பின் இணைப்பு 3
நாம் குர்ஆனை எளிதானதாக ஆக்கியுள்ளோம் (54:17)

 

குர்ஆனின் அற்புதம் (1) அதன் பௌதீக அமைப்பில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட கணித வடிவத்திலும் (2) இலக்கிய நடையில் ஒருங்கிணைந்த தொகுப்பின் அசாதாரண சிறப்பிலும் - சம்பந்தப்பட்டிருப்பதை வசனம் 11:1 நமக்கு அறிவிக்கின்றது.

 

எளிதானதொரு கணித அமைப்பில் எண்களை பகிர்ந்தளிப்பதில் உள்ள தேவைகளை பூர்த்தி செய்வது ஒருவருக்கு இயலக் கூடியதாக இருக்கலாம். ஆயினும் இது இலக்கியத்தரத்தினை விட்டுக் கொடுத்து பூர்த்தி செய்யப்பட்டதாக இருக்கின்றது. குர்ஆன் முழுவதும் ஒவ்வொரு தனி எழுத்துக்களினுள் கடினமான கணித அமைப்பினை பங்கீடு செய்வதிலும், இலக்கிய நடையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாடானது (பின் இணைப்பு 1), குர்ஆனை மனனம் செய்வதற்கும், புரிந்து கொள்வதற்கும் மேலும் அதனால் மகிழ்ச்சி கொள்வதற்கும் எளிதாய் ஆக்கப்பட்டுள்ளது என்ற உண்மையின் மூலம் வெளிப்படையாகத் தெரிகின்றது. மனிதன் எழுதிய புத்தகத்தை போல் அல்லாமல், எண்ணிலடங்காத முறை, படிக்க படிக்க குர்ஆன் ஆனந்தமாக இருக்கின்றது.

 

இந்தப் பின் இணைப்பின் தலைப்பு, சூரா 54 ன் வசனங்கள் 17, 22, 32 மற்றும் 40களில் திரும்பத்திரும்பக் கூறப்பட்டிருக்கின்றது. குர்ஆனின் அரபிப் புத்தகம், படிப்பவருக்கு அல்லது மனனம் செய்பவருக்கு அடுத்த சொற்றொடரை அல்லது வசனத்தை நினைவூட்டும் வகையில் தொகுக்கப்பட்டிருக்கின்றது. கடவுள் நம்மை படைத்தார் மேலும் இலக்கியத்தொகுப்புகளை நம்முடைய நினைவில் வைத்திடும் மிகத்திறன் வாய்ந்த வழிகளை அவர் அறிவார். எழுத்து வடிவிலான புத்தகங்கள் அரிதாக இருந்த காலத்தில், அசலான மூலப்பிரதியினை தலைமுறை, தலைமுறையாக பாதுகாப்பதற்கு குர்ஆனை மனனம் செய்திடுதல் முக்கிய பங்காற்றியுள்ளது.

 

குர்ஆனை மனனம் செய்திடும் நபர், அதனை அவர் தெளிவாக அறிந்து கொள்ளாத நிலையிலும் கூட குர்ஆனுடைய வார்த்தைகளின் ஒலிகளை அவர் கூறிடும் போது சிக்கலான இலக்கிய அமைப்பின் மூலம் தெய்வீகமாக உதவி செய்யப்படுகின்றார். அனேகமாக குர்ஆனிலுள்ள ஒவ்வொரு வசனத்திலும், “ஞாபக மணிகள்” எனப்படுவது உள்ளது. படிப்பவருக்கு அடுத்து என்ன வரும் என்பதை நினைவூட்டுவதே அவற்றின் பணியாகும். இந்த அமைப்பு மிக விரிவானது, தெளிவாக்கிடும் உதாரணங்கள் இரண்டை மட்டும் நான் கொடுக்கின்றேன்:

 

1. சூரா 2ல் 127, 128 மற்றும் 129 ஆகிய வசனங்கள் ஒவ்வொன்றும் கடவுளின் பெயர்களில் வெவ்வேறு இரண்டு பெயர்களுடன் முடிவடைகின்றன. இந்தப் பெயர்களின் ஜோடிகள் முறையே “அல்-சமீ, அல்-அலீம் (செவியேற்பவர், அனைத்தையும் அறிந்தவர்)”, “அல்-தவ்வாப், அல்-ரஹீம் (மீட்சி அளிப்பவர், மிக்க கருணையாளர்)”. மற்றும் “அல்-அஸீஸ், அல்-ஹக்கீம் (சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்)” ஆகியனவாகும். இது வழக்கமானதொரு புத்தகமாக இருந்திருந்தால், ஒருவர் எளிதாக இந்த ஆறு பெயர்களையும் பொருத்தமற்ற ஜோடிகளாக சேர்த்து விட முடிந்திருக்கும். குர்ஆனில் அவ்வாறு செய்து விட இயலாது. இந்த ஜோடிகள் ஒவ்வொன்றும் ஒரு ஞாபகமணியின் மூலம் அதே வசனத்தில் முன்னிலை வகிக்கின்றது. அது சரியான பெயர்களின் ஜோடியை நமக்கு நினைவூட்டுகின்றது. இவ்விதமாக, வசனம் 127 ஆப்ரஹாம் மற்றும் இஸ்மவேல் கஃபாவின் அஸ்திவாரங்களை எழுப்புவதை பற்றி பேசுகின்றது. அந்த வசனம் “அல்-சமீ, அல்-அலீம்” என்ற பெயர்களுடன் முடிவடைகின்றது. இங்கே கவனிக்கத்தக்க ஒலிகள் “ச”, “ம” மற்றும் “அய்ன்” ஆகும். இந்த மூன்று எழுத்துகளும் “இஸ்மவேல்” எனும் வார்த்தையில் முக்கியமானவைகளாகும். வாக்கியத்தில் இந்த வார்த்தை கவனிக்கத்தக்க விதத்தில் தாமதப்படுத்தப் படுவதையும் அதே சமயம் அதனுடைய இலக்கியத்தரம் உயர்த்தப்படுவதையம் நாம் காண்கின்றோம். இவ்விதமாக, வசனமானது “ஆப்ரஹாம், இஸ்மவேலுடன் ஒன்று சேர்ந்து கஃபாவின் அஸ்திவாரங்களை எழுப்பியபோது...”, என்று சொல்வதை நாம் காண்கின்றோம், பொதுவாக ஒரு மனித எழுத்தாளர், “ஆப்ரஹாம் மற்றும் இஸ்மவேல் கஃபாவின் அஸ்திவாரங்களை உயர்த்திய போது...... என்று கூறக் கூடும். ஆனால் “இஸ்மவேல்” எனும் வார்த்தையில் உள்ள ஒலிகளை தாமதப்படுத்துவது வசனத்தின் முடிவிற்கு நெருக்கமாக அவர்களைக் கொண்டு செல்கின்றது. மேலும் இவ்விதமாக இந்த வசனத்தில் கடவுளின் சரியான பெயர்கள் “அல்-சமீ, அல்-அலீம்” என்பதை நமக்கு நினைவூட்டுகின்றது.

 

வசனம் 128ல் “அல்-தவ்வாப், அல்-ரஹிம்” எனும் பெயர்களுக்கு முன்பாக “துப்” எனும் கவனிக்கத்தக்க வார்த்தை உள்ளது. “துப்” எனும் அந்த வார்த்தை இவ்விதமாக ஞாபகமணியாக பணியாற்றுகின்றது. 2:129-ன் முடிவில் இருக்கின்ற கடவுளின் பெயர்கள் “அஸீஸ், ஹக்கீம்” ஆகும். இங்குள்ள கவனிக்கத்தக்க ஒலிகள் “ஸ” மற்றும் “க” ஆகும். இந்த வசனத்தில் உள்ள ஞாபகமணி “யுஸக்கீஹிம்” எனும் வார்த்தை என்பது வெளிப்படையானது.

 

 

2. மற்றொரு நல்ல உதாரணம் 3:176, 177 & 178ல் காணப்படுகின்றது, அவற்றில் நம்ப மறுப்பவர்களுக்கான தண்டணையானது முறையே “அஸீம் (பயங்கரமான)” “அலீம் (வலிமிக்க)” மற்றும் “முஹீன் (இழிவு படுத்தும்)” என்று விவரிக்கப்படுகின்றது. மனிதன் எழுதிய புத்தகத்தில், அதை மனனம் செய்பவர் இந்த மூன்று விவரிப்புகளையும் எளிதாக கலந்துவிடக் கூடும். ஆனால் இந்த பெயர் உரிச்சொற்களில் ஒவ்வொன்றும் ஆற்றல்மிக்க ஞாபகமணிகளால் முன்னிலைப்படுத்தப்படுவதையும், அந்த ஞாபகமணிகள் அவ்வாறான கலப்பைத் தடுப்பதையும் நாம் காணலாம். வசனம் 176ல் உள்ள “அஸீம்” எனும் வார்த்தை “ஹுஸ்ஸுன்” எனும் வார்த்தையின் மூலம் முன்னிலைப்படுத்தப்படுகின்றது. அது “ஸ” எனும் அழுத்தமான எழுத்தால் ஆக்கப்பட்டிருக்கின்றது. இது இந்த வசனத்தின் முடிவில் வரும் குறிப்பிட்ட பெயர் உரிச் சொல்லை நமக்கு நினைவு படுத்தும் பணியினை செய்கின்றது. வசனம் 177ல் “இமான்” எனும் வார்த்தையின் ஒலி ஒரு ஞாபகமணியைப் போல பணியாற்றி “அலீம்” எனும் வார்த்தையை முன்னிலைப்படுத்துகின்றது, மேலும் 3:178ல் உள்ள “முஹீன்” எனும் வார்த்தை இந்த வசனம் முழுவதும் உள்ள “ம” மற்றும் “ஹ” உச்சரிப்பு கொண்ட வார்த்தைகளால் முன்னிலைப் படுத்தப்படுகின்றது.

 

ஞபாகமணிகளின் மற்ற உதாரணங்களாக 3:173ன் முடிவிலும் மற்றும் 3:174ன் ஆரம்பத்திலும், 4:52ன் முடிவிலும் மற்றும் 4:53ன் ஆரம்பத்திலும், 4:61ன் முடிவிலும் மற்றும் 4:62ன் ஆரம்பத்திலும், 18:53ன் முடிவிலும் மற்றும் 18:54ன் ஆரம்பத்திலும் இன்னும் அதிகமான வசனங்கள் உட்பட இவையனைத்தையும் கூறலாம்.

**********************************************