சூரா 11: ஹூத் (ஹூத்)

[11:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[11:1] அ.ல.ர. இதன் வசனங்கள் பூரணப் படுத்தப்பட்டு பின்னர் விவரிக்கப்பட்ட* இது, ஒரு வேதமாகும். ஞானம் மிக்கவர், நன்கறிந்த வரிடமிருந்து இது வருகின்றது.

அடிகுறிப்பு:
*11:1குர்ஆனில் உள்ள அச்சுறுத்துகின்ற இரு அற்புத நிகழ்வுகளுக்குச் சாட்சியாகும் பாக்கியம் பெற்றதாக நம் தலைமுறை உள்ளது: (1) ஓர் அசாதாரணமான கணித குறியீடு (பின் இணைப்பு 1) ,மேலும் (2) சாத்தியமற்ற பரிமாணங்கள் கொண்ட ஓர் இலக்கிய அற்புதம். கணித அடிப்படையில் கட்டப்பட்ட ஒரு நூலை மனிதர்கள் எழுத முயற்சிக்கும் போது எண்களைக் குறிப்பிட்ட முறையில் அமைப்பதால் இலக்கியத்தரம் மோசமாகப் பாதிக்கப்படும். குர்ஆன் இலக்கியச் சிறப்பிற்கான மாதிரியை அமைக்கின்றது.
குர்ஆன்: கடவுளின் தூதர்
[11:2] பிரகடனம் செய்கின்றது: “கடவுள்-ஐ அன்றி நீங்கள் வழிபட வேண்டாம். ஓர் எச்சரிப்பவராகவும், அவ்வண்ணமே நற்செய்தியை தாங்கியவராகவும் அவரிடமிருந்து நான் உங்களிடம் வருகின்றேன்.
[11:3] “நீங்கள் உங்கள் இரட்சகரிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டும், பின்னர் அவரிடம் வருந்தித் திருந்த வேண்டும். அப்போது அவர் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு காலத்திற்கு, தாராள மாக உங்களுக்கு அருள்பாலிப்பார், மேலும் தன் கிருபையை, அதற்குத் தகுதியானவர்கள் மீது அருள்வார். நீங்கள் திரும்பி விட்டால், பின்னர் பயங்கரமான ஒரு நாளின் தண்டனை குறித்து உங்களுக்காக நான் அஞ்சுகின்றேன்”.
[11:4] உங்களுடைய இறுதித் திரும்புதல் கடவுள் இடமே உள்ளது, இன்னும் அவர் சர்வ சக்தியுடையவர்.
[11:5] உண்மையில், தங்கள் அழ்மனதின் எண்ணங் களை அவர் அறிந்து கொள்வதிலிருந்தும் அவற்றை தடுத்து விடுவதைப் போல, அவர்கள் மறைத்துக் கொள்கின்றனர். மெய்யாகவே, அவர்கள் தங்களுடைய ஆடைகளால் தங்களை மூடிக்கொள்ளும் போதே, அவர்களுடைய எல்லா இரகசியங்களையும் அறிவிப்புகளையும் அவர் அறிகின்றார். அவர் ஆழ்மனதின் எண்ணங்களை அறிகின்றார்.
வாழ்வாதாரங்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது
[11:6] கடவுள்-ஆல் வாழ்வாதாரத்திற்கு உத்தர வாதம் அளிக்கப்படாத எந்த ஒரு படைப்பும் பூமியில் இல்லை. இன்னும் அதன் பாதையையும் அதன் இறுதி விதியையும் அவர் அறிந்திருக் கின்றார். அனைத்தும், ஆழ்ந்ததோர் பதிவேட்டில் பதிவாகி உள்ளது.
[11:7] உங்களை சோதிப்பதற்காகவும், உங்களுக்கிடையில் நன்னெறியான செயல்கள் செய்கின்றவர்களை அடையாளம் காணுவதற்காகவும் அவர்தான் வானங்கள் மற்றும் பூமியை ஆறு நாட்களில் படைத்தவர்-*மேலும் அவருடைய (பூலோக) சாம்ராஜ்யம் முற்றிலும் தண்ணீரால் மூடப் பட்டிருந்தது.**ஆயினும், “இறப்பிற்குப் பின்னர் நீங்கள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவீர்கள்” என்று நீங்கள் கூறும்போது, நம்ப மறுப்பவர்கள், “இது தெளிவான சூன்யமாகும்” என்று கூறுவார்கள்.

அடிகுறிப்பு:
*11:7ஆறு நாட்கள் என்பது, ஏராளமான தகவல்களை நமக்கு வழங்கும் ஓர் அளவுகோல் அவ்வளவு தான். இவ்வாறாக, பரந்து விரிந்த, உயிரற்ற இந்த பௌதிகப் பிரபஞ்சம் இரு நாட்களில் படைக்கப்பட்டது அதே சமயம் மிகச் சிறிய துகளான “ பூமி” நான்கு நாட்களில் படைக்கப்பட்டது என்று நாம் அறிகின்றோம் (41: 10-12) . பூமியில் வசிப்பவர்களுக்கு வாழ்வாதாரமான உணவு, தண்ணீர் மற்றும் பிராணவாயு ஆகியவை மிகச்சரியாக கணக்கிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட வேண்டியதாக இருந்தது. **11:7 பூமி துவக்கத்தில் தண்ணீரால் மூடப்பட்டதாக இருந்தது. அதனைத் தொடர்ந்து , நிலப்பரப்புகள் தோன்றின, மேலும் கண்டங்கள் மெதுவாக தனியே பிரிந்து ஒதுங்கின.
[11:8] மேலும், அவர்கள் உள்ளாகியிருக்கும் தண்டனையை நாம் தாமதப்படுத்தினால்-ஏனெனில் அதனை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கென நாம் நிறுத்தி வைத்துள்ளோம்-அவர்கள், “அவரைத் தடுத்துக் கொண்டிருப்பது எது?” என்று கூறுகின்றனர். உண்மையில், அது அவர்களிடம் வந்து விட்டால், எதுவும் அதனைத் தடுத்து விடமுடியாது, மேலும் அவர்களுடைய பரிகாசம் மீண்டும், மீண்டும் அவர்களிடமே திரும்பி வரும்.
[11:9] எப்பொழுதெல்லாம் நம்மிடமிருந்து, கருணை யைக் கொண்டு மனிதனுக்கு நாம் அருள் பாலித்து, பின்னர் அதனை அகற்றி விடும் போது, அவன் விரக்தியடைந்தவனாகவும், நன்றியற்றவனாகவும் மாறிவிடுகின்றான்.
[11:10] துன்பம் அவனைத் துன்புறுத்திய பின்னர், அவனுக்கு நாம் அருள்பாலிக்கும் போதெல்லாம், “எல்லாத் துன்பங்களும் என்னை விட்டு அகன்று விட்டன” என்று அவன் கூறுகின்றான்;” அவன் உணர்ச்சி வசப்பட்டவனாகவும், கர்வம் கொண்ட வனாகவும் ஆகிவிடுகின்றான்.
[11:11] உறுதியாய் விடாமுயற்சியுடன், மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் மன்னிப்பிற்கும் ஒரு தாராளமான பிரதிபலனுக்கும் தகுதியா கின்றனர்.
கடவுளின் வெளிப்பாடு கனமானது
[11:12] உமக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றில் சில வற்றை புறக்கணிக்க நீர் விரும்பக் கூடும், மேலும் அதனால் தொல்லையடையவும் கூடும். இன்னும், “இவரிடம் எந்தப் பொக்கிஷமோ, அல்லது ஒரு வானவரோ இறங்கி வராம லிருப்பது எப்படி?” என்றும் அவர்கள் கூறக் கூடும். நீர் ஓர் எச்சரிப்பவர் மட்டுமே; கடவுள் அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றார்.
குர்ஆன்: இதைப் போன்ற ஒன்றை செய்ய இயலாது
[11:13] “இவர் (குர்ஆனை) இட்டுக்கட்டினார்” என்று அவர்கள் கூறினால், அவர்களிடம், “அப்படி யென்றால், இவற்றைப் போன்ற, பத்து சூராக்களை இட்டுக்கட்டிக் கொண்டு வாருங்கள்*, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், கடவுள்-ஐ அன்றி, உங்களால் முடிந்தவர்களை அழைத்துக் கொள்ளுங்கள்”* என்று கூறுவீராக.

அடிகுறிப்பு:
*11:13 குர்ஆனின் கணித அற்புதம், அதே மாதிரி செய்ய இயலாதது(பின் இணைப்பு 1ஐ பார்க்கவும்).
[11:14] அவர்கள் உமது சவாலைச் சந்திக்கத் தவறி னால், பின்னர் இது கடவுள்-ன் அறிவைக் கொண்டு வெளிப்படுத்தப்பட்டதென்றும், மேலும் அவரைத் தவிர தெய்வம் இல்லை யென்றும் அறிந்து கொள்ளுங்கள். இப்போது நீங்கள் அடிபணிவீர்களா?
[11:15] இவ்வுலக வாழ்வையும், அதன் ஆடம்பரப் பொருட்களையும் தேடுகின்றவர்களுக்கு, அவர்களுடைய செயல்களுக்குரிய கூலியை நாம் இவ்வாழ்வில் சிறிதளவும் குறைவின்றி அவர்களுக்குக் கொடுப்போம்.
[11:16] அவர்கள் தான் தங்களுடைய மறுவுலகின் பங்கை விட்டு விட்டவர்கள், மேலும் அதன் விளைவாக, நரகமே அவர்களுடைய பங்காகும். அவர்களுடைய செயல்கள் யாவும் வீணேயாகும்; அவர்கள் செய்தவை அனைத்தும் பயனற்றதாகி விட்டது.
குர்ஆனின் கணிதக் குறியீடு
[11:17] தங்கள் இரட்சகரிடமிருந்து உறுதியானசான்று* கொடுக்கப்பட்டு, அவரிடமிருந்து ஒரு சாட்சி மூலம் எடுத்துரைக்கப்பட்டு, மேலும் இதற்கு முன்னர், மோஸஸின் புத்தகம் ஒரு முன் மாதிரியாகவும்,** ஒரு கருணையாகவும் அமைந்ததே, அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் நிச்சயமாக நம்பிக்கை கொள்வார்கள். பல்வேறு பிரிவினரிலுள்ள நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை, நரகம் அவர்களை எதிர் பார்த்துக் காத்திருக்கின்றது. எந்த சந்தேகத்திற்கும் இடம் கொடுக்க வேண்டாம்; இது உமது இரட்சகரிடமிருந்துள்ள சத்தியம் ஆகும், ஆனால் மக்களில் பெரும் பாலோர் நம்ப மறுக்கின்றனர்.

அடிகுறிப்பு:
*11:17 குர்ஆனுடைய 19ன் அடிப்படையிலான கணித குறியீடு, இது கடவுளால் இயற்றப்பட்டது என்பதற்கான உள்ளமைந்த சான்றாக இருக்கின்றது. “ பய்யினஹ்” (சான்று) என்ற வார்த்தை குர்ஆனில் 19 முறை குறிப்பிடப்பட்டுள்ளது என்பது கவனிக்கத் தக்கதாகும். **11:17 இப்போது வெளிப்பட்டுள்ளபடி மோஸஸின் புத்தகமும் 19ஐப் பொது வகு எண்ணாகக் கொண்டு கணிதக் கட்டமைப்பு செய்யப்பட்டிருந்தது. 46:10ன் அடிக்குறிப்பு மற்றும் பின் இணைப்பு 1ஐ பார்க்கவும்.
[11:18] கடவுள்-ஐப் பற்றி பொய்களை இட்டுக் கட்டுபவர்களை விட மிகத் தீயவர்கள் யார்? அவர்கள் தங்களுடைய இரட்சகரின் முன் கொண்டு வரப்படுவார்கள், மேலும் சாட்சிகள், “இவர்கள் தான் தங்கள் இரட்சகர் பற்றிப் பொய்யுரைத்தவர்கள். வரம்பு மீறியவர்கள் மீது கடவுள்-ன் தண்டனை ஏற்பட்டு விட்டது” என்று கூறுவார்கள்.
[11:19] அவர்கள் கடவுள்-ன் பாதையை விட்டும் தடுப்பதோடு அதனைக் கோணலாக்கவும் முயற்சி செய்கின்றனர், மேலும் அவர்கள் மறுவுலகின் மீது நம்பிக்கையற்றவர்களாக உள்ளனர்.
நம்ப மறுப்போர்
[11:20] அவர்கள் ஒருபோதும் தப்பித்து விடமுடியாது, அன்றி கடவுள்-க்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்யும் எந்த இரட்சகர்களையோ அல்லது எஜமானர்களையோ, அவர்கள் காணவும் மாட்டார்கள். அவர்களுக்கு தண்டனை இரு மடங்காக்கப்படும். அவர்கள் செவியேற்கத் தவறி விட்டனர், மேலும் அவர்கள் பார்க்கவும் தவறிவிட்டனர்.
[11:21] இவர்கள்தான் தங்கள் ஆன்மாக்களை இழந்து விட்டவர்கள், மேலும் அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்த இணைத் தெய்வங்கள் அவர்களைக் கைவிட்டு விடும்.
[11:22] மறுவுலகில், மிக மோசமாக நஷ்டப்பட்டவர் களாக அவர்கள் இருப்பார்கள் என்பதில், சந்தேகம் இல்லை.
நம்பிக்கையாளர்கள்
[11:23] நம்பிக்கை கொண்டு, நன்னெறியானதொரு வாழ்வு நடத்தி, மேலும் தங்கள் இரட்சகருக்குத் தங்களையே அர்ப்பணிப்போரைப் பொறுத் தவரை, அவர்கள் சுவனவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அங்கே என்றென்றும் தங்கி இருப்பார்கள்.
[11:24] இவ்விரு கூட்டத்தாருக்குரிய உதாரணமாவது, குருடர் மற்றும் செவிடரை பார்ப்பவர் மற்றும் கேட்பவரோடு ஒப்பிடுவதைப் போன்றதாகும். அவர்கள் சமமானவர்களா? நீங்கள் கவனத்தில் கொள்ள மாட்டீர்களா?
நோவா
[11:25] நாம் நோவாவை அவருடைய சமூகத்தாரிடம், “நான் தெளிவானதொரு எச்சரிப்பவராக உங்க ளிடம் வந்துள்ளேன்” என்று கூறியவராக அனுப்பினோம்.
[11:26] “நீங்கள் கடவுள்-ஐ அன்றி வழிபட வேண்டாம், வலிமிகுந்ததொரு நாளின் தண்டனையை உங்களுக்காக நான் அஞ்சுகின்றேன்”.
[11:27] அவருடைய சமூகத்தாரில் இருந்த நம்ப மறுத்த தலைவர்கள் , “நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் என்பதை விட அதிகமாக எதுவுமில்லை என்றே நாங்கள் காண்கின்றோம், மேலும் உம்மை முதலில் பின்பற்றும் மக்கள் எங்களில் மிக மோசமானவர்களாக இருப்பதையே நாங்கள் காண்கின்றோம். எங்களுக்கு மேலாக எந்த மேன்மையும் நீர் பெற்றிருக்கவில்லை என்பதையே நாங்கள் காண்கின்றோம். உண்மையில், நீங்கள் பொய்யர்கள் என்றே நாங்கள் கருதுகின்றோம்”என்று கூறினார்கள்.
[11:28] அவர் கூறினார், “என் சமூகத்தாரே, என் இரட்சகரிடமிருந்து ஓர் உறுதியான சான்றை நான் பெற்றிருந்தாலுமா? நீங்கள் அதனைக் காணமுடியாத போதிலும், தனது கருணை யிலிருந்து எனக்கு அவர் அருள்பாலித்திருந் தாலுமா? இதன் மீது நம்பிக்கை கொள்ளுமாறு நாங்கள் உங்களை நிர்பந்திக்கவா போகின்றோம்?
[11:29] “என் சமூகத்தாரே, உங்களிடம் நான் பணம் எதுவும் கேட்பதில்லை; என்னுடைய கூலி கடவுள் இடமிருந்தே வருகின்றது. நம்பிக்கை கொண்டவர்களை நான் வெளியேற்றுவதில்லை; அவர்கள் தங்களுடைய இரட்சகரைச் சந்திப் பார்கள் (மேலும் அவர் மட்டுமே அவர்களுக்குத் தீர்ப்பு அளிப்பார்). அறிவில்லாத மக்களாகவே உங்களை நான் காண்கின்றேன்.
[11:30] “என் சமூகத்தாரே, அவர்களை நான் வெளி யேற்றி விட்டால், கடவுள்-க்கு எதிராக எனக்கு ஆதரவளிக்க யாரால் இயலும்? நீங்கள் கவனத்தில் கொள்ள மாட்டீர்களா?
சக்திகள் அனைத்தும் கடவுளுக்குரியது
[11:31] “கடவுள்-ன் பொக்கிஷங்களை நான் சொந்த மாகக் கொண்டுள்ளேன் என்று நான் உரிமை கோரவில்லை, அன்றி எதிர்காலத்தையும் நான் அறிய மாட்டேன், அன்றி நான் ஒரு வானவர் என்றும் கூறவில்லை. அன்றி உங்களுடைய கண்களுக்கு இழிவானவர்கள் மீது, பாக்கி யங்கள் எதையும் கடவுள் அளிக்க மாட்டார் என்றும் நான் கூறவில்லை. அவர்களுடைய ஆழ்மனதின் எண்ணங்களில் இருப்பது என்ன என்பதைக் கடவுள் மிக நன்றாக அறிவார் (இதனை நான் செய்திருந்தால்,) நான் ஒரு வரம்பு மீறியவர் ஆகியிருப்பேன்.”
[11:32] அவர்கள், “நோவாவே, நீர் எங்களுடன் வாதம் செய்தீர், மேலும் தொடர்ந்து வாதித்துக் கொண்டே இருக்கின்றீர். நீர் உண்மையாளராக இருந்தால், எதனைக் கொண்டு எங்களை நீர் அச்சுறுத்துகின்றீரோ அந்த அழிவைக் கொண்டு வருமாறு உம்மிடம் நாங்கள் சவால் விடுகின்றோம்” என்று கூறினார்கள்.
[11:33] அவர் கூறினார், “கடவுள் ஒருவர்தான் அதனை உங்களிடம் கொண்டு வருபவர், அவ்வாறு அவர் நாடினால், அப்போது நீங்கள் தப்பித்து விட முடியாது.
[11:34] “நான் உங்களுக்கு உபதேசம் செய்தாலும், உங்களை வழிகேட்டில் அனுப்ப வேண்டும் என்பது கடவுள் நாட்டமாகயிருப்பின், என்னு டைய உபதேசம் உங்களுக்குப் பயனளிக்காது. அவரே உங்கள் இரட்சகர், மேலும் அவரிடமே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள்.”
[11:35] “இந்தக் கதையை இவர் உருவாக்கிக் கொண்டார்” என்று அவர்கள் கூறுவார் களாயின், அப்போது “இதனை நான் உருவாக் கியிருப்பேனாயின், என் குற்றத்திற்கு நானே பொறுப்பாளியாவேன், மேலும் நீங்கள் செய்யும் எந்தக் குற்றத்திற்கும், நான் குற்றமற்றவன் ஆவேன்” என்று கூறுவீராக.
[11:36] நோவாவிற்கு உள்ளுணர்வு அளிக்கப்பட்டது: “ஏற்கனவே நம்பிக்கை கொண்டோரைத் தவிர, உமது சமூகத்தாரில் எவரும் இதற்கு அப்பால் நம்பிக்கை கொள்ளப்போவதில்லை. அவர் களுடைய செயல்களால் துக்கமடையாதீர்.
[11:37] “நம்முடைய கவனமிக்க பார்வையின் கீழ், மேலும் நம்முடைய உள்ளுணர்வைக் கொண்டு, படகைக் கட்டுவீராக, மேலும் வரம்பு மீறியவர் களின் சார்பாக என்னிடம் இறைஞ்சிப் பிரார்த்திக்காதீர்; அவர்கள் மூழ்க வேண்டும் என்று விதிக்கபட்டு விட்டார்கள்.”
இறுதியாகச் சிரிப்பவரின் சிரிப்பே சிறந்தது
[11:38] அவர் படகைக் கட்டிக் கொண்டிருக்கும் போது, அவருடைய சமூகத்தாரில் சிலர் அவரைக் கடந்து சென்ற போதெல்லாம் அவரைப் பார்த்து நகைத்தனர். அவர் கூறினார், “எங்களைப் பார்த்து நீங்கள் நகைக்கலாம், ஆனால் நீங்கள் நகைப்பதைப் போலவே நாங்களும் உங்களைப் பார்த்து நகைக்கின்றோம்.
[11:39] “இழிவு மிக்கதோர் தண்டனையை அனுபவிக் கவும், மேலும் நிலைத்திருக்குமொரு வேதனை க்கு உள்ளாகப் போவதும் யார் என்பதை நீங்கள் நிச்சயம் கண்டு கொள்வீர்கள்”.
[11:40] நம்முடைய தீர்ப்பு வந்து, மேலும் சூழ்நிலைக் கொதித்தெழுந்தபோது, நாம் “ மரண தண்டனை அளிக்கப்பட்டவர்களைத் தவிர, அதில் உம்முடைய குடும்பத்தாரோடு, ஒவ் வொரு வகையிலும்* ஒரு ஜோடியை ஏற்றிக் கொண்டு செல்வீராக. நம்பிக்கை கொண்டவர் களை உம்மோடு ஏற்றிக் கொள்வீராக” என்று கூறினோம், மேலும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்கள் மிகச் சிலர் மட்டுமே.

அடிகுறிப்பு:
*11:40&44 நோவாவின் படகு சாதாரணமான கயிறுகளால் ஒன்றிணைத்துக் கட்டப்பட்ட மரக்கட்டைகளால் ஆனது (54:13). பொதுவான கருத்திற்கு மாற்றமாக, அவ்வெள்ளம் இன்றைய சாக்கடலைச் சுற்றியுள்ள பகுதிகள் வரை மட்டுமே இருந்தது, மேலும் அந்தப் பிராணிகள் நோவாவின் கால் நடைகள் மட்டுமே, பூமியில் வாழ்ந்த எல்லாப் பிராணிகளும் அல்ல என்பது கடவுளின் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.
[11:41] அவர், “வந்து படகில் ஏறிக் கொள்ளுங்கள். இது மிதந்து செல்வதும், நங்கூரமிடப்படுவதும் கடவுள் பெயராலேயே ஆகும். என் இரட்சகர் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்”என்று கூறினார்.
[11:42] மலைகளைப் போன்ற அலைகளின் மீது அவர்களுடன் அது மிதந்து சென்ற போது, தனிமைப்படுத்தப்பட்ட தன்னுடைய மகனை : “என் மகனே, வந்து எங்களுடன் ஏறிக்கொள்; நம்ப மறுப்போருடன் இருக்காதே”என நோவா அழைத்தார்.
[11:43] அவன், “தண்ணீரில் இருந்து என்னைக் காத்துக் கொள்ள, ஒரு மலையின் உச்சியின் மீது நான் புகலிடம் எடுத்துக் கொள்வேன்” என்று கூறினான். அவர் , “இன்றைய தினம் கடவுள்-ன் தீர்ப்பி லிருந்து எவரொருவரையும் எதுவும் காப்பாற்றி விடமுடியாது; அவருடைய கருணைக்குத் தகுதியானவர்கள் மட்டுமே (காப்பாற்றப்படுவர்)” என்று கூறினார். அலைகள் அவர்களைப் பிரித்தன, மேலும் அவன் மூழ்கடிக்கப் பட்டவர்களில் ஒருவனாகி விட்டான்.
படகு எங்கு கரை சேர்ந்தது
[11:44] “பூமியே, உனது தண்ணீரை விழுங்கி விடு,” மேலும் “வானமே, நிறுத்து” என்று பிரகடனம் செய்யப் பட்டது. அப்போது தண்ணீர் வற்றியது; தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது. இறுதியில் படகு *ஜுதி மலைகளில் தங்கியது. அப்போது: “வரம்பு மீறியவர்கள் அழிந்து போனார்கள்” என்று பிரகடனம் செய்யப்பட்டது.

அடிகுறிப்பு:
*11:44 இதற்கு 11:40ன் அடிக்குறிப்பைக் பார்க்கவும்.
[11:45] நோவா தன் இரட்சகரிடம்: “என்னுடைய இரட் சகரே, என்னுடைய மகன் என் குடும்பத்தின் ஓர் அங்கத்தினன் ஆவான், மேலும் உமது வாக் குறுதி சத்தியமானது. ஞானம் உடையோரில் எல்லாம் நீரே மிகுந்த ஞானம் உடையவர்” என்று இறைஞ்சிப் பிரார்த்தித்தார்.
பரிந்துரை எனும் கட்டுக் கதை*
[11:46] அவர், “நோவாவே, அவன் உமது குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல. நீர் அறியாத சிலவற்றை* என்னிடம் கேட்பது நன்னெறியல்ல. அறிவில்லாத வரைப் போல் நீர் ஆகிவிடாதிருக்கும் பொருட்டு, நான் உமக்கு விவரமாக விளக்கு கின்றேன்” என்று கூறினார்.

அடிகுறிப்பு:
*11:46 பரிந்துரை என்பது மனிதர்களை இணைவழிபாட்டின் பால் மயக்கி இழுத்துச் செல்வதற்கு, சாத்தானின் திறன் மிக்கதொரு தூண்டில் இரையாகும். எப்படி இருப்பினும், ஆப்ரஹாம் தன் தந்தைக்கு உதவி செய்ய முடியவில்லை, அன்றி நோவா தன் மகனுக்கு உதவி செய்ய முடியவில்லை, அன்றி முஹம்மது தன் சொந்த உறவினர்களுக்கு உதவி செய்ய முடியவில்லை (2:254, 9:80& 114).
[11:47] அவர், “என்னுடைய இரட்சகரே, நான் அறியாத எந்த ஒன்றையும் மீண்டும் நான் உம்மிடம் இறைஞ்சாமலிருக்கும் பொருட்டு, உம்மிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். நீர் என்னை மன்னித்து, மேலும் என் மேல் கருணை கொண்டாலே அன்றி, நான் நஷ்டமடைந் தோருடனே இருப்பேன்” என்று கூறினார்.
[11:48] “நோவாவே, உம்மீதும், உம்முடனிருக்கும் தோழர்களின் சந்ததியிலிருந்து தோன்றும் தேசங்களின் மீதும் அமைதியுடனும் மேலும் அருட்கொடைகளுடனும் நீர் கரையிறங்கு வீராக. உங்கள் சந்ததியில் இருந்து தோன்றும் மற்ற தேசங்களைப் பொறுத்த வரை, நாம் அவர்களுக்கு சிறிது காலம் அருள்பாலிப்போம், பின்னர் அவர்களை வலி மிகுந்ததொரு தண்டனைக்கு உள்ளாக்குவோம்” என்று பிரகடனம் செய்யப்பட்டது.
[11:49] இது, கடந்த காலத்தில் இருந்து நாம் உமக்கு வெளிப்படுத்தும் செய்தி ஆகும். இதற்கு முன்னர்-நீர் அவற்றைப் பற்றி எவ்வித அறிவும் பெற்றிருக்கவில்லை-நீரோ அல்லது உம்முடைய சமூகத்தாரோ. ஆகையால், பொறுமையுடன் இருப்பீராக. இறுதி வெற்றி நன்னெறியாளர்களுக்கே உரியது.
ஹூத்: அதே ஒரே தூதுச் செய்தி
[11:50] ஆதுகளிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை நாம் அனுப்பினோம். அவர் கூறினார், “என் சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுங்கள்; அவரைத் தவிர உங்களுக்கு வேறு தெய்வம் இல்லை. நீங்கள் கற்பனையே செய்கின்றீர்கள்.
[11:51] “என்னுடைய சமூகத்தாரே, நான் உங்களிடம் கூலி எதுவும் கேட்கவில்லை. எனது கூலி என்னைத் துவக்கியவரிடமிருந்து மட்டுமே வருகின்றது. நீங்கள் புரிந்து கொள்ள வில்லையா?
[11:52] “என்னுடைய சமூகத்தாரே, உங்கள் இரட்ச கரிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள், பின்னர் அவரிடம் வருந்தித்திருந்துங்கள். அப்போது அவர் விண்ணிலிருந்து உங்களுக்கு வாழ்வாதாரங் களைப் பொழிவார், மேலும் உங்களுடைய பலத்தை அதிகரிப்பார். வரம்பு மீறியவர்களாக திரும்பி விடாதீர்கள்.”
[11:53] அவர்கள் கூறினர், “ஹூதே, நீர் எந்தச் சான்றையும் எங்களுக்குக் காட்டவில்லை, மேலும் நீர் கூறுகின்றீர் என்பதற்காக எங்களுடைய தெய்வங்களை நாங்கள் கை விட்டு விடப் போவதில்லை. நாங்கள் ஒருபோதும் உம்மோடு நம்பிக்கையாளர்களாக இருக்கப் போவதில்லை.
[11:54] “எங்களுடைய தெய்வங்களில் சில, ஒரு சாபத்தைக் கொண்டு உம்மைச் சபித்து விட்டது என்றே நாங்கள் நம்புகின்றோம்”. அவர் கூறினார், “நான் கடவுள் முன் சாட்சி அளிக்கின்றேன், மேலும் நீங்களும் கூட சாட்சியளியுங்கள், நீங்கள் அமைத்துக் கொண்ட இணைத் தெய்வங்களை நான் கைவிட்டு விட்டேன்-
[11:55] “அவரை அன்றி. எனவே, தாமதமின்றி, உங்களுடைய ஒருமித்த முடிவை எனக்குக் கூறுங்கள்.
[11:56] “நான் என்னுடைய உறுதியான நம்பிக்கையை, என்னுடைய இரட்சகரும், மேலும் உங்களுடைய இரட்சகருமாகிய கடவுள்-இடம் வைத்து விட்டேன். அவர் கட்டுப்படுத்தாத எந்த ஒரு படைப்பும் இல்லை. என் இரட்சகர் நேரான பாதையின் மீது இருக்கின்றார்.
[11:57] “நீங்கள் திரும்பிச் சென்று விட்டால், எதைக் கொண்டு நான் அனுப்பப்பட்டேனோ அதை நான் உங்களிடம் ஒப்படைத்து விட்டேன். என்னுடைய இரட்சகர் உங்களுக்குப் பதிலாக உங்களுடைய இடத்தில் வேறு சமூகத்தாரை அமைத்துவிடுவார்; நீங்கள் அவருக்குச் சிறிதளவும் தீங்கிழைத்து விட முடியாது. என் இரட்சகர் அனைத்து விஷயங் களையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.”
[11:58] நம்முடைய தீர்ப்பு வந்தபோது, நாம் ஹூதையும் அவருடன் நம்பிக்கை கொண்டோரையும், நம்மிடமிருந்துள்ள கருணையால் காத்துக் கொண்டோம். ஒரு பயங்கரமான தண்டனையி லிருந்து நாம் அவர்களைக் காப்பாற்றினோம்.
[11:59] ஆதுகள் இப்படிப்பட்டவர்களே-அவர்கள் தங்களுடைய இரட்சகரின் வெளிப்பாடுகளை அலட்சியம் செய்தனர், அவருடைய தூதர்களு க்குக் கீழ்ப்படிய மறுத்தனர், மேலும் ஒவ்வொரு பிடிவாதமிக்கக் கொடுங்கோலரின் வழிகளையும் பின்பற்றினர்.
[11:60] அதன் விளைவாக, அவர்கள் இவ்வுலகிலும், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளிலும் தண்டித்தலுக்கு உள்ளாகி விட்டார்கள். உண்மையில், ஆதுகள் தங்கள் இரட்சகரை ஏற்க மறுத்தனர். உண்மையில், ஹூதின் சமூகத்தினராகிய ஆதுகள் அழிந்தனர்.
ஸாலிஹ்: அதே ஒரே தூதுச் செய்தி
[11:61] தமூதுகளிடம், அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை நாம் அனுப்பினோம். அவர், “என் சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுங்கள்; அவரைத் தவிர வேறு தெய்வம் உங்களுக்கு இல்லை. அவர் உங்களை பூமியிலிருந்து துவக்கினார், பின்னர் அதிலேயே உங்களைக் குடியமர்த்தினார். அவருடைய மன்னிப்பை நீங்கள் தேட வேண்டும், பின்னர் அவரிடம் வருந்தித்திருந்த வேண்டும். என்னுடைய இரட்சகர் எப்பொழுதும் அருகிலிருப்பவர், பதிலளிப்பவர்” என்று கூறினார்.
[11:62] அவர்கள், “ஸாலிஹே, இதற்கு முன்னர் நீர் எங்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்தீர். எங்களுடைய பெற்றோர்கள் எதை வழிபட்டுக் கொண்டிருக்கின்றார்களோ அதை வழிபடு வதை விட்டும் எங்களை நீர் தடுக்கின்றீரா? நீர் எங்களிடம் கூறிய ஒவ்வொன்றைக் குறித்தும் ஏராளமான சந்தேகங்களை நாங்கள் கொண்டிருக்கின்றோம்” என்று கூறினார்கள்.
நம்ப மறுப்போர் எப்பொழுதும் நஷ்டவாளிகளே
[11:63] அவர் கூறினார், “என் சமூகத்தாரே, என்னுடைய இரட்சகரிடமிருந்து உறுதியான சான்றையும், மேலும் அவரிடமிருந்து கருணையையும் நான் பெற்றிருந்தாலுமா? நான் அவருக்கு கீழ்ப்படிய மறுத்தால், கடவுள்-க்கு எதிராக எனக்கு ஆதரவளிப்பவர் யார்? நீங்கள் என்னுடைய நஷ்டத்தை மட்டுமே அதிகரிக்க இயலும்.
[11:64] “என்னுடைய சமூகத்தாரே, உங்களுக்கு ஒரு சான்றாகப் பணியாற்றும் கடவுள்-ன் பெண் ஒட்டகம் இது. கடவுள்-ன் பூமியில் இருந்து உண்ணுவதற்கு இதனை நீங்கள் விட வேண்டும், மேலும் நீங்கள் ஒரு உடனடி தண்டனைக்கு உள்ளாகாமல் இருக்கும் பொருட்டு, எவ்விதத் தீங்கும் கொண்டு இதனைத் தீண்டாதீர்கள்.”
[11:65] அவர்கள் அதனை வெட்டிக் கொன்றனர். அப்போது அவர், “நீங்கள் வாழ்வதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. இது தவிர்த்து விட முடியாததொரு முன்னறிவிப்பாகும்” என்று கூறினார்.
[11:66] நம்முடைய தீர்ப்பு வந்த போது, அந்நாளின் இழிவிலிருந்து ஸாலிஹையும், அவருடன் நம்பிக்கை கொண்டோரையும் நம்மிடமிருந்துள்ள கருணை யால் நாம் காத்துக் கொண்டோம். உம்முடைய இரட்சகர் சக்தி மிக்கவர், சர்வ வல்லமையுடையவர்.
[11:67] வரம்பு மீறியவர்கள் பேரழிவின் மூலம் அழிக்கப் பட்டனர், இறந்தவர்களாக அவர்களுடைய வீடுகளில் அவர்கள் விடப்பட்டனர்.
[11:68] அது அவர்கள் ஒரு போதும் அங்கே வசித்திரா ததைப் போல் ஆனது. உண்மையில், தமூதுகள் தங்கள் இரட்சகரை ஏற்க மறுத்து விட்டனர். நிச்சயமாக, தமூதுகள் தங்களுடைய அழிவிற்கு உள்ளாகி விட்டனர்.
ஆப்ரஹாமும், லோத்தும்
[11:69] ஆப்ரஹாமிடம் நமது தூதர்கள் நற்செய்தியுடன் சென்றபோது, அவர்கள், “அமைதி” என்று கூறினார்கள். அவரும், “அமைதி,” என்று கூறினார், மேலும் விரைவில் அவர் ஒரு பொறித்த கன்றின் இறைச்சியைக் கொண்டு வந்தார்.
[11:70] அவர்களுடைய கரங்கள் அதனைத் தொட வில்லை என்பதை அவர் கண்டபோது, அவர்களைப் பற்றி அவர் சந்தேகமும், அச்சமும் கொண்டார். அவர்கள், பயப்படவேண்டாம், நாங்கள் லோத்தின் சமூகத்தாரிடம் அனுப்பப்பட்டுள்ளோம்” என்று கூறினார்கள்.
[11:71] அவருடைய மனைவி நின்று கொண்டிருந்தார், மேலும் நாம் ஐசக் மற்றும் ஐசக்கிற்கு பின்னர் ஜேக்கப் குறித்த நற்செய்தியைக் கொடுத்தபோது, அவர் சிரித்தார்.
[11:72] அவர், “எனக்குக் கேடுதான், என்னுடைய வயதில் எப்படி நான் ஒரு குழந்தையைச் சுமக்க இயலும், மேலும் இதோ என் கணவர், ஒரு வயதான மனிதர்? இது உண்மையில் ஆச்சர்யமே!” என்று கூறினார்.
[11:73] அவர்கள், “ கடவுள்-க்கு ஆச்சரியமானதாக இதை நீர் காண்கின்றீரா? புனித ஆலயத்தில் வசிப்போரே, கடவுள் தனது கருணையையும், அருட்கொடைகளையும் உங்கள் மீது வழங்கி யுள்ளார். அவர் புகழுக்குரியவர், மகிமை மிக்கவர்” என்று கூறினார்கள்.
[11:74] ஆப்ரஹாமின் பயம் தணிந்து, மேலும் நற்செய்தி அவரிடம் கொடுக்கப்பட்டபோது, அவர் லோத்துடைய சமூகத்தாரின் சார்பாக நம்முடன் வாதம் செய்ய முன் வந்தார்.
[11:75] உண்மையில், ஆப்ரஹாம் இரக்கமுடையவர், மிகுந்த கனிவுடையவர், மேலும் கீழ்படிந்தவர் ஆக இருந்தார்.
[11:76] “ஆப்ரஹாமே, இதிலிருந்து விலகிக் கொள்ளும். உமது இரட்சகரின் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது; அவர்கள் தவிர்த்து விட முடியாத தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.”
ஓரினச் சேர்க்கை கடுமையான தண்டனைக்குரியது
[11:77] நம்முடைய தூதர்கள் லோத்திடம் சென்ற போது, அவர்கள் தவறாக நடத்தப்பட்டனர், மேலும் அவர்களுடைய வருகையால் அவர் சங்கடத் திற்குள்ளானார். அவர், “ இது ஒரு கஷ்டமான நாளாகும்”என்று கூறினார்.
[11:78] அவருடைய சமூகத்தார் விரைந்து வந்தனர்; அவர்கள் தங்களுடைய பாவச் செயல்களுக்குப் பழகியே வளர்ந்திருந்தனர். அவர், “என் சமூகத் தாரே, இதற்கு பதில் என்னுடைய மகள்களை நீங்கள் எடுத்துக் கொண்டால், அது உங்களுக்கு மிகத் தூய்மையானதாக இருக்கும். நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியுடன் இருக்க வேண்டும்; என்னுடைய விருந்தினர்களோடு என்னைச் சங்கடப்படுத்தாதீர்கள். உங்களுக்கிடையில் நியாயமான மனிதர் ஒருவர் கூட இல்லையா?” என்று கூறினார்.
[11:79] அவர்கள் , “ உமது மகள்களின் எந்தத் தேவை யும் எங்களுக்கு இல்லை என்பதை நீர் நன்கறி வீர்; எங்களுக்கு வேண்டியது என்ன என்பதை நீர் மிகச்சரியாக அறிவீர்” என்று கூறினார்கள்.
[11:80] அவர், “ நான் போதுமான பலம் உடையவராக வோ, அல்லது ஒரு சக்தி மிக்க கூட்டாளியைக் கொண்டவராகவோ இருந்திருக்க வேண்டும் என விரும்புகின்றேன்!” என்று கூறினார்.
[11:81] (வானவர்கள்), “ லோத்தே, நாங்கள் உமது இரட்ச கரின் தூதர்கள் ஆவோம், மேலும் இம்மக்களால் உம்மைத் தொட முடியாது. நீர் உமது குடும்பத் தினருடன் உம் மனைவியைத் தவிர; இரவுப் பொழுதில் புறப்பட்டுவிடும், மேலும் உங்களில் எவர் ஒருவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம், மரண தண்டனை அளிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து அவளும் மரண தண்டனை அளிக்கப் பட்டவளாகி விட்டாள். அதிகாலைதான் அவர் களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரமாகும். அதி காலை மிகவும் சீக்கிரமானதல்லவா? என்று கூறினார்கள்.
சோடம் & கொமர்ராஹ் நிலைகுலைந்தது
[11:82] நமது தீர்ப்பு வந்த போது, நாம் அதனைத் தலை கீழாகப் புரட்டிவிட்டோம், மேலும் அதில் கடின மான, நாசம் விளைவிக்கும் பாறைகளைப் பொழிந் தோம்.
[11:83] இத்தகைய பாறைகள் வரம்பு மீறியவர்களைத் தாக்குவதற்கென்றே உமது இரட்சகரால் நியமிக்கப்பட்டிருந்தன.
ஷுஐப்: அதே ஒரே தூதுச்செய்தி
[11:84] மித்யனுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை நாம் அனுப்பினோம். அவர் கூறினார், “என்னுடைய சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுங்கள்; அவரைத்தவிர வேறு தெய்வம் உங்களுக்கு இல்லை. நீங்கள் அளந்திடும் போதும், அல்லது எடை போடும் போதும் மோசடி செய்யாதீர்கள். நீங்கள் வளம் பெற்றவர்களாக இருப்பதை நான் காண்கின்றேன், மேலும் சூழ்ந்து கொள்ளும் ஒரு நாளின் தண்டனையை குறித்து உங்களுக்காக நான் அஞ்சுகின்றேன்.
[11:85] “என்னுடைய சமூகத்தாரே, அளவையும், மற்றும் எடையையும் நீங்கள் நீதத்துடன், நிறைவாகக் கொடுக்க வேண்டும். மக்களை, அவர்களுடைய உரிமைகளில் மோசடி செய்யாதீர்கள், மேலும் நேர்மையற்றவர்களாக பூமியில் சுற்றித் திரியா தீர்கள்.
[11:86] “நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், கடவுள் எதனை உங்களுக்கு வழங்குகின் றாரோ, அது எவ்வளவு சிறிதாக இருந்தாலும் சரி, அதுவே உங்களுக்கு மிகவும் சிறந்ததாகும். நான் உங்களுடைய பொறுப்பாளர் அல்ல.”
[11:87] அவர்கள், “ஷுஐபே, எங்கள் பெற்றோர்களின் மார்க்கத்தை நாங்கள் கைவிட்டு விட வேண்டு மென்றோ, அல்லது எங்களுடைய வியாபாரத்தை நாங்கள் விரும்பியபடி நடத்திக் கொள்ளக் கூடாதென்றோ, உமது மார்க்கம் உமக்குக் கட்டளையிடுகின்றதா? நிச்சயமாக, நீர் இரக்க முடையவர், ஞானம் மிக்கவர் என்று அறியப் பட்டவராக இருந்தீர்” என்று கூறினார்கள்.
[11:88] அவர் கூறினார், “என்னுடைய சமூகத்தாரே, என் இரட்சகரிடமிருந்து உறுதியான சான்றை நான் பெற்றிருந்தாலுமா; அவர் ஒரு மகத்தான பாக்கியத்தை எனக்கு வழங்கியிருந்தாலுமா? உங்களை எதனை விட்டும் நான் தடுக்கின் றேனோ அதனை செய்ய வேண்டும் என்பது என் விருப்பம் அல்ல. என்னால் இயன்ற அளவு தவறுகளைச் சரி செய்யவே நான் விரும்புகின் றேன். எனது வழிகாட்டல் முற்றிலும் கடவுள்-ஐச் சார்ந்ததாகவே உள்ளது ; எனது பொறுப்பை நான் அவரிடம் ஒப்படைத்து விட்டேன். அவரிடமே நான் முற்றிலும் அடிபணிந்து விட்டேன்.
[11:89] “ மேலும், என்னுடைய சமூகத்தாரே, என் மீது நீங்கள் கொண்டஎதிர்ப்பால், நோவாவின் சமூகத் தாருக்கோ, அல்லது ஹூதின் சமூகத்தாருக் கோ, அல்லது ஸாலிஹின் சமூகத்தாருக்கோ ஏற்பட்ட அதே நாசங்களுக்கு உள்ளாகும்படி தூண்டப்பட்டு விட வேண்டாம்; மேலும் லோத்தின் சமூகத்தார் உங்களுக்கு மிகவும் முந்தியவர்கள் அல்ல.
[11:90] “நீங்கள் உங்கள் இரட்சகரிடம் பாவமன்னிப் பிற்காக இறைஞ்சிப் பிரார்த்திக்க வேண்டும், பின்னர் அவரிடம் வருந்தித்திருந்தவேண்டும். என்னுடைய இரட்சகர் மிக்க கருணையாளர், கனிவானவர்.”
[11:91] அவர்கள், “ ஷுஐபே, நீர் எங்களிடம் கூறும் விஷயங்களில் பலவற்றை நாங்கள் புரிந்து கொள்ளவில்லை, மேலும் எங்களுக்கிடையில் செல்வாக்கற்றவராகவே உம்மை நாங்கள் காண்கின்றோம். உம்முடைய குலத்தார் மட்டும் இல்லையென்றால், உம்மை நாங்கள் கல்லாலடி த்துக் கொன்றிருப்போம். உமக்கு எங்களிடம் எந்த மதிப்பும் இல்லை”என்று கூறினார்கள்.
[11:92] அவர் கூறினார், “ என்னுடைய சமூகத்தாரே, என்னுடைய குலத்தார் கடவுள்-ஐ விட அதிக மதிப்பிற்குத் தகுதி அடைந்து விட்டனரா? இதனால் தான் அவரைக் குறித்து நீங்கள் கவனமில்லாமல் இருக்கின்றீர்களா? என்னுடைய இரட்சகர் நீங்கள் செய்யும் அனைத்தையும் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[11:93] “என்னுடைய சமூகத்தாரே, நீங்கள் விரும்பு வதைத் தொடர்ந்து செய்து கொண்டிருங்கள், அவ்வாறே நானும் செய்வேன். நம்மில் இழிவு மிக்கதோர் தண்டனைக்கு உள்ளாகப் போவது யார் என்பதை நீங்கள் நிச்சயம் கண்டு கொள்வீர்கள்; பொய்யுரைப்பவர் யார் என்பதையும் நீங்கள் கண்டு கொள்வீர்கள். எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருங்கள், மேலும் நானும் உங்களுடன் சேர்ந்து எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருப்பேன்.”
[11:94] நம்முடைய தீர்ப்பு வந்தபோது, நாம் ஷுஐபையும் அவருடன் நம்பிக்கை கொண்டோரையும், நம்மிடமிருந்துள்ள கருணையால் காத்துக் கொண்டோம். தீயவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் ஒரு பேரழிவால் தாக்கப்பட்டார்கள், அது அவர்களை இறந்தவர்களாக அவர் களுடைய வீடுகளில் விட்டுவிட்டது.
[11:95] அது அவர்கள் ஒருபோதும் உயிர் வாழ்ந்தி ராதவர்கள் போலாக்கி விட்டது. இவ்விதமாகவே, அதற்கு முன்னர் தமூது அழிந்து போனது போல், மித்யனும் அழிந்து போனது.
மோஸஸ்
[11:96] நாம் நமது அத்தாட்சிகளுடனும், மேலும் ஆழ்ந்ததோர் அங்கீகாரத்துடனும் மோஸஸை அனுப்பினோம்.
[11:97] ஃபேரோவிடமும் அவனுடைய பிரதானி களிடமும். ஆனால் அவர்கள் ஃபேரோவின் கட்டளையைப் பின்பற்றினர், மேலும் ஃபேரோவின் கட்டளை ஞானமுடையதாய் இருக்கவில்லை.
[11:98] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில், அவன் தன் சமூகத்தாரை நரகத்தை அடையும் அனைத்து வழிகளிலும் அழைத்துச் செல்வான்; வாழ்வதற்கு எத்தகையதொரு துக்ககரமான தங்குமிடம்!
[11:99] அவர்கள் இவ்வுலகிலும் அது போலவே மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளிலும் தண்டித் தலுக்குள்ளாகி விட்டனர்; பின்பற்றுவதற்கு எத்தகையதொரு துக்ககரமான பாதை!
கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள்
[11:100] இது நாம் உமக்கு விவரிக்கும் கடந்து போன சமூகங்களின் செய்தியாகும். சில இன்னும் உள்ளன, மேலும் சில மறைந்து போயின.
[11:101] நாம் அவர்களுக்கு ஒரு போதும் அநீதமிழைக்க வில்லை; அவர்கள் தான் தங்கள் சொந்த ஆன்மாக்களுக்கு அநீதமிழைத்துக் கொண் டனர். உமது இரட்சகரின் தீர்ப்பு வந்த போது, கடவுள்-உடன் அவர்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்த அவர்களுடைய தெய்வங்கள் அவர்களுக்குச் சிறிதளவும் உதவி செய்து விட முடியவில்லை. உண்மையில், அவை அவர் களுடைய அழிவையே நிச்சயப்படுத்தின.
[11:102] அந்தச் சமூகங்கள் வரம்பு மீறியபோது உமது இரட்சகரால் நிறைவேற்றப்பட்ட தண்டனை இத்தகையதாகவே இருந்தது. உண்மையில், அவருடைய தண்டனை வலிமிகுந்தது, அழிவு உண்டாக்குவது.
[11:103] மறுவுலகின் தண்டனையை அஞ்சுவோருக்கு இது ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும். அது மனிதர்கள் அனைவரும் ஒன்று கூட்டப்படும் ஒரு நாளாகும் - காணப்பட வேண்டிய ஒரு நாளாகும்.
[11:104] அது நேரிடுவதற்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை நாம் நிர்ணயித்துள்ளோம்.
[11:105] அந்நாள் நிகழும் போது, எந்த ஓர் ஆன்மாவும் அவருடைய நாட்டத்திற்கு ஏற்பவே அன்றி, ஒரு வார்த்தை கூடப்பேசாது. சிலர் துக்ககரமாக இருப்பார்கள், மேலும் சிலர் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள்.
[11:106] துக்ககரமானவர்களைப் பொறுத்த வரை அவர்கள் நரகத்தில் இருப்பார்கள், அதிலே அவர்கள் துக்க பெருமூச்சு விட்டுக் கொண்டும் ஓலமிட்டுக் கொண்டும் இருப்பார்கள்.
[11:107] உமது இரட்சகரின் நாட்டத்திற்கிணங்க, வானங்கள் மற்றும் பூமி நிலைத்திருக்கும் வரை, என்றென்றும் அவர்கள் அங்கே தங்கியிருப் பார்கள். உமது இரட்சகர் நினைத்ததை முடிப்பவர்.
[11:108] பாக்கியசாலிகளைப் பொறுத்தவரை, அவர்கள் சுவனத்தில் இருப்பார்கள். உமது இரட்சகரின் நாட்டத்திற்கிணங்க, வானங்கள் மற்றும் பூமி நிலைத்திருக்கும் வரை, என்றென்றும் அவர்கள் அங்கே தங்கி இருப்பார்கள் - நிலைத்திருக்கும் ஒரு வெகுமதி.
நம் பெற்றோர்களைக் கண்மூடிப் பின்பற்றுதல் ஒரு மாபெரும் மனித சோகம்
[11:109] இந்த மக்கள் வழிபடுபவற்றைக் குறித்து எந்த சந்தேகமும் கொள்ளாதீர்; அவர்களுடைய பெற்றோர்கள் வழிபடுவதை அவர்கள் கண்ட அதே விதமாகவே அவர்கள் வழிபடுகின்றனர். அவர்களுக்குரிய பங்கை முழுமையாக, குறைவின்றி அவர்களுக்கு நாம் திருப்பித் தருவோம்.
[11:110] நாம் மோஸஸிற்கு வேதத்தைக் கொடுத்தோம், ஆனால் அது தர்க்கிக்கப்பட்டது, மேலும் உமது இரட்சகரால் விதிக்கப்பட்ட முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு வார்த்தை இல்லாது இருந்திருந்தால், அவர்கள் உடனடியாகத் தீர்ப் பளிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் இது குறித்து முற்றிலும் ஐயத்துடனும், சந்தேகத்துடனும் இருக்கின்றார்கள்.
[11:111] உமது இரட்சகர் நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய செயல்களுக்குரிய பிரதிபலனை அளிப்பார். அவர்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் அவர் முற்றிலும் நன்கறிந்தவராக இருக் கின்றார்.
[11:112] ஆகையால், நீர் பின்பற்ற கட்டளையிடப்பட்ட பாதையில், உம்மோடு வருந்தித்திருந்தியவர் களுடன் தொடர்ந்து செல்வீராக, மேலும் வரம்பு மீறாதிருப்பீராக. நீங்கள் செய்கின்ற ஒவ்வொன் றையும் அவர் பார்ப்பவராக இருக்கின்றார்.
[11:113] நீங்கள் நரகத்திற்குள்ளாகி, மேலும் கடவுள்-க் கெதிராக உங்களுக்கு உதவி செய்யத் தோழர் கள் எவரையும் காணாமலும், அதன் பின்னர் நஷ்டமடைந்தவர்களாகவும் முடிந்து விடா திருக்கும் பொருட்டு, வரம்பு மீறியவர்களின் பால் சாய்ந்து விடாதீர்கள்.
ஐந்து தொழுகைகளில் மூன்று
[11:114] பகலின் இரு முனைகளிலும், இரவின் போதும் நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்க வேண்டும். நன்னெறியான செயல்கள் தீய செயல்களைத் துடைத்தெடுத்து விடுகின்றன. கவனத்தில் எடுத்துக் கொள்ளக் கூடியவர்களுக்கு இது ஒரு நினைவூட்டல் ஆகும்.
[11:115] நீங்கள் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும், ஏனெனில் கடவுள் நன்னெறியாளர் களுக்குப் பிரதிபலனளிக்க ஒரு போதும் தவறுவதில்லை.
[11:116] தீமைகளைத் தடுப்பதற்குப் போதுமான புத்திசாலித்தனத்தை மட்டும் முந்திய தலை முறையினரில் இருந்த சிலர் பெற்றிருந்ததால்! அவர்களில் சிலர் மட்டுமே நம்மால் காக்கப் படுவதற்குத் தகுதி பெற்றிருந்தார்கள். வரம்பு மீறியவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் பொருள் சார்ந்த ஆடம்பரங்களில் மூழ்கி இருந்தனர்; அவர்கள் குற்றவாளிகளாக இருந் தனர்.
[11:117] எந்த சமூகத்தையும் அதன் மக்கள் நன்னெறி யாளர்களாக இருக்கும் பொழுது, உமது இரட்சகர் ஒரு போதும் அநீதமாக அழித்து விடுவதில்லை.
நாம் ஏன் படைக்கப்பட்டோம்
[11:118] உமது இரட்சகர் நாடியிருந்தால், எல்லா மக்களும் (நம்பிக்கையாளர்களாகிய) ஒரே கூட்டமாக இருந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் எப் போதும் (சத்தியத்தை) தர்க்கித்துக் கொண்டிருப் பார்கள்.
[11:119] உமது இரட்சகரிடமிருந்து கருணையைக் கொண்டு அருள்பாலிக்கப்பட்டவர்கள் மட்டுமே (சத்தியத்தை தர்க்கம் செய்ய மாட்டார்கள்). இதனால் தான் அவர் அவர்களைப் படைத்தார்.* “நான் ஜின்கள் மற்றும் மனிதர்கள் அனைவரை யும் ஒன்று சேர்த்து நரகத்தை நிரப்புவேன்” ** என்ற உமது இரட்சகரின் தீர்ப்பு ஏற்கனவே வழங்கப் பட்டுவிட்டது.

அடிகுறிப்பு:
*11:119 நம்முடைய அசலான குற்றத்தை பகிரங்கமாகக் கைவிடுவதற்கும் மேலும் மீட்சி அடைவதற்கும் மற்றுமொரு சந்தர்ப்பத்தை நமக்குத் தருவதற்காக மிக்க கருணையாளராகிய அவர் இந்த பூமியில் நம்மைப் படைத்திருக்கின்றார். (அறிமுகவுரை மற்றும் பின் இணைப்பு 7 ஐப் பார்க்கவும்). **11:119 கடவுள் எவர் ஒருவரையும் நரகில் போடுவதில்லை; அவர்களே தேர்ந்தெடுத்து மேலும் நரகத்திற்கு செல்வதை வலியுறுத்துகின்றனர்.
[11:120] நாம் உமது இதயத்தைப் பலப்படுத்துவதற்காக தூதர்களின் சரித்திரத்தில் போதுமானதை உமக்கு விவரிக்கின்றோம். இதில் உமக்கு சத்தியமும், அதே போல் நம்பிக்கையாளர் களுக்கு ஞான உபதேசங்களும், மற்றும் நினைவூட்டல்களும் வந்துள்ளன.
[11:121] நம்ப மறுப்பவர்களிடம் கூறுவீராக , “ உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள், அவ்வாறே நாங்களும் செய்வோம்.
[11:122] “பின்னர் காத்திருங்கள்; நாங்களும் காத்திருப் போம்”
[11:123] வானங்கள் மற்றும் பூமியின் எதிர்காலம் கடவுள் -க்குரியது, மேலும் எல்லா விஷயங்களும் அவரால் கட்டுப்படுத்தப்படுகின்றது. நீங்கள் அவரை வழிபட வேண்டும் மேலும் உறுதியான நம்பிக்கையை அவர் மீது வைக்க வேண்டும். உமது இரட்சகர் நீங்கள் செய்யும் எந்த ஒன்றையும், ஒரு போதும் அறியாமல் இல்லை.