சூரா 19: மேரி (மர்யம்)

[19:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[19:1] கா. ஹ. ய. ‘ஐ. ஸ* (காப் ஹா ய ஐன் ஸாத்)

அடிகுறிப்பு:
*19:1 இதுவே அதிகபட்ச எண்ணிக்கையிலான குர்ஆனின் தலைப்பு எழுத்துக்கள் ஆகும், ஏனெனில் இந்த சூரா, ஜானின் அற்புதப்பிறப்பு மற்றும் இயேசுவின் கன்னிப் பிறப்பு போன்றவற்றைக் குறித்துப் பேசுகின்றது, மேலும் இயேசுவைக் கடவுளின் மகனாகக் கருதும் மாபெரும் இறைநிந்தனையை கடுமையாகக் கண்டனம் செய்கின்றது. இந்த ஐந்து தலைப்பு எழுத்துக்களும் இவ்விஷயங்களுக்கு ஆதரவாக வலிமைவாய்ந்த கண்கூடான ஆதாரங்களை வழங்குகின்றன (பின் இணைப்பு 1 & 22 ஐ பார்க்கவும்).
ஜக்கரியா
[19:2] தன்னுடைய அடியார் ஜக்கரியாவின் பால் உம்முடைய இரட்சகரின் கருணையைப் பற்றிய ஒரு விவரிப்பு.
[19:3] அவர் தன் இரட்சகரை அழைத்தார், இரகசியமானதோர் அழைப்பு.
[19:4] அவர் கூறினார், “என் இரட்சகரே, எனது உடலில் எலும்புகள் மக்கிப்போய் விட்டன, மேலும் எனது தலைமுடியோ நரையினால் ஜொலிக்கின்றது. உம்மை இறைஞ்சிப் பிரார்த்திப்பதால், என் இரட்சகரே, நான் ஒரு போதும் விரக்தி அடைவதில்லை.
[19:5] “எனக்குப் பிறகு என்னைச் சார்ந்திருப் பவர்களைக் குறித்து நான் கவலையடை கின்றேன், மேலும் என் மனைவியோ மலடியாக இருக்கின்றார். உம்மிடமிருந்து, ஒரு வாரிசை, எனக்கு வழங்குவீராக.
[19:6] “அவர் என்னுடைய வாரிசாகவும் மேலும் ஜேக்கபின் வம்சத்திற்கு வாரிசாகவும் இருக் கட்டும், மேலும் என் இரட்சகரே, அவரை ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவராகவும் ஆக்குவீராக.”
ஜான்
[19:7] “ஜக்கரியாவே, நாம் உமக்கு நற்செய்தி தருகின்றோம்; ஜான் (யஹ்யா) என்ற பெயரைக் கொண்ட ஒரு மகன். இதற்கு முன்னர் அவரைப் போன்று எவர் ஒருவரையும் நாம் ஒருபோதும் படைக்கவில்லை.”
[19:8] அவர், “என் இரட்சகரே, என் மனைவியின் மலட்டுத் தனத்திற்குப் பின்னரும், என் முதிர்ந்த வயதிற்குப் பின்னரும் நான் ஒரு மகனைப் பெறுவேனா?” என்று கூறினார்.
[19:9] அவர், “உமது இரட்சகர்: இவ்விதமாக அதனைச் செய்வது எனக்கு எளிதானதே. இதற்கு முன்னர் நீர் எதுவுமாக இல்லாதிருந்த போதே, உம்மை நான் படைத்தேன்” என்று கூறியதாக கூறினார்.
[19:10] அவர், “என் இரட்சகரே, எனக்கு ஓர் அறி குறியைத் தருவீராக” என்று கூறினார். அவர், “உமக்குரிய அறிகுறியானது, தொடர்ந்த மூன்று இரவுகளுக்கு மக்களிடம் நீர் பேசமாட்டீர் என்பதாகும்” என்று கூறினார்.
[19:11] புனிதமான இடத்திலிருந்து வெளியில், அவர் தன் குடும்பத்தாரிடம் வந்தார், மேலும் அவர்களிடம் : “இரவும் பகலும் (கடவுளைத்) தியானம் செய்யுங்கள்” என்று சைகை செய்தார்.
[19:12] “ஜானே, உறுதியோடு, நீர் வேதத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.” அவருடைய இளமையிலேயே, அவருக்கு நாம் ஞானத்தைக் கொடையளித்தோம்.
[19:13] மேலும் நம்மிடமிருந்து கனிவையும் மற்றும் தூய்மையையும் (அவருக்கு நாம் கொடையளித் தோம்), ஏனெனில் அவர் நன்னெறியாளராக இருந்தார்.
[19:14] அவர் தன் பெற்றோரைக் கண்ணியம் செய்தார், மேலும் அவர் ஒருபோதும் கீழ்ப் படியாததொரு கொடுங்கோலராக இருந்த தில்லை.
[19:15] அவர் பிறந்த அந்நாளிலும், அவர் இறக்கும் அந்நாளிலும், மேலும் அவர் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் அந்நாளிலும் அவர் மீது அமைதி நிலவும்.
மேரி
[19:16] மேரியை இந்த வேதத்தில் குறிப்பிட்டுக் கூறுவீராக. அவர் தன் குடும்பத்தாரிடமிருந்து தன்னை, கிழக்கில் ஓர் இடத்திற்குள் தனிமைப் படுத்திக் கொண்டார்.
[19:17] அவர்களிடமிருந்து அவரை ஒரு தடுப்பு பிரித்து வைத்த சமயம், நம்முடைய ஆவியை நாம் அவரிடம் அனுப்பினோம். அவர் ஒரு மனித உருவத்தில் அவரிடம் சென்றார்.
[19:18] அவர், “நீர் நன்னெறியாளராக இருக்க வேண்டும் என, மிக்க அருளாளரிடம் நான் பாதுகாப்பு தேடுகின்றேன்” என்று கூறினார்.
[19:19] அவர், “நான் ஒரு தூய்மையான மகனை உமக்கு அளிப்பதற்காக, உம்முடைய இரட்ச கரின் தூதர் ஆவேன்” என்று கூறினார்.
[19:20] அவர், “எந்த ஒரு மனிதரும் என்னைத் தீண்டியிராத போது, எப்படி நான் ஒரு மகனைப் பெற இயலும்; நான் ஒருபோதும் ஒழுக்கம் தவறியவளாகவும் இருந்ததில்லை” என்று கூறினார்.
[19:21] அவர், “உம்முடைய இரட்சகர், ‘இவ்விதமாக அதனைச் செய்வது எனக்கு எளிதானதே. நாம் அவரை மனிதர்களுக்கு ஓர் அத்தாட் சியாகவும், மேலும் நம்மிடமிருந்துள்ள கருணை யாகவும் ஆக்குவோம். இது முன்னரே தீர்மா னிக்கப் பட்ட ஒரு விஷயமாகும்’” என்று கூறிய தாகக் கூறினார்.
இயேசுவின் பிறப்பு
[19:22] அவர் அவரைச் சுமந்த போது, மிகத் தொலைவிலுள்ளதோர் இடத்திற்குத் தன்னை அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.
[19:23] ஒரு பேரீத்த மரத்தடியில் அவருக்கு பிரசவ வலி வந்தது. அவர், “(நான் மிகவும் வெட்கப்படுகின்றேன்;) இது நிகழ்வதற்கு முன்னரே நான் மரணித்திருக்கவும், மேலும் முற்றிலும் மறக்கப்பட்டிருக்கவும் வேண்டும் என நான் விரும்புகின்றேன்” என்று கூறினார்.
[19:24] அவருக்குக் கீழிலிருந்து (அக்குழந்தை) அவரை அழைத்துக் கூறியது, “துக்கப்படாதீர். உம் இரட்சகர் ஓர் ஓடையை உமக்கு வழங்கியுள்ளார்.
[19:25] “இந்தப் பேரீத்த மரத்தின் அடித்தண்டை நீர் உலுக்கினால், உமக்காக பழுத்த பேரீத்தைகளை அது உதிர்க்கும்*.

அடிகுறிப்பு:
*19:25 இவ்வாறாக, இயேசு செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் துவக்கத்தில் தான் பிறந்தார். அப்போது தான் மத்தியக் கிழக்கு நாடுகளில் மரங்களில் இருந்து உதிரும் அளவிற்குப் பேரீத்தம் பழங்கள் பழுக்கின்றன.
[19:26] “உண்ணுவீராக மேலும் பருகுவீராக, மேலும் மகிழ்ச்சியுடன் இருப்பீராக. எவரேனும் ஒருவரை நீர் காணும் போது, ‘நான் மௌன விரதம் இருக்கின்றேன்; இன்றைய தினம் நான் எவரொருவருடனும் பேசமாட்டேன்’” என்று கூறுவீராக.
[19:27] அவரைச் சுமந்தவாறு, அவர் தன் குடும்பத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினர், “மேரியே, முற்றிலும் எதிர்பாராத ஒன்றை நீர் செய்து விட்டீர்.
[19:28] “ஆரோனின் வம்சத்தவரே, உம் தந்தை ஒரு கெட்ட மனிதராக இருந்ததில்லை, அன்றி உமது தாயாரும் ஒழுக்கம் தவறியவராக இருந்த தில்லை.”
அந்தக் குழந்தை ஒரு வாக்குமூலம் அளிக்கின்றது
[19:29] அவர் அவரைச் சுட்டிக் காட்டினார். அவர்கள், “தொட்டிலில் இருக்கும் ஒரு குழந்தையுடன் எப்படி நாங்கள் பேச இயலும்?” என்று கூறினார்கள்.
[19:30] (அந்தக் குழந்தை பேசியது மேலும்) கூறியது, “நான் கடவுள்-ன் ஓர் அடியார் ஆவேன். அவர் எனக்கு வேதத்தைத் தந்துள்ளார், மேலும் என்னை ஒரு வேதம் வழங்கப்பட்டவராக நியமித்துள்ளார்.
[19:31] “நான் செல்லுமிடமெல்லாம் அருள்பாலிக்கப் பட்டவராக என்னை அவர் ஆக்கியுள்ளார், மேலும் நான் வாழும் காலமெல்லாம் என்னைத் தொடர்புத் தொழுகைகளையும் (ஸலாத்) மேலும் கடமையான தர்மத்தையும் (ஜகாத்) நிறைவேற்றக் கட்டளையிட்டுள்ளார்.
[19:32] “நான் என் தாயைக் கண்ணியப்படுத்த வேண்டியவன்; கீழ்ப்படியாததொரு கலகக் காரனாக என்னை அவர் ஆக்கவில்லை.
[19:33] “மேலும் நான் பிறந்த அந்நாளிலும், நான் இறக்கும் அந்நாளிலும், மேலும் நான் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் அந்நாளிலும் என் மீது அமைதி நிலவும்.”
நிரூபிக்கப்பட்ட சத்தியம்
[19:34] அவர் தான் இயேசு ஆவார், மேரியின் மகனாவார், மேலும் அவர்கள் தொடர்ந்து சந்தேகித்துக் கொண்டிருக்கும் இவ்விஷயத் தைப் பற்றிய உண்மை இதுவேயாகும்.
[19:35] கடவுள் ஒரு மகனைப் பெற்றெடுப்பதென்பது அவருக்கு பொருத்தமானதல்ல, அவர் துதிப்பிற்குரியவர். எந்த ஒன்றையும் செய்து முடிக்க அவர் அதனை, “ஆகு” என்று மட்டும் கூறுவார், உடன் அது ஆகிவிடும்.
[19:36] அவர் இன்னும், “கடவுள் தான் என் இரட்சகரும் உங்கள் இரட்சகரும் ஆவார்; அவரை மட்டுமே நீங்கள் வழிபட வேண்டும். இதுவே நேரான பாதையாகும்*” என்றும் பிரகடனம் செய்தார்.

அடிகுறிப்பு:
*19:36 இது ஜானின் சுவிசேஷம் 20:17ல் இயேசு கூறுவதாக வரும் வாசகத்திற்கு ஒப்பான ஒன்றாகும்.
[19:37] (இயேசுவின் தனித்தன்மை குறித்து) வெவ்வேறு தரப்பினர் தங்களுக்கிடையில் தர்க்கித்துக் கொண்டனர். ஆகையால், பயங்கரமான ஒரு நாளின் பார்வையிலிருந்து நம்ப மறுப்பவர்களுக்குக் கேடுதான்.
[19:38] நம்மை சந்திக்க அவர்கள் வரும்போது அவர்களைக் கேட்கவும் மேலும் அவர்களைப் பார்க்கவும் காத்திருப்பீராக. வரம்பு மீறியவர்கள் அந்நாளில் முற்றிலும் தோல்வியுற்றவர்களாக இருப்பார்கள்.
[19:39] தீர்ப்பு வழங்கப்படுகின்ற போது, குற்ற முணர்ந்து வருந்தும் நாள் குறித்து அவர்களை எச்சரிக்கை செய்வீராக. அவர்கள் முற்றிலும் கவனமற்றவர்களாக உள்ளனர்; அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
[19:40] பூமியையும் அதில் உள்ள ஒவ்வொருவரையும் நாமே உரிமையாகக் கொள்வோம்; ஒவ்வொரு வரும் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்.
ஆப்ரஹாம்
[19:41] ஆப்ரஹாமை இந்த வேதத்தில் குறிப்பிட்டுக் கூறுவீராக; அவர் ஒரு புனிதராக, ஒரு வேதம் வழங்கப்பட்டவராக இருந்தார்.
[19:42] அவர் தன் தந்தையிடம் கூறினார், “என் தந்தையே, செவியேற்கவோ, அன்றி பார்க்கவோ, அன்றி உமக்கு எவ்விதத்திலும் உதவி செய்யவோ இயலாதவற்றை நீங்கள் வழிபடுவது ஏன்?
[19:43] “என் தந்தையே, நீங்கள் பெற்றிருக்காத குறிப்பிட்ட அறிவை நான் பெற்றிருக்கின்றேன். என்னைப் பின்பற்றுவீராக, நான் உங்களை நேரான பாதையில் வழிநடத்துவேன்.
[19:44] “என் தந்தையே, சாத்தானை வழிபடாதீர். அந்தச் சாத்தான் மிக்க அருளாளருக்கெதிராக கலகம் செய்தவன் ஆவான்.
[19:45] “என் தந்தையே, மிக்க அருளாளரிடமிருந்து தண்டனைக்கு நீர் உள்ளாகிப் பின்னர் சாத்தானின் ஒரு கூட்டாளியாகி விடுவீரோ என்று நான் அஞ்சுகின்றேன்”.
[19:46] அவர், “என்னுடைய தெய்வங்களை நீர் கைவிட்டு விட்டீரா, ஆப்ரஹாமே? நீர் நிறுத்திக் கொள்ளவில்லையென்றால் நான் உம்மைக் கல்லாலடித்துக் கொன்று விடுவேன். என்னைத் தனியே விட்டுச் சென்று விடும்” என்று கூறினார்.
[19:47] அவர் கூறினார், “உங்கள் மீது அமைதி நிலவட்டும். உங்களை மன்னிக்கும்படி என் இரட்சகரிடம் நான் இறைஞ்சிப் பிரார்த்திப்பேன்; அவர் என்னிடம் மிக்க கனிவுடன் இருக்கின்றார்”.
[19:48] “நான் உங்களையும், கடவுள்-உடன் நீங்கள் வழிபடும் தெய்வங்களையும் விட்டு விலகிக் கொள்வேன். என் இரட்சகரை மட்டுமே நான் வழிபடுவேன். என் இரட்சகரை மட்டுமே இறைஞ்சிப் பிரார்த்திப்பதால், நான் தவறிப் போகச் சாத்தியமேயில்லை.”
[19:49] அவர்களையும் மேலும் கடவுள்-உடன் அவர்கள் வழிபட்ட தெய்வங்களையும் அவர் கை விட்டு விட்ட காரணத்தால், நாம் அவருக்கு ஐசக்கையும் மற்றும் ஜேக்கபையும் அளித்தோம், மேலும் அவர்கள் ஒவ்வொருவரையும் ஒரு வேதம் வழங்கப்பட்டவராகவும் நாம் ஆக்கினோம்.
[19:50] நமது அருளைக் கொண்டு அவர்கள் மீது பொழிந்தோம், மேலும் சரித்திரத்தில் ஒரு கௌரவமான இடத்தையும் அவர்களுக்கு நாம் அளித்தோம்.
மோஸஸ்
[19:51] மோஸஸை இந்த வேதத்தில் குறிப்பிட்டுக் கூறுவீராக. அவர் அர்ப்பணித்தவராக இருந்தார், மேலும் அவர் ஒரு வேதம் வழங்கப் பட்ட தூதராக இருந்தார்.
[19:52] சினாய் மலையின் வலப்புறத்திலிருந்து அவரை நாம் அழைத்தோம். அவருடன் உரையாடு வதற்காக, அவரை நாம் அருகில் கொண்டு வந்தோம்.
[19:53] மேலும் நமது அருளிலிருந்து, அவருடைய சகோதரர் ஆரோனை ஒரு வேதம் வழங்கப் பட்டவராக, அவருக்கு அளித்தோம்.
[19:54] மேலும் இஸ்மவேலை இந்த வேதத்தில் குறிப் பிட்டுக் கூறுவீராக. வாக்குறுதி ஒன்றினை அவர் செய்தபோதெல்லாம் அவர் உண்மை யுடையவராக இருந்தார், மேலும் அவர் ஒரு வேதம் வழங்கப்பட்ட தூதராக இருந்தார்.
[19:55] அவர் தொடர்புத் தொழுகைகளையும் (ஸலாத்) கடமையான தர்மத்தையும் (ஜகாத்) நிறை வேற்றும்படித் தன் குடும்பத்தாரை ஏவுபவராக இருந்தார்; அவருடைய இரட்சகருக்கு, ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவராக அவர் இருந்தார்.
[19:56] மேலும் இத்ரீஸை இந்த வேதத்தில் குறிப்பிட்டுக் கூறுவீராக. அவர் ஒரு புனிதராகவும், ஒரு வேதம் வழங்கப்பட்டவராகவும் இருந்தார்.
[19:57] கௌரவமானதொரு அந்தஸ்த்திற்கு அவரை நாம் உயர்த்தினோம்.
[19:58] இவர்கள் கடவுள்-ஆல் அருள்பாலிக்கப்பட்ட வேதம் வழங்கப்பட்டவர்களில் சிலர் ஆவர். அவர்கள் ஆதாமின் சந்ததியினர், மற்றும் நோவாவுடன் நாம் சுமந்து கொண்டவர்களின் சந்ததியினர், மற்றும் ஆப்ரஹாம் மற்றும் இஸ்ரவேலின் சந்ததியினரிலிருந்து விரும்பித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மேலும் நம்மால் வழிகாட்டப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் களில் உள்ளவர்கள் ஆவர். மிக்க அரு ளாளரின் வெளிப்பாடுகள் அவர்களுக்கு ஓதிக் காட்டப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகச், சிரம்பணிந்து விழுவார்கள்.
தொடர்புத் தொழுகைகளைத் (ஸலாத்) தொலைத்து விடுதல்
[19:59] அவர்களுக்குப் பின்னர், தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) தொலைத்து விட்ட, மேலும் தங்களுடைய காம இச்சையைப் பின்பற்றிய தலைமுறையினரை அவர் மாற்றி யமைத்தார். அதன் விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள்.
[19:60] வருந்தித்திருந்தி, நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்கள் மட்டுமே, சிறிதளவும் அநீதமின்றி சுவனத்தில் நுழைவார்கள்.
[19:61] தனிமையிலிருக்கும் போதும், அவரை வழிபடு வோருக்கு, மிக்க அருளாளர் வாக்களித் துள்ளபடி ஏதேன் தோட்டங்கள் அவர் களுக்காக காத்திருக்கின்றன. நிச்சயமாக, அவருடைய வாக்குறுதி நிறைவேறியே தீரும்.
[19:62] அங்கே அபத்தமான எதையும் அவர்கள் செவியேற்க மாட்டார்கள்; அமைதி மட்டுமே. பகலிலும், இரவிலும் அங்கே அவர்களுடைய வாழ்வாதாரங்களை அவர்கள் பெறுவார்கள்.
[19:63] சுவனம் இத்தகையதே; நமது அடியார்களில் நன்னெறியுடையோருக்கு நாம் அதனை அளிப்போம்.
[19:64] உம்முடைய இரட்சகரின் கட்டளைப்படியே அன்றி நாங்கள் கீழே வருவதில்லை. எங்களுடைய கடந்த காலமும், எதிர்காலமும், மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றும் அவருக்கே உரியவை. உம்முடைய இரட்சகர் ஒருபோதும் மறப்பவரல்ல.
[19:65] வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற் கிடையில் உள்ள ஒவ்வொன்றிற்கும் இரட்சகர்; நீங்கள் அவரை வழிபடவும் மேலும் அவரை வழிபடுவதில் உறுதியோடு தொடர்ந்து இருக்கவும் வேண்டும். அவருக்கு நிகரான எவரொருவரையும் நீர் அறிவீரா?
[19:66] மனிதன், “நான் இறந்து விட்ட பின்னர், மீண்டும் நான் உயிர் பெறுவேனா?” என்று கேட்கின்றான்.
[19:67] அவன் எதுவுமாக இல்லாதிருந்தபோதே, ஏற்கனவே நாம் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் மறந்து விட்டானா?
தலைவர்களுக்கு விசேஷ எச்சரிக்கை
[19:68] உம் இரட்சகர் மீது ஆணையாக, நிச்சயமாக நாம் சாத்தான்களுடன் சேர்த்து, அவர்களை ஒன்று கூட்டுவோம், மேலும் இழிவடைந்தவர்களாக, அவர்களை நாம் நரகத்தில் ஒன்று சேர்ப்போம்.
[19:69] பின்னர் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் மிக்க அருளாளரின் தீவிரமான விரோதிகளை நாம் பிரித்து எடுப்போம்.
[19:70] அதில் எரிவதற்கு மிகவும் தகுதியானவர்கள் யார் என்பதை நாம் முற்றிலும் நன்கறிவோம்.
ஒவ்வொருவரும் நரகத்தைக் காண்பார்கள்*
[19:71] உங்களில் ஒவ்வொரு தனிநபரும் அதனைப் பார்த்தே தீர வேண்டும்; இது உம் இரட்சகரின் மாற்ற முடியாத ஒரு தீர்மானமாகும்.

அடிகுறிப்பு:
*19:71 பின் இணைப்பு 11ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, நமது பிரபஞ்சத்திற்குக் கடவுளின் நேரடி வருகைக்கு முன்னர் நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவோம். கடவுள் இல்லாத நிலையே நரகமாக இருப்பதால், அது நரகத்தை தற்காலிகமாக அனுபவிக்கும் ஒரு நிலையாக இருக்கும். கடவுள் வரும்போது (89:22) நன்னெறியாளர்கள் காப்பாற்றப்பட்டு விடுவார்கள். 19:72ஐ பார்க்கவும்.
[19:72] பின்னர் நன்னெறியாளர்களை நாம் காப்பாற்றி விடுவோம், மேலும் வரம்பு மீறியவர்களை, இழிவடைந்தவர்களாக அதில் விட்டு விடுவோம்.
பெரும்பான்மையினர்
[19:73] நம்முடைய வெளிப்பாடுகள் அவர்களிடம் தெளிவாக, ஓதிக்காட்டப்படும்போது, நம்பிக்கை கொண்டோரிடம் நம்ப மறுப்போர், “நம்மில் மிகவும் வளமானவர்கள் யார்? நம்மில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் யார்?” என்று கூறுகின்றார்கள்.
[19:74] இவர்களுக்கு முன்னர் பல தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம்; அவர்கள் அதிக வலிமையுள்ளவர்களாகவும், மேலும் மிகவும் வளமானவர்களாகவும் இருந்தனர்.
[19:75] “எவர்கள் வழிதவறிச் செல்வதைத் தேர்ந்தெடுக்கின்றனரோ, அவர்களை மிக்க அருளாளர் அவர்களுக்கு வாக்களிக்கப் பட்டதை அவர்கள் காணும் வரை அதில் தொடர்ந்து செலுத்துவார் - ஒன்று தண்டனை அல்லது அவ்வேளை. அப்போது தான் உண்மையில் மிக மோசமானவர்கள், மேலும் வலிமையில் குறைந்தவர்கள் யார் என்பதை அவர்கள் கண்டு கொள்வார்கள்” என்று கூறுவீராக.
[19:76] வழிகாட்டப்பட்டவர்களாக ஆவதைத் தேர்ந்தெ டுத்தோருடைய வழிகாட்டலைக் கடவுள் அதிகரிக்கின்றார். ஏனெனில் நல்ல செயல்கள் உம் இரட்சகரால் நிரந்தரமாக வெகுமதிய ளிக்கப்படுகின்றன, மேலும் மிக மேலான பலன்களைக் கொண்டு வருகின்றன.
[19:77] நம்முடைய வெளிப்பாடுகளை ஏற்க மறுத்து விட்டுப் பின்னர், “நான் செல்வமும் பிள்ளைகளும் கொடுக்கப்படுவேன்”?! என்று கூறியவனை நீர் கவனித்திருக்கின்றீரா.
[19:78] அவன் எதிர்காலத்தைக் கண்டுவிட்டானா? மிக்க அருளாளரிடமிருந்து அத்தகையதொரு உறுதிமொழியை அவன் பெற்றிருக் கின்றானா?
[19:79] உண்மையில், அவன் கூறுபவற்றை நாம் பதிவு செய்வோம், பின்னர் எப்பொழுதும் அதிகரித் துக் கொண்டேயிருக்கும் தண்டனைக்கு அவனை நாம் உட்படுத்துவோம்.
[19:80] பின்னர் அவன் சொந்தமாகக் கொண்டிருந்த ஒவ்வொன்றையும் நாம் உரிமையாக்கிக் கொள்வோம், மேலும் அவன் மட்டுமே தனியாக நம்மிடம் வருவான்.
[19:81] அவர்களுக்கு உதவியாக இருக்கக்கூடும் என்பதற்காகக் கடவுள்-உடன் மற்றத் தெய்வங்களை அவர்கள் வழிபடுகின்றனர்.
இணைத்தெய்வங்கள் தங்களை வழிபட்டவர்களைக்கைவிட்டு விடுகின்றன
[19:82] அதற்கு நேர்மாறாக; அவர்களுடைய இணைத்தெய்வ வழிபாட்டை அவர்கள் ஏற்க மறுத்து விடுவர், மேலும் அவர்களுடைய விரோதிகளாகவும் ஆகிவிடுவர்.
[19:83] நம்ப மறுப்பவர்களைத் தூண்டி விடுவதற்காக அவர்கள் மீது நாம் சாத்தான்களை எவ்வாறு அவிழ்த்து விடுகின்றோம் என்பதை நீர் காணவில்லையா?
[19:84] அவசரப்படாதீர்; அவர்களுக்காகச் சில தயாரிப்புகளை நாம் தயார் செய்து கொண்டிருக்கின்றோம்.
[19:85] மிக்க அருளாளரின் முன்னால் நன்னெறி யாளர்களை ஒரு கூட்டமாக நாம் வரவழைக்கும் அந்நாள் வரும்.
[19:86] மேலும் குற்றவாளிகளை மந்தையாக நரகத் திற்கு நாம் ஓட்டுவோம், அவர்களுடைய நிரந்தரமான தங்குமிடமாக இருப்பதற்காக.
[19:87] மிக்க அருளாளரின் சட்டங்களுக்கு ஒத்திருப் பவர்களைத் தவிர, எவரும் பரிந்துரைக்கும் சக்தி பெற மாட்டார்கள்.
மிகப்பெரும் இறைநிந்தனை
[19:88] அவர்கள், “மிக்க அருளாளர் ஒரு மகனைப் பெற்றெடுத்துள்ளார்!” என்று கூறினார்கள்.
[19:89] நீங்கள் மிகப்பெரும் ஓர் இறைநிந்தனையைக் கூறிவிட்டீர்கள்.
[19:90] வானங்கள் தகர்ந்து விடக் கூடும், பூமி துண்டுகளாக வெடித்து விடக்கூடும், மேலும் மலைகள் நொறுங்கிப் போய் விடக்கூடும்.
[19:91] மிக்க அருளாளர் ஒரு மகனைப் பெற்றெடுத் துள்ளார் என அவர்கள் உறுதியாகக் கூறும் காரணத்தால்.
[19:92] மிக்க அருளாளர் ஒரு மகனைப் பெற்றெடுப்ப தென்பது அவருக்குச் சற்றும் பொருத்தமான தல்ல.
[19:93] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள தனித்த ஒவ்வொருவரும் மிக்க அருளாளரின் ஒரு சேவகரே ஆவார்.
[19:94] அவர்களை அவர் சூழ்ந்திருக்கின்றார், மேலும் அவர்களை ஒருவர் பின் ஒருவராக எண்ணி வைத்துள்ளார்.
[19:95] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் அந்நாளில் அவர்கள் அனைவரும் தனித்தவர்களாக அவர் முன் வருவார்கள்.
[19:96] நிச்சயமாக, நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோருக்கு, மிக்க அருளாளர் அவர்களை அன்பைக் கொண்டு பொழிவார்.
[19:97] இவ்விதமாக (குர்ஆனாகிய) இதனை நாம் நன்னெறியாளர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதற்காகவும், மேலும் இதனைக் கொண்டு எதிர்ப்பாளர்களை எச்சரிப்பதற்காகவும், உமது மொழியில் விவரிக்கப்பட்டதாக ஆக்கியுள்ளோம்.
[19:98] அவர்களுக்கு முன்னர் பல தலைமுறையினரை நாம் அழித்துள்ளோம்; அவர்களில் எவரையேனும் உம்மால் காணவோ, அல்லது அவர்களிடமிருந்து சப்தம் எதையேனும் கேட்கவோ முடிகின்றதா?