சூரா 12: ஜோஸஃப் (யூஸுஃப்)

[12:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[12:1] அ.ல.ர. (எழுத்துக்களான) இவை இந்த ஆழ்ந்த வேதத்தின்* சான்றுகளாகும்.

அடிகுறிப்பு:
*12:1 குர்ஆனின் இந்த தலைப்பு எழுத்துக்கள் மகத்தானதொரு அற்புதத்தின் முக்கிய அங்கமாக அமைந்துள்ளது (பின் இணைப்பு 1).
[12:2] நீங்கள் புரிந்து கொள்வதற்காக,* இதனை ஓர் அரபிமொழியிலானதொரு குர்ஆனாக நாம் வெளிப்படுத்தியுள்ளோம்.

அடிகுறிப்பு:
*12:2 குர்ஆன் ஏன் அரபிமொழியில் வெளிப்படுத்தப்பட்டது? 41:44 மற்றும் பின் இணைப்பு 4 ஐ பார்க்கவும்.
[12:3] இந்தக் குர்ஆனுடைய வெளிப்பாட்டின் மூலம் மிகத் துல்லியமான சரித்திரத்தை நாம் உமக்கு எடுத்துரைக்கின்றோம். இதற்கு முன்னர், நீர் முற்றிலும் அறியாதவராக இருந்தீர்.
[12:4] ஜோஸஃப் தன் தந்தையிடம், “என் தந்தையே, பதினோரு கிரகங்களையும் சூரியனையும், சந்திரனையும் நான் கண்டேன்; என் முன்னர் அவை சிரம் பணிய நான் கண்டேன்” என்று கூறியதை நினைவு கூருங்கள்.
[12:5] அவர் கூறினார், “என் மகனே, உன் சகோதரர்கள் உனக்கெதிராகச் சதியும் சூழ்ச்சியும் செய்யாமலிருக்கும் பொருட்டு, உனது கனவைப் பற்றி அவர்களிடம் கூறாதே. நிச்சயமாக, சாத்தான் மனிதனுடைய மிக மோசமான விரோதியாக இருக்கின்றான்.
[12:6] “உன் இரட்சகர் இவ்விதமாக உனக்கு அருள் பாலித்துள்ளார், மேலும் உனது கனவின் மூலம் உனக்கு நற்செய்தியைத் தந்திருக்கின்றார். அவர் இதற்கு முன்னர் உனது முன்னோர் களான ஆப்ரஹாமிற்கும், ஐசக்கிற்கும் செய்த தைப் போல், உன் மீதும், ஜேக்கபின் குடும்பத்தார் மீதும் தன் அருட்கொடைகளைப் பூரணமாக்கி இருக்கின்றார். உனது இரட்சகர் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.”
[12:7] ஜோஸஃபிடமும் அவருடைய சகோதரர் களிடமும் தேடுதல் உள்ளவர்களுக்கு படிப் பினைகள் உள்ளன.
[12:8] அவர்கள் கூறினர், “ஜோஸஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்குச் செல்லமான வர்களாக உள்ளனர், மேலும் நாமோ பெரும்பான்மையினராக இருக்கின்றோம். உண்மையில், நம் தந்தை வெகுதூரம் வழிகேட்டில் இருக்கின்றார்.
ஜோஸஃபின் விதி கடவுளால் முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்டது*
[12:9] “உங்கள் தந்தையின் கவனத்தை நீங்கள் ஓரளவு அடைவதற்காக, நாம் ஜோஸஃபைக் கொன்று விடுவோம், அல்லது ஊரை விட்டுத் துரத்தி விடுவோம். அதன்பிறகு, நீங்கள் நன்னெறியிலான மனிதர்களாகி விடலாம்.*”

அடிகுறிப்பு:
*12:9 ஜோஸஃபின் கனவிலிருந்து பிரகாசமானதொரு எதிர்காலம் அவருக்கு விதிக்கப்பட்டிருந்தது என நாம் அறிந்து கொள்கின்றோம். இவ்விதமாக, அவருடைய விதியை முடிவு செய்ய அவருடைய சகோதரர்கள் சந்தித்துக் கொண்ட அதே வேளையில், அவருடைய விதி ஏற்கெனவே கடவுளால் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொன்றும் கடவுளால் செய்யப்படுகின்றது (8:17), மேலும் முன்னரே பதிவு செய்யப்பட்டும் உள்ளது (57:22).
[12:10] அவர்களில் ஒருவர், “ஜோஸஃபைக் கொன்று விடாதீர்கள்; நாம் அவரை ஒரு கிணற்றின் ஆழத்தில் எறிந்து விடுவோம். இவ்வாறு செய்ய நீங்கள் முடிவெடுத்தால், ஒருவேளை ஏதேனும் பிரயாணிகளின் கூட்டம் அவரை எடுத்துக் கொண்டு போய்விடக்கூடும்” என்று கூறினார்.
[12:11] அவர்கள் கூறினர், “எங்கள் தந்தையே, ஜோஸஃப் விஷயத்தில் எங்களை ஏன் நீங்கள் நம்புவதில்லை? நாங்கள் அவரை நன்கு கவனித்துக் கொள்வோம்.
[12:12] “நாளை அவரை எங்களுடன் ஓடி விளையாட அனுப்பி வையுங்கள். நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்.”
[12:13] அவர், “அவருடன் நீங்கள் வெளியில் சென்றால், பின்னர் நீங்கள் அவரை கவனிக்கா திருக்கும் சமயம், அவரை ஓநாய் விழுங்கி விடக் கூடும் என்று நான் கவலைப்படுகிறேன்” என்று கூறினார்.
[12:14] அவர்கள், “உண்மையில், நாங்கள் இத்தனை பேர் சுற்றிலும் இருக்கும் போதும், ஓநாய் அவரை விழுங்கி விடுமானால், அப்போது மெய் யாகவே நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகத் தான் இருப்போம்” என்று கூறினார்கள்.
நம்பிக்கையாளர்கள் கடவுளின் உறுதிமொழிகள் கொண்டு அருள்பாலிக்கப்படுகின்றனர்
[12:15] அவர்கள் அவருடன் வெளியில் சென்று, மேலும் அவரைக் கிணற்றின் ஆழத்தில் எறிந்து விடுவ தென்று ஏகமனதாக முடிவு செய்த போது, நாம் அவருக்கு: “என்றாவது ஒருநாள், அவர்கள் எதுவும் அறியாமல் இருக்கும்போது, இது அனைத்தையும் பற்றி நீர் அவர்களிடம் கூறுவீர்” என்று உள்ளுணர்வளித்தோம்.
[12:16] அவர்கள் மாலையில், தேம்பி அழுதவர்களாக, தங்கள் தந்தையிடம் திரும்பி வந்தனர்.
[12:17] அவர்கள், “எங்கள் தந்தையே, ஜோஸஃபிடம் எங்கள் சாமான்களை விட்டுவிட்டு, நாங்கள் ஒருவரோடொருவர் ஓட்டப்பந்தயம் சென்றோம், அப்போது ஓநாய் அவரை விழுங்கி விட்டது. நாங்கள் உண்மையைக் கூறினாலும், நீர் ஒருபோதும் எங்களை நம்ப மாட்டீர்” என்று கூறினார்கள்.
[12:18] போலி இரத்தத்துடன் அவருடைய சட்டையை அவர்கள் காட்டினார்கள். அவர் “உண்மையில், ஒரு குறிப்பிட்ட சூழ்ச்சியை செய்ய நீங்கள் ஒருவரோடொருவர் சதியாலோசனை செய்து இருக்கின்றீர்கள். நான் செய்யக்கூடிய தெல்லாம், அமைதியானதொரு பொறுமை யைக் கைக்கொள்வதுதான். உங்கள் இரகசியத் திட்டத்திற்கெதிராகக் கடவுள் எனக்கு உதவி செய்வாராக” என்று கூறினார்.
ஜோஸஃப் எகிப்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றார்
[12:19] ஒரு பிரயாணிகளின் கூட்டம் கடந்து சென்றது, உடனடியாக அவர்களுடைய தண்ணீர்ப் பிடிப்பவரை அனுப்பியது. அவர் தன் வாளியைக் கீழே விட்டார், அப்போது, “எப்படிப்பட்ட அதிர்ஷ்டம்! இங்கே ஒரு சிறுவன் இருக்கின்றான்!” என்று கூறினார். அவர்கள் அவரையும் ஒரு வியாபாரப் பொருளாகத் தங்களுடன் சேர்த்து எடுத்துச் சென்றனர், கடவுள் அவர்கள் செய்ததை முற்றிலும் அறிந்தவராக இருந்தார்.
[12:20] அவர்கள் ஓர் அற்ப விலைக்கு-ஒரு சில திர்ஹங்கள்-அவரை விற்பனை செய்து விட்டனர். ஏனெனில் அவரிடம் அவர்களுக்கு தேவை எதுவும் இருக்கவில்லை.
[12:21] எகிப்தில் அவரை வாங்கியவர் தன் மனைவி யிடம், “இவரை நன்கு கவனித்துக் கொள். இவர் நமக்கு உதவி செய்யலாம், அல்லது இவரை நாம் தத்தெடுத்துக் கொள்ளலாம்” என்று கூறினார். இவ்வாறாக ஜோஸஃபை நாம் பூமியில் நிலைநிறுத்தினோம், மேலும் கனவுகளின் விளக்கத்தை நாம் அவருக்குக் கற்றுக் கொடுத்தோம். கடவுள்-ன் கட்டளை கள் எப்பொழுதும் நிறைவேற்றப்படும், ஆனால் பெரும்பாலான மக்கள் அறிய மாட்டார்கள்.
[12:22] அவர் தக்கவயதை அடைந்தபோது, நாம் அவருக்கு ஞானத்தையும், அறிவையும் வழங்கி னோம். இவ்வாறே நன்னெறியாளர்களுக்கு நாம் வெகுமதி வழங்குகின்றோம்.
பாவங்களிலிருந்து நம்பிக்கையாளர்களை கடவுள் பாதுகாக்கின்றார்
[12:23] அவர் வசித்து வந்த அவ்வீட்டின் பெண்மணி அவரைத் தவறான வழியில் செலுத்த முயன்றாள். கதவுகளை மூடிக் கொண்டு அவள், “நான் முழுமையாக உமக்குரியவள்” என்று கூறினாள். அவர், “கடவுள் என்னைக் காப்பாராக. அவர் தான் என் இரட்சகர், எனக்கொரு நல்ல இல்லத்தைத் தந்தவர்*. நிச்சயமாக வரம்பு மீறுபவர்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டார்கள்”என்று கூறினார்.

அடிகுறிப்பு:
*12:23 உண்மையில் அப்போது ஜோஸஃப் கடவுளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போதும், தன்னுடைய கணவரைப் பற்றித்தான் அவர் பேசிக் கொண்டிருக்கின்றார் என்று ஆளுநரின் மனைவி எண்ணிக்கொள்ளும் விதமாக அவர் இவ்வாசகத்தை மொழிந்தார்.
[12:24] அவள் ஏறத்தாழ அவருக்கு இணங்கிவிட்டாள், மேலும் அவரும் ஏறத்தாழ அவளுக்கு இணங்கி விட்டார், தன் இரட்சகரிடமிருந்து ஒரு சான்றினைக் கண்டிரா விட்டால். இவ்விதமாக நாம் தீமையையும், பாவத்தையும் அவரை விட்டுத் திருப்பி விட்டோம், ஏனெனில் அவர் அர்ப்பணித்துக் கொண்ட நமது அடியார்களில் ஒருவராக இருந்தார்.
[12:25] அவர்கள் இருவரும் வாசலை நோக்கி விரைந்தனர், இந்நிகழ்வின் போது, அவள் அவருடைய ஆடையைப் பின்புறத்திலிருந்து கிழித்து விட்டாள். வாசலில் அவளுடைய கணவரை அவர்கள் கண்டனர். அவள், “உமது மனைவியைக் கெடுக்க விரும்பிய ஒருவனுக் குரிய தண்டனை, சிறைப்படுத்தப் படுவது, அல்லது வலி மிகுந்ததொரு தண்டனை தவிர வேறென்னவாக இருக்க இயலும்?” என்று கூறினாள்.
[12:26] அவர், “அவள் தான் என்னை தவறான வழியில் செலுத்தமுயன்றவள்” என்று கூறினார். அவளுடைய குடும்பத்திலிருந்த ஒரு சாட்சி யோசனை கூறினார்: “அவருடைய ஆடை முன்புறமாகக் கிழிந்திருந்தால், அப்போது அவள் உண்மையைக் கூறுகின்றாள், மேலும் அவர் ஒரு பொய்யராக இருக்கின்றார்.
[12:27] “மேலும் அவருடைய ஆடை பின்புறமாகக் கிழிந்திருந்தால், அப்போது அவள் பொய் கூறியிருக்கின்றாள், மேலும் அவர் உண்மை யைக் கூறுகின்றார்.”
[12:28] அவருடைய ஆடை பின்புறத்திலிருந்து கிழிந் திருப்பதை அவளுடைய கணவர் கண்டபோது, அவர் கூறினார், “இது ஒரு பெண்ணின் சூழ்ச்சியாகும். உண்மையில், உங்களுடைய சூழ்ச்சி பயங்கரமானதாகும்.
[12:29] “ஜோஸஃபே, இந்த சம்பவத்தை அலட்சியப் படுத்தி விடுவீராக. (என் மனைவியே) உன்னைப் பொறுத்தவரை, நீ உன் பாவத்திற் காக மன்னிப்புத்தேட வேண்டும். நீ ஒரு தவறை செய்துவிட்டாய்”.
[12:30] அந்நகரில் இருந்த சில பெண்கள்:“ஆளுநரின் மனைவி தன் ஊழியரை வசீகரிக்க முயற்சி செய்கின்றாள். அவள் அவர் மீது ஆழமான காதல் கொண்டுவிட்டாள். அவள் வழிதவறிச் சென்று விட்டாள் என்பதை நாம் காண்கின்றோம்” என்று அரட்டை அடித்தனர்.
[12:31] அவர்களுடைய அரட்டையைப் பற்றி அவள் கேள்விப்பட்டபோது, அவள் அவர்களை வரவழைத்தாள், வசதியான ஓர் இடத்தை அவர்களுக்காகத் தயார் செய்தாள், மேலும் அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு கத்தியைக் கொடுத்தாள். பின்னர் அவள் அவரிடம் “அவர்களுடைய அறைக்குள் நுழைவீராக” என்று கூறினாள். அவர்கள் அவரைக் கண்ட போது, அவர்கள் தங்கள் கரங்களை வெட்டிக் கொள்ளும் அளவிற்கு, அவரைக் கண்டு மிகவும் வியப்பிற்குள்ளாயினர்*. அவர்கள், “கடவுள் துதிப்பிற்குரியவர், இவர் ஒரு மனிதரே இல்லை; இவர் ஒரு கண்ணியமிக்க வானவராவார்” என்று கூறினார்கள்.

அடிகுறிப்பு:
*12 :31 திருடுபவர் கரத்தைக் குறித்து 5:38லும் இதே வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சூரா மற்றும் வசன எண்களின் கூட்டுத்தொகையும் (12+31 மற்றும் 5+38) ஒன்றாகவே உள்ளது. ஆகையால், திருடுபவரின் கரங்கள் அடையாளமிடப்பட வேண்டுமே அன்றி, சீர்குலைந்து போன இஸ்லாத்தில் செய்யப்படுவதைப் போல் துண்டிக்கப்பட்டு விடக்கூடாது (5:38ன் அடிக் குறிப்பையும் காண்க).
[12:32] அவள், “நான் காதல் வசப்பட்டு விட்டதாக என் மீது பழி கூறினீர்களே, அந்த ஒருவர் இவர் தான். நான் உண்மையில் அவரை வசீகரிக்கவே முயன்றேன். அவருக்கு நான் கட்டளையிடு வதை அவர் செய்யவில்லையென்றால், நிச்சய மாக அவர் சிறைக்குச் செல்வார், மேலும் தரம் தாழ்த்தப்பட்டவராகி விடுவார்” என்று கூறினாள்.
[12:33] அவர், “என் இரட்சகரே, அவர்களுக்கு நான் இணங்குவதை விட அந்தச் சிறையே மேலான தாகும். அவர்களுடைய சூழ்ச்சியை என்னை விட்டு நீர் திருப்பிவிட்டாலன்றி, அவர்கள் மேல் நான் ஆசை கொள்ளவும், அறிவில்லாதவர் களைப் போல் நடந்து கொள்ளவும் கூடும்” என்று கூறினார்.
[12:34] அவருடைய இரட்சகர் அவருடைய பிரார்த் தனைக்குப் பதிலளித்தார், மேலும் அவர் களுடைய சூழ்ச்சியை அவரை விட்டுத் திருப்பி விட்டார். அவர்தான் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
[12:35] பின்னாளில், தெளிவான சான்றுகளாக, அதனை அவர்கள் கண்டபோதிலும், அவரை அவர்கள் சிறிது காலம் சிறையிலிட்டனர்.
[12:36] இரு இளைஞர்கள் அவருடன் சிறையில் இருந்தனர். அவர்களில் ஒருவன், “நான் மது ரசம் தயாரிப்பதாக (என் கனவில்) கண்டேன் ” என்று கூறினான் மேலும் மற்றொருவன், “என் தலையில் நானே ரொட்டியைச் சுமந்து செல்வதாகவும், அதிலிருந்து பறவைகள் உண்டு கொண்டிருக்கவும் நான் கண்டேன். இந்தக் கனவுகளின் விளக்கத்தைப் பற்றி எங்களுக்குத் தெரிவிப்பீராக. நீர் நன்னெறி யாளராக இருப்பதை நாங்கள் காண்கின் றோம்”என்று கூறினான்.
[12:37] அவர் கூறினார், “உங்களுக்கு ஏதேனும் உணவு வழங்கப்படுமாயின், அதனை நீங்கள் பெற்றுக் கொள்வதற்கு முன்னர் அதனைப் பற்றி உங்களுக்கு அறிவிக்க என்னால் இயலும். இது என் இரட்சகர் என் மீது அருள் செய்த அறிவில் சில ஆகும். கடவுள்-ன் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களின் மார்க்கத்தை நான் கைவிட்டு விட்டேன், மேலும் மறுவுலகைக் குறித்து, உண்மையில் அவர்கள் நம்ப மறுப்பவர்களாக இருக்கின்றனர்.”
[12:38] “மேலும் நான் அதற்கு மாறாக, எனது முன்னோர்களான ஆப்ரஹாம், ஐசக் மற்றும் ஜேக்கப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்று கின்றேன். கடவுள்-உடன் எந்த இணைத் தெய்வங்களையும் நாங்கள் ஒருபோதும் அமைத்துக் கொள்வதில்லை. எங்கள் மீதும், மேலும் மனிதர்கள் மீதும் கடவுள் இடமிருந்துள்ள அருட்கொடை இத்தகைய தேயாகும், ஆனால் மனிதர்களில் பெரும் பாலோர் நன்றியற்றவர்களாக இருக்கின்றனர்.
[12:39] “என் சிறைத் தோழர்களே, மேலானது பல தெய்வங்களா, அல்லது ஒருவரும், மேலான அதிகாரம் கொண்டவருமான கடவுள் மட்டுமா?
[12:40] “அவருடன் நீங்கள் வழிபடுபவை, நீங்களும் உங்கள் பெற்றோர்களும் உருவாக்கிக் கொண்ட புதுமைகளேயன்றி வேறில்லை. இத் தகைய இணைத் தெய்வங்களுக்கு கடவுள் ஒரு போதும் அதிகாரம் அளித்திடவில்லை. கட்டளைகள் அனைத்தும் கடவுள்-க்கு உரிய வை, மேலும் அவரை அன்றி நீங்கள் வழிபடக் கூடாதென அவர் கட்டளையிடுகின்றார். இதுவே பூரணமான மார்க்கம், ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
[12:41] “என் சிறைத் தோழர்களே, உங்களில் ஒருவன் தன் எஜமானுக்கு மது பரிமாறுவான், அதே சமயம் மற்றொருவன் சிலுவையில் அறைந்து கொல்லப்படுவான்-அவன் தலையிலிருந்து பறவைகள் உண்ணும். இத்துடன் நீங்கள் விசாரித்தது பற்றிய விஷயம் முடிவடை கின்றது.”
[12:42] காப்பாற்றப்பட இருந்தவரிடம் அவர் பின்னர், “உனது எஜமானரிடம் என்னை நினைவு கூர்வீராக”* என்று கூறினார். இவ்விதம் சாத்தான் அவரை அவருடைய இரட்சகரை மறக்கும்படிச் செய்தான், மேலும் , அதன் விளைவாக, இன்னும் சில வருடங்கள் அவர் சிறையில் தொடர்ந்து நீடித்திருந்தார்.

அடிகுறிப்பு:
*12:42 ஜோஸஃப் தனக்காக மன்னரிடம் சிபாரிசு செய்யும்படி தன் தோழரிடம் யாசித்த போது, சிறையிலிருந்து காப்பாற்றப்படுவதற்காகக் கடவுளை அன்றி மற்றவர்களைச் சார்ந்திருப்பதை அவர் வெளிப்படுத்தினார். இது உண்மையானதொரு நம்பிக்கையாளருக்குப் பொருத்தமானதல்ல, மேலும் இத்தகையதொரு அபாயகரமான சறுக்கலுக்கு விலையாக ஜோஸஃப் சிறையில் சில வருடங்கள் இருக்க நேர்ந்தது. நமக்கு ஏற்படும் எந்தக் கஷ்டத்தையும் கடவுள் மட்டுமே நிவர்த்திக்க இயலும் என்பதை நாம் குர்ஆனிலிருந்து கற்றுக் கொள்கின்றோம். உண்மையான ஒரு நம்பிக்கையாளர் கடவுளிடம் பொறுப்பை ஒப்படைக்கின்றார், மேலும் முற்றிலும் அவரை மட்டுமே சார்ந்திருக்கின்றார் (1:5, 6:17, 8:17, 10:107).
மன்னரின் கனவு
[12:43] மன்னர், “ஏழு கொழுத்த பசுக்கள், ஏழு மெலிந்த பசுக்களால் ஆவலோடு விழுங்கப் படுவதையும், மேலும் பசுமையான ஏழு (கோதுமைக்) கதிர்களையும், மற்றவை காய்ந் திருப்பதாகவும் நான் கண்டேன். என் பிரதானிகளே, கனவுகளுக்கு விளக்கம் சொல் வது எப்படி என்பதை நீங்கள் அறிந்திருந்தால், என் கனவைப் பற்றி எனக்கு ஆலோசனை யளியுங்கள்” என்று கூறினார்.
[12:44] அவர்கள், “அர்த்தமற்ற கனவுகள். கனவு களுக்கு விளக்கம் என வரும் போது, நாங்கள் அறிவு பெற்றவர்கள் அல்ல” என்று கூறினார்கள்.
[12:45] (சிறையிலிருந்து) காப்பாற்றப்பட்ட ஒருவன், இப்போது இறுதியில் ஞாபகம் வந்தவனாக, “அதன் விளக்கத்தைக் கூற என்னால் இயலும், ஆகவே என்னை (ஜோஸஃபிடம்) அனுப்புங் கள்” என்று கூறினான்.
ஜோஸஃப் மன்னரின் கனவிற்கு விளக்கமளிக்கின்றார்
[12:46] “என் நண்பர் ஜோஸஃபே, ஏழு கொழுத்த பசுக்கள், ஏழு மெலிந்த பசுக்களால் ஆவலோடு விழுங்கப்படுவதைப் பற்றியும், ஏழு பசுமையான கதிர்களையும் மற்றவை காய்ந்து போயிருப் பதைப் பற்றியும் எங்களுக்குத் தெரிவிப்பீராக. மக்களுக்குச் சில தகவல்களுடன் திரும்பிச் செல்ல நான் விரும்புகின்றேன்.”
[12:47] அவர் கூறினார், “அடுத்த ஏழு வருட காலம் நீங்கள் பயிரிடுபவற்றை, அறுவடைக் காலம் வரும்போது, நீங்கள் உண்ணுவதற்குரிய வற்றைத் தவிர, தானியங்களை அதன் கதிர்களிலேயே இருக்கும்படி விட்டு விடுங்கள்”.
[12:48] “அதன் பின்னர், வறட்சியான ஏழு வருடங்கள் வரும், அவற்றிற்காக நீங்கள் சேகரித்தவற்றில் அதிகமானதை அவை உண்டு விடும்.
[12:49] “அதன் பின்னர், மக்களுக்கு நிவாரணத்தைக் கொண்டு வரும் ஒரு வருடம் வரும், மேலும் அவர்கள், மீண்டும் ஒருமுறை, பழரசம் பிழிவார்கள்.”
[12:50] மன்னர், “அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று கூறினார். அவரிடம் தூதன் வந்தபோது, அவர், “உன் எஜமானரிடம் திரும்பிச் சென்று தங்கள் கரங்களை வெட்டிக் கொண்ட பெண்களை விசாரிக்கும்படி அவரிடம் கேட்டுக் கொள். அவர்களுடைய சூழ்ச்சிகளைப் பற்றி என் இரட்சகர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்” என்று கூறினார்.
[12:51] (மன்னர்) (அப்பெண்களிடம்), “ஜோஸஃபை நீங்கள் வசீகரிக்க முயன்ற போது நிகழ்ந்த சம்பவத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தது என்ன?” என்று கூறினார். அவர்கள், “கடவுள் காப்பாராக; அவர் எந்த தீமையான விஷயத் தையும் செய்ததாக நாங்கள் அறியவில்லை” என்று கூறினார்கள். ஆளுநரின் மனைவி கூறினாள், “ இப்போது சத்தியம் வென்று விட்டது. நான் தான் அவரை தவறான வழியில் செலுத்த முயன்றேன், மேலும் அவர் உண்மையான ஒருவராக இருந்தார்.
[12:52] “அவர் இல்லாத நேரத்தில் அவருக்கு நான் ஒரு போதும் துரோகமிழைக்கவில்லை என்பதை அவர் புரிந்து கொள்வார் என நான் நம்புகின்றேன், ஏனெனில் துரோகிகளின் சூழ்ச்சிகளுக்கு கடவுள் அருள்பாலிப்பதில்லை.
[12:53] “நான், என்னை குற்றமற்றவள் என்று உரிமை கோரவில்லை. என்னுடைய இரட்சகரிடமிருந்து கருணையை அடைந்தவர்களுக்கு தவிர, மன இச்சையானது தீய ஒழுக்கத்தை ஆதரிக்கும் ஒன்றாகும். என் இரட்சகர் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.”
ஜோஸஃப் முக்கியத்துவம் அடைகின்றார்
[12:54] மன்னர், “அவரை என்னிடம் கொண்டு வாருங் கள், இவ்வாறாக எனக்குப் பணி செய்வதற்காக அவரை நான் அமர்த்திக் கொள்ள இயலும்,” என்று கூறினார். அவருடன் அவர் உரையாடிய போது, அவர், “இன்றைய தினம், நம்மிடம் உமக்கு முக்கியத்துவமிக்கதொரு அந்தஸ்து உள்ளது” என்று கூறினார்.
[12:55] அவர், “என்னைக் கருவூல அதிகாரியாக ஆக்குவீராக, ஏனெனில் இத்துறையில் நான் அனுபவமிக்கவனாகவும் அறிவைப் பெற்றவனா கவும் இருக்கின்றேன்” என்று கூறினார்.
[12:56] இவ்விதமாக அவர் விரும்பியபடி ஆளும் வண்ணம், பூமியில் நாம் ஜோஸஃபை நிலைநிறுத்தினோம். நாம் நாடுவோர் மீது நமது கருணையை நாம் பொழிகின்றோம், மேலும் நன்னெறியாளர்களுக்குப் பிரதிபலன் வழங்க ஒருபோதும் நாம் தவறுவதில்லை.
[12:57] கூடுதலாக, நம்பிக்கை கொண்டு நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோருக்குரிய மறுவுலகின் வெகுமதியோ, இன்னும் மிக மேலானதாகும்.
[12:58] ஜோஸஃபின் சகோதரர்கள் வந்தனர்; அவர்கள் நுழைந்தபோது, அவர் அவர்களை அடையாளம் கண்டு கொண்டார், அதே சமயம் அவர்கள் அவரை அடையாளம் காணவில்லை.
[12:59] அவர்களுக்குரிய உணவுப் பொருட்களைக் கொண்டு அவர்களுக்கு அவர் விநியோகித்த பின்னர், அவர் கூறினார், “அடுத்த முறை, உங்கள் தந்தை வழிச் சகோதரனை உங்களுடன் அழைத்து வாருங்கள். நான் அளவை முழுமையாக உங்களுக்குத் தருவதையும், மேலும் உங்களைத் தாராளமாக நடத்துவதையும் நீங்கள் காணவில்லையா?
[12:60] “அவரை என்னிடம் நீங்கள் அழைத்து வரத் தவறினால், என்னிடமிருந்து பங்கு எதையும் நீங்கள் பெறமாட்டீர்கள்; நீங்கள் அருகிலும் வரமாட்டீர்கள்.”
[12:61] அவர்கள், “அவரைப் பற்றி அவருடைய தந்தையிடம் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம். நிச்சயமாக நாங்கள் இதனைச் செய்வோம்” என்று கூறினார்கள்.
[12:62] அவர் பின்னர் தன் உதவியாளர்களுக்கு உத்தர விட்டார் : “அவர்களுடைய சரக்குகளை அவர் களுடைய பைகளில் மீண்டும் வைத்து விடுங்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்ற பின்னர், அவற்றைக் காணும்போது, அவர்கள் விரைவில் திரும்பி வரக்கூடும்.”
[12:63] அவர்களுடைய தந்தையிடம் அவர்கள் திரும்பிச் சென்றபோது, அவர்கள், “எங்கள் தந்தையே, எங்கள் சகோதரனை எங்களுடன் நீர் அனுப்பினாலன்றி, இதற்குப் பிறகு எந்த உணவுப் பொருட்களையும் நம்மால் பெற முடியாது. நாங்கள் அவரை நன்கு கவனித்துக் கொள்வோம்” என்று கூறினார்கள்.
[12:64] அவர், “ இதற்கு முன்னர் இவருடைய சகோதரரை நான் உங்களிடம் நம்பி ஒப்படைத்ததைப் போல், இவரையும் நான் உங்களை நம்பி ஒப்படைக்க வேண்டுமா? கடவுள் தான் மிகச் சிறந்த பாதுகாவலர், மேலும், கருணையுடையவர்கள் அனைவரிலும், அவர்தான் மிக்க கருணையாளர்” என்று கூறினார்.
[12:65] அவர்கள் தங்களுடைய பைகளைத் திறந்தபோது, அவர்களுடைய சரக்குகள் அவர்களிடம் திரும்பத் தரப்பட்டுள்ளதை அவர்கள் கண்டார் கள். அவர்கள், “ எங்கள் தந்தையே, இதற்கு மேல் நாம் என்ன கேட்க இயலும்? இதோ நமது சரக்குகள் நம்மிடம் திரும்பத் தரப்பட்டுள்ளன. இதன் மூலம் நாம் நமது குடும்பத்திற்கு வழங்கவும், எங்கள் சகோதரரைப் பாதுகாத்துக் கொள்ளவும் , இன்னும் ஒரு ஒட்டகத்தின் சுமையளவு பெற்றுக் கொள்ளவும் இயலும். நிச்சயமாக இது இலாபகரமானதொரு வியாபாரமே ஆகும்” என்று கூறினார்கள்.
[12:66] அவர், “நீங்கள் முற்றிலும் தோற்கடிக்கப் பட்டாலன்றி, அவரை நீங்கள் திரும்பக் கொண்டு வருவீர்கள் என்று, கடவுள் முன் முறைப்படியானதொரு சத்தியத்தை நீங்கள் எனக்குத் தந்தாலே தவிர, நான் அவரை உங்களுடன் அனுப்ப மாட்டேன்” என்று கூறினார். அவர்களுடைய முறைப்படியான சத்தியத்தை அவர்கள் அவருக்கு தந்த போது, அவர், “நாம் கூறும் ஒவ்வொன்றிற்கும் கடவுள் சாட்சியாக உள்ளார்” என்று கூறினார்.
[12:67] மேலும் அவர், “ என் மகன்களே, ஒரு வாசல் வழியாக நுழையாதீர்கள்; வெவ்வேறு வாசல்களின் மூலமாக நுழையுங்கள். எப்படியிருப்பினும், கடவுள்-ஆல் முன்னரே தீர்மானிக்கப்பட்ட எந்த விஷயத்தி லிருந்தும் நான் உங்களைக் காப்பாற்றி விட முடியாது. தீர்ப்புகள் அனைத்தும் கடவுள்-க்கு உரியது. அவரிடம் நான் பொறுப்பை ஒப்படைக் கின்றேன், மேலும் பொறுப்பை ஒப்படைப்பவர்கள் அனைவரும் அவர் மீதே பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்” என்று கூறினார்.
ஜேக்கப், ஜோஸஃபை புலன்களால் அறிகின்றார்
[12:68] அவர்கள் (ஜோஸஃபிடம்) சென்ற போது, தங்கள் தந்தையின் அறிவுரைக்கு ஏற்பவே அவர்கள் நுழைந்தனர். கடவுள்-ஆல் விதிக்கப்பட்ட எந்த விஷயத்தையும் இது மாற்றிவிட முடிய வில்லை என்ற போதிலும், இப்படிச் செய்யும்படி அவர்களிடம் கூறியதற்கு, ஜேக்கபிற்கு ஒரு பிரத்தியேகக் காரணம் இருந்தது. ஏனெனில் நாம் அவருக்குக் கற்பித் திருந்த உறுதியான அறிவை அவர் பெற்றிருந்தார், ஆனால் மனிதர்களில் பெரும் பாலோர் அறிய மாட்டார்கள்.
மீண்டும் எகிப்தில்
[12:69] ஜோஸஃபின் இடத்திற்குள் அவர்கள் நுழைந்த போது, அவர் தன் சகோதரரை தனக்கு அருகில் கொண்டு வந்து , “ நான் உமது சகோதரன்; அவர் களுடைய செயல்களால் கவலைக்குள்ளாகாதீர்” என்று கூறினார்.
ஜோஸஃப் தன் சகோதரரை தக்க வைத்துக்கொள்கின்றார்
[12:70] அவர்களுடைய உணவுப்பொருட்களை அவர் களுக்கு அவர் விநியோகித்த போது, அருந்தும் குவளையை தன் சகோதரரின் பையில் அவர் வைத்து விட்டார், பின்னர் அறிவிப்பாளர் ஒருவர்: “இந்த வணிக வண்டியின் சொந்தக்காரர்கள் திருடர்கள்” என்று அறிவித்தார்
[12:71] அவர்களை நோக்கி வந்தவர்களாக, அவர்கள், “நீங்கள் தொலைத்தது என்ன?” என்று கூறினார்கள்.
[12:72] அவர்கள், “ மன்னரின் குவளையை நாங்கள் தொலைத்து விட்டோம், என்று கூறினார்கள். எவரொருவர் அதனைத் திருப்பித் தருகின்றாரோ அவர் ஓர் ஒட்டகச் சுமையளவு அதிகமாகப் பெற்றுக்கொள்வார்; நான் தனிப்பட்ட முறையில் இதற்கு உத்தரவாதமளிக்கின்றேன்.”
[12:73] அவர்கள், “கடவுள் மீது ஆணையாக, தீங்கு செய்வதற்காக நாங்கள் இங்கு வரவில்லை என்பதை நீங்கள் நன்கறிவீர்கள், அன்றி நாங்கள் திருடர்களுமல்ல” என்று கூறினார்கள்.
[12:74] அவர்கள், “ நீங்கள் பொய்யர்களாக இருந்தால், திருடனுக்குரிய தண்டனை என்ன?” என்று கூறினார்கள்.
[12:75] அவர்கள், “தண்டனையானது, அது அவனது பையில் காணப்பட்டால், அத்திருடன் உங்களு குரியவன் என்பதாகும். இவ்விதமாகவே நாங்கள் குற்றவாளிகளைத் தண்டிப்போம்” என்று கூறினார்கள்.
[12:76] அவர் பின்னர், அவருடைய சகோதரரின் பெட்டிக்குச் செல்லும் முன்னர், அவர்களுடைய பெட்டியிலிருந்து சோதனையைத் துவங்கினார், மேலும் அதனை அவருடைய சகோதரரின் பெட்டியிலிருந்து வெளியே எடுத்தார். இவ் விதமாக ஜோஸஃபிற்கு அத்திட்டத்தை நாம் முடித்துக் கொடுத்தோம்; மன்னரின் சட்டத்தை அவர் செயல்படுத்தியிருந்தால் அவருடைய சகோதரரை அவரால் தக்க வைத்துக் கொண்டிருக்க முடியாது. ஆனால் அதுதான் கடவுள்-ன் நாட்டமாக இருந்தது. நாம் தேர்ந்தெடுப்போரை உயர்ந்த அந்தஸ்துகளுக்கு நாம் உயர்த்துகின்றோம். அறிவைப் பெற்றவர் ஒவ்வொருவருக்கும் மேலாக, இன்னும் அதிக அறிவைப் பெற்ற ஒருவர் இருக்கின்றார்.
[12:77] அவர்கள், “ இவன் திருடினான் என்றால், கடந்த காலத்தில் இவனுடைய சகோதரனும் அவ்வாறே செய்தான்” என்று கூறினார்கள். ஜோஸஃப் தன் உணர்வுகளைத் தனக்குள் மறைத்துக் கொண்டார், மேலும் அவர்களிடம் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. அவர் (தனக்குள்), “நீங்கள் மெய்யாகவே கெட்டவர்கள். உங்களு டைய குற்றச்சாட்டுக்களைக் கடவுள் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்” என்று கூறிக் கொண்டார்.
[12:78] அவர்கள், “பெருந்தகையே, இவனுக்கு வயது முதிர்ந்ததொரு தந்தை இருக்கின்றார்; இவனுடைய இடத்தில் எங்களில் ஒருவரை நீர் பிடித்துக் கொள்வீரா? கனிவானவொரு மனிதராக உம்மை நாங்கள் காண்கின்றோம்” என்று கூறினார்கள்.
[12:79] அவர், “எவரிடம் எங்கள் பொருட்களை நாங்கள் கண்டோமோ, அவரையன்றி மற்றொருவரை நாங்கள் பிடித்துவைத்துக் கொள்வதை விட்டுக் கடவுள் காப்பாராக. இல்லையென்றால், நாங்கள் நீதமற்றவர்களாகி விடுவோம்” என்று கூறினார்.
[12:80] அவருடைய மனதை மாற்றி விடும் நம்பிக்கையை அவர்கள் இழந்தபோது, அவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்தனர். அவர்களுடைய மூத்தவர், “ கடவுள் முன் முறைப்படியானதொரு சத்தியத்தை உங்கள் தந்தை உங்களிடமிருந்து பெற்றிருக்கின்றார் என்பதை நீங்கள் உணர வில்லையா? கடந்த காலத்தில் நீங்கள் ஜோஸஃபைத் தொலைத்தீர்கள். என் தந்தை எனக்கு அனுமதி தரும்வரை, அல்லது கடவுள் எனக்குத் தீர்ப்பளிக்கும் வரை இவ்விடத்தை விட்டு நான் வெளியேறமாட்டேன்; அவரே மிகச் சிறந்த நீதிபதி என்று கூறினார்.
மீண்டும் பாலஸ்தீனத்தில்
[12:81] “உங்கள் தந்தையிடம் திரும்பிச் சென்று அவரிடம் கூறுங்கள்.....” ‘எங்கள் தந்தையே, உமது மகன் ஒரு திருட்டைச் செய்துவிட்டான். நாங்கள் மிக உறுதியாக அறிவோம், ஏனெனில் இதனைத்தான் நாங்கள் கண்டோம். இது எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்றாக இருந்தது.
[12:82] ‘எங்களுடன் கூட இருந்த அந்தச் சமூகத் தாரையும், எங்களுடன் திரும்பி வந்த பிரயாணி களின் கூட்டத்தையும் நீங்கள் விசாரிக்கலாம். நாங்கள் உண்மையையே கூறுகின்றோம்.’ ”
[12:83] அவர், “உண்மையில், நீங்கள் ஒரு குறிப்பிட்ட சூழ்ச்சியை நிறைவேற்ற சதியாலோசனை செய்து இருக்கின்றீர்கள். அமைதியான பொறுமையே எனது ஒரே புகலிடமாகும். அவர்கள் அனை வரையும் கடவுள் என்னிடம் திரும்பக் கொண்டு வருவாராக; அவர் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்” என்று கூறினார்.
[12:84] “நான் ஜோஸஃபை நினைத்து கவலை யுறுகின்றேன்” என்று கூறியவராக அவர், அவர் களிடமிருந்து திரும்பிக் கொண்டார். அதிகமான கவலையால் அவருடைய கண்கள் வெளுத்துப் போய்விட்டன; அவர் மெய்யாகவே துக்கம் அடைந்தார்.
[12:85] அவர்கள், “கடவுள் மீது ஆணையாக, நீர் நோயாளியாகி விடும் வரை, அல்லது நீர் இறந்து போகும் வரை ஜோஸஃபிற்காக நீர் கவலைப் பட்டுக்கொண்டே இருப்பீர்” என்று கூறினார்கள்.
[12:86] அவர்கூறினார், “எனது தடுமாற்றத்தையும் மேலும் கவலையையும் நான் கடவுள்-இடம் முறையிடுகின்றேன், அவ்வளவுதான், ஏனெனில் நீங்கள் அறியாதவற்றைக் கடவுள்-இடமிருந்து நான் அறிவேன்.
[12:87] “என் மகன்களே, சென்று ஜோஸஃபையும், அவருடைய சகோதரரையும் கூட்டிக்கொண்டு வாருங்கள், மேலும் கடவுள்-ன் அருளில் ஒரு போதும் நம்பிக்கையிழந்து விடாதீர்கள். நம்ப மறுக்கும் மக்களைத் தவிர எவரும் கடவுள்-ன் அருளில் நம்பிக்கையிழக்க மாட்டார்கள்.”
இஸ்ரவேல் எகிப்திற்குச் செல்கின்றார்
[12:88] (ஜோஸஃபின்) இல்லத்திற்குள் அவர்கள் நுழைந்த போது, அவர்கள், “பெருந்தகையே, நாங்களும் எங்கள் குடும்பத்தாரும், ஏராளமான கஷ்டங்களை அனுபவித்து விட்டோம், மேலும் தரம் குறைந்த பொருட்களையே நாங்கள் கொண்டு வந்துள்ளோம். ஆயினும் நீர் எங்களுக்கு அளவை முழுமையாக தருவீரென்றும் எங்களிடம் பெருந்தன்மையுடன் இருப்பீரென்றும் நாங்கள் நம்புகின்றோம். பெருந்தன்மையுடையோருக்குக் கடவுள் வெகுமதியளிக்கின்றார்” என்று கூறினார்கள்.
[12:89] அவர், “நீங்கள் அறிவில்லாதவர்களாக இருந்த போது, ஜோஸஃபிற்கும் அவரது சகோதரருக்கும் என்ன செய்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கின்றதா?” என்று கூறினார்.
[12:90] அவர்கள், “ நீர் தான் ஜோஸஃப்பாக இருக்க வேண்டும்“ என்று கூறினார்கள். அவர், “ நான் தான் ஜோஸஃப், மேலும் இதோ எனது சகோ தரன். கடவுள் எங்களுக்கு அருள்புரிந்து விட்டார். அது ஏனெனில், ஒருவர் நன்னெறி யானதொரு வாழ்வு நடத்தி, மேலும் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருப்பாராயின், நன்னெறி யாளர்களுக்கு வெகுமதியளிக்க கடவுள் ஒருபோதும் தவறுவதில்லை,” என்று கூறினார்.
[12:91] அவர்கள், “கடவுள் மீது ஆணையாக, கடவுள் எங்களுக்கு மேலாக உண்மையாகவே உம்மைத் தேர்ந்தெடுத்துள்ளார். நிச்சயமாக நாங்கள் தவறானவர்களாகவே இருந்தோம்” என்று கூறினார்கள்.
[12:92] அவர் கூறினார், “இன்றைய தினம் உங்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. கடவுள் உங்களை மன்னிப்பாராக. கருணையுடையவர்கள் அனை வரிலும், அவரே மிக்க கருணையாளர்.
[12:93] “என்னுடைய இந்தச் சட்டையை எடுத்துக் கொள்ளுங்கள்; என் தந்தையின் முகத்தில் நீங்கள் இதனை எறியும்போது, அவருடைய பார்வை திரும்பவும் மீளும். உங்கள் குடும்பம் முழுவதையும் அழைத்துக் கொண்டு என்னிடம் திரும்பி வாருங்கள்*”

அடிகுறிப்பு:
* 12:93 இது எகிப்தில் இஸ்ரவேலின் சந்ததியினருடைய துவக்கத்தைக் குறிக்கின்றது. சில நுற்றாண்டுகள் கழித்து, மோஸஸ் அவர்களை எகிப்திற்கு வெளியே அழைத்து வந்தார்.
[12:94] பிரயாணிகளின் கூட்டம் வந்து சேர்வதற்கும் முன்பாகவே, அவர்களுடைய தந்தை, “ஜோஸஃ பின் வாடையை என்னால் உணர முடிகின்றது. எவரேனும் எனக்குத் தெளிவு படுத்துவீர்களா?” என்று கூறினார்.
[12:95] அவர்கள், “கடவுள் மீது ஆணையாக, நீர் இன்னும் உமது பழைய குழப்பத்திலேயே இருக் கின்றீர்” என்று கூறினார்கள்.
[12:96] நற்செய்தியைக் கொண்டு வருபவர் வந்து சேர்ந்த போது, அவர் (சட்டையை) அவருடைய முகத்தின் மீது எறிந்தார், அப்போது அவருடைய பார்வை திரும்பவும் மீண்டது. அவர், “நீங்கள் அறியாத வற்றைக் கடவுள்-இடமிருந்து நான் அறிவேன் என நான் உங்களிடம் கூறவில்லையா?” என்று கூறினார்.
[12:97] அவர்கள், “எங்கள் தந்தையே, எங்களுடைய பாவமன்னிப்பிற்காகப் பிரார்த்தியுங்கள்; உண்மையில் நாங்கள் தவறானவர்களாகவே இருந்தோம்” என்று கூறினார்கள்.
[12:98]`அவர், “உங்களை மன்னிக்கும்படி என் இரட்சகரி டம் நான் இறைஞ்சிப் பிரார்த்திப்பேன்; அவர் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்” என்று கூறினார்.
எகிப்தில்
[12:99] ஜோஸஃபின் இல்லத்திற்குள் அவர்கள் நுழைந்த போது, “எகிப்திற்கு வரவேற்கின்றேன். கடவுள் நாடினால், நீங்கள் இங்கே பாதுகாப்புடன் இருப்பீர்கள்” என்று கூறியவராக அவர் தன் பெற்றோரைத் தழுவிக் கொண்டார்.
[12:100] அவர் தன் பெற்றோரை அரியாசனத்தின் மீது உயர்த்தினார். அவர்கள் அவர் முன் சிரம் பணிந்து விழுந்தனர். அவர், “ என் தந்தையே, இது என் பழைய கனவின் நிறைவேற்றம் ஆகும். என் இரட்சகர் அதனை நனவாக்கி விட்டார். அவர் எனக்கு அருள்புரிந்து விட்டார், சிறையிலிருந்து என்னை விடுதலை செய்தார், மேலும் எனக்கும் என் சகோதரர்களுக்கும் இடையில் சாத்தான் பிளவை ஏற்படுத்தி விட்டதன் பின்னர், பாலை வனத்தில் இருந்து உங்களைக் கொண்டு வந்தார். தான் நாடுவோர் மீது என் இரட்சகர் மிகுந்த கனிவுடையவராக இருக்கின்றார். அவர் அறிந்தவர், ஞானம் மிக்கவர்” என்று கூறினார்.
[12:101] “என் இரட்சகரே, எனக்கு நீர் அரசாட்சியைத் தந்திருக்கின்றீர், மேலும் கனவுகளின் விளக்கத் தை எனக்குக் கற்றுத் தந்திருக்கின்றீர். வானங் கள் மற்றும் பூமியைத் துவக்கியவரே; இவ்வுலகிலும், மறுவுலகிலும் நீரே என் இரட்சகரும், எஜமானருமாவீர். அடிபணிந்த ஒருவராக என்னை மரணிக்கச் செய்வீராக, மேலும் நன்னெறியாளர்களுடன் என்னைக் கணக்கிடு வீராக.”
[12:102] இது கடந்த காலத்திலிருந்து நாம் உமக்கு வெளிப்படுத்தும் செய்தியாகும். அவர்கள் ஒன்று கூடி சதியாலோசனை செய்தவர்களாக (ஜோஸஃபைக் கிணற்றில் எறிந்து விடுவதென்ற) அவர்களுடைய ஒருமித்த முடிவை அவர்கள் செய்த போது, நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
மனிதர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை
[12:103] மனிதர்களில் பெரும்பாலோர், நீர் என்ன செய்த போதிலும் சரியே, நம்பிக்கை கொள்ள மாட்டார் கள்.
[12:104] அவர்களிடம் நீர் பணம் எதுவும் கேட்கவில்லை; மக்கள் அனைவருக்கும் இந்த நினைவூட்டலை நீர் ஒப்படைக்கின்றீர் அவ்வளவுதான்.
[12:105] வானங்கள் மற்றும் பூமியில் எத்தனையோ சான்றுகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு ள்ளன, ஆனால் கவனமின்றி அவர்கள், அவற்றைக் கடந்து செல்கின்றனர்!
நம்பிக்கை கொண்டவர்களில் பெரும்பாலோர் நரகத்திற்கென விதிக்கப்பட்டுள்ளனர்
[12:106] கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்களில் பெரும்பாலோர், இணைத்தெய்வ வழிபாட்டைச் செயல்படுத்திய வண்ணமே அன்றி அதைச் செய்வதில்லை.
[12:107] திணற அடிக்கின்ற ஒரு தண்டனை கடவுள்-இடமிருந்து அவர்களைத் தாக்கிவிடாதென்றோ அல்லது அவர்கள் அதனைச் சற்றும் எதிர்பாராத போது, அந்த நேரம் அவர்களிடம் திடீரென வந்து விடாதென்றோ, அவர்கள் உத்தரவாதம் கொண்டிருக்கின்றனரா?
[12:108] “இதுவே எனது பாதையாகும் : தெளிவான தொரு சான்றின் அடிப்படையில், நான் உங்களைக் கடவுள்-ன் பால் அழைக்கின்றேன், மேலும் என்னை பின்பற்றுபவர்களும் அவ்வண்ணமே செய்கின்றனர். கடவுள் துதிப்பிற்குரியவர். நான் இணைத்தெய்வ வழிபாடு செய்யும் ஒருவரல்ல” என்று கூறுவீராக.
[12:109] பல்வேறு சமூகங்களில் உள்ள மக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, நாம் உள்ளுணர்வூட்டிய ஆண்களை அன்றி எவரையும் உமக்கு முன்னர் நாம் அனுப்பவில்லை. பூமியில் சுற்றி திரிந்து, அவர்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உண்டான விளைவுகளை அவர்கள் பார்க்க வில்லையா? நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோருக்கு மறுவுலகின் வீடானது மிகவும் மேலானதாகும். இதன் பின்னராவது நீங்கள் புரிந்து கொள்வீர்களா?
வெற்றியானது, இறுதியில், நம்பிக்கையாளர்களுக்கு உரியதாகும்
[12:110] தூதர்கள் நம்பிக்கையிழந்து, மேலும் தாங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கப்பட்டு விட்டதாக எண்ணிக் கொள்ளும் போது, மிகச்சரியாக நம்முடைய வெற்றி அவர்களிடம் வருகின்றது. பின்னர் நாம் தேர்ந்தெடுத்தோரை நாம் காப்பாற்றிக் கொள்வோம், அதே சமயம் குற்றவாளிகளான மக்களுக்கு நம்முடைய தண்டனை தவிர்க்க முடியாதது.
நமக்கு வேண்டியதெல்லாம் குர்ஆன்தான்
[12:111] அவர்களுடைய சரித்திரத்தில், அறிவுத்திறன் கொண்டோருக்கொரு படிப்பினை உள்ளது. இது இட்டுக்கட்டப்பட்ட “ ஹதீஸ்” அல்ல; (குர்ஆனா கிய) இது முந்திய அனைத்து வேதங்களையும் உறுதிப்படுத்துகின்றது, ஒவ்வொன்றிற்கும் உரிய விபரங்களை வழங்குகின்றது, மேலும் நம்பிக்கை கொண்டோருக்கொரு வழிகாட்டி யாகவும் மேலும் அருளாகவும் உள்ளது.