சூரா 20: த.ஹ. (தாஹா)

[20:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[20:1] த.ஹ.*

அடிகுறிப்பு:
*20:1 குர்ஆனின் அச்சுறுத்துகின்ற கணித அற்புதத்தின் அங்கங்களான இந்த குர்ஆனிய தலைப்பு எழுத்துக்களின் பங்கு பின் இணைப்பு 1ல் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
[20:2] எந்தக் கஷ்டத்தையும் உமக்கு உண்டாக்கு வதற்காக, இந்தக் குர்ஆனை உமக்கு நாம் வெளிப்படுத்தவில்லை.
[20:3] பயபக்தியுடையவர்களை எச்சரிப்பதற்காக மட்டுமே.
[20:4] பூமியையும் மற்றும் உயர்ந்த வானங்களையும் படைத்தவரிடமிருந்து ஒரு வெளிப்பாடு.
[20:5] மிக்க அருளாளர்; அவர் அனைத்து அதிகாரங் களையும் ஏற்றுக் கொண்டார்.
[20:6] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும், மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றும், மேலும் மண்ணிற்கு அடியில் உள்ள ஒவ்வொன்றும் அவருக் குரியவை.
[20:7] உங்களுடைய நம்பிக்கை உறுதியை நீங்கள் பகிரங்கப்படுத்துகின்றீர்களோ (அல்லது இல்லையோ) அவர் இரகசியங்களையும், அதனையும் விட மிகவும் மறைவானவற்றையும் அறிகின்றார்.
[20:8] கடவுள்: அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை. மிகவும் அழகிய பெயர்கள் அவருக்குரியவை.
[20:9] மோஸஸின் சரித்திரத்தை நீர் கவனித்திருக் கின்றீரா?
[20:10] அவர் ஒரு நெருப்பைக் கண்ட போது, அவர் தன் குடும்பத்தாரிடம், “இங்கேயே இருங்கள். நான் ஒரு நெருப்பைக் கண்டேன். அதிலிருந்து சிறிதை நான் உங்களிடம் கொண்டு வரவோ, அல்லது நெருப்பின் அருகில் ஏதேனும் வழி காட்டுதலைக் கண்டு கொள்ளவோகூடும்” என்று கூறினார்.
[20:11] அவர் அதன் பால் வந்த போது, அவர், “மோஸஸே“ என்று அழைக்கப்பட்டார்.
[20:12] “நான் தான் உம்முடைய இரட்சகர்; உமது காலணிகளைக் கழற்றுவீராக. நீர் துவா என்னும் புனிதப் பள்ளத்தாக்கில் இருக்கின்றீர்.
[20:13] “நான் உம்மைத் தேர்ந்தெடுத்துள்ளேன், எனவே வெளிப்படுத்தப்படுபவற்றை கவன மாகக் கேட்டுக் கொள்வீராக.
[20:14] “நான்தான் கடவுள்; என்னுடன் வேறு தெய்வம் இல்லை. என்னை மட்டுமே நீர் வழிபட வேண்டும், மேலும் என்னை நினைவு கூர்வதற்காக தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பீராக.
உலக முடிவு மறைக்கப்பட்டதாக இல்லை*
[20:15] “(உலக முடிவின்) அந்த வேளை நிச்சயமாக வருகின்றது; நான் அதனைக் கிட்டத்தட்ட மறைத்து வைப்பேன். ஏனெனில் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அதன் செயல்களுக்குரிய கூலி கொடுக்கப்பட்டாக வேண்டும்.

அடிகுறிப்பு:
*20:15 கடவுளின் இறுதித் தூதுச் செய்தியான குர்ஆனில் உலகின் முடிவு கொடுக்கப்பட்டுள்ளது (15:87).
[20:16] “நீர் வீழ்ந்து விடாதிருக்கும் பொருட்டு, அதை விட்டும், அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவர்களால் - தங்களுடைய சொந்த அபிப்பிராயங்களைப் பின்பற்றுபவர்களால் - திருப்பப் பட்டு விடக்கூடாது.
[20:17] “மோஸஸே, உமது வலக்கரத்தில் இருக்கும் இது என்ன?”
[20:18] அவர், “இது என்னுடைய கைத்தடி. இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன், இதனைக் கொண்டு எனது ஆடுகளை மேய்ப்பேன், மேலும் வேறு காரணங்களுக்காகவும் இதனை நான் பயன்படுத்துவேன்” என்று கூறினார்.
[20:19] அவர், “மோஸஸே, அதனைக் கீழே வீசுவீராக” என்று கூறினார்.
[20:20] அவர் அதனைக் கீழே வீசினார், உடனே அது ஊர்ந்து செல்லும் ஒரு பாம்பாக மாறியது.
[20:21] அவர் கூறினார், “அதனை எடுத்துக் கொள்வீராக; பயப்படாதீர். அதன் அசல் நிலைக்கு அதனை நாம் திருப்பி விடுவோம்.
[20:22] “மேலும் உமது கரங்களை உமது கட்கங்களுக்குள் வையும்; ஒரு மாசும் இன்றி வெண்மையாக அது வெளிவரும்; மற்றுமொரு சான்று.
[20:23] “இவ்விதமாக நம்முடைய மாபெரும் அற்புதங்களில் சிலவற்றை நாம் உமக்குக் காட்டுகின்றோம்.
[20:24] “ஃபேரோவிடம் செல்வீராக, ஏனெனில் அவன் வரம்பு மீறி விட்டான்.”
[20:25] அவர் கூறினார், “என் இரட்சகரே, என் சுபாவத்தைக் குளிர்விப்பீராக.
[20:26] “மேலும் இந்த விஷயத்தை எனக்கு எளிதாக்குவீராக.
[20:27] “மேலும் எனது நாவிலிருந்து ஒரு முடிச்சை அவிழ்த்து விடுவீராக.
[20:28] “இதன்பயனாக அவர்கள் எனது பேச்சை புரிந்து கொள்ளஇயலும்.
[20:29] “மேலும் எனது குடும்பத்திலிருந்து எனக்கோர் உதவியாளரை நியமிப்பீராக.
[20:30] “என் சகோதரர் ஆரோனை.
[20:31] “அவருடன் என்னைப் பலப்படுத்துவீராக.
[20:32] “இவ்விஷயத்தில் என்னுடைய பங்காளியாக அவரை இருக்கச் செய்வீராக.
[20:33] “நாங்கள் உம்மை அடிக்கடித் துதிப்பதற்காக.
[20:34] “மேலும் உம்மை அடிக்கடி நினைவு கூர்வதற்காக.
[20:35] “நீர் எங்களைப் பார்ப்பவராக இருக்கின்றீர்”.
[20:36] அவர் கூறினார், “மோஸஸே, நீர் கேட்டது கொடுக்கப்பட்டது.
[20:37] “மற்றொரு முறை உமக்கு நாம் அருள்புரிந்துள்ளோம்.
[20:38] “நாம் வெளிப்படுத்த வேண்டியதை உமது தாயாருக்கு நாம் வெளிப்படுத்தியபோது.
[20:39] “இவ்வாறு கூறியவாறு: ‘பெட்டிக்குள் அவரை வைத்து, பின்னர் அவரை ஆற்றினுள் வீசி விடுவீராக. என்னுடைய விரோதி மற்றும் அவருடைய விரோதியால் எடுத்துக் கொள்ளப்படுவதற்காக, ஆறு அவரை கரை மீது வீசிவிடும்.’ என்னிடமிருந்து அன்பைக் கொண்டு உம்மீது நான் பொழிந்தேன், மேலும் எனது கவனம் மிக்க கண்ணின் முன்னர் உம்மை நான் ஆக்கிக் கொண்டேன்.
[20:40] “உம் சகோதரி நடந்து அவர்களிடம் சென்று, ‘இவர் மீது கவனம் எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு செவிலித்தாய் பற்றி என்னால் உங்களுக்குக் கூறஇயலும்’ என்று கூறினார். இவ்வி தமாக உம் தாயாரிடம், அவர் மகிழ்ச்சி அடைவ தற்காகவும் மேலும் கவலைப்படுவதை நிறுத் திக் கொள்வதற்காகவும் நாம் உம்மை திரும்பச் சேர்த்தோம். மேலும் ஒரு ஆன்மாவை நீர் கொன்று விட்ட போது, வருத்தம் தரும் அதன் பின்விளைவுகளிலிருந்து உம்மை நாம் காத்தோம்; உண்மையில் நாம் உம்மை முற்றிலும் சோதித்தோம். மித்யன் சமூகத்தாருடன் வருடக் கணக்கில் நீர் தங்கியிருந்தீர், மேலும் துல்லியமானதொரு திட்டத்திற்கேற்ப இப்போது நீர் திரும்பி வந்திருக்கின்றீர்.
[20:41] “எனக்காகவே நான் உம்மை ஆக்கியிருக்கின்றேன்.
[20:42] “எனது அத்தாட்சிகளால் ஆதரவளிக்கப் பட்டவர்களாக, உம்முடைய சகோதரருடன் செல்லும், மேலும் என்னை நினைவு கூர்வதில் தடுமாற்றமடையாதீர்கள்.
[20:43] “ஃபேரோவிடம் செல்லுங்கள், ஏனெனில் அவன் வரம்பு மீறிவிட்டான்.
[20:44] “நல்ல முறையில் அவனுடன் பேசுங்கள்; அவன் கவனத்தில் எடுத்துக் கொள்ளவோ அல்லது பயபக்தியுடையவனாக ஆகிவிடவோ கூடும்.”
[20:45] அவர்கள், “எங்கள் இரட்சகரே, அவன் எங்களைத் தாக்கவோ, அல்லது வரம்பு மீறவோ கூடும் என நாங்கள் அஞ்சுகின்றோம்” என்று கூறினார்கள்.
[20:46] அவர், “அஞ்சாதீர்கள், ஏனெனில் கேட்டுக்கொண்டும் மேலும் கண்காணித்துக் கொண்டும், நான் உங்களுடன் இருக்கின் றேன்” என்று கூறினார்.
[20:47] “அவனிடம் சென்று கூறுங்கள், ‘நாங்கள் உன் இரட்சகரிடமிருந்துள்ள இரு தூதர்களாவோம். இஸ்ரவேலின் சந்ததியினரை அனுப்பி விடு. அவர்களைக் கொடுமை செய்வதிலிருந்து நீ விலகியாக வேண்டும். உன் இரட்சகரிட மிருந்து ஒரு அத்தாட்சியை நாங்கள் கொண்டு வருகின்றோம், மேலும் வழிகாட்டலைக் கவனத்தில் கொள்வோருக்குத்தான் அமைதி உரித்தாகும்.
[20:48] “‘நம்பிக்கை கொள்ள மறுத்துத் திரும்பிச் சென்று விடுவோரை, தண்டனையானது தவிர்த்து விட முடியாதவாறு வேதனைக்கு உள்ளாக்கும் என்று நாங்கள் உள்ளுணர் வளிக்கப்பட்டவர்களாக உள்ளோம்.’”
[20:49] அவன் “மோஸஸே, உங்களுடைய இரட்சகர் யார்?” என்று கூறினான்.
[20:50] அவர், “ஒவ்வொன்றிற்கும் அதன் வாழ்க்கையையும், மேலும் அதன் வழிகாட்ட லையும் தந்த அந்த ஒருவர்தான் எங்கள் இரட்சகர்” என்று கூறினார்.
[20:51] அவன், “முந்திய தலைமுறையினர்களைப் பற்றியது என்ன?” என்று கூறினான்.
[20:52] அவர், “அதனைப் பற்றிய அறிவு என் இரட்சகரிடம் ஒரு பதிவேட்டில் உள்ளது. என் இரட்சகர் ஒருபோதும் தவறிழைப்பதில்லை, அன்றியும் அவர் மறந்து விடுவதுமில்லை” என்று கூறினார்.
[20:53] அவர்தான் உங்களுக்காகப் பூமியை வசிக்கத்தக்கதாக ஆக்கி, மேலும் அதில் உங்களுக்காகச் சாலைகளை மேவியவர். மேலும் அவர் விண்ணிலிருந்து தண்ணீரை இறக்கி அனுப்புகின்றார், அதன் மூலம் நாம் பல்வேறு வகையான தாவரங்களை விளைவிக்கின்றோம்.
[20:54] உண்ணுங்கள், மேலும் உங்கள் கால்நடைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அறிவுத்திறனுடை யோருக்கு இவை போதுமான சான்றுகளாகும்*.

அடிகுறிப்பு:
*20:54 விண்வெளியில் மிதக்க விடப்பட்டிருக்கும் ‘பூமி என்ற விண்வெளிக்கப்பலில்’ உள்ள விண்வெளிப் பயணிகளாக நாம் இருக்கின்றோம் என்ற உண்மையை அறிவுத்திறன் உடையோர் வியந்து போற்றுவார்கள். இந்தத் தற்காலிக நெடும் விண்வெளிப்பயணத்தில் நாம் ஏறும்பொழுதே கடவுள் நமக்கு புதுப்பித்துக் கொள்ளக்கூடிய உணவு, தண்ணீர், செல்லப்பிராணிகள், வனவிலங்குகள், மற்றும் கால்நடைகள் ஆகியவற்றை வழங்கியுள்ளார். நம்முடைய விண்வெளி வீரர்களுக்கு நாம் வழங்கும் வாழ்வாதாரங்களுடன் ‘பூமியெனும் விண்வெளிக் கப்பலுக்குக்’ கடவுள் வழங்கியுள்ள வாழ்வாதாரங்களை ஒப்பிட்டுப் பாருங்கள் (பின் இணைப்பு 7).
[20:55] அதிலிருந்தே உங்களை நாம் படைத்தோம், அதனுள்ளேயே உங்களை நாம் திருப்புவோம், மேலும் அதிலிருந்தே உங்களை மீண்டும் ஒரு முறை நாம் வெளிக்கொண்டு வருவோம்.
[20:56] நமது சான்றுகள் அனைத்தையும் அவனுக்கு நாம் காட்டினோம், ஆனால் அவன் நம்ப மறுத்து விட்டான் மேலும் நிராகரித்துவிட்டான்.
[20:57] அவன் கூறினான், “உமது மாயாஜாலத்தைக் கொண்டு எங்களை, எங்களது நாட்டை விட்டு வெளியேற்ற இங்கு நீர் வந்திருக்கின்றீரா, மோஸஸே?
[20:58] “இதே மாதிரியான மாயாஜாலத்தை நிச்சயமாக நாங்களும் உமக்குக் காட்டுவோம். ஆகையால், பொதுவானதோர் இடத்தில்; நாங்களோ, அன்றி நீரோ மீறக்கூடாத ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யும்”.
[20:59] அவர், “உங்களது நிர்ணயிக்கப்பட்ட நேரமானது திருவிழாக்களின் நாளாகும். நாம் அனைவரும் முற்பகலில் சந்திப்போம்” என்று கூறினார்.
[20:60] ஃபேரோ தன் படைகளை ஒன்று திரட்டிக் கொண்டு, பின்னர் வந்தான்.
[20:61] மோஸஸ் அவர்களிடம், “உங்களுக்குக் கேடுதான். கடவுள்-உடன் சண்டையிடு வதற்காகப் பொய்களை இட்டுக்கட்டிக் கொண்டு, மேலும் இவ்விதமாக அவருடைய தண்டனைக்கு உள்ளாகின்றீர்களா?” இத்த கைய இட்டுக்கட்டுபவர்கள் நிச்சயமாகத் தோற்றுப் போவார்கள்” என்று கூறினார்.
[20:62] அவர்கள், அந்தரங்கமாக ஆலோசித்தவாறு, தங்களுக்கிடையில் தர்க்கித்துக் கொண்டனர்.
[20:63] அவர்கள் கூறினார்கள், “இவர்கள் இருவரும் தங்களுடைய மாயாஜாலத்தால் உங்கள் நாட்டைவிட்டு உங்களை வெளியேற்றவும், மேலும் உங்களுடைய இலட்சிய வாழ்க்கை முறையை நாசமாக்கவும் விரும்புகின்ற இரு மந்திரவாதிகள் என்பதைத் தவிர அதிகமாக ஒன்றுமில்லை.
[20:64] “நாம் ஒரே திட்டத்தில் உடன்பட்டவாறு, ஓர் ஐக்கிய முன்னணியாக அவர்களை எதிர்கொள்வோம். இன்றைய தினம் வெற்றியடைபவன்தான் மேன்மையை அடைவான்”.
[20:65] அவர்கள், “மோஸஸே, நீர் வீசுகின்றீரா, அல்லது முதலில் வீசக்கூடியவர்களாக நாங்கள் இருக்கலாமா” என்று கூறினார்கள்.
[20:66] அவர், “நீங்கள் வீசுங்கள்” என்று கூறினார். உடனே அவர்களுடைய மாயாஜாலத்தினால், அவர்களுடைய கயிறுகளும் மற்றும் கோல்களும், நகருபவை போன்று அவருக்குத் தோன்றின.
[20:67] மோஸஸ் சற்று அச்சம் கொண்டார்.
[20:68] நாம் கூறினோம், “அச்சம் கொள்ளாதீர். நீரே வெற்றியடைவீர்”.
[20:69] “உமது வலக்கரத்தில் பிடித்திருப்பதை நீர் வீசும், மேலும் அது அவர்கள் உருவாக்கியவற்றை விழுங்கிவிடும். அவர்கள் உருவாக்கியவை ஒரு மந்திரவாதியின் சூழ்ச்சி என்பதை விட அதிகமாக ஒன்றுமில்லை. மந்திரவாதியின் வேலை வெற்றி பெறாது”.
வல்லுநர்கள் சத்தியத்தை அடையாளம் காண்கின்றனர்
[20:70] “ஆரோன் மற்றும் மோஸஸின் இரட்சகர் மீது நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம்”, என்று கூறியவர்களாக மந்திரவாதிகள் சிரம் பணிந்து விழுந்தனர்.
[20:71] அவன், என்னுடைய அனுமதியின்றி அவர்மீது நீங்கள் நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? உங்களுக்கு மாயாஜாலத்தைக் கற்றுத் தந்த உங்களுடைய தலைவராகத்தான் அவர் இருக்க வேண்டும். நான் நிச்சயமாக உங்கள் மாறுகைகள் மாறுகால்களைத் துண்டித்திடுவேன். கிளையில்லா மரங்களின் அடிமரங்களின் மீது உங்களைச் சிலுவையிலறைவேன்.நம்மில் மோசமான தண்டனைக்கு உட்படுத்தக் கூடியவர் யார் என்பதையும், மேலும் யார் யாரைவிட நெடுங்காலம் நீடித்திருக்கப் போகின்றார் என்பதையும் நீங்கள் கண்டு கொள்வீர்கள்” என்று கூறினான்.
[20:72] அவர்கள் கூறினர், “எங்களுக்கு வந்திருக்கும் தெளிவான சான்றுகளைவிடவும், மேலும் எங்களைப் படைத்தவரைவிடவும் மேலாக உன்னை நாங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள மாட்டோம். ஆகையால், நீ அளிக்க விரும்பு கின்ற எந்த ஒரு தீர்ப்பையும் அளித்துக்கொள். கீழான இந்த வாழ்வில்தான் உன்னால் அரசாள இயலும்.
[20:73] “எங்கள் பாவங்களையும், மேலும் நீ எங்களைச் செய்யும்படி நிர்பந்தித்த மாயாஜாலத்தையும் அவர் மன்னிக்கக்கூடும் என்பதற்காக, நாங்கள் எங்கள் இரட்சகர் மீது நம்பிக்கை கொண்டோம். கடவுள் மிகவும் மேலான வராகவும் எப்பொழுதும் நிலைத்திருக்கக் கூடியவராகவும் இருக்கின்றார்”.
[20:74] குற்றவாளியாகத் தன் இரட்சகரிடம் வரும் எவனொருவனும் நரகத்திற்கு உள்ளாவான், அங்கே அவன் ஒரு போதும் மரணிக்க மாட்டான், அன்றி உயிருடனும் இருக்க மாட்டான்.
[20:75] நன்னெறியானதொரு வாழ்க்கை நடத்திய நம்பிக்கையாளர்களாக அவரிடம் வருவோரைப் பொறுத்தவரை, அவர்கள் உயர்ந்த அந்தஸ்த்துக்களை அடைவார்கள்.
[20:76] அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும் ஏதேன் தோட்டங்கள் நிரந்தரமாக அவர்களுடைய வசிப்பிடமாக இருக்கும். தங்களைத் தூய்மைப் படுத்திக் கொள்பவர்களுக்குரிய வெகுமதி இத்தகையதேயாகும்.
[20:77] மோஸஸிற்கு நாம்: “என் அடியார்களை வழிநடத்திக் கொண்டு வெளியில் செல்வீராக, மேலும் கடலின் குறுக்கில் அவர்களுக்காக உலர்ந்ததொரு பாதையை அடித்து உண்டாக்குவீராக. பிடிபட்டு விடுவோமோ என்று நீர் அஞ்ச வேண்டாம், அன்றியும் நீர் கவலை கொள்ளவும் வேண்டாம்” என்று உள்ளுணர்வளித்தோம்.
[20:78] ஃபேரோ தன் படையினருடன் அவர்களைப் பின் தொடர்ந்தான், ஆனால் அவர்கள் மூழ்கடிக்கப்பட வேண்டும் என விதிக்கப் பட்டவாறே, அந்தக் கடல் அவர்களை மூழ்கடித்து விட்டது.
[20:79] இவ்விதமாக, ஃபேரோ தன் சமூகத்தாரை வழிதவறச் செய்தான்; அவர்களை அவன் நேர் வழி நடத்தவில்லை.
[20:80] இஸ்ரவேலின் சந்ததியினரே, உங்களுடைய விரோதிகளிடமிருந்து உங்களை நாம் காப்பாற்றினோம், சினாய் மலையின் வலப்புறம் உங்களை வரவழைத்தோம், மேலும் நாம் உங்களுக்கு மன்னாவையும் மற்றும் காடை களையும் இறக்கி அனுப்பினோம்.
[20:81] நாம் உங்களுக்கு வழங்கிய நல்ல பொருட்களில் இருந்து உண்ணுங்கள், மேலும் என் கடும் கோபத்திற்கு நீங்கள் உள்ளாகாது இருக்கும் பொருட்டு, வரம்பு மீறாதிருங்கள். எவர் என் கடும்கோபத்திற்கு உள்ளாகி விட்டாரோ அவர் வீழ்ந்து விட்டார்.
[20:82] வருந்தித்திருந்தி, நம்பிக்கை கொண்டு, நன்னெறியானதொரு வாழ்வு நடத்தி, மேலும் உறுதியுடன் வழிகாட்டலில் நிலைத்திருப் பவர்களை நான் நிச்சயமாக மன்னிக்கின்றேன்.
இஸ்ரவேலின் சந்ததியினர் கலகம் செய்கின்றனர்
[20:83] “உம் சமூகத்தாரை விட்டு நீர் ஏன் விரைந்து வந்தீர், மோஸஸே?”
[20:84] அவர், “அவர்கள் எனக்குப் பின்னால் நெருக்கமாகவே வந்து கொண்டிருக்கின்றனர். என் இரட்சகரே, நீர் திருப்தியடையும் பொருட்டு, நான் உம்மிடம் விரைந்துவந்தேன்” என்று கூறினார்.
[20:85] அவர், “நீர் புறப்பட்ட பின்னர் உம் சமூகத் தினரை நாம் சோதனையில் ஆழ்த்தினோம், ஆனால் சாமிரியன் அவர்களை வழிதவறச் செய்து விட்டான்” என்று கூறினார்.
[20:86] கோபம் கொண்டவராகவும், மேலும் ஏமாற்றம் அடைந்தவராகவும் மோஸஸ் தன் சமூகத்தாரிடம், “என் சமூகத்தாரே, ஒரு நல்ல வாக்குறுதியை உங்கள் இரட்சகர் உங்களுக்கு வாக்களிக்க வில்லையா? உங்களால் காத்திருக்க முடியவில்லையா? உங்கள் இரட்சகரிடமிருந்து கடுங்கோபத்திற்கு நீங்கள் உள்ளாக விரும்புகின்றீர்களா? இதனால் தான் என்னுடன் கொண்ட உங்கள் ஒப்பந்தத்தை நீங்கள் முறித்து விட்டீர்களா?” என்று கூறியவாறு திரும்பி வந்தார்.
[20:87] அவர்கள், “நாங்கள் வேண்டுமென்றே உம்மோடு கொண்ட ஒப்பந்தத்தை முறிக்க வில்லை. ஆனால் நாங்கள் ஆபரணங்களைக் கொண்டு சுமை சுமத்தப்பட்டோம், மேலும் எங்களுடைய சுமைகளை இறக்கி வைக்கத் தீர்மானித்தோம். இதனைத்தான் சாமிரியன் யோசனையாக முன்வைத்தான்” என்று கூறினார்கள்.
[20:88] ஒரு கன்றுக்குட்டியின் சப்தத்துடன்* நிறைவு செய்யப்பட்டு, வடிவமைக்கப்பட்ட ஒரு கன்றுக்குட்டியை அவர்களுக்காக அவன் உருவாக்கினான். அவர்கள், “இதுதான் உங்கள் தெய்வமும், மேலும் மோஸஸின் தெய்வமும் ஆகும்” என்று கூறினார்கள். இவ்விதமாக, அவன் மறந்து விட்டான் .

அடிகுறிப்பு:
*20:88&96 கடவுள் மோஸஸுடன் பேசிய இடத்திற்கு சாமிரியன் சென்று கடவுளின் வார்த்தைகளை எதிரொலித்த தூசியில் இருந்து ஒரு கைப்பிடியளவு அள்ளிக் கொண்டான். உருக்கிய தங்கத்துடன் இந்தத் தூசி கலக்கப்பட்ட போது, அந்தத் தங்கச்சிலை ஒரு கன்றுக்குட்டியின் சப்தத்தை அடையக் காரணமானது.
[20:89] அது அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை என்பதையும், அன்றி அவர்களுக்குத் தீங்கிழைக்கவோ அல்லது பயன் அளிக்கவோ சக்தி பெற்றிருக்கவில்லை என்பதையும் அவர்களால் காண முடியவில்லையா?
[20:90] மேலும் ஆரோன் அவர்களிடம், “என் சமூகத்தாரே, இது உங்களுக்கு ஒரு சோதனையாகும். மிக்க அருளாளர் தான் உங்களுடைய ஒரே இரட்சகர் ஆவார், எனவே என்னைப் பின்பற்றுங்கள், மேலும் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள்” என்று கூறி இருந்தார்.
[20:91] அவர்கள், “மோஸஸ் திரும்பி வரும் வரை, நாங்கள் தொடர்ந்து இதனை வழிபட்டுக் கொண்டிருப்போம்” என்று கூறினார்கள்.
[20:92] (மோஸஸ்) கூறினார், “ஆரோனே, அவர்கள் வழிதவறிச் செல்வதை நீர் கண்டபோது, உம்மைத் தடுத்தது எது,
[20:93] “எனது கட்டளைகளைப் பின்பற்றுவதிலி ருந்து? எனக்கெதிராக நீர் கலகம் புரிந்து விட்டீரா?”
[20:94] அவர், “என் தாயின் மகனே; என் தாடியையும் மற்றும் என் தலையையும் பிடித்து என்னை இழுக்காதீர். ‘இஸ்ரவேலின் சந்ததியினரை நீ பிளவுபடுத்தி விட்டாய், மேலும் எனது உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாமலிருந்து விட்டாய்’ என்று நீர் கூறக்கூடும் என நான் அஞ்சினேன்” என்று கூறினார்.
[20:95] அவர், “சாமிரியனே, உன்னிடம் உள்ள விஷயம் என்ன?” என்று கூறினார்.
[20:96] அவன், “அவர்கள் காணமுடியாதவற்றை நான் கண்டேன். தூதர் நின்ற இடத்திலிருந்து ஒரு கைப்பிடி (தூசியை) நான் அள்ளினேன், மேலும் (தங்கக் கன்றுக்குட்டியின் கலவையாக) அதனைப் பயன்படுத்தினேன். இவ்வாறு செய்யும்படி தான் என் மனம் என்னைத் தூண்டியது*” என்று கூறினான்.

அடிகுறிப்பு:
*20:88&96 கடவுள் மோஸஸுடன் பேசிய இடத்திற்கு சாமிரியன் சென்று கடவுளின் வார்த்தைகளை எதிரொலித்த தூசியில் இருந்து ஒரு கைப்பிடியளவு அள்ளிக் கொண்டான். உருக்கிய தங்கத்துடன் இந்தத் தூசி கலக்கப்பட்ட போது, அந்தத் தங்கச்சிலை ஒரு கன்றுக்குட்டியின் சப்தத்தை அடையக் காரணமானது.
[20:97] அவர், “அப்படியென்றால் நீ சென்று விடு, மேலும் உனது வாழ்நாள் முழுவதும் அருகில் கூட வராதே. (உனது இறுதித் தீர்ப்பிற்காக) உன்னால் ஒருபோதும் தப்பிக்க முடியாத ஒரு நிர்ணயிக்கப்பட்ட நேரம் உனக்கு இருக்கின்றது. நீ வழிபட்டு வந்த உன் தெய்வ த்தைப் பார்; நாங்கள் அதனை எரித்து மேலும் அதனைக் கடலில், அதிலேயே நிரந்தரமாகத் தங்கி இருப்பதற்காக வீசி விடுவோம்” என்று கூறினார்.
ஒரு கடவுளே அன்றி உங்களுக்கு இல்லை
[20:98] கடவுள் தான் உங்களுடைய ஒரே தெய்வம்; அவருடன் வேறு தெய்வம் எதுவுமில்லாத தனித்தவர். அவருடைய அறிவு எல்லா விஷயங்களையும் சூழ்ந்துள்ளது.
[20:99] இவ்விதமாக, கடந்து சென்ற தலைமுறை யினரிலிருந்து சில செய்திகளை உமக்கு நாம் எடுத்துரைக்கின்றோம். நம்மிடமிருந்து ஒரு தூதுச் செய்தியை நாம் உமக்கு வெளிப்படுத்தி உள்ளோம்.
[20:100] அதனை அலட்சியம் செய்பவர்கள், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று (பாவங்களின்) சுமை ஒன்றைச் சுமப்பார்கள்.
[20:101] நிலையாக அவர்கள் அங்கே வசிப்பார்கள்; மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று எத்தகையதொரு துக்ககரமான சுமை!
[20:102] கொம்பு ஊதப்படும் நாள் அதுதான், மேலும் அந்நாளில் நாம் குற்றவாளிகளை நீலம் பூத்தவர்களாக வரவழைப்போம்.
[20:103] தங்களுக்கிடையில் கிசுகிசுத்தவர்களாக அவர்கள், “(முந்திய வாழ்வில்) நீங்கள் தங்கியிருந்தது பத்து நாட்களை விட அதிகமில்லை!” என்று கூறுவார்கள்.
[20:104] அவர்களுடைய பேச்சுக்களை நாம் முற்றிலும் அறிந்திருக்கின்றோம். அவர்களில் மிகச் சரியானவர், “நீங்கள் தங்கியிருந்தது ஒரு நாளைக் காட்டிலும் அதிகமில்லை” என்று கூறுவார்.
மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று
[20:105] மலைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். கூறும், “என் இரட்சகர் அவற்றைத் துடைத்தெடுத்து விடுவார்”.
[20:106] “அவர் அவற்றைப் பொட்டலான, தட்டை நிலமாக விட்டு விடுவார்.
[20:107] “அதில் மிகச் சிறியதொரு குன்றோ, அல்லது குழியோ கூட நீர் காண மாட்டீர்”.
[20:108] அந்நாளில் , சிறிதுகூட இலக்கு மாறாமல் ஒவ்வொருவரும் அழைப்பவரைப் பின்தொடர்வார்கள். மிக்க அருளாளரின் முன் அனைத்துச் சப்தங்களும் ஒடுங்கி விடும்; முணுமுணுப்புக்களைத் தவிர வேறெதையும் நீர் கேட்க மாட்டீர்.
[20:109] அந்நாளில், மிக்க அருளாளரால் அனுமதிக்கப் பட்டவர்களுக்கும், மேலும் எவர்களுடைய கூற்றுக்கள் அவருடைய நாட்டத்திற்கு ஒத்திருக்கின்றதோ அவர்களுக்கும் தவிர, பரிந்துரை பயனற்றதாகவே இருக்கும்.
[20:110] அவர்களுடைய கடந்த காலத்தையும் மேலும் அவர்களுடைய எதிர் காலத்தையும் அவர் அறிந்திருக்கின்றார், அதே சமயம் அவரது அறிவை எவரும் சூழ்ந்து கொள்ள இயலாது.
[20:111] ஜீவித்திருப்பவரும், மேலும் நிலைத்திருப் பவரும் ஆனவருக்கு எல்லா முகங்களும் அடிபணிந்து விடும், மேலும் தங்களுடைய வரம்பு மீறல்களால் பாரம் சுமத்தப்பட்டவர்கள் தோல்வியடைந்து விடுவார்கள்.
[20:112] நம்பிக்கை கொண்ட நிலையில், நன்னெறியான செயல்கள் செய்தவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் அநீதியையோ அல்லது துரதிர்ஷ்டத்தையோ குறித்து அச்சம் கொள்ள மாட்டார்கள்.
[20:113] அவர்கள் காப்பாற்றப்படலாம், அல்லது அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள இது காரணம் ஆகலாம் என்பதற்காக, இதை நாம் இவ்விதமாக ஓர் அரபி மொழியிலான குர்ஆனாக வெளிப்படுத்தினோம் மேலும் இதில் எல்லாவிதமான முன்னறிவிப்புகளையும் நாம் எடுத்துரைத்துள்ளோம்.
[20:114] கடவுள் மிகவும் உயர்வானவர், உண்மையான ஒரே அரசர். குர்ஆனை உமக்கு வெளிப் படுத்தப்படுவதற்கு முன்னர் அதனைக் கூறுவதற்கு அவசரப்படாதீர், மேலும், “என் இரட்சகரே, எனது அறிவை அதிகரிப்பீராக” என்று கூறுவீராக.
மனிதர்கள் ஓர் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கத் தவறி விடுகின்றனர்*
[20:115] கடந்த காலத்தில் ஆதாமை நாம் சோதித்தோம், ஆனால் அவர் மறந்து விட்டார், மேலும் அவரை நாம் உறுதியற்றவராகக் கண்டோம்.

அடிகுறிப்பு:
*20:115 கடவுளின் பரிபூரணமான அதிகாரத்திற்கு எதிராகச் சாத்தான் சவால் விடுத்த போது (38:69), நீங்களும் நானும் சாத்தானுக் கெதிராக ஓர் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. சாத்தானுக்குப் பகிரங்கமாக கண்டனம் தெரிவிப்பதுடன், மேலும் கடவுளின் பரிபூரணமான அதிகாரத்தை ஆதரித்து நம்மை மீட்டுக் கொள்வதற்கு, இந்தப் பூமியின் மீது கடவுள் நமக்கு ஒரு வாய்ப்புத் தருகின்றார் (பின் இணைப்பு 7).
[20:116] வானவர்களிடம் நாம், “ஆதாமின் முன் சிரம் பணிந்து விழுங்கள்” என்று கூறியதை நினைவு கூருங்கள். அவர்கள் சிரம் பணிந்து விழுந்தனர், சாத்தானைத் தவிர; அவன் நிராகரித்து விட்டான்.
[20:117] அப்போது நாம் கூறினோம், “ஆதாமே, இவன் உமக்கும், உம் மனைவிக்கும் ஒரு விரோதியாவான். நீர் துயர்மிகுந்தவராக மாறிவிடாதிருக்கும் பொருட்டு, இவன் உங்களைச் சுவனத்திலிருந்து வெளியேற்ற விட்டு விடாதீர்.
[20:118] “நீர் அங்கே ஒரு போதும் பசியுடனோ, அன்றி பாதுகாப்பின்றியோ போய்விட மாட்டீர் என்று நீர் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றீர்.
[20:119] “அன்றி அங்கே நீர் தாகித்திருக்க மாட்டீர், அன்றியும் எந்த வெப்பத்தையும் அனுபவிக்க மாட்டீர்.
[20:120] ஆனால் சாத்தான் அவரிடம், “ஆதாமே, நிரந்தரமான வாழ்வு மற்றும் முடிவுறாத அரசாங்கத்தின் மரத்தை உமக்குக் காட்ட என்னை அனுமதிப்பீராக” என்று அவரிடம் கிசுகிசுத்தவனாகக் கூறினான்.
[20:121] அவர்கள் அதிலிருந்து உண்டனர், உடனே அவர்களுடைய உடம்புகள் அவர்களுடைய கண்களுக்குத் தென்படலாயின, மேலும் அவர்கள் சுவனத்தின் இலைகளைக் கொண்டு தங்களை மறைத்துக் கொள்ள முயன்றனர். ஆதாம் இவ்விதமாகத் தன் இரட்சகருக்கு கீழ்ப்படிய மறுத்தார், மேலும் வீழ்ந்து விட்டார்.
[20:122] அதன் பின்னர், அவருடைய இரட்சகர் அவரைத் தேர்ந்தெடுத்தார், அவரை மீட்டுக் கொண்டார், மேலும் அவருக்கு வழிகாட்டினார்.
[20:123] அவர், “நீங்கள் அனைவரும், அதிலிருந்து கீழே செல்லுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் விரோதிகள் ஆவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு வழிகாட்டல் வரும்போது, எவரொருவர் என் வழிகாட்டலைப் பின்பற்றுகின்றாரோ அவர் வழிதவற மாட்டார், அன்றி எந்த இன்னலையும் அனுபவிக்க மாட்டார்” என்று கூறினார்.
நம்ப மறுப்பவர்களுக்கு: துன்பகரமான வாழ்வு தவிர்த்து விட முடியாதது
[20:124] “என் தூதுச் செய்தியை அலட்சியப் படுத்துகின்றவனைப் பொறுத்தவரை, அவனுக்குத் துன்பகரமானதொரு வாழ்வே இருக்கும், மேலும் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாளன்று, அவனை நாம் குருடனாக உயிர்ப்பித்தெழுப்புவோம்.”
[20:125] அவன் , “என் இரட்சகரே, நான் பார்வையுடைய ஒருவனாக இருந்து வந்த போதும், ஏன் என்னைக் குருடனாக வரவழைத்தீர்?” என்று கூறுவான்.
[20:126] அவர், “நமது வெளிப்பாடுகள் உன்னிடம் வந்த போது அவற்றை நீ மறந்து விட்டதால், இப்போது நீ மறக்கப்பட்டு விட்டாய்” என்று கூறுவார்.
[20:127] வரம்பு மீறுபவர்களுக்கும் தங்களுடைய இரட்சகரின் வெளிப்பாடுகளில் நம்பிக்கை கொள்ள மறுப்பவர்களுக்கும் இவ்விதமாகவே நாம் கூலி கொடுப்போம். மறுவுலகின் அந்தத் தண்டனையானது மிக மோசமானது, மேலும் நிரந்தரமானது.
[20:128] முந்திய எத்தனையோ தலைமுறையினர்களை நாம் அழித்திருக்கின்றோம் என்பது எப் பொழுதாவது அவர்களுக்குத் தோன்று கின்றதா? தங்களுக்கு முன்னிருந்தவர் களின் வீடுகளில் இப்போது அவர்கள் நடந்து கொண்டிருக்கின்றனர். அறிவுத்திறனுடை யோருக்கு இவை அத்தாட்சிகளாகும்.
[20:129] உம் இரட்சகரின் முன்னரே தீர்மானிக்கப்பட்ட திட்டம் இல்லாமலிருந்தால், அவர்கள் உடனடியாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பார்கள்.
[20:130] ஆகையால், அவர்களுடைய கூற்றுக்களை எதிர்கொண்டால் பொறுமையுடன் இருப்பீராக, மேலும் சூரிய உதயத்திற்கு முன்னரும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னரும் உம் இரட்சகரைப் புகழவும் துதிக்கவும் செய்வீராக. மேலும் நீர் மகிழ்ச்சியோடு இருக்கும் பொருட்டு, இரவுப் பொழுதிலும், மற்றும் அதே போல் பகலின் இருமுனைகளிலும் அவரைத் துதிப்பீராக.
[20:131] மேலும் மற்றெந்த மக்களுக்கும் நாம் அளித்தவற்றின் மீது நீர் பேராசை கொள்ளாதீர். அவை இந்த வாழ்வின் தற்காலிக அலங் காரங்களேயாகும், அவற்றின் மூலம் நாம் அவர்களைச் சோதனையில் ஆழ்த்து கின்றோம். உம் இரட்சகர் உமக்கு வழங்கி யிருப்பவை மிகவும் மேலானதும், மேலும் நிலைத்திருப்பதுமாகும்.
பெற்றோர்களின் பொறுப்பு
[20:132] தொடர்புத் தொழுகைகளைக் (ஸலாத்) கடைப் பிடிக்கவும், மேலும் அதை செய்து வருவதில் உறுதியோடு தொடர்ந்திருக்கவும் உம் குடும்பத்தாரிடம் நீர் கட்டளையிட வேண்டும். உம்மிடம் எந்த வாழ்வாதாரங்களையும் நாம் கேட்கவில்லை; நாம் தான் உமக்கு வழங்குகின்றோம். மகத்தான இறுதி வெற்றி நன்னெறியாளருக்கே உரியது.
தூதர்கள் ஏன்?
[20:133] அவர்கள், “அவருடைய இரட்சகரிடமிருந்து அவர் மட்டும் ஓர் அற்புதத்தைக் காட்ட முடிந்தால்!” என்று கூறினார்கள். முந்திய தூதுச் செய்திகளுடன் போதுமான அற்புதங் களை அவர்கள் பெறவில்லையா?
[20:134] இதற்கு முன்னர் அவர்களை நாம் அழித் திருந்தால், அவர்கள், “எங்கள் இரட்சகரே, எங்களுக்கு ஒரு தூதரை நீர் அனுப்பி யிருந்தால், உமது வெளிப்பாடுகளை நாங்கள் பின்பற்றியிருப்போம், மேலும் இந்த அவமானத் தையும் மற்றும் இழிவையும் தவிர்த்திருப் போம்” என்று கூறியிருப்பார்கள்.
[20:135] “நாம் அனைவரும் காத்துக் கொண்டு தான் இருக்கின்றோம், எனவே காத்திருங்கள்; சரியான பாதையில் இருப்பவர்கள் யார் என்றும், மேலும் உண்மையில் வழிகாட்டப் பட்டவர்கள் யார் என்றும் நிச்சயமாக நீங்கள் கண்டு கொள்வீர்கள்” என்று கூறுவீராக.