனைக்கு அவர்கள் உள்ளானார் கள். அச்சுறுத்தும் ஒரு நாளின் தண்டனையாக அது இருந்தது.
[26:190] இது ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும், ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பிக்கை யாளர்கள் அல்ல.
[26:191] மிகவும் நிச்சயமாக, உம்முடைய இரட்சகர் தான் சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்.
குர்ஆன்
[26:192] இது, பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து ஒரு வெளிப்பாடாக உள்ளது.
[26:193] நேர்மையான ஆவி (கப்ரியேல்) இதனுடன் இறங்கி வந்தார்.
[26:194] எச்சரிப்பவர்களில் ஒருவராக நீர் இருக்கும் பொருட்டு, உம்முடைய இதயத்தில் இதனை வெளிப்படுத்துவதற்காக.
[26:195] பூரணமானதோர் அரபி மொழியில்.
[26:196] முந்திய தலைமுறையினர்களின் புத்தகங் களிலும் இது முன்னறிவிப்பு செய்யப் பட்டுள்ளது.
[26:197] இஸ்ரவேலின் சந்ததியினர்களுக்கிடையில் உள்ள அறிஞர்கள் இதனை அறிந்திருக் கின்றனர் என்பது அவர்களுக்குப் போதுமானதோர் அத்தாட்சி இல்லையா?
குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டாக வேண்டும்
[26:198] அரபி மொழி அறியாத மக்களுக்கு இதனை நாம் வெளிப்படுத்தி இருப்போமாயின்.
[26:199] மேலும் அவரை இதை (அரபி மொழியில்) ஓதிக்காட்டச் செய்திருப்போமாயின், அவர்கள் இதில் நம்பிக்கை கொண்டிருக்கச் சாத்திய மில்லை.
[26:200] இவ்விதமாகக் குற்றவாளிகளின் இதயங் களில் இதை (ஓர் அந்நிய மொழியைப் போல) நாம் ஆக்கி விடுகின்றோம்.
[26:201] இவ்விதமாக, அவர்களால் இதில் நம்பிக்கை கொள்ள முடியாது; வலி நிறைந்த அந்தத் தண்டனையை அவர்கள் காணும் வரை முடியாது.
[26:202] அவர்கள் சற்றும் எதிர்பாராத போது, அது அவர்களிடம் திடீரென வரும்.
[26:203] அப்போது அவர்கள், “எங்களுக்கு ஓர் அவகாச மளிக்கப்படுமா?” என்று கூறுவார்கள்.
[26:204] நமது தண்டனைக்கு அவர்கள் சவால் விடவில்லையா?
[26:205] நீங்கள் காணுவதைப் போல், ஆண்டுக் கணக்கில் சுகமனுபவிக்க அவர்களை நாம் அனுமதித்தோம்.
[26:206] பின்னர் வாக்களிக்கப்பட்ட அதே விதமாக, தண்டனை அவர்களிடம் வந்தது.
[26:207] அவர்களுடைய பரந்த செல்வங்கள் அவர்களுக்குச் சிறிதளவும் உதவி செய்யவில்லை.
[26:208] எச்சரிப்பவர்களை அனுப்பாமல் எந்த சமூகத்தையும் நாம் ஒருபோதும் அழிப்பதில்லை.
[26:209] ஆகையால், இது ஒரு நினைவூட்டலாகும், ஏனெனில் நாம் ஒரு போதும் அநீதமிழைப்பவர்கள் அல்ல.
கடவுளை மட்டும் வழிபடும்படி உபதேசிக்க போலித் தூதர்களால் இயலாது*
[26:210] சாத்தான்கள் ஒரு போதும் இதனை வெளிப்படுத்த இயலாது.

அடிகுறிப்பு:
*26:210 போலியான ஒரு தூதன் சாத்தானின் தூதன் ஆவான், ஏனெனில் அவன் மிகப் பயங்கரமான பொய்களை இட்டுக் கட்டுபவன் ஆவான். இத்தகையதொரு தூதனால் இணைத் தெய்வ வழிபாட்டை பகிரங்கமாகக் கண்டனம் செய்யவோ, அல்லது கடவுளை மட்டும் வழிபடுவதைப் பிரச்சாரம் செய்யவோ இயலாது.
[26:211] அவர்கள் செய்யவும் மாட்டார்கள், அன்றி இயலவும் செய்யாது.
[26:212] ஏனெனில் அவர்கள் செவியேற்பதை விட்டுத் தடுக்கப்பட்டு இருக்கின்றனர்.
[26:213] ஆகையால், தண்டனைக்கு நீர் உள்ளாகாமல் இருக்கும் பொருட்டு, கடவுள்-உடன் வேறெந்தத் தெய்வத்தையும் இணைத்தெய்வ வழிபாடு செய்யாதீர்.
கடவுளின் உடன்படிக்கைத் தூதர்*
[26:214] உமக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர் களுக்கு நீர் உபதேசம் செய்ய வேண்டும்.

அடிகுறிப்பு:
*26:214-223 இந்த வசனங்கள் கடவுளின் உடன்படிக்கைத் தூதரைக் குறிக்கின்றது : “ரஷாத் கலீஃபா” என்பதன் எழுத்தெண் மதிப்புடன் (1230), வசன எண்ணை (214), நாம் கூட்டினால் கூட்டுத்தொகை 1230+214 = 1444 = 19ஒ76 = 19ஒ19ஒ4, மேலும் 214 முதல் 223 வரையிலான வசன எண்களின் கூட்டுத்தொகை 2185 ஆகும் = 19 ஒ155 (பின் இணைப்பு1).
[26:215] மேலும் உம்மைப்பின்பற்றுகின்ற நம்பிக்கை யாளர்களுக்கு உமது இறக்கையைத் தாழ்த்திக் கொள்வீராக.
[26:216] அவர்கள் உமக்கு கீழ்படியாவிட்டால், பின்னர், “நீங்கள் செய்வதிலிருந்து நான் விலகிக் கொண்டேன்” என்று கூறுவீராக.
[26:217] மேலும் சர்வ வல்லமையுடையவரான, மிக்க கருணையாளரிடம் உமது பொறுப்பை வைத்து விடுவீராக.
[26:218] இரவுப் பொழுதில் நீர் தியானிக்கும்போது உம்மைப் பார்ப்பவர்.
[26:219] மேலும் அடிக்கடியான உங்களுடைய சிரம் பணிதல்களையும்.
[26:220] அவர்தான் செவியேற்பவர், எல்லாம் அறிந் தவர்.
[26:221] சாத்தான்கள் எவர்மீது இறங்குகின்றனர் என்பதை நான் உங்களுக்கு அறிவிக் கட்டுமா?
[26:222] இட்டுக்கட்டும் குற்றவாளிகள் ஒவ்வொருவர் மீதும் அவர்கள் இறங்குகின்றனர்.
[26:223] கவனத்தோடு செவியேற்பது போல் அவர்கள் பாவனை செய்கின்றனர், ஆனால் அவர்களில் அதிகமானோர் பொய்யர்கள் ஆவர்.
[26:224] கவிஞர்களைப் பொறுத்தவரை, வழி தவறியவர்களால் மட்டுமே அவர்கள் பின்பற்றப்படுகின்றனர்.
[26:225] நிலைமைக்கு ஏற்ப அவர்களுடைய விசுவாசம் மாறுவதை நீங்கள் பார்க்கவில்லையா?
[26:226] மேலும் அவர்கள் செய்யாதவற்றை அவர்கள் கூறுகின்றனர் என்பதையும்?
[26:227] நம்பிக்கை கொண்டு, நன்னெறியானதொரு வாழ்வு நடத்தி, கடவுள்-ஐ அடிக்கடி நினைவு கூர்ந்து, மேலும் தங்களுடைய உரிமைகளுக்காக எழுந்து நிற்பவர்கள் விலக்களிக்கப் படுகின்றனர். நிச்சயமாக, வரம்பு மீறுபவர்கள் தங்களுடைய இறுதி விதி என்ன என்பதை கண்டு கொள்வார்கள்.