நோன்பு
கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்

ரமலான் மாதமானது இஸ்லாமிய காலண்டரின்படி 9-வது சந்திரமாதமாகும். உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் அதிகாலையின் ஆரம்பத்தில் இருந்து சூரிய அஸ்தமனம் வரை இந்த மாதத்தில் நோன்பு நோற்கின்றனர். நோன்பின் பொழுது பகல் முழுவதும் உணவு உண்ணுவதிலிருந்தும், பானங்கள் அருந்துவதிலிருந்தும், மேலும் பாலியல் செயல்களில் இருந்தும் அல்லாஹ்வின் கட்டளைப்படி விலகிஇருக்கின்றனர்.

இஸ்லாத்திலுள்ள மற்ற வழிபாட்டு முறைகளைப் போலவே ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதும் இப்ராஹிம் நபிகாலத்தில் இருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

ஆப்ரஹாம் (இப்ராஹிம்): இஸ்லாத்தின்ஆரம்பத்தூதர்

(22:78) நீங்கள் கடவுள்ன் நிமித்தம் பாடுபடவேண்டியவாறு அவருக்காக நீங்கள் பாடுபட வேண்டும். அவர் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார் மேலும் உங்கள் தந்தை ஆப்ரஹாமின் மார்க்கமாகிய-உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுவதில் உங்கள் மீது எந்தச் சிரமத்தையும் அவர் வைக்கவில்லை. அவர் தான் துவக்கத்தில் உங்களுக்கு“ அடிபணிந்தோர் (முஸ்லிம்கள்) ” எனப்பெயரிட்டார்...

நோன்பு குறித்த முழுவிபரங்களும் குர்ஆனின் அத்தியாயம் இரண்டில்183, 184, 185, 187 வசனங்களில் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
நோன்பிருத்தல் வலியுறுத்தப்படுகின்றது மற்றும் மாற்றி அமைக்கப்படுகின்றது

(2:183) நம்பிக்கை கொண்டோரே, உங்களுக்கு முன்னிருந்தோர் மீது விதிக்கப்பட்டது போல, நோன்பிருத்தல் உங்கள் மீதும் விதிக்கப்படுகின்றது, அதன் மூலம் நீங்கள் மீட்சியடையலாம்.

(2:184) குறிப்பிட்ட நாட்கள் (நோன்பிருத்தலுக்கென நியமிக்கப்பட்டுள்ளது); ஒருவர் நோயிலோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால், ஒரு சமமான எண்ணிக்கையுள்ள மற்ற நாட்களைக் கொண்டு பகரமாக்கி கொள்ளலாம். நோன்பிருக்க முடிந்தவர்களாயினும் மிகுந்த கஷ்டப்படுவார்கள் என்றால், நோன்பை முறிக்கும் ஒவ்வொரு நாளைக்கும் ஒரு ஏழை நபருக்கு உணவளிப்பது கொண்டு பகரமாக்கலாம். ஒருவர் (அதிக நன்னெறியான காரியங்களில்) தாமாக முன்வந்தால், அது சிறப்பே ஆகும். ஆயினும் நீங்கள் அறிவீர்களாயின் நோன்பிருத்தலே உங்களுக்கு மிகவும் சிறந்ததாக இருக்கின்றது.

(2:185) ரமலான் மாதம், அதில் தான் மக்களுக்கு வழிகாட்டல் வழங்குகின்றதாகவும், தெளிவான படிப்பினைகள் கொண்டதாகவும் மற்றும் சட்டப்புத்தகமாகவும் குர்ஆன் வெளிப்படுத்தப்பட்டது. உங்களில் இம்மாதத்தைக் காண்கின்றவர்கள், அதில் நோன்பிருக்க வேண்டும். நோயிலோ அல்லது பிரயாணத்திலோ இருப்பவர்கள் அதே எண்ணிக்கையுள்ள மற்ற நாட்களைக்கொண்டு பகரமாக்கிக் கொள்ளலாம். நீங்கள் உங்கள் கடமைகளை நிறை வேற்றவும், மேலும் உங்களை வழி நடத்திக் கொண்டிருப்பதற்காக கடவுள்- ஐத்துதிக்கவும் மேலும் உங்களுடைய நன்றியுணர்வை வெளிக்காட்டவும், கடவுள் உங்களுக்கு விரும்புவது சுலபத்தையே அன்றி கஷ்டத்தை அல்ல.

(2:187) நோன்பு கால இரவுகளின் போது உங்கள் மனைவியருடன் தாம்பத்ய உறவு கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றது. அவர்கள் உங்களுடைய இரகசியங்களைப் பேணிக்காப்பவர்கள், நீங்கள் அவர்களுடைய இரகசியங்களை பேணிக்காப்பவர்கள். நீங்கள் உங்களின் ஆன்மாக்களுக்கு துரோக மிழைத்துக் கொண்டிருந்தீர்கள் என்பதை க்கடவுள் அறிந்திருந்தார், மேலும் அவர் உங்களை மீட்டுக் கொண்டார், மேலும் உங்களைப்பிழை பொறுத்துக் கொண்டார். இனி மேல் கடவுள் உங்களுக்கு அனுமதித்ததைத் தேடியவர்களாக, நீங்கள் அவர்களுடன் தாம்பத்ய உறவுகொள்ளலாம். அதிகாலை வெளிச்சத்தின் வெள்ளைநூல், இரவின் கருப்பு நூலிலிருந்து தனியாகத் தெரியும் வரை நீங்கள் உண்ணலாம், பருகலாம். அதன் பின் சூரிய அஸ்தமனம் வரைநீங்கள் நோன்பிருக்க வேண்டும். நீங்கள் (ரமலானின் கடைசிப் பத்து நாட்களில்) மஸ்ஜிதில் தங்கி இருக்கத்தீர்மானித்தால் தாம்பத்ய உறவு தடை செய்யப்படுகின்றது. இவை கடவுள்-ன்சட்டங்கள், அவற்றை நீங்கள் மீறக்கூடாது. கடவுள் தன் வெளிப்பாடுகளை மக்களுக்கு அவர்கள் ஆன்மா மீட்சியடையும் பொருட்டு இவ்வாறு தெளிவுபடுத்துகின்றார்.

ரமலான் மாதத்தின் சிறப்புகளில் ஒன்றாக, இந்த மாதத்தில் தான் நாம் பின்பற்ற வேண்டிய மார்க்கமாகிய இஸ்லாத்தின், ஒரே ஆதாரமான குர்ஆன் வெளிப்படுத்தப்பட்டது என்பதை வசனம்2:185மூலமாக நாம் அறிகின்றோம். இன்னும், ஸலாத் (தொடர்புத் தொழுகைகள்), ஜகாத் (கடமையான தர்மம்), மற்றும் ஹஜ் (புனிதபயணம்), போன்ற மற்ற வழிபாட்டு முறைகளைப் போன்றே நோன்பும் குர்ஆன் வெளிப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே, இப்ராஹிம் நபி காலம் முதல் முஸ்லிம்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது என்பதை (21:73) மூலமாகவும், மேலும்

குர்ஆன் வெளிப்படுத்தப்படுவதற்கு முந்தைய காலங்களில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு நோன்பு கால இரவுகளில் தாம்பத்ய உறவு தடை செய்யப்பட்டிருந்ததையும், அந்ததடை (2:187) மூலம் நீக்கப்படுவதையும் குர்ஆன் மூலம் நம்மால் அறிய முடிகின்றது.

ஆப்ரஹாம்(இப்ராஹிம்): இஸ்லாத்தின் மார்க்கக்கடமைகள் அனைத்தையும் ஒப்படைத்தவர்

(21:73) நம்முடைய கட்டளைகளுக்கு இணங்க வழி நடத்திய இமாம்களாக நாம் அவர்களை ஆக்கினோம், மேலும் நன்னெறியான செயல்கள் செய்வது எப்படி என்பதையும், மேலும் தொடர்புத்தொழுகைகள் (ஸலாத்) மற்றும் கடமையானதர்மத்தை (ஜகாத்) கடைப்பிடிப்பது எப்படி என்பதையும் நாம் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தோம். நமக்கு, அர்ப்பணித்துக் கொண்ட வணக்கசாலிகளாக அவர்கள் இருந்தனர். அதுமட்டுமின்றி, நோன்பு நோற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் யார்? அவர்களுக்கான பரிகாரம்என்ன? உள்ளிட்ட நமக்குத் தேவையான, அதே சமயம் அவசியம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளையும் மேலே குறிப்பிடப்பட்டிருக்கின்ற குர்ஆன் வசனங்கள் நமக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றன.

கூடுதலாக, லைலத்துல் கத்ர் இரவில் குர்ஆனை தான் வெளிப்படுத்தியதாக அல்லாஹ் கூறுகின்றார், இன்னும் லைலத்துல்கத்ர் எனும் அந்த விதியின் இரவை குறித்து அல்லாஹ் குர்ஆனின்97:1-5வசனங்கள் மூலமாக நமக்கு விவரிக்கின்றார்:

(97:1) விதியின் இரவில் இதனை நாம் வெளிப்படுத்தினோம்.

(97:2) விதியின் இரவானது எவ்வளவு பிரம்மாண்டமானதாக இருக்கின்றது!

(97:3) விதியின் இரவானது ஓராயிரம் மாதங்களை விடவும் மேலானதாக இருக்கின்றது.

(97:4) வானவர்களும், பரிசுத்தஆவியும், தங்கள் இரட்சகரின் அனுமதியுடன், ஒவ்வொரு கட்டளைகளையும் நிறைவேற்றுவதற்காக அதனில் இறங்கிவருகின்றனர்.

(97:5) விடியற்காலையின் வருகை வரை அது அமைதி மயமானதாக இருக்கின்றது.

லைலத்துல்கத்ர் இரவு ரமலானின்27-வது இரவு தான் என்பதை சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் குர்ஆனின் சான்றிலிருந்து நம்மால் அறிய முடிகின்றது.

(44:3) பாக்கியமிக்கதொரு இரவில் இதனை நாம் இறக்கி அனுப்பினோம், ஏனெனில் நாம் எச்சரிப்பவர்களாக இருக்கின்றோம்.

(53:1) நட்சத்திரங்கள் வீழ்ந்து கொண்டே செல்வதைப் போல.

(53:2) உங்களுடைய தோழர் (முஹம்மது) வழிதவறியவராகஇருக்கவில்லை, அன்றி அவர், ஏமாற்றப்பட்டவராகவும் இருக்கவில்லை.

(53:3) அன்றி அவர் சுயவிருப்பத்தின்படி பேசவும் இல்லை.

(53:4) தெய்வீக உள்ளுணர்வாகவே (வஹியாகவே) அது இருந்தது.

(53:5) மிகுந்த சக்தியுடையவரால் எடுத்துக் கூறப்பட்டது.

(53:6) அனைத்து அதிகாரங்களையும் உடையவர். அவரது மிக உயரமான உயரத்தில் இருந்து.

ரமலானின் கடைசி 10 நாட்கள் மஸ்ஜிதுகளில் தங்கி இஃதிகாஃப் இருப்பது குறித்தும், அவ்வாறு இருப்பவர்களுக்கு அந்தநாட்களில் தாம்பத்ய உறவு முற்றிலுமாக தடை செய்யப்படிருப்பதையும் குர்ஆனின்2:187வசனம் நமக்கு அறிவிக்கின்றது. இவைகள் ரமலான் மாதம் குறித்து குர்ஆன் கூறுகின்ற முக்கியமான செய்திகளாகும்.

நோன்பிருப்பது நம்முடைய ஆன்மா மற்றும் உடலிற்கு அனேக நன்மைகளை வழங்குகின்றது

அல்லாஹ்வின் கட்டளைக்குகீழ்படிந்து உண்ணாமலும், பருகாமலும் இருந்து வழிபடும் இந்த பயிற்சியானது, உண்மையான நபராகிய நம்முடைய ஆன்மாவிற்கு தேவையான ஊட்டத்தை அளித்து நம்முடைய ஆன்மாவை வளரச்செய்கின்றது. ஆன்மாவின்வளர்ச்சி ஒவ்வொறு மனிதருக்கும் – ஆணோ அல்லது பெண்ணோ – மிகவும் அவசியமானதாகும். ஏனெனில் நம்முடைய மகிழ்ச்சியானது நம்ஆன்மாவின் வளர்ச்சியை பொறுத்தே இருக்கின்றது என்ற உண்மையை குர்ஆனை கொண்டு நாம் அறிகின்றோம்.

நோன்பிருப்பது நம்முடைய ஆன்மாவிற்கு ஊட்டமளிப்பது மட்டுமின்றி நம்முடைய உடலிற்கும் கூட பல விதமான பலன்களை அளிக்கின்றது. நோன்பு நோற்பதன் முலமாக உடல் ரீதியாக நாம் அடைகின்ற பலன்கள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டதாக இருக்கின்றது. அவற்றில் சில:

1. நோன்பு இருப்பதால் நம்முடைய செரிமான அமைப்பிற்கு ஓய்வு கிடைக்கின்றது.

2. உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறுகின்றன.

3. உடலில் உள்ள அதிகப்படியான திசுக்கள், கொழுப்பு, அசாதாரணவளர்ச்சி அடைந்த செல்கள் மற்றும் கட்டிகள் ஆகியவை உடைகின்றன.

4. நோயுற்ற திசுக்கள் வெளியேறுகின்றன.

ஆதாரம் (ஃபாஸ்டிங்அன்ட்ஈடிங் ஃபார்ஹெல்த் : ஆசிரியர்ஜோயல் ஃபர்மென்எம்.டி)

உண்ணாமலும் பருகாமலும் இருப்பதன் மூலம் பசி மற்றும் தாகத்தை சகித்து கொள்ளும் மனப்பக்குவத்தை நாம் பெறுகின்றோம் மேலும் உணவின்றிபசியால் வாடு பவர்களின் வேதனையை உணரும் அனுபவமும் நமக்கு கிடைக்கின்றது.

இப்பொழுது நம்முடைய சகோதர, சகோதரிகள் ரமலானில் செய்கின்ற தவறுகளையும், அதனால் ஏற்படு கின்ற விளைவுகளையும் இன்ஷாஅல்லாஹ் நாம் காண்போம்.

1. பிறை பார்த்து நோன்பு நோற்கின்றனர்:
இன்றைய முஸ்லிம்கள் பிறை பார்த்து நோன்பு நோற்கின்ற காரணத்தால் பொரும்பாலும் முதல் நோன்பை தவற விடுகின்ற ஒரு துர்பாக்கிய நிலையை நம்மால் காணமுடிகின்றது. இதன் விளைவாக பாக்கியம் நிறைந்த லைலத்துல்கத்ர் இரவையும், இஃதிகாஃப் எனப்படும் கடைசி பத்து நாட்களின் முதல் நாளையும் இவர்கள் இழந்து விடுகின்றனர்.

நிச்சயமாக பிறைபார்த்து நோன்பு நோற்கும்படியோ, மேலும் பிறை பார்த்து நோன்பை விட்டு விடும்படியோ அல்லாஹ்வின் செய்தியாகிய குர்ஆன் நமக்கு கட்டளையிடவில்லை.
2. தராவீஹ் எனப்படும தொழுகையை கடைபிடிக்கின்றனர்:
“தொடர்புத் தொழுகைகள் (ஸலாத்)” நேரம்குறித்த கடமையாக இருக்கின்றது என்று குர்ஆனில் அல்லாஹ் நமக்கு கட்டளை இட்டிருக்கின்றார். (4:103) ...தொடர்புத் தொழுகைகள் (ஸலாத்) நம்பிக்கையாளர்கள் மீது குறிப்பிட்ட நேரங்களில் விதியாக்கப்பட்டதாக இருக்கின்றது. அதனடிப்படையில் ஃபர்லான (கடமையான) 5வேளை தொடர்புத்தொழுகைகளைத்தவிர வேறு எந்த தொடர்புத் தொழுகையையும் அல்லாஹ் நமக்கு விதிக்கவில்லை. அவ்வாறிருக்கையில், தராவீஹ் தொழுகையை கடைப்பிடிப்பதன் மூலமும், இன்னும் பலவிதமாக உபரி தொழுகைகளை ரமலான் மற்றும் ரமலான் அல்லாத மாதங்களில் கடைபிடிப்பதன் மூலமும் இன்றைய முஸ்லிம்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்கின்றார்கள். அதாவது அல்லாஹ் மார்க்கம் ஆக்காததை மார்க்கமாக ஆக்குகின்றார்கள். அல்லாஹ் மார்க்கம் ஆக்காததை மார்க்கமாக ஆக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
3. ஜகாத்தை வருடத்திற்கு ஒரு முறை என்று கணக்கிட்டு ரமலான் மாதத்தில் அதை கொடுக்கின்றனர், ரமலானில் ஜகாத் கொடுத்தால் எழுபது மடங்கு நன்மை என்றும் நம்புகின்றனர்:
அல்லாஹ்வால் மிகவும் விரும்பப்படுகின்ற ஒரு வழிபாட்டு முறையாக ஜகாத் இருக்கின்றது, மேலும் ஜகாத்தை கொடுத்து வருபவர்கள் அல்லாஹ்வுடைய கருணையை அடைகின்றனர் என்று குர்ஆன் நமக்கு போதிக்கின்றது. ஜகாத்தை கொடுப்பது குறித்த வழி முறையையும் குர்ஆன் நமக்கு கற்பிக்கின்றது. அறுவடை காலங்களின் பொழுதே ஜகாத்தை கொடுத்துவிட வேண்டும் என்றுஅல்லாஹ் நமக்கு கட்டளையிடுகின்றார். (6:141)...மேலும் கொடுக்கப்பட வேண்டிய தர்மத்தை அறுவடை நாளின் போதே கொடுத்துவிடுங்கள்... என்பதே அல்லாஹ்வுடைய கட்டளையாக இருக்கின்றது தவிர, ஜகாத்தை ரமலான் மாதத்தில் கொடுக்கும்படி அல்லாஹ் நமக்கு கட்டளையிடவில்லை. குறிப்பாக, ரமலானில் கொடுக்கப்படும் ஜகாத்திற்கு கூடுதல் நன்மை கிடைக்கும் என்பதற்கு குர்ஆனில் இருந்து எந்த ஆதாரத்தையும் நாம் காண முடியாது. இந்த செயல்முறையும் அல்லாஹ்வின் கட்டளையை மீறு கின்ற செயலே ஆகும்.

குறிப்பிட்டு கூறவேண்டும் என்றால், பெருநாள் தொழுகைகளை கடைப்பிடிப்பது, ரமலான் நோண்புகளை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகின்ற ஆறுநோண்பு, இன்னும் இது போன்ற அனேக தவறு களை நம்முடைய சகோதர சகோதரிகள் செய்வதற்கான அடிப்படை காரணம் ஒன்றே ஒன்று தான். அது, “அவர்கள் குர்ஆனை குறித்து கவனமற்றவர்களாக இருக்கின்றனர்”என்பதே ஆகும். மீண்டும் உயிர்பித்தெழுப்பப்படும் நாள் ஆகிய கியாம நாள் அன்று முஹம்மது நபியும் இதையே சாட்சியாக கூறுவார் என்று குர்ஆன் கூறுகிறது. (25:30) தூதர், “என் இரட்சகரே, என் சமூகத்தார் இந்தக் குர்ஆனைக் கை விட்டுவிட்டார்கள்”என்று கூறினார்.
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே, இவ்வுலகில் நாம் வாழுகின்ற காலம்வரை நம்முடைய மார்க்கமாக அதாவது நம்முடைய வாழ்க்கை வழி முறையாக இஸ்லாத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று நம்மை படைத்த அல்லாஹ் நமக்கு கட்டளையிடுகின்றார். அந்த இஸ்லாம் என்றால் என்ன? இஸ்லாத்தை எவ்வாறு பின்பற்றுவது? அதற்கான ஆதாரமாக எதை நாம்பின்பற்ற வேண்டும்? மார்க்கம் என்று நினைத்து நாம் செய்து கொண்டிருக்கின்ற தவறுகள் என்ன? அந்த தவறுகளை அடையாளம் காண்பது எப்படி? உள்ளிட்ட அனைத்து கேள்விகளுக்கும் உரிய பதிலை கலப்படமற்ற அல்லாஹ்வின் செய்தியாகிய குர்ஆனில் இருந்து மட்டுமே நம்மால் தெரிந்து கொள்ள இயலும், ஆகையால் குர்ஆனை மட்டுமே மார்க்கத்திற்கான ஒரே ஆதாரமாக பின்பற்றும்படியும். மேலும் குர்ஆனின் கட்டளைகளுகினங்க வாழ்க்கை நடத்தும்படியும் உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

எல்லாம்வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் நேரான பாதையில் வழி நடத்துவாராக.


“புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கு மட்டுமே”