பின் இணைப்பு 20
குர்ஆன்: வேறு எந்தப் புத்கத்தையும் போன்றதல்ல

 

குர்ஆன் உலகிற்கு கடவுளின் இறுதி ஏற்பாடு ஆகும், மேலும் மிகச் சிறிய சிதைவுகளிலிருந்தும் இதனைப் பாதுகாப்பதாக அவர் வாக்குறுதி அளித்துள்ளார். (15:9). இதன் விளைவாக, அதற்கு காவலாகவும் மேலும் அதற்குப் பணியாற்றவும், கண்களுக்குத் தெரியாத படைகளால் குர்ஆன் சூழப்பட்டுள்ளது (13:39, 41:42, 42:24).

 

வேறு எந்தப் புத்தகத்தையும் போன்றல்லாது குர்ஆனானது கடவுளால் கற்பிக்கப்படுகின்றது (55:1-2). அவர் நமக்குத் தேவையானதை அது நமக்குத் தேவைப்படும் நேரத்தில் கற்றுக் கொடுக்கின்றார். இதனால் தான் சலிப்பு அடையாமல் பலநூறு தடவைகள் குர்ஆனை நாம் படிக்கின்றோம். உதாரணத்திற்கு, ஒரு நாவலை நாம் ஒரே ஒரு தடவை படிக்கலாம். ஆனால் குர்ஆனை எண்ணற்ற தடவைகள் படிக்கவும் மேலும் நாம் புதிய மற்றும் பெரும் மதிப்பு வாய்ந்த தகவல்களை அதிலிருந்து ஒவ்வொரு முறையும் பெறவும் இயலும். அவ்வாறின்றி - குர்ஆனைக் கொண்டு குறை கண்டு பிடிப்பதற்காக படிக்கின்ற - வஞ்சகமான வாசிப்பாளர்கள் குர்ஆனிலிருந்து வேறு பாதையில் திருப்பப்பட்டு விடுகின்றார்கள் (7:146, 17:45, 18:57, 41:44). உண்மையில், அவர்கள் தேடுகின்ற குறைகளை காண்பதற்கு, கண்ணுக்குத் தெரியாத கடவுளின் படைகள் அவர்களுக்கு உதவுகின்றன. மிகச் சரியானதாக குர்ஆன் இருப்பதால் இத்தகைய “குறைகள்” கடவுளுடைய எதிரிகளின் முட்டாள் - தனத்தை வெளிப்படுத்த மட்டுமே பயன்படுகின்றன.

 

கடவுள் குர்ஆனை விவரிப்பதற்கு தன்னுடைய சொந்த அடைமொழிகளைப் பயன்படுத்துகின்றார் : அவர் குர்ஆனை “அஜீம் = மகத்தானது” (15:87), “ஹக்கீம் = ஞானம் நிறைந்தது” (36:2) “மஜித் = ஒளிமயமானது” மேலும் “கறீம் = கண்ணியமானது” (56:77) என்று அழைக்கின்றார். நாம் என்ன கூற இயலும்?

 

மக்கள் அனைவருக்கும் அவர்களுடைய மொழிகளுக்கு அப்பாற்பட்ட கடவுளின் செய்தியாக குர்ஆன் இருப்பதால், அவர்களுடைய மொழிகளைப் பொருட் படுத்தாது நம்பிக்கையாளர்களை அடையக் கூடியதாக குர்ஆன் உள்ளது (41:44). இது ஆழ்ந்ததோர் அற்புதத்தை விளக்குகின்றது: அரபி மொழி தெரியாத நம்பிக்கையாளர்கள், அரபி மொழி பேசுகின்ற நம்பிக்கையற்றவர்களைக் காட்டிலும் குர்ஆனை நன்கு தெரிந்திருக்கின்றனர். கண்ணுக்குத் தெரியாத படைகள் குர்ஆனுக்கு பணிபுரிகின்ற காரணத்தால் உண்மையான நம்பிக்கையாளர்கள் உடனடியாகவும், மகிழ்ச்சியுடனும் அடையக் கூடியதாகவும், மேலும் நம்பிக்கையற்றவர்கள் முற்றிலும் அடைய இயலாததாகவும் இது உள்ளது (17:45, 18:57, 56:79).

**********************************************