அறிமுகவுரை
கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்

இது மனித குலத்திற்குக் கடவுளின் இறுதிச் செய்தியாகும். கடவுளின் அனைத்து வேதம் வழங்கப் பட்டவர்களும் இவ்வுலகிற்கு வந்து விட்டனர், மேலும் அனைத்து வேதங்களும் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. கடவுளின் வேதம் வழங்கப்பட்டவர்கள் ஒப்படைத்த எல்லாச் செய்திகளையும் தூய்மைப்படுத்தி, ஒன்றிணைத்து ஒரே செய்தியாக்கி, இதன்பின் கடவுளால் ஏற்றுக்கொள்ளப் படக்கூடிய ஒரே மார்க்கமாக, ‘அடிபணிதல்’ (3:19,85) மட்டுமே உள்ளது என்பதைப் பிரகடனம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. அடிபணிதல் என்னும் மார்க்கத்தின் மூலமாக, நாம் கடவுளின் பரிபூரணமான அதிகாரத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, கடவுளிடம் மட்டுமே எல்லாச் சக்திகளும் உள்ளன என்ற அசைக்க முடியாத உறுதியான நம்பிக்கையை அடைகின்றோம்; மற்ற எந்த ஒன்றுக்கும் அவரைச் சார்ந்திராமல் எந்தச் சுயமான சக்தியும் இல்லை. இத்தகையதொரு தெளிவான புரிந்து கொள்ளுதலின் இயல்பான தீர்வு என்னவெனில், கடவுளுக்கு மட்டுமே நமது வாழ்வையும், நமது வழிபாட்டையும் முற்றிலும் அர்ப்பணிப்பது என்பதேயாகும். இதுவே பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, மற்றும் இந்த இறுதி ஏற்பாடு உட்பட அனைத்து வேதங்களிலும் உள்ள முதல் கட்டளையாகும்.

 

 கேளுங்கள் இஸ்ரவேலர்களே! இரட்சகரான நமது கடவுள் ஒரே கடவுள் ஆவார்!

ஆகையால் இரட்சகரான உங்களுடைய கடவுளை

உங்கள் முழு இதயத்துடனும், 

உங்கள் முழு ஆன்மாவுடனும்,

உங்கள் முழு மனத்துடனும்,

மேலும் உங்கள் முழு பலத்துடனும் நீங்கள் வழிபட வேண்டும்.

[உபாகமம் 6:4-5, மார்க், 12:29-30, குர்ஆன் 3:18]

 

நாம் கடவுளை, அவருடைய மகத்தான தன்மைகளைத் துதிப்போம்.

அவரே இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும், படைப்பாளர் என்ற முறையில் அவற்றின் அடிப்படை ஆனவர்; அவரே எல்லா இடங்களிலும் இருப்பவராகவும் எல்லா வல்லமையும் உடையவராகவும்,

எல்லாவற்றையும் அறிந்தவராகவும் சுயமாக ஜீவித்திருப்பவராகவும்,

அனைத்தையும் அறிந்திருப்பவராகவும், வழிபடப்படுவதற்குத் தகுதியானவரும் ஆவார்.

அவரே எல்லா அறியாமைகளையும், நம் மனங்களில் உள்ள அழுக்குகளையும் நீக்கி

அதனைத் தூய்மைப் படுத்தி கூர்மைப் படுத்துபவர் ஆவார்.

[காயத்ரி மந்திரம், யஜுர் வேதம்.]

 

எல்லா மார்க்கங்களும் புதுப்புதுக் கண்டுபிடிப்புகள், பாரம்பர்ய நடைமுறைகள், பொய்யான இணைத்தெய்வ வழிபாட்டுக் கொள்கைகள் ஆகியவற்றால் சிதைக்கப்பட்டவைகளாக இருக்கின்ற அதே சமயம் எல்லா மார்க்கங்களிலும் அடிபணிந்தோர் இருக்கக் கூடும். கிறிஸ்தவர்களாக, யூதர்களாக, முஸ்லிம்களாக, இந்துக்களாக, பௌத்தர்களாக, அல்லது வேறு எந்த பிரிவையேனும் சேர்ந்தவர்களாக அடிபணிந்தோர் இருக்கக் கூடும். இந்த அடிபணிந்தோர் அனைவரும் ஒன்று சேர்ந்து கடவுளிடம் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒரே மார்க்கத்தை அமைக்கின்றார்கள். இந்தப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளபடி,

கடவுளுடன் எந்த இணை தெய்வங்களையும் அமைத்து கொள்ளாமல், கடவுளுக்கு மட்டுமே தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அடிபணிந்தோர் அனைவரும் கடவுளின் நிரந்தர சாம்ராஜ்யத்திற்குள் மீட்டுக்கொள்ளப்படுகின்றார்கள் (2:62).  உண்மையான அடிபணிந்தோரின் ஓர் இலக்கணம் என்னவென்றால்,   அவர்கள் குர்ஆனில் எந்த ஒன்றையும் ஆட்சேபத்திற்குரியதாகக் காணமாட்டார்கள்.

 இந்த வேதத்தின் வருகையுடன் இவ்வுலகிற்கான கடவுளின் செய்தி இப்போது முழுமை அடைந்து விட்டது. நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் நமது மிக அவசரமான கேள்விகளான - நாம் யார், நம் வாழ்வின் நோக்கம் என்ன, நாம் இவ்வுலகிற்கு எதற்காக வந்தோம், இங்கிருந்து எங்கே செல்கின்றோம், எது சரியான மார்க்கம், இது பரிணாம வளர்ச்சியா அல்லது படைப்பா, போன்றவற்றிற்குரிய பதில்களை இப்போது நாம் பெற்றிருக்கின்றோம்.

“தன்னுடைய செய்தியை முழுமைப்படுத்தவும், ஒன்றிணைக்கவும் கடவுள் ஏன் இத்தனை காலம் காத்திருந்தார்? ஆதாமின் காலத்திலிருந்து முழுமையான வேதத்தைப் பெற்றிராத மக்களின் நிலை என்ன?”  என்று சிலர் வியக்கக் கூடும்:  இக்கேள்விக்குக் குர்ஆன் 20:52 ல் பதில்   கூறுவதையும் மனதில் கொண்டவாறு, உலகின் மக்கள் தொகை அதன் துவக்கம் முதல் இப்பொழுது வரை 7,000,000,000ஐத்  தாண்டவில்லை என்பது ஓர் எளிய புள்ளி விவரக் கணக்கே ஆகும். இப்போது முதல் உலக முடிவான கி.பி. 2280 வரை (பின் இணைப்பு 25) இவ்வுலகின் மக்கள் தொகை 75,000,000,000 ஐத் தாண்டிவிடும் என மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது. இவ்விதமாக, மக்களில் பெரும்பான்மையினர் தூய்மைப்படுத்தப்பட்ட, ஒன்றிணைக்கப்பட்ட கடவுளின் செய்தியைப் பெற வேண்டும் என்று விதிக்கப் பட்டுள்ளனர் (வரைபடம் பார்க்க).

 

 

இப்பொழுது (1989) முதல் உலக முடிவு (2280) வரை

[கறுப்புப் பகுதி ஆதாமிலிருந்து இன்று வரையிலான உலக மக்கள் தொகையைக் காட்டுகின்றது]

 


மனிதப் படைப்பின் துவக்கத்திற்கு முன் இவை அனைத்தும் பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர், உயர் அந்தஸ்த்தைப் பெற்றிருந்த கடவுளின் படைப்புகளில் ஒருவனான சாத்தான், கடவுளைப் போல் ஒரு சுதந்திரமான கடவுளாகத் தன்னாலும் ஒரு சாம்ராஜ்யத்தை நடத்த இயலும் என்கின்றதோர் ஆணவமான எண்ணத்தை, தனக்குள் வளர்த்துக் கொண்டபோது துவங்கியது. கடவுளின் ஏகோபித்த அதிகாரத்திற்கெதிரான இந்த அறை கூவலானது இறைநிந்தனையாக இருந்தது மட்டுமல்ல, தவறானதாகவும் இருந்தது. கடவுளுக்கு மட்டுமே கடவுளாக இருப்பதற்குரிய தகுதித்திறன் உள்ளது, மேலும் கடவுள் தன்மை என்பது, அவன் புரிந்து கொண்டதை விட மிக மிக அதிகமானது என்ற உண்மையை அவன் அறியாதவனாக இருந்தான். அவனுடைய அந்த அகந்தைதான் - அறியாமையால் அதிகரித்த அந்த ஆணவம் தான் - கடவுளைப் போல் தன்னாலும் ஒரு சாம்ராஜ்யத்தை, நோய், துன்பம், போர், விபத்துகள், மற்றும் குழப்பம் ஆகியவை இல்லாமல் நிர்வாகம் செய்ய இயலும் என்று சாத்தானை நம்பும்படி வழி நடத்தியது. கடவுளின் படைப்புக்களில் மிகப் பெரும்பான்மையானோர், சாத்தானுடைய கருத்தை மறுத்தனர். ஆயினும், வெவ்வேறு நிலைகளில் சாத்தானோடு ஒத்துப்போன, அகந்தை கொண்ட மிகச் சிறுபான்மையினரே பல நூறு கோடிகளில் இருந்தனர். இவ்விதமாக விண்ணகத்தின் சமூகத்திற்குள் ஓர் ஆழமான தர்க்கம் வெடித்தது (38:69). கடவுளின் ஏகோபித்த அதிகாரத்திற்கெதிரான கலகக்காரர்களின் அநீதமான இந்த அறைகூவலானது மிகத் திறமையான முறையில் சந்திக்கப்பட்டு, தீர்த்து வைக்கப்பட்டது

தங்களுடைய குற்றத்தை வெளிப்படையாக கண்டனம் செய்வதற்கும் மேலும் அவரிடம் அடிபணிவதற்கும் போதுமான வாய்ப்புகள் அளிக்கப்பட்ட பின்னர், கடினமனம் கொண்ட கலகக்காரர்களை பூமியென்று அழைக்கப்படும் விண்கலத்திற்கு வெளியேற்றி அவர்கள் தங்களை மீட்டுக் கொள்ள மற்றொரு வாய்ப்பை அளிக்கக் கடவுள் முடிவு செய்தார். உங்களால் ஒரு விமானத்தை ஓட்ட இயலும் என்று நீங்கள் உரிமை கோரினால் உங்கள் கோரிக்கையை சோதிக்கச் சிறந்த வழி, உங்களிடம் ஒரு விமானத்தைக் கொடுத்து அதை ஓட்டும்படிக் கேட்பதே ஆகும். தானும் ஒரு கடவுளாக இருக்கஇயலும் என்ற சாத்தானின் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் முகமாக கடவுள் எடுத்த முடிவும் மிகச் சரியாக இதுவேதான்; மிகச் சிறியதோர் இடமான பூமியில் அவனைத் தற்காலிக தெய்வமாகக் கடவுள் நியமித்தார் (2:30; 36:60). சாத்தானுடன் ஒத்துப் போனவர்களைப் பொறுத்தவரை, தங்களுடைய அகந்தையைக் கொள்வதற்கும், மேலும் கடவுளின் ஏகோபித்த அதிகாரத்திற்கு அடிபணிவதற்கும் ஒரு சந்தர்ப்பம் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. குற்றம் செய்த படைப்புகளில் மிகப் பெரும்பான்மையினர் இவ்வாய்ப்பைச் சாதகமாக்கிக் கொண்ட அதே சமயம் மிகச் சிறுபான்மையினரான சுமார் 150 பில்லியன் படைப்புகள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத்தவறி விட்டன (33:72).

வெள்ளைப் பகுதி சாத்தானுடன் இசைய மறுத்த மிகப்  பெரும்பான்மையினரைக் குறிக்கின்றது.

 


மங்கலான பகுதி வருந்தித்திருந்தி  மேலும் அடிபணிந்த மிகப் பெரும்பான்மையினரைக் குறிக்கின்றது

 

விண்ணகத்தின் சமூகத்தார்களுக்குள் ஏற்பட்ட இத்தர்க்கம் கடவுளின் படைப்புகளை வெவ்வேறாக வகைப்படுத்துவதற்கு வழிநடத்தியது.

(1) வானவர்கள்

கடவுளின் முழுமையான அதிகாரத்திற்கெதிராக ஒரு போதும் கேள்வி கேட்காத படைப்புகள் வானவர்களாக வகைப்படுத்தப்பட்டனர்; கடவுள் மட்டுமே கடவுளாக இருப்பதற்குரிய திறனையும் மற்றும் தகுதிகளையும் கொண்டிருக்கின்றார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். கடவுளின் படைப்புகளில் மிகப் பெரும்பான்மையினர் - எண்ணில் அடங்காதவர்கள் - இவ்வகையைச் சேர்ந்தவர்கள். வானவர்களின் எண்ணிக்கை மிகவும் பெரியது, தங்களில் எத்தனை பேர் இருக்கின்றோம் என்பதை வானவர்களே கூட அறிய மாட்டார்கள்; கடவுள் மட்டுமே அவர்களுடைய எண்ணிக்கையை அறிவார் (74:31).

 

(2) விலங்குகள்

கலகக்காரர்களும் அவர்களுடைய தலைவனும் கடவுளின் சாம்ராஜ்யத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று வானவர்கள் ஆலோசனை கூறிய போதிலும் (2:30) கலகக்காரர்கள் தங்களுடைய குற்றத்தை வெளிபடையாக கண்டனம் செய்வதற்கும், வருந்தி திருந்தி மேலும் அவருடைய முழுமையான அதிகாரத்திற்கு அடிபணிவதற்கும் ஒரு சந்தர்ப்பம் அளிக்க மிக்க கருணையாளர் விரும்பினார் (33:72). மேலே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தில் உள்ளபடி, கலகக்காரர்களில் மிகப் பெரும்பான்மையினர், கடவுளின் சாம்ராஜ்யத்திற்குள் மீண்டும் நுழைவதற்கு, கடவுளின் அருள்மிக்க இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். அவர்களுடைய இறைநிந்தனைக்குப் பரிகாரமாக, இவ்வுலகிற்கு வந்து தங்கள் அகந்தையைக் கொள்வதற்கு, அடிபணிந்த நிலையில் ஒரு பங்கை ஆற்றவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

அடிபணிந்த நிலையில் இவ்வுலகில் ஆற்றுகின்ற பணிக்குப் பிரதிபலனாக இப்படைப்புகள் கடவுளின் நிரந்தர சாம்ராஜ்யத்திற்குள் மீட்டுக்கொள்ளப்படுகின்றனர் (6:38). குதிரை, நாய், மரம், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மேலும் உருக்குலைந்த மற்றும் வளர்ச்சிகுன்றிய குழந்தைகள் ஆகியோர், தங்களுடைய குற்றத்தை வெளிப்படையாக கண்டனம் செய்த மேலும் வருந்தித் திருந்திய புத்திசாலியான படைப்புகளில் உள்ளவர்கள் ஆவர்.

 

வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும்

சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மலைகள், மரங்கள்,

விலங்குகள் மற்றும் மனிதர்களில் பெரும்பாலானோர்

கடவுளுக்குச் சிரம் பணிகின்றதை  நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளவில்லையா?

ஆயினும் மக்களில் அதிகமானோர் தண்டனைக்கென்று

விதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர்.                                                                                 (22:18)

 

   நட்சத்திரங்களும், மேலும் மரங்களும் சிரம்பணிகின்றன.                                (55:6)


குதிரைக்கு அகந்தை கிடையாது. அக்குதிரையின் சொந்தக்காரர் செல்வந்தராகவோ அல்லது ஏழையாகவோ, உயரமாகவோ அல்லது குள்ளமாகவோ, கனத்தவராகவோ அல்லது இளைத்தவராகவோ, இளமையானவராகவோ அல்லது முதிர்ந்தவராகவோ இருந்தாலும், அக்குதிரை அவர்கள் அனைவருக்கும் பணிவிடை செய்யும். நாய்க்கு அகந்தை கிடையாது. அதன் உரிமையாளர் செல்வந்தரா, அல்லது ஏழையா என்பதை பொருட்படுத்தாது, தன் உரிமையாளரிடம் அது வாலை ஆட்டும். ஒவ்வொரு நாளும் சூரியன், மிகச்சரியாக, கடவுளால் நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் உதிக்கின்றது மேலும் அஸ்தமனமாகின்றது. சந்திரன் பூமியைச் சுற்றி தன் சுற்றுப்பாதையை ஒரே சீராக மிகச் சிறிய அளவும் வழி பிசகாமல் பின் தொடர்கின்றது. பூமியைச் சார்ந்ததான மனித உடலின் - ஒரு தற்காலிக ஆடை - இதயம், நுரையீரல்கள், சிறுநீரகங்கள், இன்னும் மற்ற உறுப்புக்கள் நம்முடைய கட்டுப்பாடின்றித் தங்களுடைய பணியைச் செய்கின்றன.  இவ்விதமாக, அது ஒரு அடிபணிந்தவராக இருக்கின்றது.

 

(3) மனிதர்கள்

கடினமனம் கொண்ட கலகக்காரர்கள் - மனிதர்கள் மற்றும் ஜின்கள் - தங்களுடைய குற்றத்தை வெளிப்படையாகக் கண்டனம் செய்ய மறுத்து சாத்தானின் கோரிக்கை செயல்படுத்தப்படும் விதத்திற்குச் சாட்சிகளாக ஆவதைத் தேர்ந்தெடுத்தனர். கடவுளின் முழுமையான அதிகாரத்திற்கு அடிபணிய ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டும், அதனை ஏற்றுக் கொள்ளத் தவறிய இந்த அகந்தை மிக்க படைப்புகள் சரிபாதியாகப் பிரிக்கப்பட்டனர். சாத்தானின் கண்ணோட்டத்தோடு குறைந்த அளவில் ஒத்துப்போன ஒரு பாதி மனிதர்களாக வகைப்படுத்தப்பட்டனர். சாத்தானின் கோரிக்கை குறித்த சந்தேகங்களை அவர்கள் தாங்கி இருந்தாலும், கடவுளின் முழுமையான அதிகாரம் குறித்து ஓர் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க அவர்கள் தவறிவிட்டனர். கடவுளின் சர்வ வல்லமையை மதிப்பீடு செய்வதிலிருந்து

அந்த படைப்புகளை அகந்தைதான் தடுத்தது. அத்தகையதொரு சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்பட்டபோது அடிபணிவதிலிருந்தும் அகந்தைதான் அவர்களைத் தடுத்தது (33:72), மேலும் நம்மில் பெரும்பாலானோர்க்கும், கடவுளின் சாம்ராஜ்யத்திற்குள் நாம் மீட்டுக் கொள்ளப்படுவதற்கும் இடையில் அகந்தைதான் நிற்கின்றது (25:43). இதனால் தான் “உங்கள் அகந்தையைக் கொல்லுங்கள்” என்பது குர்ஆனில் காணப்படும் முக்கியமான கட்டளைகளில் ஒன்றாக இருக்கின்றது (2:54).

 

(4) ஜின்கள்

சாத்தானின் கண்ணோட்டத்தோடு நெருக்கமாக இணங்கிவிட்ட மேலும் மிகப்பெரிய அகந்தையை வெளிப்படுத்திய, குற்றவாளிகளான படைப்புகளின் மறுபாதி, ஜின்களாக வகைப்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு மனிதருக்கும் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு ஜின்னை நியமிக்க வேண்டும் என்பது கடவுளின் திட்டமாக இருந்தது. கூடவே இருக்கும் அந்த ஜின், சாத்தானின் பிரதிநிதியாக இருந்து அவனுடைய   கண்ணோட்டத்தைத் தொடர்ந்து ஊக்குவிக்கின்றது (50:23,27). மனிதர்கள், மற்றும் ஜின்கள் ஆகிய இருதரப்பினருக்கும், மறு படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளவதற்கும், தங்களுடைய அகந்தை கொள்ளுதலை வெளிப்படையாக கண்டனம் செய்வதற்கும், மேலும் கடவுளின் முழுமையான அதிகாரத்திற்கு அடிபணிந்து தங்களை மீட்டுக் கொள்வதற்கும் ஒரு விலைமதிப்பற்ற சந்தர்ப்பம் இவ்வுலகில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு  மனிதர் பிறக்கும் பொழுது ஒரு ஜின்னும் பிறந்து அப்புதிய மனிதருக்கென்று நியமிக்    கப்படுகின்றது. ஜின்கள் சாத்தானின் சந்ததியினர் என்பதை குர்ஆனிலிருந்து நாம் அறிந்து கொள்கின்றோம் (7:27, 18:50). ஒரு ஜின் பிறந்து மேலும் ஒரு மனிதருக்கென நியமிக்கப்படும் பொழுது, அந்த ஜின் அம்மனிதரின் மரணம்வரை தொடர்ந்து அவருடன் இருக்கின்றது. பின்னர் அந்த ஜின் விடுவிக்கப்பட்டு மேலும் ஒரு சில நூற்றாண்டுகள்  ஜீவித்திருக்கின்றது. ஜின்கள் மற்றும்  மனிதர்கள் ஆகிய இருவகையினருக்கும் கடவுளை மட்டுமே வழிபடுவது அவசியமான தேவையாக இருக்கின்றது (51:56).

 

கடவுளுக்கு இயந்திர மனிதர்களின் தேவை இல்லை

38:69ல் கூறப்பட்டுள்ள இன்னும் மேலே விவரிக்கப்பட்டுள்ள விண்ணக சமூகத்தின் தர்க்கமானது, கடவுளின் படைப்புக்கள் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை கொண்டிருக்கின்றன என்பதை நிரூபிக்கின்றது; அவர்களுக்கு சுயமான மனங்கள் உள்ளன. கடவுளின் படைப்புகள், அவருடைய எல்லையில்லா     மகத்துவத்தை போற்றி நன்றி செலுத்தும் முகமாகவே அவருக்குப் பணி செய்கின்றன, என்ற வியப்பூட்டும் உண்மையை, கடவுளின் படைப்புக்களில் உள்ள மிகச்சிறுபான்மையினரின் இக்கலகம், தெளிவாக எடுத்துக் காட்ட உதவிசெய்கின்றது. இக்கலகம் ஏற்பட்டிராவிடில் சுதந்திரம் என்பது கடவுளின் படைப்புக்களுக்கு அவருடைய பரிசாக இருக்கின்றது என்பதை நாம் ஒரு போதும் அறிந்திருக்க மாட்டோம்.

 

மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்

நம்முடைய உலகப் பரிமாணத்தின்படியே கூட, எந்த ஒரு நிறுவனமும் அதன் பணியாட்கள் அந்நிறுவனத்தின் நலனுக்கு விசுவாசமானவராகவும் மேலும் அர்ப்பணிப்பு உடையவராகவும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றது.

ஒரு நிறுவனத்தின் பணியாளர் அந்நிறுவனத்திற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்காதவராகவோ,அல்லது பங்கிடப்பட்ட விசுவாசம் உடையவராகவோ இருப்பதை அறியநேர்ந்தால் அவர் உடனடியாக நீக்கம் செய்யப்படுகின்றார். மனிதர்கள் மற்றும் ஜின்கள் சாத்தானின் பால் சாய்ந்து, பின்னர் தங்களுடைய கலகக்காரியங்களை மறுபரிசீலனை செய்வதற்கு கடவுளால் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தை நிராகரித்து விட்டதால், சாத்தானும் அவனுடைய கூட்டாளிகளும் கடவுளின் சாம்ராஜ்யத்தை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்று வானவர்கள் எதிர்பார்த்தனர் (2:30). நம்முடைய குற்றத்தை வெளிப் படையாக கண்டனம் செய்து, மேலும் நம்மை மீட்டுக் கொள்ளக் கடவுள் நமக்கு அளித்து இருக்கின்ற கூடுதலான இவ்வாய்ப்பு கடவுளிடமிருந்துள்ள மிகப்பெரும் கருணையாக இருந்தது.

 

மீட்சிக்கான, எல்லையில்லாக் கருணை நிறைந்த இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காகக் கடவுள் “மரணத்தைப் படைத்தார்” (67:1-2). தெய்வீகமான இத்திட்டத்தின்படி கலகக்காரர்களை விண்ணகத்தில்  நிகழ்ந்த  சச்சரவு பற்றிய நினைவு எதுவும் இல்லாத நிலையில் மற்றொரு வாழ்வுக்குக் கொண்டு வரவேண்டியதாக இருந்தது. இந்த வாழ்வின் சூழ்நிலைகளில், மனிதர்களும், ஜின்களும் கடவுளின் செய்திகள், மற்றும் சாத்தானின் செய்திகள் ஆகிய இரண்டையும் பெற்று, பின்னர் சுதந்திரமாக ஏதேனும் ஒரு பக்கத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர். தங்களுடைய சுய விருப்ப முடிவின் அடிப்படையில் ஒன்று அவர்கள் கடவுளின் சாம்ராஜ்யத்திற்குள் மீட்டுக் கொள்ளப்படுகின்றார்கள், அல்லது சாத்தானுடன் நிரந்தரமாக வெளியேற்றப்படுகின்றார்கள்.

 

சாத்தானின் தற்காலிக அரசாட்சி

சாத்தானுக்கென வடிவமைக்கப்பட்ட அரசாட்சியின் முழுமையான அற்பத்தன்மையை வலியுறுத்திக் காட்டுவதற்காக, பல நூறு கோடி ஒளிவருடங்கள் பயணிக்கும் அளவிற்கு பரந்து விரிந்திருக்கும் இப்பிரபஞ்சத்திற்குள், கடவுள் நூறு கோடி நட்சத்திர மண்டலங்களையும், நூறு கோடி லட்சம் கோடி நட்சத்திரங்களையும், படைத்தார். ஒளிவேகத்தில் சூரியனை நோக்கி நாம் பயணித்தால் (93,000,000 மைல்கள்) எட்டு நிமிடத்தில் அதனை நாம் அடைவோம்.  நாம் தொடர்ந்து சென்று கொண்டிருந்தால் 50,000 முதல் 70,000 வருடங்களில் நமது பால்வீதி மண்டலத்தின் வெளி எல்லையை நாம் அடைவோம். அருகாமையில் உள்ள நட்சத்திர மண்டலத்தை நாம் அடைவதற்கு, ஒளிவேகத்திலான 2,000,000 வருடங்கள் நமக்கு தேவைப்படும், மேலும் “நம்முடைய பிரபஞ்சத்தில்” குறைந்தபட்சம் 2,000,000,000 நட்சத்திர மண்டலங்கள் உள்ளன. மிகத்திறன்வாய்ந்த தொலைநோக்கியைக் கொண்டு நம்முடைய பிரபஞ்சத்தின் எல்லையில் இருந்து மட்டுமல்ல, நம்முடைய பால் வீதியின் எல்லையில் இருந்து பார்த்தால் கூட, நம் பூமி சுத்தமாக பார்வைக்கு தெரியாது. நம்முடைய பிரப்பஞ்சம் ஒன்றும் பெரியதல்ல என்பது போல், நம்முடைய பிரப்பஞ்சத்தை  சுற்றிலும் இதைவிடப் பெரிய, இன்னும் ஆறு பிரபஞ்சங்களைக் கடவுள் படைத்தார் (2:29,67:3).  பின்னர் பிரபஞ்சங்களில் மிகச்சிறியதும், உள்ளடங்கியதுமான இப்பிரபஞ்சத்தில் இருக்கும் மிகச்சிறிய துகளான பூமி என்ற கிரகம் அவனுடைய பிரதேசமாக இருக்கும் என்று சாத்தானுக்குக் கடவுள் தெரிவித்தார். தனது நேரடி இருப்பைத் தாங்க இயலாத ஒரு பிரபஞ்சத்தில் மனிதர்களையும், ஜின்களையும் அமர்த்த வேண்டும் என்பது கடவுளின் திட்டமாக இருந்தது (7:143). இவ்விதமாக, கடவுளுடைய முழு அறிவு, மற்றும் அடக்கி ஆளும் அதிகாரம் இருக்கின்ற மிக மிகச் சிறிய

இராஜ்யத்தைச் சாத்தான் கடவுளின் நேரடி இருப்பிலிருந்து மிகத்தூரமாக இருந்து  ஆட்சி செய்கின்றான். வருந்தித்திருந்தி விட்ட கலகக்காரர்களின் எண்ணிக்கை, அவர்கள் அனைவரையும் பூமியில் அமர்த்த இயலாத அளவிற்கு மிக அதிகமானதாக இருந்ததும் கவனிக்கப்பட வேண்டியதாகும். அதனால் தான், பூமிக்கிரகத்தில் மனிதர்களை விட அதிகமான எண்ணிக்கையில் பிராணிகள் உள்ளன. திருந்திவிட்ட கலகக்காரர்கள் அனைவரையும் பூமியில் அமர்த்தினால் நிர்வகிக்க இயலாமல் போய்விடும் என்பதால் எண்ணற்ற அளவிலான படைப்புகள் பூமிக்கு வெளியே விண்ணில் அமைக்கப்பட்டுள்ளன.

 

ஆதாமும் ஏவாளும்

கடவுளுடைய அறிவுறுத்தலுக்கு இணங்க முதல் மனிதரின் உடல் பூமியில் கடவுடளின் வானவர்களால் வடிவமைக்கப்பட்டது (7:11). பின்னர் கடவுள் முதல் மனிதர் ஆதாமை அவ்வுடலுக்கு நியமித்தார். கடவுள் வானவர்களிடம், அவர்கள் மனிதர்களுடைய சோதனைக் காலம் முழுவதும் - அவர்களைப் பாதுகாத்தல், காற்றுகளை வீசச் செய்தல், மழை மற்றும் வாழ்வாதாரங்களை பங்கிடுதல், போன்ற - பணிகளைச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தபோது சாத்தான் ஒருவன் மட்டுமே சிரம்பணிய மறுத்தவனாக இருந்தான் (2:34, 15:31, 38:74). ஆதாமுடைய துணை, ஆதாமிலிருந்தே பெண்மைத் தன்மையுடன் ‘க்ளோன்’ செய்யப்பட்டு, அந்த உடம்பிற்கு இரண்டாவது மனிதரை கடவுள் நியமித்தார். ஆதாம் மற்றும் ஏவாள் ஆகியோருடைய (ஆன்மாஇல்லாத) வெற்று உடம்புகள் இங்கு பூமியில் இருந்த அதேசமயம், அவர்களுடைய ஆன்மாக்கள், அதாவது உண்மையான ஆதாமும், ஏவாளும், சுவனத்தில் வசித்தனர். கடவுளின் கட்டளைகளை உறுதியாக கடைப்பிடித்தது வரை ஆதாமும், ஏவாளும் சுவனத்தில் தங்கிஇருந்தனர். மாறாக அவர்கள் சாத்தானுக்குச் செவி சாய்த்தவுடன், நம் அனைவரிடமும் உள்ள தவறான மனித இயல்பை அவர்கள் பிரதிபலித்தனர், மேலும் அவர்கள் உடனடியாக கீழே, சாத்தானின் இராஜ்யமான பூமியை சேர்ந்தவர்களாகி விட்டனர் - “அவர்களுடைய உடல்கள் அவர்களுடைய பார்வைக்குத் தெரியக் கூடியவை ஆயின” (7:20 ; 20:121). மற்றவை சரித்திரம் ஆகும்.

 

சாத்தான்: எல்லா ஜின்களுக்கும் தந்தை

ஜின்கiள் மற்றும் மனிதர்களை  சோதனைக்கு உட்படுத்துவதால், ஒவ்வொரு மனிதர் பிறக்கும் போதும் சாத்தான் ஒரு சந்ததியை எடுக்க வேண்டியது அவசியமாகின்றது ; மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஒரு மனிதர் பிறக்கும் ஒவ்வொரு முறையும், அந்த மனித நபருடன் நிலையான கூட்டாளியாக இருந்து பணியாற்றுவதற்கு ஒரு ஜின்னும் பிறக்கின்றது. பிறப்பு முதல் இறப்புவரை ஒவ்வொரு மனிதரும், தன் உடம்பிலேயே வாழும் சாத்தானின் பிரதிநிதியால் ஏற்படும் இடைவிடாத தொடர்ந்த தூண்டுதல்களுக்கும், ஆலோசனைகளுக்கும், ஆட்படுத்தப்படுகின்றார். சாத்தானின் பிரதிநிதியான ஜின் தன் மனிதக் கூட்டாளியை கடவுள் மட்டும் போதுமானவர்அல்ல என்ற சாத்தானின் கண்ணோட்டத்தை நம்பும்படி செய்ய முயற்சிக்கின்றது. தீர்ப்பு நாளில், ஜின் கூட்டாளி தன்னுடன் இருந்த மனிதனுக்கு எதிரான சாட்சியாகப் பணி செய்கின்றது (43:38;50:23,27). அநேக ஜின்கள் அவர்களுடன் இருந்த மனித கூட்டாளிகளாள் கடவுளின் கண்ணோட்டத்திற்கும் மாற்றப்படுகின்றார்கள். கடவுள் மனிதரைச் சரியான முன்னேற்பாடின்றி விட்டு விடவில்லை. மனிதர்கள் தங்களுடைய கடைசி வாய்ப்பில், தங்களுடைய இறைநிந்தனையை மறுபரிசீலனை செய்வதற்கு உதவியாக ஒவ்வொரு மனிதரும் கடவுள் மட்டுமே நம் இரட்சகரும், எஜமானரும் ஆவார், அவரைத் தவிர வேறெவருமில்லை என்ற உள்ளுணர்வுடன் கூடிய அறிவோடு பிறக்கின்றார் (7:172-173). இந்த உள்ளுணர்வின் அறிவு ஜின்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கவில்லை, ஆனால் அவர்கள், உள்ளடங்கிய இப்பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ள

கடவுளின் அத்தாட்சிகளைக் கற்றுக் கொள்வதற்கு ஏதுவாக நீண்ட ஆயுட்காலமும், பெரும் திறன்களும் கொடுக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். அவர்கள் சாத்தானின் கண்ணோட்டத்திற்குப் பிரதிநிதியாக இருப்பதால், அவர்களுடைய உள்ளுணர்வின் இயல்பு பல தெய்வ கொள்கையின் பால் உறுதியாகச் சாய்ந்ததாக இருக்கின்றது. கடவுள் மட்டுமே வழிபடப்படவேண்டுமென்று நமக்குள் கட்டமைக்கப்பட்டுள்ள உள்ளுணர்வுடன் கூடுதலாக, நம்மை மீட்டுக்கொள்வதற்கு நமக்கு உதவியாகக் கடவுள் தன் தூதர்களை அனுப்பினார். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டால், (மரணம் வரை செயல்படுத்தப்படும்) கடவுளை தவிர வேறு எவரையேனும் ஏதேனும் சக்தியுடையவர் என்று நம்புகின்ற இணைத்தெய்வ வழிபாடுதான் மன்னிக்க முடியாத ஒரே குற்றம் என்கின்ற உண்மையை நாம் சரியாக உணர்ந்து கொள்ள இயலும்.

 

நாற்பது வருட சலுகைக் காலம்

கடவுளின் முழுமையான அதிகாரத்தை ஆதரிப்பதா அல்லது சாத்தானின் கண்ணோட்டத்தை ஆதரிப்பதா என்ற மிக முக்கியமான இந்த முடிவை எடுப்பதற்கு முன், ஆராய்வதற்கும், சுற்றிலும் கவனிக்கவும், சிந்திப்பதற்கும், அனைத்து கண்ணோட்டங்களையும் சோதித்து பார்ப்பதற்கும் மனிதருக்கு நாற்பது வருடங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கடவுள் மட்டுமே அறிந்திருக்கும் நுணுக்கமான காரணங்களினால் நாற்பது வயதிற்கு முன்னர் மரணிக்கின்ற எவர் ஒருவரும், கடவுளால் மீட்சிக்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். நாற்பது வயதிற்கு முன்னர் மரணிக்கின்ற எவர் ஒருவரும் சுவனத்திற்குச் செல்கின்றார் (46:15, பின் இணைப்பு 32).குர்ஆனை நம்புபவர்கள் கூட இத்தகையதொரு கருணை நிறைந்த தெய்வீக சட்டத்தை ஏற்றுக் கொள்வதைக் கடினமாகக் காண்பது, கடவுளின் அளப்பெரும் கருணையைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றது.

நம்மை மீட்டுக்கொள்வதற்கு கடவுளால் நமக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு குறித்த நற்செய்திகளைக்      கடவுளின் தூதர்கள் ஒப்படைத்து விட்டனர், மேலும் அவர்கள் வலிமையான சான்றுகளால் ஆதரவளிக்கப்பட்டிருந்தனர். மோஸஸ் ஃபேரோவிடம் சென்ற போது, அவருடைய ஊன்றுகோல் ஒரு பாம்பாக மாறியது போன்ற அற்புதங்களால் ஆதரவளிக்கப்பட்டிருந்தார். இயேசு கடவுளின் அனுமதி கொண்டு களிமண்ணிலிருந்து உயிருள்ள பறவைகளை உருவாக்கினார், கடவுளின் அனுமதி கொண்டு குஷ்டரோகி மற்றும் குருடரை குணப்படுத்தினார், மேலும் கடவுளின் அனுமதி கொண்டு இறந்தவரை உயிர்ப்பித்தார். இந்த இறுதி ஏற்பாட்டை ஒப்படைத்த கடவுளின் தூதரும், வேதம் வழங்கப்பட்டவருமான முஹம்மது இத்தகைய அற்புதங்கள் எதையும் காட்டவில்லை (10:20). முஹம்மதின் இறைப்பணிக்கு ஆதரவளித்த அற்புதம் இந்த குர்ஆன்தான் (29:50,51). தெய்வீக ஞானம்தான், குர்ஆனின் அற்புதத்தை, முஹம்மதிடமிருந்து 14 நூற்றாண்டுகள் தள்ளி வைத்தது. குர்ஆனின் அற்புத கணிதக் கட்டமைப்பின் மிக முக்கியத்துவம் வாய்ந்த பரிமாணங்களை இப்போது நாம் புரிந்து கொண்டிருப்பதால், (பின் இணைப்பு 1 ) முஹம்மதின் மூலம் இந்த அற்புதம் வெளிப்படுத்தப்பட்டிருக்குமேயானால், கோடிக்கணக்கான மக்கள் முஹம்மதைக் கடவுளின் அவதாரம் என்றே வழிபட்டிருப்பார்கள் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

 

நம்பகத்தன்மைக்கான சான்று:கண்கூடானது, தொட்டுணரக்கூடியது, மறுக்கமுடியாதது

74:30-35ல் கூறப்பட்டுள்ளபடி குர்ஆனின் கணிதக் குறியீடானது,  ‘மாபெரும் அற்புதங்களில் ஒன்று’ என்பதை கணினி யுகத்தின் வருகையுடன், நாம் கண்டு பிடித்திருக்கின்றோம். முந்திய தூதர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த அற்புதங்கள் காலம், மற்றும் இடம் ஆகிய எல்லைகளை கொண்டிருந்த அதே சமயம், குர்ஆனின் அற்புதம் நிரந்தரமானதாக இருக்கின்றது. மோஸஸ் மற்றும் இயேசுவின்

அற்புதங்களைச் சில  மனிதர்கள் மட்டுமே கண்டனர், ஆனால் குர்ஆனின் அற்புதத்தை எவராலும், எந்த நேரத்திலும் காணஇயலும். இன்னும் கூடுதலாக, குர்ஆனின் அற்புதம் முந்திய எல்லா அற்புதங்களுக்குமான சான்றாகவும், மேலும் நிரூபணமாகவும், இருக்கின்றது(15:48).

பின் இணைப்பு 1ல் விவரிக்கப்பட்டுள்ளபடி குர்ஆனின் கணித அற்புதமானது எண்  “19”ஐ எண்ணின் அடிப்படையாக கொண்டுள்ளது. அச்சுறுத்துகின்ற இந்த அற்புதத்தை வாசகருடன் பகிர்ந்து கொள்வதற்காக இந்த தமிழாக்கப் புத்தகம் முழுவதும் “கடவுள்” என்ற வார்த்தை, பெரிய எழுத்துக்களால் அச்சடிக்கப்பட்டிருப்பதுடன், தொடர்ந்து வருகின்ற அவ்வார்த்தையின் எண்ணிக்கை கீழே இடப்பக்க மூலையில் ஒவ்வொரு பக்கத்திலும் காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து வருகின்ற இந்த மிக முக்கியமான வார்த்தையின் கூட்டுத்தொகை, குர்ஆனின் இறுதியில் 2698 என்று காட்டப்பட்டுள்ளது. இக்கூட்டுத் தொகை 19ன் ஒரு பெருக்குத் தொகையாகும். இன்னும் கூடுதலாக, “கடவுள்” என்ற வார்த்தை இடம் பெறுகின்ற ஒவ்வொரு வசனத்திற்கும் அளிக்கப்பட்டுள்ள அற்த வசன எண்களை நாம் கூட்டினால் அதன் கூட்டுத்தொகை 118123 வருகின்றது, இதுவும் 19ன் ஒரு பெருக்குத் தொகை ஆகும் (19ஒ6217).  “கடவுள்” என்ற வார்த்தை இடம் பெறுகின்ற வசன எண்களின் மொத்தக் கூட்டுத்தொகை ஒவ்வொரு பக்கத்திலும் கீழே  வலப்பக்க மூலையில் காட்டப்பட்டுள்ளது. கண்கூடான இந்த எளிய உண்மைகள் வாசகர் இலகுவாக சரிபார்த்துக் கொள்ளக் கூடியதாகவும், மேலும் அவை, குர்ஆனுடைய கணிதக் கட்டமைப்பானது மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்பதை நிரூபிக்கப் போதுமானவையாகவும் உள்ளன.

வாசகர் சரிபார்த்துக் கொள்வதற்காக  நம்பகத்தன்மைக்கான சான்று

குர்ஆனின் அசாதாரணமான கணிதக் கட்டமைப்புக்கும்  கூடுதலாக, ஏராளமான குர்ஆனிய உண்மைகளை நவீன விஞ்ஞானம் நிரூபித்துக் கொண்டும் அல்லது கோட்பாடாக ஆக்கிக் கொண்டும் இருப்பதை நாம் காண்கின்றோம். காலத்தால் முந்திய இத்தகைய விஞ்ஞானத் தகவல்களுக்குரிய சில உதாரணங்கள், இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

 1. பூமி முட்டை வடிவிலானது (10:24, 39:5,79:30).

2. பூமி ஒரே இடத்தில் நிலையாக இல்லை; அது தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது (27:88).

3. சூரியன், ஒளியின் ஒரு மூலாதாரம், அதே சமயம் சந்திரன் அதனைப் பிரதிபலிக்கின்றது (10:5, 25:61, 71:16).

4. நாம் விண்ணை நோக்கி மேலே ஏறும்போது பிராணவாயுவின் விகிதம் குறைகின்றது(6:125).

5. “பெருவெடிப்புக் கோட்பாடு” உறுதிப்படுத்தப்படுகின்றது (21:30).

6. “பிரபஞ்சம் விரிவாக்கக் கோட்பாடு” உறுதிப்படுத்தப்படுகின்றது (51:47).

7.  ஒரு வாயுமண்டலமாக பிரபஞ்சம் வெளிப்பட துவங்கியது (41:11).

8. பரிணாம வளர்ச்சி என்பது ஓர் உண்மை ஆகும்; பரிணாம வளர்ச்சி என்பது, குறிப்பிட்ட உயிரினங்களுக்கிடையில் தெய்வீகமாக வழிநடத்தப்படுகின்றதோர் நடைமுறை ஆகும். (21:30, 24:45, 32:7-9, 18:37, 15:28-29, 7:11, 71:13-14, பின் இணைப்பு 31).

9. ஆணுடைய உயிர்த்திரவமே குழந்தையின் பால் இனத்தை தீர்மானிக்கின்றது (53:45-46).

 

அறிவிற்குப்புறம்பாக ஒன்றுமில்லை

குர்ஆனில் அறிவிற்குப் புறம்பாக எதுவும் இல்லாதிருப்பது அற்புதத்திற்குச் சமமானதேயாகும், குர்ஆன் வெளிப்படுத்தப்பட்ட காலத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த அறியாமை, மற்றும் மூடநம்பிக்கைகளை கவனத்தில் கொள்ளும் போது, இது மிகவும் குறிப்பிடத்தக்கதொரு விஷயமாகும். உதாரணமாக, பாரம்பர்ய முஸ்லிம்களுக்கிடையில் பெரிதும் மதிக்கப்படுகின்ற ஒரு விரிவுரை இப்னு கஸீருடையதாகும். வேதம் வழங்கப்பட்டவருக்குப்  பின்னர், நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்ட பிரபலமான  இக்குறிப்புரையில், பூமி ஒரு மிகப் பெரிய எருதின் 40,000 கொம்புகளால் சுமக்கப்படுகின்றது என்றும், அது ஒரு மிகப் பெரிய திமிங்கிலத்தின் மேல் நின்று கொண்டிருக்கின்றது என்றும் நாம் காண்கின்றோம். (வசனம் 68:1க்கு இப்னு கஸீரின் விளக்கவுரையைப் பார்க்கவும்). 

 

மிகச் சமீபமாக 1975ல், மேலும் குர்ஆன் வெளிப்படுத்தப்பட்ட அதே இடத்தில், சவூதி அரேபியாவின், மதினா இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் தலைவரான ஷேக் அப்துல் அஸீஸ் பின் பாஸ், “பூமி தட்டையானது, மேலும் அது நிலையாக ஒரே இடத்தில் நிற்கின்றது” என்று பகிரங்கமாக அறிவித்தார் (கீழே காண்க)!!

 

பின் பாஸுடைய புத்தகத்தின் பக்கம் 23ன் மொழிபெயர்ப்பு: “இவர்கள் கூறுவது போல் பூமி சுழன்று கொண்டிருந்தால் மாடுகள், மலைகள், மரங்கள், ஆறுகள், மற்றும் பெருங்கடல்கள் ஆகியவற்றிற்கு அடித்தளங்கள் இருக்காது மேலும் கிழக்கிலிருக்கும் நாடுகள் மேற்கிற்கும், மேற்கிலிருக்கும் நாடுகள் கிழக்கிற்கும் நகர்வதை மக்கள் காண்பார்கள்”.

 

பரிபூரணமான மகிழ்ச்சி: இப்பொழுதும், எப்பொழுதும்

“மகிழ்ச்சி” என்பது ஒவ்வொரு மனிதருக்கும் கைக்கெட்டாத முக்கியமான குறிக்கோள்களில் ஒன்றாகும். இந்த வாழ்விலும், மேலும் என்றென்றும் பரிபூரணமான மகிழ்ச்சியை அடைவதற்கான இரகசியத்தைக் குர்ஆன் வெளிப்படுத்துகின்றது. மகிழ்ச்சி என்பது ஆன்மாவிற்க்கு உரிய பிரத்யேகமானதொரு பண்பாகும் என்று குர்ஆனிலிருந்து நாம் அறிகின்றோம். இவ்விதமாக புகழ், அதிகாரம், செல்வம் போன்ற தான் மிகவும் விரும்புகின்ற பொருள்சார்ந்த வெற்றிகள் அனைத்தையும் அடைந்து விட்ட ஓர் உடல் பல நேரங்களில் மகிழ்ச்சியற்ற மனிதருக்குரியதாகவே உள்ளது. மகிழ்ச்சி என்பது முற்றிலும், உண்மையான நபராகிய ஆன்மா அடைகின்ற வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை பொறுத்ததாகவே உள்ளது.

 

இவ்வுலகம் மற்றும் நிரந்தரமான மறுவுலகம் ஆகிய இரண்டிலும், உடல் மற்றும் ஆன்மா ஆகிய இரண்டிற்குமான பரிபூரண மகிழ்ச்சியை நோக்கிய ஒரு விரிவான வரைப்படத்தைக் குர்ஆன் வழங்குகின்றது (பின் இணைப்பு 15).

 

நிரூபிக்கப்பட்ட இந்த ஏற்பாடு முழுவதும் ஏராளமான வசனங்களில் நம்பிக்கை கொண்டோருக்கு மகிழ்ச்சியை இப்பொழுதும் மேலும் எப்பொழுதும் கடவுள் அவரே தனிப்பட்ட முறையில் வாக்களிக்கின்றார் :

 

நிச்சயமாக, கடவுளின் நேசர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை,

அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

அவர்கள் தான் நம்பிக்கைகொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்கள்.

அவர்களுக்கு இவ்வுலகிலும், மேலும் மறுவுலகிலும் மகிழ்ச்சியே,

கடவுளின் மாற்ற இயலாச் சட்டம்,  இத்தகையதே. இதுவே உண்மையான மாபெரும் வெற்றியாகும். (10:62-64)

 

நம்பிக்கை கொண்ட அனைவரும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒரே மார்க்கத்தை அமைக்கின்றார்கள்

படைப்பாளரின் இறுதிச் செய்தியிலிருந்து எதிர்ப்பார்க்கப்படுகின்ற, குர்ஆனில் உள்ள  முக்கியமான கருப்பொருட்களில் ஒன்றாக இருப்பது, எல்லா நம்பிக்கையாளர்களுக்கிடையிலும் ஒற்றுமைக்கான அழைப்பும் மேலும் கடவுளின் தூதர்களுக்கிடையில் பாரபட்சம் காட்டுவதை மீண்டும் மீண்டும் தடை செய்வதும் ஆகும். வழிபாட்டின் இலக்கு அதே ஒன்றாக இருக்குமேயானால், எல்லா நம்பிக்கையாளர்களுக்கிடையிலும் பரிபூரணமான ஒற்றுமை இருக்கும். மனிதக் காரணங்களால் தான், அதாவது, இயேசு, முஹம்மது மற்றும் மகான்கள் ஆகியோருக்கு செய்யப்படும் அர்ப்பணிப்பு மற்றும் தவறான அபிப்பிராயங்களே, தவறாக வழிகாட்டபட்ட நம்பிக்கையாளர்களுக்கு இடையில் பிளவு, வெறுப்பு மற்றும் கசப்பான போர்கள் ஆகியவற்றிற்குக் காரணமாகின்றன. வழிகாட்டப்பட்ட ஒரு நம்பிக்கையாளர் கடவுளுக்கு மட்டுமே அர்ப்பணித்துக் கொண்டவராக இருக்கின்றார், மேலும் கடவுளுக்கு மட்டுமே அர்ப்பணித்துக் கொண்ட வேறு எந்த நம்பிக்கையாளரையும், அத்தகையதொரு நம்பிக்கையாளர் ஆணோ அல்லது பெண்ணோ தன் மார்கத்தை அவர் எப்பெயரால் அழைத்தாலும் அதை பொருட்படுத்தாது, அவரை காண்பதில் மகிழ்ச்சி அடைகின்றார்.

 

நிச்சயமாக, நம்பிக்கை கொண்டவர்களும்,

யூதர்களாக இருப்பவர்களும்,

கிறிஸ்தவர்களும்,

மேலும் மதம் மாறியவர்களும்;

எவரொருவர்

(1) கடவுளின் மீது நம்பிக்கை கொண்டு,

(2) இறுதி நாளில் மீது நம்பிக்கை கொண்டு, மேலும்

(3) நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றாரோ,

தங்களுடைய வெகுமதியைத் தங்கள் இரட்சகரிடம் இருந்துபெறுவார்கள்;

அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.            (2:62, 5:69)

 

கடவுளின் உடன்படிக்கைத் தூதர்

பின் இணைப்பு 2ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, இந்தப் புத்தகத்தின் வெளியீடானது ஒரு புதிய   சகாப்தத்தின் வருகைக்கானதொரு அடையாளமாக - கடவுளின் அனைத்து வேதம் வழங்கப்பட்டவர்களாலும்  ஒப்படைக்கப்பட்ட அவருடைய செய்திகளை ஒரே செய்தியாக ஒருங்கிணைக்கும் சகாப்தமாக இது உள்ளது. கடவுளின் ஒரே ஒரு மார்க்கமான ‘அடிபணிதல்’ மற்ற அனைத்து மார்க்கங்களையும் மிகைத்து விடும் (9:33, 48:28, மற்றும் 61:9). யூதம், கிறிஸ்தவம், ஹிந்துத்துவம், புத்தத்துவம், மேலும் இஸ்லாம் உட்பட, சீர்கெட்டுபோன இன்றைய மார்க்கங்கள் வெறுமனெ இறந்து போகும், மேலும் ‘அடிபணிதல்’ வெற்றியடையும். இது ஒரு தனிமனிதனுடைய அல்லது ஒரு மனிதக் கூட்டத்தினுடைய விருப்பம் நிறைந்த எண்ணம் அல்ல; இது  கடவுளின் மாற்ற இயலாச் சட்டமாகும் (3:19, 9:33, 41:53, 48:28, 61:9, 110:1).

 

ரஷாத்  கலீஃபா 

டுக்ஸன்,
ரமலான்  26, 1409*